குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

உண்மையான தேசியவாதியாக திகழ்ந்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. – குடியரசுத் துணைத் தலைவர் புகழாரம்

Posted On: 12 OCT 2018 5:05PM by PIB Chennai

சிலமப்புச் செல்வர் ம.பொ.சியின் 23ஆவது நினைவு நாள் மற்றும் அவரைப் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இன்று (12.10.2018) நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ம.பொ.சியின் மகள் மாதவி பாஸ்கரன் எழுதிய “அறிஞர்களின் பார்வையில் ம.பொ.சி” என்ற நூலை குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாட்டின் தவப்புதல்வரான ம.பொ.சி.” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானத்திற்கு, இன்று (12.10.2018) உங்கள் அனைவருடனும் இணைந்து அஞ்சலி செலுத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

அவரது 23-வது நினைவு நாளை நாம் அனுசரிக்கும் வேளையில், ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, தமிழ் இலக்கியத்தை நன்கு கற்றறிந்த அறிஞரும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு புதிய அடையாளத்தை உருவாக்கியவருமான ம.பொ.சி. நாட்டிற்காக ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்வது அவசியம்.

தமிழ்நாட்டின் தவப்புதல்வரைப் பற்றிய நூலை வெளியிட வருமாறு அவரது மகள் அழைப்பு விடுத்தபோது, அதனை நான் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

திரு.ம.பொ.சி. அவர்கள் சுயமாக கற்றறிந்த மாபெரும் அறிஞர் ஆவார். வறுமையின் காரணமாக கல்வியைத் தொடர முடியாத அவர், தாமாகவே பயின்று அறிவாற்றலை ஏற்படுத்திக் கொண்டதுடன், அவரது காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் என்ற நிலைக்கு உயர்ந்தார். அவர் ஏராளமான கவுரவ டாக்டர் பட்டங்களையும், சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரரான அவர், மகாத்மா காந்தியின் தீவிரமான சீடர்களில் ஒருவராக திகழ்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ம.பொ.சி.யின் தலைமைப் பண்பை கண்டு வியந்த ராஜாஜி, அவரை பெரிதும் பாராட்டினார். தமிழக சுதந்திரப் போராட்டக்களத்தில் ராஜாஜி அர்ஜுனன் என்றால், ம.பொ.சிவஞானம் கிருஷ்ணரைப் போன்றவர் என்றும் திரு.வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

ம.பொ.சி. உண்மையான தேசியவாதியாக திகழ்ந்ததுடன்  இந்தியாவின் நற்பண்புகளைப் பிரதிபலித்தவர் என்றும் அவர் கூறினார்.

1940-ஆம் ஆண்டு வாக்கில், மதுவிலக்கு பிரச்சினையில் ம.பொ.சி கடைப்பிடித்த நிலைப்பாட்டிற்கு அவரது சொந்த சாதியிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனால் தனித்து விடப்பட்ட அவர், பெரியார் போன்ற மாபெரும் தலைவர்களுடன் இணைந்து மது விலக்கிற்காக உறுதியுடன் போராடினார். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதாபிமானி என்பதோடு, சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரானவராகவும் திகழ்ந்தார்.

“தமிழ்நாடு” என்ற மாநிலம் உருவாக தந்தையாகப் பாடுபட்டவர் ம.பொ.சி. என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். தமிழ்நாட்டின் எல்லையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகித்த அவர், முந்தைய சென்னை மாகாணத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1968-ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர்சூட்டுவதற்கும் காரணமாக திகழ்ந்தார்.

ம.பொ.சி. ஒரு தேர்ந்த ஆராய்ச்சியாளர், மிகச்சிறந்த எழுத்தாளர் மட்டுமின்றி கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்த  சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தவர் ஆவார்.

அமராவதி சிறையில் இருந்தபோதுதான் ம.பொ.சி. தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கினார். மகாகவி சுப்ரமணிய பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, சங்க இலக்கியத்திலும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்.  பாரதியார் பயன்படுத்திய எளிமையான சொற்கள், தமக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்ந்ததாகவும் அதுவே இலக்கியத்தில் அவரை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார். சுப்ரமணிய பாரதியைப் பின்பற்றி பத்து ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ள அவர், இலக்கியத்தில் தாம் அடைந்த வளர்ச்சியை  பாரதிக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

சாமன்ய மக்களுக்காகவும், பெண்களுக்காகவும் அரும்பாடுபட்ட ம.பொ.சி, செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்புகளை அனைவரும் அறியச் செய்தவர்.

ரா.பி.சேதுப்பிள்ளையால் ம.பொ.சி.க்கு வழங்கப்பட்ட “சிலம்புச் செல்வர்” என்ற பட்டம், இளங்கோவடிகளின் காப்பியமான சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் மேற்கொண்ட ஆழமான ஆராய்ச்சிக்காக மட்டுமின்றி, அதனை பிரபலப்படுத்த அவர் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்காகவும் வழங்கப்பட்டது. தலைசிறந்த பண்புகளைக் கொண்ட சாமானியர்களான கண்ணகி மற்றும் கோவலனின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த காப்பியத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை ம.பொ.சி. ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளார். சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை தமிழ்நாடு முழுவதும்  அறியச் செய்தவர் ம.பொ.சி. மேலும், தமிழ்மொழி வரலாற்றில் 1950-ஆம் ஆண்டு ம.பொ.சி. ஏற்பாடு செய்த “சிலப்பதிகார விழா”தான் முதலாவது விழாவாகும். அப்போது முதற்கொண்டே ம.பொ.சி.யின் தமிழரசுக்கழகம் இந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வந்தது.

ம.பொ.சி.யின் மகள் மாதவி பாஸ்கரன் தமது தந்தை பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி 2013-ஆம் ஆண்டு முதல் இந்த விழாவை மீண்டும் கொண்டாடி வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

ம.பொ.சி. எழுதிய “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற நூல், தமிழ்நாட்டில் தேசிய உணர்வை ஊட்டுவதாக அமைந்தது. 20-ஆம் நூற்றாண்டின் முதல்பகுதியில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பை இந்த நூல் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. தற்கால தமிழகத்தில் உள்ள தேசியவாதிகளுக்கு இந்த நூல் ஒரு கலைக்களஞ்சியமாக திகழ்கிறது.

தமிழ்மொழியையும், கலாச்சாரத்தையும் மிகவும் நேசித்த அவர் எழுப்பிய, “எங்கும் தமிழ் – எதிலும் தமிழ்” என்ற சொல் தமிழர்கள் ஒவ்வொருவரின் இல்லத்திலும் எதிரொலித்தது. இதையே அனைத்து அரசியல் கட்சிகளும் முழங்கி வருகின்றன.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, 1946-ஆம் ஆண்டிலேயே ம.பொ.சி. “தமிழரசு கழகம்” என்ற அமைப்பைத் தொடங்கி நிர்வாகத்திலும், கல்வியிலும் தமிழ்மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ம.பொ.சி.யைப் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்திருந்தாலும், அவரது மகள் மாதவி பாஸ்கரன் எழுதிய “அறிஞர்களின் பார்வையில் ம.பொ.சி.” என்ற நூல் உண்மையிலேயே அவரது வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் நூலாக அமைந்துள்ளது. இதற்காக நான் மாதவி பாஸ்கரனை பாராட்டுகிறேன்.

இந்த நூலை இன்று (12.10.2018) வெளியிடுவதிலும் அதனை நம் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்பதிலும் நான் மிகுந்த பெருமிதம் அடைகிறேன். ம.பொ.சி. போன்ற சிறந்த மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது.

சிறந்த மனிதர்கள் அரிய காரியத்தை செய்வார்கள் என திருவள்ளுவர் கூறியதற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் ம.பொ.சி.

ம.பொ.சி. போன்ற தொலைநோக்கு சிந்தனைக் கொண்ட தலைவர்களின் மனிதநேயமிக்கப் பண்பும், சேவையும், பல்வேறு தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

மனிதகுலத்திற்காக ம.பொ.சி. விட்டுச் சென்ற கருத்துக்களைப் பரப்புவதில் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என நான் நம்புகிறேன்.

ம.பொ.சி. போன்ற தலைசிறந்த தலைவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

ஜெய் ஹிந்த்…

முழுமையான உரைக்கு www.pib.nic.in இணையதளத்தைக் காணவும்.

 

                                    ****


(Release ID: 1549581) Visitor Counter : 1453


Read this release in: English