PIB Headquarters
திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு - மத்திய காலணி பயிற்சி நிறுவனம் ஏற்பாடு
Posted On:
24 OCT 2018 1:28PM by PIB Chennai
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சென்னை கிண்டியில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிறுவனம் வேலைவாய்ப்புகளை அளிக்கும் பல திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது என்று அதன் இயக்குநர் முரளி தெரிவித்தார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலணி தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த துறைகளில் திறன்மிக்க பணியாளர்களை அமர்த்துவது இந்த கல்வி பயிற்சி வகுப்புகளின் நோக்கமாகும் என்றார்.
சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாவது பெரிய காலணிகள் உற்பத்தி நாடாக இந்தியா விளங்குகிறது. ஆண்டுதோறும் சுமார் 22 பில்லியன் ஜோடி காலணிகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இது உலக உற்பத்தியில் சுமார் 9 சதவீதமாகும் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய காலணி பயிற்சி நிறுவனம் நாட்டில் உள்ள காலணி உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியத் தேவையான மனிதவளங்களை உருவாக்கி வருகிறது என்றும், இது ஏழு நீண்டகால பயிற்சி வகுப்புகளையும், எட்டு குறுகிய கால பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீண்டகால படிப்புகளில் முதுநிலை உயர் காலணி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கல்வி பட்டயப் படிப்பும்(PGHD), காலணி தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பட்டயப் படிப்பும் (DFMD) லண்டனில் உள்ள லீசெஸ்டர் கல்லூரியால் அங்கீகரிக்கப்பட்டு, அக்கல்லூரியால் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்கண்ட நீண்ட கால மற்றும் குறுகிய கால பயிற்சிகள் தவிர , மத்திய காலணி பயிற்சி நிறுவனம், தேசிய SC/ST மையம்,தேசிய சிறு தொழில் கழகத்தோடு இணைந்து, SC/ST பிரிவினருக்காக பிரத்யேகமாக “Condensed Course in Footwear Design & Production”(CFDP) எனும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குகிறது. இந்த பயிற்சியின் காலம் 6 மாதங்கள். இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெறும். இதன் சிறப்பம்சம் யாதெனில் இந்த பயிற்சி SC/ST பிரிவினருக்காக முற்றிலும் இலவச பயிற்சி. இந்த பயிற்சியின் போது உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.இந்த இலவச பயிற்சி பெற விரும்புவோர் தங்கள் விண்ணப்பங்கள் 5-11-2018 க்குள் கிண்டியில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அணுப்பி வைக்க வேண்டும்.
மத்திய காலணி பயிற்சி மையத்தில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலமாக உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பயிற்சி மையத்தில் படித்த அனைத்து மாணவர்களும் வி.கே.சி, டாடா இன்டர்நேஷனல், மற்றும் கிருஷ்ணகிரியில் அமைந்திருக்கும் NIKE SHOE தயாரிப்பு நிறுவனம் போன்ற பிரபல காலணி தயாரிப்பு நிறுவனங்களில் பணியில் சேர்ந்துள்ளனர் என்று இயக்குநர் முரளி தெரிவித்தார். சீனா, இத்தாலி, பிரிட்டன், மலேசியா மற்றும் அரபு நாடுகளின் காலணி தயாரிப்பு நிறுவனங்களில் இங்கு படித்த மாணவர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், இது இந்த நிறுவனத்திற்கு கிடைத்த பெருமை என்றும் அவர் கூறினார்.
இந்த மையத்தில் சேர்ந்து படிப்பதற்கான தகுதி, விண்ணப்பம், இடஒதுக்கீடு, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களை www.cftichennai.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றும், 9677943633/9677943733 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றும் இயக்குநர் முரளி தெரிவித்தார்.
*******
(Release ID: 1550464)