வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ரியல் எஸ்டேட் தொழிலில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன: அமைச்சர் ஹர்தீப் பூரி

Posted On: 12 OCT 2018 2:47PM by PIB Chennai

"ரியல் எஸ்டேட் தொழிலை முறைப்படுத்துவதில் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன" என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஹர்தீப் எஸ். பூரி பாராட்டினார்.

 

'ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத் தன்மைபொறுப்புடைமைக்கு ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டத்தின் இரண்டு ஆண்டு அமலாக்கம் மூலம் புது யுகம் படைத்தல்' என்ற தலைப்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற மண்டல அளவிலான பயிலரங்கில்  அவர் சிறப்புரை ஆற்றினார். அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

"நாடு முழுவதும் தற்போது முதல் 2030ம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் 70 கோடி சதுர மீட்டர் முதல் 90 கோடி சதுர மீட்டர் பரப்பு வரையில் வீடுகள் கட்டப்பட உள்ளன. குடிசைப் பகுதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன.

 

உலகில் 3,287,240 சதுர கிமீ பரப்பு நிலத்தைக் கொண்டு, இந்தியா உலகின் ஏழாவது மிகப் பெரிய நிலப்பரப்பு உள்ள நாடாகும். ஆனால், 2016ம் ஆண்டு வரையில் ரியல் எஸ்டேட் தொழிலை முறைப்படுத்துவதற்கு உரிய சட்டம் ஏதும் இல்லை. அதனால், மத்திய அரசு ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016ம் ஆண்டு கொண்டுவந்து, மாநிலங்கள் அதற்கான விதிகளை வகுத்துக் கொள்ள 2017ம் ஆண்டு மே 1ம் தேதி வரை அவகாசமும் தரப்பட்டது.

 

இதுவரை நாடு முழுவதும் 32,500 ரியல் எஸ்டேட் திட்டங்கள் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைப் போல் 25,000 ரியல் எஸ்டேட் முகவர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் வழியாகப் பதிவு செய்வதற்காக 21 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இணைய வாசலை (web-portal) தொடங்கியுள்ளன. இச்சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்த கர்நாடக அரசு இதுதொடர்பான மாநில சட்டத்தைக் கைவிட்டு, மத்திய அரசின் சட்டத்தையே நடைமுறைப்படுத்தியது. அதைப் போல் மேற்கு வங்க அரசும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயிலரங்கம் ரியல் எஸ்டேட் தொழிலுக்குப் பலனுள்ள வழிகாட்டியாக அமையும்" இவ்வாறு அமைச்சர் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

--------------

 


(Release ID: 1549547) Visitor Counter : 213


Read this release in: English