குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கல்வி நிறுவனங்கள் ஏழைப்பிரிவு மாணவர்களுக்கு சில சதவீத இடங்களை ஒதுக்கி வைத்து அவர்களது கல்விச் செலவினத்தைக் குறைத்து வசூலிக்க வேண்டும் : குடியரசுத் துணைத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2018 3:20PM by PIB Chennai

தனியார் துறையில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஏழைப்பிரிவு மாணவர்களுக்கு சில சதவீத இடங்களை ஒதுக்கி வைத்து அவர்களது கல்விச் செலவினத்தைக் குறைத்து வசூலிக்க வேண்டும் என்று  குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம். வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள லவ்லி தொழிற்கல்வி பல்கலைக்கழகத்தின் 9-ஆவது பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்திய அவர், ஏழை மற்றும் விளிம்புநிலைப் பிரிவினருக்கு தனியார் துறை மூலம் தரமான கல்வி கிடைக்காமலே இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார்.  இந்நிலையில், தனியார் பல்கலைக்கழகங்கள் ஏழை மாணவர்களுக்கு ஏன் சில இடங்களை ஒதுக்கி அவர்களது கல்விச் செலவினத்தைக் குறைத்து வசூலிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

பொதுத்துறை மட்டுமே தரமான உயர்கல்வியை அனைவருக்கும் வழங்க முடியாது;  தனியார் துறையினரும் இதில் உதவ வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதில் அரசின் முயற்சிகளுக்குத் தொழில்துறையினரும் தனியார் துறையினரும் துணையாக இருக்க வேண்டும் என்றார் அவர். நமது சவால் நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு மூலைக்கும் அறிவு பரவுவதை உறுதி செய்வதே ஆகும் என்று அவர் கூறினார்.

மாணவர்களிடையே தொழில் தொடங்கும் ஆர்வத்தைக் கல்வி நிறுவனங்கள் தூண்டிவிட வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் கேட்டுக் கொண்டார்.  வாழ்க்கைக்கான வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வது என்ற அளவில் நமது கல்வி நிறுவனங்கள் மாணவர்களை நிறுத்தி விடாமல் சமுதாயத்தின் சிறந்த, பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மாணவர்களும் வேலை தேடுபவர்களாக இருப்பதைவிட்டு வேலை அளிப்பவர்களாக மாறவேண்டும் என்றார் அவர்.

குடியரசுத் துணைத் தலைவரின் முழு உரைக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

                                        *****


(வெளியீட்டு அடையாள எண்: 1550297) வருகையாளர் எண்ணிக்கை : 117
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi