மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கல்விக்கான உதவித் தொகை 55 சதவீதம் உயர்வு, 10 லட்சம் மாணவர்களுக்கு ரூ. 2,200 கோடி கடனுதவி மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர்

Posted On: 05 OCT 2018 3:47PM by PIB Chennai

கல்விக்கான உதவித் தொகை 55 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் 175ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை அவர் திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றியபோது, “அனைத்து உதவித் தொகைகளும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் 1ம் தேதியே போடப்பட்டுவிடும். இது வரும் டிசம்பரில் அமலாகிறது” என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியை ஒட்டி, கல்லூரியின் இணையதளத்தை மறுவெளியீடு செய்த அமைச்சர் திரு. ஜவடேகர், செயின்ட் ஜோசப் கல்லூரியின் 175வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், விழா மலரையும், செயின்ட் ஜோசப் கல்லூரிக் குழுமங்களின் வரலாற்றுப் பெட்டகம்’ (Museum of Natural History in St. Joseph’s Institutions) மற்றும் ‘பூக்கும் தாவரங்கள்’ (Flowering Plants) ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. ஜவடேகர் பேசியதாவது:

நாடு முழுவதும் 10 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடனாக ரூ. 2,200 கோடி அளிக்கப்படும். இது அடுத்து 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

மானுட மேம்பாட்டுக்குக் கல்வி மட்டும்தான் மிகவும் முக்கியப் பங்கினை ஆற்றுகிறது. எனவே, கல்விக்கே அனைத்து முக்கியத்துமும் தரப்பட வேண்டும்.

உலகில் சிறந்த கலாசாரக் கல்வியைக் கொண்ட நாடாக இந்தியாவே திகழ்கிறது. தொழில்நிறுவனங்கள் – கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மையையைப் போல் விழுமிய நடைமுறை (value system) கல்விக்கு மிகவும் முக்கியமானது.

பள்ளிகளிலிருந்தே தரமான கல்வியை மேம்படுத்துவது அவசியம். கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் கல்வித்தரத்தைக் காப்பதில் கடமைப்பட்டவர்கள். நாடு முழுதும் 15 லட்சம் பேர் ஆசிரியர் பயிற்சியைப் பெறுகிறார்கள், அவர்களில் மூன்றாவது அணியினர் வரும் மார்ச் மாதம் பயிற்சி முடித்துவிடுவார்கள்.

நம் நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு புத்தாக்கம் அடிப்படையானது. ஆய்வு, கல்வி ஆகியவற்றில் புதுமையாக்கம் மிகவும் முக்கியமானது”

இவ்வாறு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர்  பேசினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. கே. ராஜாமணி ஐஏஎஸ், பாரதிதாசன்  பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பி. மணிசங்கர் ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

*******


(Release ID: 1548723) Visitor Counter : 211


Read this release in: English