தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தேசிய டிஜிட்டல் தொலை தொடர்பு கொள்கை- 2018-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவை இணைக்கவும்,உந்தி செல்லவும், பாதுகாக்கவும்
உலகளாவிய அகன்ற அலைவரிசை இணைப்புகள் வினாடிக்கு 50 மெகாபைட்கள் வேகத்தில் அனைத்து குடிமக்களுக்கும் வழங்குதல்
அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் வினாடிக்கு 1 கிகாபைட் வேகத்தில் அகன்ற அலைவரிசை இணைப்பு வழங்குதல்
இதுவரை இணைய சேவை கிடைக்க பெறாத அனைத்துப் பகுதிகளிலும் இணைய சேவை கிடைப்பதை உறுதி செய்தல்
டிஜிட்டல் தொலைதொடர்பு துறையில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்தல்

Posted On: 26 SEP 2018 4:06PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய டிஜிட்டல் தொலை தொடர்புக் கொள்கை – 2018 மற்றும் தொலைத் தொடர்பு ஆணையத்தை “டிஜிட்டல் தொலைத் தொடர்பு ஆணையம்” என்று பெயர் மாற்றம் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விளைவுகள்:

இந்தியா டிஜிட்டல் அதிகாரம் பெற்ற பொருளாதாரம் மற்றும் சமுதாயம் மிகுந்த நாடாக மாறுவதற்கு உதவும் வகையில், குடிமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தேவைகளையும் பூர்த்தி செய்ய தேசிய டிஜிட்டல் தொலைத் தொடர்பு கொள்கை 2018-ல் வகை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் எந்த பகுதியிலும், வளைந்து கொடுக்கக் கூடிய மற்றும் கட்டுப்படியாகக் கூடிய விதத்தில் டிஜிட்டல் தொலைத் தொடர்பு கட்டமைப்பு வசதிகளையும், சேவைகளையும் ஏற்படுத்துவதன் மூலம் மேற்கூறியவற்றை நிறைவேற்ற வகை செய்யப்பட்டுள்ளது.

“நுகர்வோர் நலன் சார்ந்த” மற்றும் “பயன்பாடு சார்ந்த” தேசிய டிஜிட்டல் தொலைத் தொடர்புக் கொள்கை 2018, 5ஜி, ஐ.ஓ.டி., எம்.2 எம். உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவின் தொலைத் தொடர்த் துறையை நிர்வகிக்க தேவையான புதிய கருத்துக்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வகை செய்யும்.

நோக்கங்கள்:

இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் வருமாறு:

 1. அனைவருக்கும் அகன்ற அலைவரிசை;
 2. டிஜிட்டல் தொலைத் தொடர்புத் துறையில் 40 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்;
 3. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் டிஜிட்டல் தொலைத் தொடர்புத் துறையின் பங்களிப்பை, 2017 ஆம் ஆண்டின் 6%-லிருந்து 8%-மாக உயர்த்துதல்;
 4. சர்வதேச தொலைத் தொடர்பு அமைப்பின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி வீதத்தில் 2017 ஆம் ஆண்டு 134-வது இடத்தில் உள்ள இந்தியாவை, முதல் 50 நாடுகளில் ஒன்றாக மாற்றுதல்;
 5. சர்வதேச மதிப்புச் சங்கிலியில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்துதல்; மற்றும்
 6. டிஜிட்டல் இறையாண்மையை உறுதி செய்தல்.

இந்த நோக்கங்கள் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.        

பலன்கள்:

· ஒவ்வொரு குடிமகனுக்கும் வினாடிக்கு 50 மெகாபைட் வேகத்திலான உலகளாவிய அகன்ற அலைவரிசை இணைப்பு வழங்குதல்;

· அனைத்துக் கிராம பஞ்சாயத்துக்களுக்கும் 2020-ம் ஆண்டுக்குள் வினாடிக்கு 1 கிகாபைட் வேகத்திலும், 2022-க்குள் 10 கிகாபைட் வேகத்துடனும் அகன்ற அலைவரிசை இணைப்பு வழங்குதல்;

· இதுவரை இணைய வசதி இல்லாத அனைத்துப் பகுதிகளுக்கும் இணையதள இணைப்பு வழங்குவதை உறுதி செய்தல்;

· டிஜிட்டல் தொலைத் தொடர்புத் துறையில் 10 கோடி டாலர் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்தல்;

· அதிநவீன திறன் உருவாக்கத்திற்காக 10 லட்சம் மனித சக்திக்கு பயிற்சி அளித்தல்;

· 500 கோடி இணைப்புக் கருவிகளுக்கு இணையதள சூழல் முறையை விரிவுபடுத்துதல்;

· தனித்துவம், சுயாட்சி மற்றும் தனிநபர் விருப்பங்களை பாதுகாக்கக் கூடிய டிஜிட்டல் தொலைத் தொடர்புக்காக, விரிவான புள்ளி விவர பாதுகாப்பு நடைமுறை ஒன்றை உருவாக்குதல்;

· உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் வலிமையான பங்களிப்பை வழங்குதல்;

· பாதுகாப்பு குறித்து குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அமைப்பு சார்ந்த நடைமுறை மூலம் பொறுப்புணர்வை நடைமுறைப்படுத்துதல்; மற்றும்

· டிஜிட்டல் தொலைத் தொடர்பு கட்டமைப்பு மற்றும் சேவைகளை பாதுகாப்பதே இந்த கொள்கையின் நோக்கம்.

செயல் திட்டம்:

இந்த கொள்கை வலியுறுத்தும் அம்சங்கள்:-

 1. தேசிய கண்ணாடி இழை ஆணையம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் தேசிய டிஜிட்டல் தொகுப்பு ஒன்றை ஏற்படுத்துதல்;
 2. பொது சேவை அமைப்பு மற்றும் அனைத்து புதிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்காக பயன்பாட்டு தாழ்வாரம் ஒன்றை உருவாக்குதல்;
 3. வழியின் பொது உரிமை, செலவினம் மற்றும் காலக்கெடுவை நிர்ணயிப்பதில், மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இடையே அமைப்பு ரீதியான ஒத்துழைப்புகளை உருவாக்குதல்;
 4. அனுமதி வழங்குவதில் உள்ள தடைகளை அகற்றுதல்; மற்றும்
 5. வெளிப்படையான அடுத்த தலைமுறை தொலைத் தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்.

பின்னணி:

தற்போதைய உலகம், 5ஜி, ஐ.ஓ.டி மற்றும் எம்.2.எம். போன்ற அதிநவீன தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்த காலகட்டத்தில், இந்திய தொலைத் தொடர்புத் துறையில், புதிதாக தோன்றும் வாய்ப்புகளை எதிர்கொண்டு டிஜிட்டல் இந்தியாவுக்கான முக்கிய தூணை உருவாக்கக் கூடிய, நுகர்வோர் நலன் சார்ந்த மற்றும் பயன்பாடு சார்ந்த கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. தற்போது கிடைக்கும் தொலைத் தொடர்பு சேவைகளை மட்டுமின்றி தொலைத் தொடர்பு அடிப்படையிலான பல்வேறு சேவைகளையும் விரிவுபடுத்த வேண்டியதும் அவசியமாகும்.

இந்தியாவின் டிஜிட்டல் தொலைத் தொடர்புத் துறையின் நவீன தேவைகளை நிறைவேற்றும் வகையில், தற்போதுள்ள தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை 2012-க்கு பதிலாக, புதிய தேசிய டிஜிட்டல் தொலைத் தொடர்புக் கொள்கை 2018 உருவாக்கப்பட்டுள்ளது.

*****(Release ID: 1547468) Visitor Counter : 1333


Read this release in: Telugu , English , Kannada