திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத்திறன் அமைச்சக அதிகாரிகள் பயணம்

Posted On: 20 SEP 2018 5:42PM by PIB Chennai

திறன் மேம்பாட்டில் மாவட்ட நிர்வாகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொண்டு அவற்றை தீர்ப்பதற்கு வழி வகை காண வசதியாக  முன்னேற விரும்பும் மாவட்டங்களில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத்திறன் அமைச்சக அதிகாரிகள் பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு, திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் திறன் அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டத்தின்படி அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி வரை அமைச்சக உயர் அதிகாரிகள் இந்தப் பயணத்தை மேற்கொள்வார்கள்.

    தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் மத்திய, மாநில திட்டங்களை ஒருமுகப்படுத்துவது, அதிகாரிகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது, மாவட்டங்களிடையே போட்டியை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் திறம்பட மாற்றியமைப்பதற்கென முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியது.  இந்தத் திட்டம் சம்பந்தப்பட்ட மாவட்டங்கள், மக்கள் வாழ்க்கைத் தரத்தில் ஒட்டுமொத்த மேம்பாட்டை கொண்டுவருவதற்கு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தும். இதன் மூலம் “அனைவருடன் இணைந்து , அனைவருக்கும் மேம்பாடு” உறுதி செய்யப்படும்.   இந்தத் திட்டத்தில் முக்கிய கவனம் பெறும் ஒரு அம்சம் திறன் மேம்பாடு ஆகும்.

      திறன் மேம்பாடு, தொழில் முனைவுத்திறன் அமைச்சக அதிகாரிகள் பயணம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட பரிஷத் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் திட்ட அமலாக்கத்திற்கான மாநில நிலை அதிகாரிகள் ஆகியோரை சந்திப்பதில் தொடங்கும். குழுவினர் பிரதமர் திறன்மேம்பாட்டு மையங்கள், பயிற்சி வழங்குவோர், தொழிலியல்  பயிற்சி நிறுவனங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஜே.எஸ்.எஸ். எனப்படும் மக்கள் கல்வி நிறுவன நிர்வாகம் ஆகியவற்றையும் சந்திப்பார்கள். இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள தொழில் துறையினர் மற்றும் மாணவர்களுடன், குழுவினர் கலந்துரையாடுவார்கள். இந்த நடவடிக்கைகள் மூலம்  மாவட்டத்தில் நிலவும் திறன் சூழ்நிலை குறித்து கணக்கு எடுக்கப்படுகிறது.  மாவட்ட  நிலையில் இளைஞர்களை வேலை பெறும் தகுதி உள்ளவர்களாக மாற்றுவதில் ஏற்படும் சவால்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் காண இந்த நடவடிக்கை உதவும்.  அமைச்சகக் குழுவினர் அறிக்கை அனுப்புவதற்கு விரிவான படிவம், தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

******



(Release ID: 1546873) Visitor Counter : 69


Read this release in: English