மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நாட்டின் 622 மாவட்டங்களில் உயர் கல்விக்காக 3,400-க்கும் மேற்பட்ட தேர்வுப் பயிற்சி மையங்கள்-மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 229 தேர்வுப் பயிற்சி மையங்களுக்கு 3,646 கணினிகள், புதுச்சேரியில் 15 தேர்வுப் பயிற்சி மையங்களுக்கு 1,109 கணினிகள்.
இடுகை இடப்பட்ட நாள்:
16 SEP 2018 5:23PM by PIB Chennai
நாட்டின் 622 மாவட்டங்களில் உயர் கல்விக்காக 3,400-க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்வுப் பயிற்சி மையங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் தொடங்கி வைத்தார். புதுதில்லியில் நடைபெற்ற இந்த விழாவில், கூகுள் ஹாங்கவுட் மூலம், 25 தேர்வுப் பயிற்சி மையங்கள் கலந்து கொண்டன. இதில், தமிழ்நாட்டிலிருந்து 53 மாணவர்கள் பங்கேற்றனர். உயர்கல்விக்கான பொதுத் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில், இந்த மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட தேர்வுமுறையை கற்றுக் கொள்ளவும், தேர்வு குறித்த விவரங்களை அறிந்து கொள்ளவும், இம்மையங்களில் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.
தேர்வுப் பயிற்சி மையங்களுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர், இந்த அரசு, அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதில் உறுதி கொண்டுள்ளது என்றார். மேலும், கணினி மற்றும் நவீன கைபேசிகள் இல்லாத மாணவர்களுக்கு உதவும் வகையில், நாங்கள் தேர்வுப் பயிற்சி மையங்களை அமைத்துள்ளோம் என்றும், இனி வளங்கள் இல்லாத காரணத்தினால் எந்த மாணவரும் சிரமத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
ஜே.ஈ.ஈ.-யின் முதன்மைத் தேர்வு மற்றும் யு.ஜி.சி. நெட் தேர்வின் வடிவத்தை அரசு மாற்றியமைத்துள்ளது. இந்தப் புதிய முறை வெளிப்படைத் தன்மையுடனும், அறிவியல்பூர்வமாகவும், மாணவர்களுக்கு வசதியாகவும் அமைந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ளும் மாணவர்கள், ஐ.ஐ.டி.-பி.ஏ.எல். காணொலி விரிவுரையை ஸ்வயம் தளம் மூலம் காணலாம். உயர்கல்வித் துறையின் செயலர் திரு. ஆர். சுப்பிரமணியம் மற்றும் என்.டி.ஏ.-வின் தலைமை இயக்குநர் திரு. வினித் ஜோஷி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 229 தேர்வுப் பயிற்சி மையங்களுக்கு 3,646 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 15 தேர்வுப் பயிற்சி மையங்களுக்கு 1,109 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
நாடுமுழுவதும் செப்டம்பர் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், 96 தேர்வுப் பயிற்சி மையங்களிலிருந்து 2,452 மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டனர். பிறகு, செப்டம்பர் 15-ஆம் தேதி 87 மையங்களிலிருந்து சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்று (16-ஆம் தேதி) நடைபெற்ற மாதிரி தேர்வில், 85 மையங்களிலிருந்து சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் உள்ள மையங்களும் கலந்து கொண்டன.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
--------
(வெளியீட்டு அடையாள எண்: 1546429)
வருகையாளர் எண்ணிக்கை : 213