பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
நாட்டில் சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பதைக் கையாள விரிவான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
26 SEP 2018 3:48PM by PIB Chennai
ஏற்கனவே சர்க்கரை கையிருப்பு அதிகமாக இருப்பதாலும், 2018-19 சர்க்கரை பருவத்தில் இதேபோன்ற கூடுதல் சர்க்கரை உற்பத்திக்கான அறிகுறி இருப்பதாலும், வருகின்ற கரும்பு பருவத்திலும் சர்க்கரை ஆலைகளின் கடன் பிரச்சினை நீடிக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையும் முன்னெப்போதும் இல்லாத அளவாக உச்சத்திற்கு செல்லக்கூடும்.
இந்த நிலைமையை சரிசெய்வதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ரூ.5,500 கோடி நிதியுதவிக்கான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கரும்பு விலைக்கான இழப்பீட்டை வழங்கவும், கரும்பு ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு சர்க்கலை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கவும், இந்த நிதியுதவி பயன்படும்.
விவரங்கள் :
அ) 2018-19 சர்க்கரை பருவத்தின்போது ஏற்றுமதிக்காக உள்நாட்டிற்குள் சர்க்கரையை கொண்டுசெல்வது, ஏற்றுவது மற்றும் பிற செலவுகளுக்காக ஏற்றுமதி தளங்களிலிருந்து 100 கி.மீட்டருக்குள் சர்க்கரை ஆலைகள் அமைந்திருந்தால், ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.1,000-மும், கடற்கரையோர மாநிலங்களில் துறைமுகத்திலிருந்து 100 கி.மீட்டருக்கு அப்பால் ஆலைகள் இருந்தால் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,500ம், கடற்கரை அல்லாத மாநிலங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,000 அல்லது உண்மையான செலவில் எது குறைவோ அது வழங்கப்படும். இதற்கு ஆகும் மொத்த செலவுத் தொகையான ரூ.1375 கோடியை அரசு ஏற்கும்.
ஆ) விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்குவதற்கு வசதியாக 2018-19 சர்க்கரை பருவத்தின்போது சாறு பிழியப்படும் ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.13.88 என்ற அளவில் நிதியுதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்றும் ஆலைகளுக்கு மட்டுமே இந்த நிதியுதவி வழங்கப்படும். இதற்கு ஆகும் மொத்த செலவுத் தொகையான ரூ.4,163 கோடியை அரசு ஏற்கும்.
இ) கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய முந்தைய ஆண்டுகளின் நிலுவை உட்பட சர்க்கரை ஆலைகள் சார்பில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படும். நிலுவைத் தொகைபோக மிச்சமிருந்தால், அது ஆலையின் கணக்கில் செலுத்தப்படும். அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றும் ஆலைகளுக்கு மட்டுமே இந்த உதவிகள் வழங்கப்படும்.
*********
(रिलीज़ आईडी: 1547501)
आगंतुक पटल : 200