குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சென்னையில் 2018, அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற்ற தமிழ் வர்த்தக சங்கத்தின் பவள விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு ஆற்றிய உரை

Posted On: 11 OCT 2018 5:52PM by PIB Chennai

மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. எம்.சி.சம்பத் அவர்களே, வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. சோழ நாச்சியார் ராஜசேகர் அவர்களே, முன்னாள் தலைவர் திரு. எஸ் சந்தானம் அவர்களே, வர்த்தக சங்கத்தின் கௌரவச் செயலாளர் திரு. எஸ்.எஸ்.ஆர். ராஜ்குமார் அவர்களே, ஏற்றுமதி விருது பெற்ற தமிழ் வர்த்தக  மற்றும் சோழ நாச்சியார் அறக்கட்டளையின் உறுப்பினர்கள்  மற்றும் பார்வையாளர்களே,

புகழ்மிக்க தமிழ் வர்த்தக சங்கத்தின் பவள விழா நிகழ்ச்சிகளிலும், ஏற்றுமதி – இறக்குமதியாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சரும், அமெரிக்காவில் நடந்த ப்ரட்டன்வுட் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டவருமான டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியால் 1944-ஆம் ஆண்டு இந்த வர்த்தக சங்கம் துவக்கப்பட்டது. சர்வதேச செலாவணி நிதியம் – IMF-ம் உலக வங்கியும் உருவாக இந்த மாநாடுதான் காரணியாக இருந்தது.  இந்த இரண்டு சர்வதேச அமைப்புகளும்  உருவாக்கப்பட்டதில், தமிழ் வர்த்தக சங்கம் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்கியிருப்பது பெருமைக்குரியது.  வர்த்தக சங்கத்தின் முக்கிய தலைவர்கள் வர்த்தக மற்றும் தொழில் நலனிலும், வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள். சங்கத்தின் தலைவர் திரு. சோழ நாச்சியார் ராஜசேகர் வரவேற்புரையில் குறிப்பிட்டதுபோல, வர்த்தக மற்றும் தொழில் வளர்ச்சிக்கும், பொதுவாக சமுதாயத்திற்கும் இந்த சங்கம் முன்னணியில் இருந்து ஊக்குவிக்கும் சக்தியாக விளங்கியுள்ளது.

இந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. நாகப்பச் செட்டியார், சென்னையில் மத்திய தோல் ஆராய்ச்சிக் கழகத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். சுதந்திரத்திற்கு முன்னால், வெறும் தரகு முகவர்களாக மட்டுமே நடத்தப்பட்ட இந்திய தோல் ஏற்றுமதியாளர்களுக்காக, பிரி்ட்டிஷ் தோல் ஏல அமைப்புடன் போராடி, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதிக்கான வங்கி உத்தரவாதத்தை பெற்றுக் கொடுத்தவர் அவர். இந்த கடுமையான  முயற்சியின் மூலம் இந்திய தோல் ஏற்றுமதியாளர்களுக்கு பெருமையையும், அங்கீகாரத்தையும் அவர் தேடிக் கொடுத்தார்.

தமிழ்நாடு வர்த்தக சங்கத்தின் வரலாற்றைப் புரட்டும்போது, தமிழ் மக்களின் உறுதி, விடா முயற்சி, தொழில் ஊக்கம் ஆகியவற்றை குறிப்பிடாமல் இருக்க முடியாது. தமிழ் வரலாற்றில் சங்க காலம் முதற்கொண்டே, தமிழ் மக்கள்  தொழில்களிலும், தொழில் முனைவதிலும் சிறந்து விளங்கியவர்கள். தரைவழியிலும், கடல் கடந்தும், தமிழ் மக்கள் வெளிநாடுகளுடன் வர்த்தக உறவு வைத்திருந்தார்கள் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது. “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது கடல்தாண்டி சென்றும் பொருள் ஈட்டு என்பதைக் குறிக்கும் செய்யுள். சோழ சாம்ராஜ்யத்தில் கடற்கொள்ளையர்களிடமிருந்து, கடல் வாணிபத்தை பாதுகாப்பதற்காக ராஜராஜசோழன் உருவாக்கிய கடற்படை ஜாவா, சுமத்ரா மற்றும் இலங்கைப் பகுதிகளையும் கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தது. தமிழ் இலக்கியத்தில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று குறிப்பிட்டிருப்பது,  “எல்லாம் மக்களும் எம்மக்களே, எல்லா இடமும் எங்கள் இடமே” என்று பொருள்படும். நியூயார்க்கில் உள்ள ஐ.நா மன்றத்தின் தலைமை அலுவலக சுவற்றில் இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு மட்டுமன்றி, நாடே பெருமைப்படத்தக்க ஒன்றாகும்.  தமிழ் மக்களைப் போலவே, தமிழின் புகழும் கடல் கடந்து சென்றுள்ளது.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இந்தியாவில் கடல் வாணிபத்தை செழுமைப்படுத்தி, நாட்டின் தென்கோடியை உலகத்துடன் இணைத்த பெருமை சோழ வம்சத்தையே சாரும். சோழ மன்னர்கள் சக்திவாய்ந்த கடற்படையையும், தொழில்நுட்பம் வாய்ந்த கப்பல்களையும் பயன்படுத்தி, உலகம் முழுவதையும் மருத்துவக் குழுக்களை அனுப்பி வைத்த பெருமையும் அவர்களைச் சாரும். ஆசிய நாடுகளுடன் மட்டுமன்றி, சீனாவுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் சோழ வம்சம் வர்த்தக உறவு வைத்திருந்தது. சோழ மன்னர்களுக்கு முடிசூட்டும் கௌரவத்தைக்கூட, பாரம்பரியமான வர்த்தகர்களின் தலைவரே பெற்றிருந்தார். அந்த அளவுக்கு தமிழ் வர்த்தகர்கள் சக்தியும், நெருக்கமும் கொண்டிருந்தார்கள். சுங்கத் தீர்வையிலிருந்து வர்த்தகர்களுக்கு விலக்கு அளித்து, “சுங்கம் தவிர்த்த சோழன்” என்ற பட்டத்தை முதலாவது குலோத்துங்கச் சோழன் பெற்றிருந்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சுங்கவரியற்ற சுதந்திரமான துறைமுகக் கொள்கையை தொலைநோக்குடன் உருவாக்கியவன் அந்த மன்னன்.

தமிழ் வர்த்தக சங்கத்தினர், தென்னிந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து, தங்கள் துறைகளையும், தொழிற்சாலைகளையும் பார்வையிட ஏற்பாடு செய்திருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது. 

உலகத் தரம் வாய்ந்த தொழில்களை உருவாக்கி பேணுவதைக் கண்டறியவும், அவர்களின் அனுபவத்தை பெறவும் இது பிரத்யேக முயற்சியாகும். அந்த வகையில், 56 நாடுகளின் தொழிற்சாலைகளை பார்வையிட்ட வர்த்தக சங்கத்தினரை நான் பாராட்டுகிறேன்.

எக்ஸிம் (ஏற்றுமதி-இறக்குமதியாளர்) சாதனையாளர்களுக்கு சோழ நாச்சியார் அறக்கட்டளையுடன் இணைந்து, தமிழ் வர்த்தக சங்கம், 2010-ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கி வருகிறது. சுங்கவரித் துறை மற்றும் துறைமுகங்களிலிருந்து பெறப்படும் புள்ளி விவரங்கள் அடிப்படையிலேயே இந்த விருதுகள் வழங்கப்படுகிறது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இது, பாராட்டுக்குரிய ஒன்று. விருது பெறும் சாதனையாளர் பட்டியலை பரிசீலித்தால், அவர்களில் பெரும்பாலோர் சென்னை ஆட்டோமேட்டிவ் (தானியங்கி) தொழில் தொடர்புடையவர்கள் என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதன் காரணமாக, சென்னை நகரம் “ஆசியாவின் டெட்ராய்ட்” என்ற பெயரை பெற்றுள்ளது. அரசுத்துறைகள், சுங்கவரி,  கடற்படை, கடலோர காவல்படை, துறைமுகம் மற்றும் தனியார் கப்பல் நிறுவனங்கள், போக்குவரத்து ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம், பெட்டக நிறுவனங்கள், கிடங்குகள் மற்றும் வங்கிகளும் இந்த விருதுகளை பெறுகின்றன.

பட்டுச் சேலையில், சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு டாக்டர் நல்லி விருதுகளை வழங்குவதை பாராட்டுகிறேன்.

சுங்கவரி, மத்திய கலால்வரி, ஜிஎஸ்டி, ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் மத்திய – மாநில அரசுகளில், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் இடம்பெற்று, வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.  

தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் புரட்சி காரணமாக உலகம், அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத நாடுகள் எதிர்கொள்ள முடியாமல் பின்தங்கிவிடும். உலகின் சக்திவாய்ந்த பொருளாதாரமாக இந்தியா முகிழ்த்து வரும் நிலையில், இந்த வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் தனியார் துறை மிகப் பெரிய பங்களிப்பை செலுத்த முடியும்.

தொழில்துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னணியில் உள்ளது. வேளாண்மையிலும், ஆதார வளத்திலும் மனித ஆற்றலிலும் வளமான நிலையில் தமிழகம் உள்ளது. தமிழ் மக்களின் கடுமையான உழைப்பு காரணமாக, ஆட்டோமேட்டிவ், தோல் மற்றும் ஜவுளித் தொழில்களில் தமிழ்நாட்டிற்கு தனிச்சிறப்பு இருக்கிறது. இந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், திறனையும் புத்தம்புது தொழில்நுட்பத்தையும் நாம் ஊக்குவிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி போன்ற சீரமைப்பு நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் நீண்டகால பலனளிக்கக் கூடியவை என்றாலும், அதன் தொடக்க நிலையில், சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். இப்போது நாம் உண்மையிலேயே “ஒரே நாடு, ஒரே வரி” என்ற நிலையில் இருக்கிறோம்.  கூடுதல் வரிகளோ அதன் அடுக்குகளோ வரி விதிப்புக்கும், வசூலுக்கும் தடையாக இருக்காது. வரி செலுத்தும் விவரத்தை ஆன்லைன் மூலமாகவும், செயலி மூலமாகவும் தெரிவிக்க அனுமதிப்பதன் மூலம், வரி ஏய்ப்பு, ஊழல் போன்றவற்றை கணிசமாக குறைக்க முடியும். இதன் விளைவாக, வாடிக்கையாளர்களுக்கு நன்மை கிட்டுவதுடன், வர்த்தகத்திலும் விறுவிறுப்பு ஏற்பட்டு, வளர்ச்சி, அபிவிருத்தியை நோக்கி அது இட்டுச்செல்லும்.

தற்போது நிறைவேற்றப்பட்டு வரும் சீர்தி்ருத்த நடவடிக்கைகளும், மறுமலர்ச்சிக்கான தொலைநோக்கும், இந்தியாவை முதலீட்டுக்கான ஒரு முக்கிய மையமாக மாற்றியிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் தற்போது 8 சதவீத வளர்ச்சியுடன், உலகில் வேகமான வளர்ச்சி பெற்ற பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பங்குச் சந்தையில் வேகம் ஏற்பட்டு, அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்து, கட்டமைப்பு துறைகளில் அரசின் முதலீடு அதிகரித்துள்ளது.

சகோதர, சகோதரிகளே,

      2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் 3-வது பெரிய நுகர்வுச் சந்தையாக மாற்றி, இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்த்துவதென்று நாம் உறுதிபூண்டுள்ளோம். தனியார் துறையின் ஈடுபாடும், துடிப்பும், பங்களிப்பும் இல்லாமல் இந்த பிரமாண்டமான கனவை நம்மால் நிறைவேற்ற முடியாது.

      அண்மையில் வெளியான உலக வங்கியின் முன்னோட்டக் கணிப்பின்படி, 2018-19ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், அடுத்த இரண்டாண்டுகளில் 7.5 சதவீதமாகவும் இருக்கும்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, எரிபொருளுக்கு உதவித்தொகை அளிப்பதில் சீர்திருத்தம், உறுதியான நிதிக் கட்டுப்பாடு, தரமான பொது செலவினம், ஸ்திரமான ஏற்றுமதி – இறக்குமதி சமன்பாடு ஆகிய பரந்துபட்ட பொருளாதார கொள்கைகளே இந்தியப் பொருளாதாரம் சமீப ஆண்டுகளில் ஓங்கி வளர்ந்திருப்பதற்குக் காரணம் என்று உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை எளிதாக்குதல், நேரடி அந்நிய வர்த்கத்திற்கான அனுமதி, கடன் வழங்குதலில் முன்னேற்றம் ஆகியவையும், இந்த முன்னேற்றத்திற்கு கைகொடுத்துள்ளன.

உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவதில் இந்த ஆண்டில், இந்தியா 30 இடங்கள் முன்னேறியிருக்கிறது.  2018-19ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் என்றும், உலகின் பெரிய பொருளாதார நாடுகளைக் காட்டிலும் இது முன்னேற்றகரமானது என்றும் ஐஎம்எஃப் மதிப்பீடு செய்துள்ளது.

பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவது உட்பட ஏராளமான சீர்திருத்தங்களை இந்திய அரசு தற்போது மேற்கொண்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில், 32 கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வங்கிகளில் கணக்குத் தொடங்கி, உள்ளடக்கிய நிதி என்ற எதார்த்தத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.  வரிவிதிப்பு வரைமுறைகள் விரிவாக்கப்பட்டு, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  “இந்தியாவில் தயாரிப்போம்”, “திறன் பெற்ற இந்தியா”, “டிஜிட்டல் இந்தியா”, “நவீன நகரங்கள்”, “எழுக இந்தியா” என்ற இந்திய அரசின் கொள்கைகள் புதுப்புது வாய்ப்புகளை திறந்துள்ளன.

2017-18ஆம் ஆண்டில், 6 ஆயிரத்து 200 கோடி டாலர் அளவுக்கு நேரடி அந்நிய முதலீடு குவிந்து, இந்தியாமீது உலக அளவிலான நம்பிக்கை வலுவடைந்துள்ளது. சிவப்பு நாடா முறையிலிருந்து விலகி, சிவப்புக் கம்பளம் விரிக்கும் முறைக்கு இந்தியா தற்போது சென்றுள்ளது தொழில்களுக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு. ஒளிவு மறைவற்றதாக மாற்றப்பட்டுள்ளன.

செல்வத்தை உருவாக்குவதற்கான வர்த்தகத்தை பெருக்கும் சூழலை உருவாக்கும் பாலமாக அரசுக்கும், தொழில்களுக்கும் இடையே வர்த்தகச் சங்கங்கள் செயல்படுகின்றன. தனியார் துறைக்கு வர்த்தக சங்கங்கள் மனசாட்சியின் காவலனாக செயல்பட வேண்டும். தனியார் துறை தனக்குத்தானே கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு, செயல்படும் காலம் கனிந்துள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய தணிக்கை அதற்கு ஒரு உதாரணம். கட்டுப்பாடற்ற வளர்ச்சி, சுற்றுச்சூழல் கேட்டிற்கு காரணமாக அமைந்ததை நாம் உணர்ந்திருக்கிறோம்.

இத்தகைய சூழ்நிலையில், தொழில்கள் சுய கட்டுப்பாட்டுடனும், நிதானத்துடனும், உண்மையாகவும் செயல்படும்படி வர்த்தக சங்கங்கள்  ஊக்குவிக்க வேண்டும். தேவையற்ற கழிவுகளை பைசல் செய்வது, வேதிப்பொருட்களையும், பூச்சி மருந்துகளையும் பயன்படுத்துவது, உணவு பதப்படுத்தலில் தரத்தை பேணுவது முதலியவற்றில் வர்த்தக சங்கங்கள் பங்காற்ற வேண்டும்.  லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், வர்த்தகத்தில் உள்ள நியாயத்தையும், நியதியையும் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வர்த்தகப் பாடங்களை கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் முதல், அனைத்து தொழில்களிலும் இந்த நியதிகள் பின்பற்றப்பட வேண்டும். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பிரிவினரும், சம வாய்ப்பு பெறும் வகையில், இந்தியப் பொருளாதாரம் என்பது உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வர்த்தக சங்கம் பாடுபடவேண்டும். பெண்கள் இதில் பங்களிப்பை செலுத்த முடியாத தடை இருப்பதையும், அதை எதிர்த்து அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் நாம் காண்கிறோம். இந்த பாரபட்சத்தைப் போக்க,  தொழில்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கருவுற்றதாலேயே பெண்களை தொழில் வளர்ச்சியிலிருந்து ஒதுக்கி வைக்கும் முறை கூடாது. அது மனிதாபிமானற்றது. நியதிக்கு எதிரானது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் காவல் அரணாக வர்த்தக சங்கங்கள் செயல்பட வேண்டும்.

குறு-சிறு-நடுத்தர-குடிசைத் தொழில்கள் மட்டில் சிறப்புக் கவனம் தேவை. சுய உதவிக் குழுக்களை குறிப்பாக, மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவிப்பதில் வர்த்தக சங்கம் பாடுபட வேண்டும். கேரளாவில், குடும்பஸ்த்ரீ மகளிர் சுயஉதவிக் குழுக்கள்  மறுமலர்ச்சி பெற்று, பெண்கள் நிதி சுதந்திரமும், உரிய மரியாதையும் பெற்றுத்தருவதற்கு உதவியுள்ளதை பார்க்க வேண்டும். பின்பற்றத்தக்க முன்மாதிரியாக அவை திகழ்கின்றன. நமது நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித்தருவதில் முக்கிய பங்கு வகிக்கும் சிறுதொழில்களின் வளர்ச்சியும் தேவையான ஒன்று. வறியவர்கள் மற்றும் நலிவுற்றோருக்கு வல்லமையை அளிப்பது அந்தத் துறைதான். குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம், கிராமப் புறங்கள் பொருளாதார வளர்ச்சியின் மையமாக மாறுவதற்கும், வேலை தேடி நகரங்களைத் தேடி மக்கள் செல்வதை தடுப்பதற்கும் இது உதவும்.

புதுமைகளைப் படைப்பதில் குறிப்பாக, வேளாண் துறையில் புத்தம் புதிய முறைகளை பின்பற்றுவதில் வர்த்தக சங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும். நமது வேளாண் முறை நிரந்தரத் தன்மை கொண்டதாக இல்லாமல், பல்வேறு சாதக பாதகங்களை கொண்டுள்ளது. நமது மாணவர்களையும், பரிசோதனைக் கூடங்களையும், வயல் வெளிகளுக்கு அழைத்துச் சென்று, நமது விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தின் பலன்களை உணரச் செய்ய வேண்டும். விவசாய விளைபொருளை விரைவாக கொண்டு செல்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் ஏற்ற வசதிகளை உருவாக்கிட வேண்டும். விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது அவசியம். அதில், வர்த்தக சங்கத்தின் பங்களிப்பு முக்கியமானது. விவசாயிகளின் வருவாயை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவது என்ற லட்சியத்தை அதன் மூலம் நிறைவேற்ற முடியும்.

தனியார் துறை என்பது சமூகப் பொறுப்புக்கான செலவினத்துடன் நின்றுவிடாமல், சமூகக் கடமைகளை நிறைவேற்றுவதில் இன்னும் கொஞ்சம் தாராளமாக நடந்து கொள்ள வேண்டும். பிறருடன் பகிர்ந்து கொள்ளுதலும், பேணுதலும் தான் நமது இந்தியப் பண்பாடு. நம்மைவிட பலவீனமானவர்களுடன் நமது செல்வத்தை பகிர்ந்து கொள்ளும் முறையை தனியார் துறை வளர்த்துக் கொள்ள வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படி பரந்த மனதுடன் நடந்து கொண்டால், பல புதுமைகளை நிகழ்த்த முடியும் என்பதுடன், வரலாற்றிலும் இடம்பெற முடியும்.

தொழில் முனைவு உணர்வை ஊக்குவிப்பதும் உங்கள் கடமை.  நமது இளைஞர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் தற்போதைய கொள்கை. தொழில் முனைவோர்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோராக மாறுகிறார்கள். இதன்மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், பொதுவான வளர்ச்சிக்கும் அவர்கள் பங்காற்றுகிறார்கள். தொழில்கள் தொடங்குவதற்கான வழிகளை எளிதாக்கும் வகையில், சட்டங்கள் இருக்க வேண்டும் என்பதை அரசுக்கு வர்த்தக சங்கங்கள் எடுத்துரைக்க வேண்டும்.

நாடு தற்போது சந்திக்கும் சூழ்நிலையில், இந்த வர்த்தக சங்கமும், அதன் பிரதிநிதிகளும், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பாதையை வகுத்துக் கொண்டு, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் சேவையாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பவள விழா கொண்டாடும் தமிழ் வர்த்தக சங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்.  மேலும், அது சிறந்தோங்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய்ஹிந்த்.

------------



(Release ID: 1549439) Visitor Counter : 596


Read this release in: English