திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் சூழலை பலப்படுத்தும் பல்வேறு முயற்சிகள்: திரு. தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

Posted On: 05 SEP 2018 5:53PM by PIB Chennai

இந்தியாவில் திறன் சூழலை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அறிமுகம் செய்யப்பட்ட முயற்சிகளின் விவரம் வருமாறு:

  1. அனைத்து பயிற்சி திட்டங்களிலும் பயிற்சி மற்றும் கற்றல் தரப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம் தனது பயிற்சிகளை தேசிய திறன் தகுதி கட்டமைப்புடன் இணைத்துள்ளது. தேசிய திறன் தகுதி கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பயிற்சிக்கான முழுமையான பயிற்சிக் கையேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தரமான திறன் பெற்ற பயிற்சி ஆற்றலை உருவாக்க உதவும்.
  2. பயிற்சிக்கான தலைமை இயக்குநர், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அடோப் இந்தியா இடையே முத்தரப்பு புரிந்துனர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் மூலம் அடோப் டிஜிட்டல் திஷா என்ற திட்டம் தொடங்கப்பட்டு டிஜிட்டல் கல்வி அளிக்கப்படும்.
  3. ஆளில்லா வான்வெளி வாகன/விமான பைலட் என்ற புதிய பயிற்சி தொடங்கப்பட்டு ஆளில்லா விமானங்களை இயக்கும், பராமரிக்கும் பயிற்சி பெற்ற மனித ஆற்றல் உருவாக்கப்படும்.

நிகழ்ச்சியில் பேசிய திரு. தர்மேந்திர பிரதான், மாணவர்களுக்கு கல்வி புகட்டி அதன் மூலம் தேசத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கும் நாட்டில் பணி ஆற்றலை உருவாக்கும் வகையில் சிறப்பான பணியாற்றும் ஐ.டி.ஐ.க்களுக்கும் ஆசிரியர் தினத்தை ஒட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

நிகழ்ச்சியில் பயிற்சிக்கான தலைமை இயக்குநர் திரு. ராஜேஷ் அகர்வால், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் திரு. மணிஷ் குமார்,  அடோப் இந்தியாவின் திரு. குல்நீட் பாவா, ஐ.பி.எம். துணைத் தலைவர் பிரதிவா மொஹாபத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

                                     *****


(Release ID: 1545116) Visitor Counter : 114


Read this release in: English