சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் சுகாதாரத் திட்டத்தை நாளை (23.09.18) ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தொடங்கி வைக்கிறார்

Posted On: 22 SEP 2018 4:02PM by PIB Chennai

பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் – ஆயுஷ்மான் பாரத் சாதாரண, சாமானிய மக்களுக்கும் சுகாதாரத் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய அரசு முன்னெடுத்து வைக்கிறது. இந்தத் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நாளை தொடங்கி வைக்கிறார். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரத் திட்டங்களில் உரிய பலன் கிடைக்கும் வகையில், பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் – ஆயுஷ்மான் பாரத் திட்டம்  செயல்படுத்தப்பட்ட உள்ளது. இந்த ஆரோக்கிய நலத் திட்டத்தின் மூலம், சுகாதார நலத்திட்டத்தை மக்கள் விருப்பத்திற்கேற்ப, மத்திய அரசு, புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்கிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள்

  • ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின்மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும்வகையில் அமல்படுத்தப்படுகிறது.
  • 10.74 கோடி குடும்பங்களுக்கு மேல் (ஏறத்தாழ 50 கோடி பயனாளிகள்) இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெற தகுதியுள்ளவர்கள் ஆகின்றனர்.
  • உடனடியாக ரொக்கமாக பணம் செலுத்தாமலேயே, ஆவணங்கள் எதுவுமின்றி பயனாளிக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.
  • மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, அதிகபட்ச மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கு இந்தத் திட்டம் வகை செய்கிறது.
  • நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல், தகுதி படைத்த குடும்பங்களுக்கு தரமான மருத்துவ சேவையை இந்தத் திட்டம் வழங்குகிறது.
  • இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் உலக அளவில், அரசு நிதியுதவியுடன்  செயல்படுத்தப்படும் மிகப் பெரிய சுகாதார பாதுகாப்புத் திட்டமாக உருவாகும். 

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரும்முன் காப்பது, நோயை குணப்படுத்துவது, நோயாளியை பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களுடன் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தின் பலன்கள் மக்கள் அனைவருக்கும் வீடு தோறும் சென்றடைவதற்கு வசதியாக நாடு முழுவதும் 1,50,000 சுகாதார மற்றும் உடல்நல மையங்கள் உருவாக்கப்படும்.
  • குடும்ப நலம் மற்றும் குழந்தைகள் நல சேவைகள், தொற்று நோய் அல்லாத பிற நோய்களுக்கு காப்பீடு வழங்கவும், ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவைகள் கிடைக்கும் வகையில் இந்த மையங்கள் செயல்படும்.

பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் – பெரும் மருத்துவச்  செலவிலிருந்து  பாதுகாப்பு.

  • தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனத்தின் 71-வது சுற்று கணக்கெடுப்பின்படி, 85.9 சதவீத கிராமப்புற குடும்பங்களுக்கும், 82 சதவீத நகர்ப்புற குடும்பங்களுக்கும் சுகாதாரக் காப்பீடு இல்லாதது தெரியவந்துள்ளது. பெரும் மருத்துவச் செலவு மக்களை கடனாளியாக்கி விடுகிறது. கடன் வாங்கி 24 சதவீத கிராமப்புற மக்களும், 18 சதவீத நகர்ப்புற மக்களும் மருத்துவச் சேவை பெறுவதாக இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
  • பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் – கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டது.
  • பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் – மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவதிலிருந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவது வரையிலான மருத்துவச் சேவை.
  • இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், பயனாளிக்கு மருத்துவமனையில் செலவு செய்வதை தடுப்பதாகும். நாட்டில் மருத்துவச் சேவை அளிக்கும் பதிவு பெற்ற சுகாதாரச் சேவை மையங்கள் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சுமார் 1,350 வகையிலான மருத்துவச் சிகிச்சைகள் இந்தத் திட்டத்தின்மூலம் வழங்கப்படும். இந்த த் திட்டத்தின்கீழ் மருத்துவச் சேவை வழங்குபவர், நாடு முழுவதும் உள்ள தனது மருத்துவமனையில் பயனாளிக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
  • பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் – மாநிலங்களுடன் ஒத்துழைப்பு

இந்தத் திட்டம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தேசிய அளவிலான மாநாடுகள், பிராந்திய அளவிலான பணிக்குழுக்கள் பங்களிப்புடன், கள அளவில் தீவிரப் பயிற்சிகள் மூலம் வடிவமைக்கப்பட்டது.

  • இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாநிலங்கள் ஏற்கனவே இருக்கும் அறக்கட்டளை அல்லது சங்கத்தை பயன்படுத்தலாம். அல்லது புதிதாக அறக்கட்டளை அமைத்து செயல்படுத்தலாம். எப்படி இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்று மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
  • மாநிலங்கள் இந்த திட்டத்தை காப்பீடு நிறுவனம் மூலமாகவோ, அல்லது நேரடியாக அறக்கட்டளை மூலமாகவோ அல்லது இணைந்தோ செயல்படுத்தலாம்.
  • இந்தத் திட்டத்தை செயல்படுத்த 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களோடு மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தமிழ்நாடு இந்த ஒப்பந்தத்தில் கடந்த 11ஆம் தேதி கையெழுத்திட்டது.

பிரதம மந்திரி சுகாதாரச் சேவகன்

  • பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சான்றிதழ் அளிக்கப்பட்ட முன்னணி சுகாதாரப் பணி அலுவலர்கள் உருவாக்கப்படுவார்கள். இவர்கள் குறிப்பிட்ட பயனாளி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவார்கள். இந்தத் திட்டம் முறைப்படி செயல்படுத்தும் கருவியாக இவர்கள் செயல்படுவார்கள்.
  • இதுவரை, 20 மாநிலங்களில் 3,519 சுகாதாரச் சேவகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மருத்துவச் சேவை அளிக்க 15,686 விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன.

********



(Release ID: 1546957) Visitor Counter : 1518


Read this release in: English