குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
டாக்டர் ஏ.ராமகிருஷ்ணா தலைசிறந்த பொறியாளர் மற்றும் தலைவர் – அவர் ஒரு பல்கலைக்கழகம் : குடியரசுத் துணைத் தலைவர்
Posted On:
12 OCT 2018 6:55PM by PIB Chennai
இந்திய தொழில்துறையின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டர்.ஏ.ராமகிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (12.10.2018) நடைபெற்றது. விழாவில் பங்கேற்று நூலை வெளியிட்டுப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, இந்த விழாவில் பங்கேற்பது தமக்கு மிகுந்த பெருமிதம் அளிப்பதாகக் கூறினார்.
நாட்டின் மூன்றாவது மிக உயரிய விருதான பத்மபூஷன் விருதைப் பெற்றவரான டாக்டர்.ஏ.ராமகிருஷ்ணாவின் வாழ்க்கை மற்றும் இந்திய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கொண்டாடுவதற்கு கிடைத்த ஒரு நல்வாய்ப்பு இது ஆகும். மேலும் அவர், இந்திய கட்டுமான தொழிலுக்கு உலக அளவில் உரிய இடம் கிடைக்கச்செய்யும் வகையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியதற்கு அங்கீகாரமாக இந்த நூல் அமைந்துள்ளது.
டாக்டர். ராமகிருஷ்ணா கட்டுமானத் தொழில் பரிணாம வளர்ச்சியின் கதைகளமாக இருந்தார் என்பது மட்டுமின்றி, வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, கனவுகளை நனவாக்கி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் ஒரு வரலாறாக திகழ்ந்தவர் என்றும் திரு.வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
டாக்டர். ராமகிருஷ்ணாவை இந்த நூல், ஒரு மாபெரும் சகாப்தமாகவும், மிகுந்த அறிவாற்றல் உடையவராகவும், தேர்ச்சியடைந்த பொறியாளராகவும் சித்தரிக்கிறது. பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்ளும் திறனும், தவறுகள் மற்றும் விளைவுகளை உணர்ந்து கொண்டு, அவற்றுக்கு புதுமையான வகையில் விரைவாக தீர்வு காணும் ஆற்றல் படைத்தவராகவும் அவர் திகழ்ந்தார்.
பல்வேறு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்த டாக்டர். ராமகிருஷ்ணா, அவற்றுக்கு எதிராக செயல்படுபவர்களையும் அரவணைத்து செயல்பட்டு தம்முடன் இணைந்து பணியாற்ற வைக்கக்கூடிய வியத்தகு ஆற்றல் பெற்றவராகவும் விளங்கினார்.
வடிவமைப்பாளர்கள், கட்டடக்கலை வல்லுனர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கக்கூடியவராகவும் இருந்தார்.
அவரது புதுவித சிந்தனைகளும், அணுகுமுறையும், அவரை ஒரு அரிய தலைவராக உயர்த்தியது. அதனால்தான், அவரால் இ.சி.சி நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. அவரது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தலைமை, இ.சி.சி. நிறுவனத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், நாட்டிலுள்ள மிகப்பெரிய மற்றும் மதிக்கத்தக்க கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக உயர்த்தியது.
தமது திறமையிலும் தம்முடன் பணியாற்றுவோரின் திறமையிலும் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்த டாக்டர். ராமகிருஷ்ணாவின் வழிகாட்டுதலால், எல் & டி நிறுவனம் மிக உயர்ந்த நிலையை அடைந்திருப்பதாகவும் திரு. வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
நவீன கால தாஜ்மஹாலாகக் கருதப்படும் பிரசித்திப் பெற்ற பாஹாய் கோவில், பெங்களூரு ஒயிட் ஃபீல்டு பகுதியில் கம்பீரமாக காட்சியளிக்கும். ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் கழகம் ஆகியவை அவரது அரிய சிந்தனைக்கு மிகச் சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றன என்றும் குடியரசுத் துணைத் தலைவர் புகழாரம் சூட்டினார்.
2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற டாக்டர் எ.பி.ஜெ.அப்துல்கலாமின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட டாக்டர்.ஏ.ராமகிருஷ்ணா, அரசுத்துறைகள், இந்திய தொழில்துறை மற்றும் பொதுநிறுவனங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகவும் பொறியியல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் பாடுபட்டவர் என்றும் திரு.வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
ஜெய் ஹிந்த்…
முழுமையான உரைக்கு www.pib.nic.in இணையதளத்தைக் காணவும்.
(Release ID: 1549604)