PIB Headquarters

தென்னக ரயில்வே கூலித் தொழிலாளியின் விதவை மனைவிக்கு ரூ. 18 லட்சம் இழப்பீடு

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2018 6:15PM by PIB Chennai

தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தில் தினக்கூலித் தொழிலாளியாகப் பணியாற்றியவர் திரு. சி. சண்முகவேல். அவரது தனது பணியை நிர்வாகம் கிடைக்க வேண்டிய உரிய பலன்களை வழங்கி, முறைப்படுத்த வேண்டும் என்று கோரி, சென்னையில் உள்ள மத்திய அரசு தொழிலாளர் நலத் துறையின் துணைத் தலைமை ஆணையரை அணுகினார். இதையடுத்து இந்த வழக்கில் சமரசம் மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதும், அதை நிர்வாகம் நிறைவேற்றாததால், மத்திய அரசின் தொழில் தகராறு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது. தீர்ப்பாயம் அதை விசாரித்து தொழிலாளிக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.

ஆனால், ரயில்வே நிர்வாகம் அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்தது. எல்லா நீதிமன்றங்களிலும் தொழிலாளி சண்முகவேலுக்குச் சாதகமாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இதனிடையில் அவர் இறந்துவிட்டார். அதன் பிறகும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பின்படி உரிய நிவாரணத்தை அளிக்காமல் தாமதம் செய்து வந்தார்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி உரிய நிவாரணத்தை அளிக்கும்படி மதுரை கோட்ட மேலாளரை சென்னை, மத்திய அரசு தொழிலாளர் நலத் துறை துணைத் தலைமை ஆணையர் நிர்பந்தித்தார். மேலும், அவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையையும் மேற்கொண்டார்.

மத்திய தலைமைத் தொழிலாளர் நலத் துணை ஆணையர் அலுவலகம் அளித்த கட்டாயத்தின் பிறகே மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் தொழிலாளியின் மனைவி திருமதி முத்துக்குட்டியின் வங்கிக் கணக்கில் நிலுவையுடன் சேர்த்து ரூ. 18,91,139 தொகையைச் செலுத்தினார். அவ்வாறு தொகை செலுத்தப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், ஓய்வூதியம் குறித்த கடிதத்தின் நகல், இதர நிலுவைத் தொகைகள் குறித்த விவரத்தை சென்னையில் உள்ள துணைத் தலைமை ஆணையர் (மத்தியப் பிரிவு) திரு. வி. முத்து மாணிக்கம் முன்னிலையில் ரயில்வே கோட்ட பணியாளர் துறை அதிகாரி தாக்கல் செய்தார். நீதிமன்றத் தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்பட்டது.

*****

ரெசின்


(வெளியீட்டு அடையாள எண்: 1547115) வருகையாளர் எண்ணிக்கை : 154
இந்த வெளியீட்டை படிக்க: English