மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தூய்மையான பள்ளிகள் விருதுகள் 2017-18-ஐ மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் வழங்கினார்

Posted On: 18 SEP 2018 4:36PM by PIB Chennai

தூய்மையான பள்ளிகள் விருதுகள் 2017-18-ஐ  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் இன்று (18.09.2018) புதுதில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.  குடிநீர், சுகாதார அமைச்சக செயலாளர் திரு. பரமேஸ்வரன் ஐயர், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை செயலாளர் திருமதி. ரீனாரே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தூய்மை இயக்கம், மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்றும், மக்களின் மனப்போக்கை மாற்றி, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தூய்மைப் பழக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார். பள்ளிகளில் தூய்மைச் செயல்பாடுகள் சமுதாயத்தில் நேர்மறையான நடத்தை மாற்றங்களை கொண்டுவரும் என்றார் அவர். மாணவர்கள் தூய்மையின் தூதர்கள் என்று வலியுறுத்திய அமைச்சர், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா நெடுநோக்குக்கு விழிப்புணர்வு மூலம் அவர்கள் தலைமை ஏற்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த விருதுகளைப் பெறுவதற்காக 6,15,152 பள்ளிகள் பதிவு செய்திருந்தன என்று அமைச்சர் தெரிவித்தார். சென்ற ஆண்டு (2016-17)  பங்கேற்ற 2.68 லட்சம் பள்ளிகளைப்  போல இது இருமடங்கிற்கும் அதிகம் என்று அமைச்சர் கூறினார்.

தண்ணீர், சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகிய துறைகளில் முன்னுதாரணமானப் பணிகளை ஆற்றிய பள்ளிகளை கவுரவிக்கும் வகையில், தூய்மையான பள்ளி விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகளைப் பெற்ற 52 பள்ளிகளில், 37 கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவை.  15 நகர்ப்புறங்களைச் சேர்ந்தவை. 45 பள்ளிகள் அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகள். 7 தனியார் பள்ளிகள். தமிழ்நாடு உட்பட நான்கு மாநிலங்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ் தேசிய தூய்மையான பள்ளிகள் விருதுகளை அதிகம் பெற்றதற்காக வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் 6 பள்ளிகளும், புதுச்சேரியில் 7 பள்ளிகளும் இந்த விருதைப் பெறுகின்றன.

விருது வென்ற பள்ளிகளின் முழுமையான பட்டியலுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

--------------



(Release ID: 1546579) Visitor Counter : 420


Read this release in: English , Marathi