பிரதமர் அலுவலகம்

உலக இயற்கை எரிபொருள்கள் தினம்-2018 தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 10 AUG 2018 7:51PM by PIB Chennai

சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து இங்கு திரண்டிருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே,

தூய்மையையும், தீர்மானமான சுற்றுச் சூழலையும் கொண்டு வந்திருப்பது இந்த ஆகஸ்ட் மாதம். இந்த மாதம் நாட்டிற்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீர்ர்களையும், புரட்சியையும் நினைவுகூரும் மாதமாகும். இந்த மாதம், சுதந்திர தின விழாவை மட்டும் குறித்தது அல்ல. நமது சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையை வளப்படுத்தும் மற்றபிற விழாக்களையும் கொண்டாடும் மாதமாகும். நமது பாரம்பரியம், பண்பாடு மற்றும் விழாக்களில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பது சுற்றுச் சூழல் பாதுகாப்பு. இன்றைய நிகழ்ச்சியும்கூட சுற்றுச் சூழல் மற்றும் நவீன பாரம்பரியங்களோடு இணைந்ததாகும். உலக இயற்கை எரிபொருள்கள் தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

நண்பர்களே,

     125 கோடி இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த அரசு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, எண்ணற்றத் திட்டங்களை வகுத்துள்ளது. ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றுக்கு மாற்றினைக் கண்டறிவது, சுற்றுச் சூழலை பாதுகாப்பாக மாற்றுவது ஆகியவை இந்த அரசின் முன்னுரிமைகளில் சிலவாகும். இந்த இலக்குகளை நிறைவேற்றுவதில் இயற்கை எரிபொருள் முக்கியமான பங்கு வகிக்கிறது. நமது சுற்றுச் சூழலுக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் இடையே சமநிலையை உருவாக்கும் சக்தியை இயற்கை எரிபொருள் கொண்டுள்ளது.

நண்பர்களே,

     இயற்கை எரிபொருள் என்பது வெறும் அறிவியல் மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் புதிய எரிசக்தியை வழங்கும் ஒரு மந்திரமும் ஆகும். பயிர் வகைகளின் கழிவுகள், குப்பைகள், தேவையில்லை என்று எறியப்படுகின்ற பொருள்கள் ஆகியவற்றிலிருந்து எரிசக்தியை உற்பத்தி செய்வதுதான் இயற்கை எரிபொருளாகும். இது, ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மாற்றியமைக்கப் போகிறது. பழைய சொலவடை ஒன்று இந்தத் திரைப்படத்தில் இன்று இடம்பெற்றது. ஆம்கே ஆம் அவுர் குத்தாலி கே தாம்இதன் பொருள், இரட்டைப் பயன்பாடு அல்லது ஒரு பொருளின் முழுமையான பயன்பாடு. இது மிகவும் பழமையான சொலவடையாகும். இது, நவீன வழிக்கும் பயன்படுகிறது.

     இயற்கை எரிபொருள்களை மிக அதிக அளவில் பயன்படுத்துவது, விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நாட்டின் செல்வத்தை சேமிக்கவும், சுற்றுச் சூழலுக்கான வரம் என்பதை நிரூபிக்கவும் உதவும்.

     தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கான நமது பாதைக்கும், கிராமங்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு அதிகாரமளித்தலை வலுப்படுத்துவதற்குமான நமது மகத்தான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும் இது. இதுதவிர, நகர்ப்புற மேம்பாட்டில் நமது நவீன மாதிரியோடும் இது இணைந்திருக்கிறது. நகரங்களில் காற்று மாசினைக் குறைப்பதற்கு அதிகமாக உதவும் பசுமை முன்முயற்சிகளில் மிகுதியானதாக இருப்பது இயற்கை எரிபொருள்.

நண்பர்களே,

     இன்று, வேளாண் சகோதர, சகோதரிகளும் பெரும் எண்ணிக்கையில் இங்கே கூடியிருக்கிறீர்கள். விஞ்ஞான் பவனில் விவசாயிகள் பங்கேற்றிருப்பதே, மிக வலுவான செய்தியாகும். நமது நாட்டின் பல்வேறு பகுதிகள் பல அளவிலான மழைப் பொழிவுகளைக் கொண்டிருக்கின்றன. மழைப் பொழிவால் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மற்ற சில பகுதிகள் மழைக்காகக் காத்திருக்கின்றன. நாம் தொடர்ச்சியாக இந்தச்  செய்திகளை கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஓரிடத்தில் போதிய மழை பெய்ததால் நாம் களிப்படைகிறோம். வேறுசில பகுதிகளில் இதே மழை நமக்கு சங்கடத்தையும் தருகிறது.

     இவையெல்லாம் எனது வேளாண் சகோதர, சகோதரிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறுவை சாகுபடி பயிர்களோடு நெல்லும் பயிரிடப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். 14 குறுவை சாகுபடிப் பயிர்களுக்கு அவற்றுக்காகும் செலவைக் காட்டிலும், 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அரசு அறிவித்திருப்பது பற்றி ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். வேளாண்மை பற்றி நாம் எப்போது பேசினாலும், திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை குறிப்பிட முனைகிறோம். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன், சுவாமிநாதன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வேளாண் துறையில் மாற்றத்தை எப்படி கொண்டுவருவது என்பதை அதில் அவர் ஆழமாக விவரித்திருந்தார். அரசின் கொள்கைகள் மற்றும் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகள் பற்றியும் அவர் கூறியிருந்தார். அவர் ஒரு நிபுணர் ஆவார். விவசாயிகளுக்கான இந்த அரசின் திட்டங்கள், கொள்கைகள், முயற்சிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து பாராட்டியிருக்கிறார்.

     குறுவைப் பயிர்களுடன் கரும்புக்கும் கூட குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டிருப்பதை இந்த திரைப்படத்தில் நீங்களே பார்த்திருப்பீர்கள். இதன்மூலம், விவசாயிகள் தங்களின் விவசாய செலவைக் காட்டிலும், 80 சதவீதம் கூடுதலாக பயனடைந்துள்ளனர். இந்தப் பருவத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.20-லிருந்து, ரூ. 275-வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட இந்த விலையின்மூலம், விவசாயிகள் கூடுதல் பயனைப் பெறப்போகிறார்கள். இதுதவிர, கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்கும் அரசின் முயற்சிகளும் விவசாயிகளுக்கு அதிகப் பயனளிக்க உதவும்.

நண்பர்களே,

     கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்கும் யோசனை அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்கியது.  இருப்பினும், முந்தைய காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த அரசின் நிலை போலவே, திட்டங்களும் முடக்கப்பட்டன. வாஜ்பாய் அரசின் முயற்சி முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. 2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன், பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தபோது, முறையான திட்டம் வகுக்கப்பட்டது. எத்தனால் உற்பத்தி தொடங்கியது. தற்போது இந்தத் திட்டங்கள் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இயல்பாக செயல்படுத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில், எத்தனால் உற்பத்தி சாதனை படைத்துள்ளது. வரும் நான்காண்டுகளில் சுமார் 450 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யும் திசையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

எத்தனால் என்பது விவசாயிகளுக்கு மட்டும் உதவி செய்வதல்ல.  நாட்டின் செல்வத்தை சேமிப்பதும் கூட. கடந்த ஆண்டு பெட்ரோலில் எத்தனால் சேர்க்கப்பட்டதால், இறக்குமதிக்கு செலவு செய்ய வேண்டிய அந்நியச் செலாவணியில் ரூ.4000 கோடி சேமிக்கப்பட்டது.

அடுத்த நான்காண்டுகளில் இந்தச் சேமிப்பை ரூ.12000 கோடி அளவுக்கு உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், கரும்பிலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம் மட்டுமே அடுத்த நான்காண்டுகளில் ரூ. 20000 கோடி வருவாய் ஈட்ட முடியும். இந்தச்  சேமிப்பு மற்றும் கரும்புக்கு மாற்று ஆகியவை மூலம் கரும்பு விசாயிகளுக்கு தற்போதுள்ள பிரச்சினைகளிலிருந்து நிரந்தரத் தீர்வு உறுதி செய்யப்படும்.  எத்தனால், பணத்தை சேமிக்கிறது. இதுதவிர, பெட்ரோலிலிருந்து வெளியேறும் நச்சு வாயுவையும் அது குறைக்கும்.

நண்பர்களே,

     இயற்கை எரிபொருள் தொடர்பான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள், அந்த இலக்கு நற்சிந்தனை மட்டுமல்ல. வலுவான கொள்கைகள், சட்டங்கள் மற்றும் உத்திகள் தயாரிக்கப்பட்டு, பொறுப்பும், பதில் சொல்லும் கடமையும் நிர்ணயிக்கப்பட்டு, தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்வதன் மூலம் இலக்கு எட்டப்படும். எத்தனால் உள்ளிட்ட அனைத்து வகையான இயற்கை எரிபொருள்களை உற்பத்தி செய்ய தேசிய கொள்கை ஒன்றை இந்த அரசு உருவாக்கியுள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் சேர்க்கப்படும் திறன் அளவை 2022-க்குள்                10 சதவீதமாகவும், 2030-க்குள் 20 சதவீதமாகவும் அதிகரிக்க அரசு செயல்பட்டு வருகிறது.

     இயற்கை எரிபொருள் என்பது கரும்பு விவசாயிகளுக்கு மட்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதல்ல.  நாட்டின் மற்ற விவசாயிகளுக்கும் பயனளிப்பதாகும். கோதுமை, நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்களை அறுவடை செய்யும்போது, மோசமான வானிலை அல்லது சேமிப்பு வசதிகள் குறைவு காரணமாக அடிக்கடி அழுகிப் போகின்றன. இயல்பாகவே விவசாயிகள் சேதம் அடைந்த இந்தப் பயிர்களை அதன் பிறகு ஒரேயிடத்தில் குவித்து வைக்கிறார்கள். இருப்பினும், இதையும்கூட எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்துவதென நாங்கள் முடிவு செய்துள்ளோம். 

     விவசாயிகளுக்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. சில நேரங்களில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் வானிலை காரணமாக பழுப்படைதல், அளவுக் குறைபாடு  போன்றவற்றால் தேவைப்படும் தரம் இல்லாமல் அவற்றை விற்க முடிவதில்லை. நுகர்வோர் இத்தகையப் பொருட்களை வாங்க விரும்புவதில்லை. இவ்வாறு விவசாயிகள் சாதகமற்ற வானிலையின் பாதிப்பை சுமக்க வேண்டியுள்ளது. இருப்பினும், விரும்பும் அளவைவிட குறைவானதாகவும், உடைந்ததாகவும், நிறம் மாறியதாகவும், தேவைப்படும் தரத்திற்கு இல்லாத, நேரடியாக நுகரமுடியாத விளைபொருட்களிலிருந்தும் எத்தனால் தயாரிக்க முடியும். நாம் முறைப்படியான கொள்கையை வகுத்திருக்கும்போது, விவசாயிகள் உற்பத்தி செய்த ஒரு தானியம் கூட வீணாகாது என்ற எனது வார்த்தையில் நம்பிக்கை வையுங்கள். விவசாயிகள் பெறப்போகிற ஆதாயத்தின் பலத்தை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்.

நண்பர்களே,

     தேசியக் கொள்கையின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தில், வீட்டுக் கழிவுகள் மட்டுமின்றி, விளைநிலக் கழிவுகள், கால்நடைகளின் சாணம் போன்றவையும் எரிபொருளாக மாற்றப்படும். ஒவ்வொரு வீட்டிலும் கழிவாகப் போடப்படுகின்ற வாழைப்பழத் தோல்கள் மட்டுமின்றி, பண்ணைகளிலிருந்து  கிடைக்கின்ற பொருட்களும் எதிர்காலத்தில் வளம்மிக்க எரிபொருளாக பயன்படுத்தப்படும்.

     இவைதவிர, புல் வகைகள், மூங்கில் ஆகியவற்றிலிருந்தும்கூட எத்தனால் உற்பத்தி செய்யப்படும். வடகிழக்கு மற்றும் பழங்குடியினர் பகுதிகளில், குறிப்பாக மூங்கில் வளர்கிறது. இந்தச் சூழலில் மூங்கில் வளர்ப்போருக்குப் பயனளித்து, அவர்களின் பொருளாதாரத்தை மேன்மைப்படுத்த இது பெரியதொரு நடவடிக்கையாக இருக்கும்.

நண்பர்களே,

     பயிர்க் கழிவுகளும், சுள்ளிக் குச்சிகளும் விவசாயிகளுக்கு பெரும் பிரச்சினையாகும்.  இருப்பினும், பயிர்க் கழிவுகள் மதிப்புமிக்க இயற்கை வளமாகும். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், இவற்றை நாம் எரித்து விடுகிறோம். நிலத்திற்கு ஊட்டமளிக்க உதவுகின்ற இந்த மதிப்புமிக்க சத்துப் பொருட்களை நமது கண்முன்னால், நமது கைகளாலேயெ எரித்து விடுகிறோம். பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுக்கு இது வழக்கமான செயலாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். இது மிகப் பெரிய சவாலாகும்.

பயிர்களின் கழிவுகளை எரிப்பது, நிலத்தின் விளைச்சல் திறனை குறைத்துவிடும் என்றும், அதிலிருந்து வெளியேறும் புகை, காற்று மாசு ஏற்பட வழிவகுத்து, சுற்றுச் சூழல் தரத்தை சீரழித்துவிடும் என்றும் எனது விவசாய சகோதரர்களுக்கு நான் அவ்வப்போது கூறியிருக்கிறேன்.  எனவே, பயிர்க் கழிவுகளிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுக்கான பணி பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்குப் பொருள், பயிர்க் கழிவுகளும்கூட வருவாயின் வழியாகும் என்பதுதான். இது, காற்று மாசினை குறைப்பது மட்டுமின்றி, விவசாயிகளின் வருமான அளவை அதிகரிக்கவும் உதவும்.

நண்பர்களே,

உயிரிபொருட்களை உயிரி எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்துவதில் அரசு மிகப் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறது. நாடு முழுவதும் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் மொத்தம் 12 நவீன சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவத் திட்டமிட்டு வருகிறது. ஒரு சுத்திகரிப்பு ஆலையின் மூலம் 1000 முதல் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எல்லா சுத்திகரிப்பு ஆலைகளும் இயங்கினால், மொத்தம் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன், சாணத்தின் மூலம் எரிவாயு தயாரிப்பது குறித்த பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முந்தைய நிதி நிலை அறிக்கையின் மூலம்  கோபர்தான் யோஜனாஎன்ற திட்டத்தை நாங்கள் தொடங்கியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு உயிரி எரிவாயு உற்பத்திப் பிரிவு தொடங்கப்படுகிறது. தற்போது 700 உற்பத்திப் பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மேலும், விரிவுபடுத்தப்படும். இதில், அனைத்து விவசாயிகளும் சுயஉதவிக் குழுக்களும் பங்கேற்பர்.

நண்பர்களே,

கோபர்தான், வன தன், ஜன தன் ஆகிய திட்டங்களின் மூலம் ஏழைகள், விவசாயிகள், பழங்குடியினருக்கு வருவாய் கிடைக்க புதிதாக வழிகள் உருவாக்கப்படுகின்றன. பயிர்களை மட்டுமின்றி, கால்நடை சாணம், பயிர்க் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு சில செயல்களை மேற்கொண்டு வருகிறோம்.

இவை தவிர, காடுகளில் காய்கறி, பழங்களைப் பயிரிட்டும் வருவாயை அதிகரித்துக் கொள்ளலாம். இலையுதிர் காலங்களில் கீழே வீணாக விழுந்து ஓரடி, இரண்டடி உயரத்துக்கு மலை போல் குவிந்துவிடும். அவற்றையும் உரமாக்கிப் பயன்படுத்தி வருவாய் ஊட்டலாம். “குப்பையிலிருந்து கிடைக்கும் மாணிக்கம்என்ற பிரசாரம் இதுதான்.

நண்பர்களே,

இந்தப் பிரசாரத்தின் கீழ் எளிய தொழில்நுட்பத்தை வகுப்பதில் நமது விஞ்ஞானிகள், இளைஞர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. இந்தச் சூழ்நிலையில் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இடையறாது உழைக்கிறீர்கள். இதில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. மானாவாரி மகசூலில் கவனம் செலுத்துவது முக்கியம். காரணம், அவற்றின் மூலம் தரமான அதிக அளவிலான உயிரி எரிபொருளும் கிடைக்கும். புதிதாகத் தொடங்கும் தொழில்முனைவோரும் புதிய தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

நமது பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs), பாலிடெக்னிக் கல்லூரிகள் (polytechnic colleges) ஆகியவற்றில் உயிரி எரிபொருள் குறித்த கல்வி இடம்பெற வேண்டும். அத்துடன், கிரிஷி விகாஸ் கேந்திரங்கள் (Krishi Vikas Kendras) மூலம் விவசாயிகளுக்கும் உயிரி எரிபொருள்கள் குறித்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும். நாடு முழுவதும் நடைபெறும் வேளாண்மை குறித்த கண்காட்சிகள், நிகழ்ச்சிகளில் விவசாயிகளிடையே உயிரிஎரிபொருள் குறித்த விழிப்புணர்வுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.

நண்பர்களே,

நகர சுகாதரத்தில் திடக் கழிவு மேலாண்மை மிக முக்கியமான பிரச்சினையாகியுள்ளது. கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் குறித்து அரசு செயல்பட்டு வருகிறது. சிறிய டீக்கடை நடத்தும் ஒருவரைப்  பற்றிய கட்டுரையை அண்மையில் படித்தேன். ஒரு டீக்கடைக்காரர் தனது கடையை கழிவுநீர்ப் பாதையின் அருகே வைத்திருந்தார். தேநீர் சம்பந்தமாக எதுவாக இருந்தாலும் அது என் கவனத்தை ஈர்த்துவிடும். அதனால், அந்த விஷயமும் என்னை ஈர்த்தது. கழிவுநீர்ப் பாதையில் (சாக்கடையில்) வாயு தோன்றி, நெடி அடித்தது. அவர் அந்தச் சாக்கடையை மூடியிருந்த பலகையின் மீது துளை போட்டு ஒரு குழாயை இணைத்தார். அங்கே தோன்றும் வாயுவை அந்தக் குழாய் மூலம் எடுத்துக் கொண்டு அதை நீண்ட குழாயுடன் அடுப்பில் இணைத்தார். அதைப் பற்ற வைத்து தேநீர் தயாரித்தார். எரிபொருள், சமையல் எரிவாயு இல்லாமலே கழிவுநீரில் ஏற்பட்ட வாயுவைக் கொண்டு, அவர் அடுப்பைப் பற்ற வைத்து பயன்படுத்தினார். மிகவும் எளிதான தொழில்நுட்பம் இது.

ஒரு முறை குஜராத்தில் நான் இருந்தபோது, நான் சென்றுகொண்டிருந்த வாகனத்துக்கு முன்புறம் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு சென்றார். ஸ்கூட்டர் ஓட்டியவர் மிகப் பெரிய டிராக்டரின் டியூபை வைத்திருந்தார். அதன் உள்ளே காற்று நிரப்பப்பட்டிருந்தது. பெரிதான டிராக்டர் டியூபை ஒருவர் ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றால் என்ன ஆகும்.. விபத்து நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பொதுவாக காலியான டியூபை எடுத்துச் சென்று, உரிய இடத்தில் காற்றடைத்துச் செல்வதுதானே வழக்கம். இந்த ஆள் நேர் மாறாகச் செய்தார். அவரை நிறுத்தச் செய்தேன். காரிலிருந்து கீழே இறங்கி அவரிடம் ஏன் காலியான டியூபை  ஏற்றிக் கொண்டு செல்லாமல் காற்றடைத்த டியூபைக் கொண்டு செல்வது ஏன் என்று அவரிடம் கேட்டேன்.

வயலுக்குச் செல்வதாக அவர் கூறினார். ஏன் என்று கேட்டேன். வயலில் கால்நடை, பயிர்க் கழிவுகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று, அங்கே இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயிரிஎரிபொருள் பிரிவில் (Biogas plant) வாயுவை உற்பத்தி செய்து, அதை டியூபில் அடைத்து வயலுக்குச் செல்வதாகக் கூறினார். அந்த வாயைவைக் கொண்டு மோட்டார் செட்களை இயக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். நம் நாட்டு விவசாயிகளின் திறமையை எண்ணிப் பாருங்கள்! கிராமப்புற மக்கள் புதுப்புது சோதனைகளை மேற்கொள்கிறார்கள்.

இதுபோன்ற புதிய சிந்தனைகளை வைத்து தொடங்கும்படி மக்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சில சமயம் பெரிய பெரிய கல்லூரிகளில் மாணவர்களிடம் கூட கிடைக்காத புதிய சிந்தனைகளை விவசாயிகளிடம் பெற்றுக் கொள்ளமுடியும். இதையெல்லாம் ஒன்றுதிரட்டி நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இன்று B-3 எனப்படும் எனப்படும் திட்டம் குறித்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். B-3  என்பது உயிரி பொருள் (Biomass), உயிரி எரிபொருள் (Biofuel) மற்றும் உயிரி எரிசக்தி (Bioenergy) ஆகியவற்றின் தொகுப்பாகும். குப்பையிலிருந்து எத்தனால் மட்டுமின்றி, உயிரி சிஎன்ஜி (bio-CNG) உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளோம். நாட்டின் போக்குவரத்தில் சிஎன்ஜி வாயு பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது மாசினைத் தவிர்க்கும். தற்போது சிஎன்ஜி வாயுவை இறக்குமதி செய்து வருகிறோம். இதைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுநாள் வரையில், நாடு முழுவதும் 175 உற்பத்திப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரங்களிலும் கிராமங்களிலும் எல்லா வாகனங்களுமே சிஎன்ஜி வாயுவால் இயங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நண்பர்களே,

பிளாஸ்டிக் கழிவுகள், ரப்பர் டயர் கழிவுகள் கவலை அளிக்கின்றன. இவை இப்போது சாலைகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதைப் போல் வீட்டுக் கழிவுகளைக் கொண்டும் சாலைகளை அமைப்பது குறித்து ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு நாட்டில் ஏழைகள் வேலை செய்வதை சமூக ஊடகத்தில் பார்த்தேன். அவர்கள் ஊர் முழுவதும் பிளாஸ்டிக் கழிவைத் திரட்டுகிறார்கள். அந்த பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று உருக்கி, அந்த மண்ணோடு கலந்து பிளாக்குகளைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இந்தப் பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஈடுபடுகின்றன. அவர்கள் கழிவுகளை மட்டும் அகற்றவில்லைஅவற்றைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்கும் இடையில் சமநிலை அமைய அரசு செயல்பட்டு வருகிறது. சூழல் பாதுகாப்பு வளர்ச்சி என்று நாம் பேசினால், மின்சாரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மின் உற்பத்தி, பயன்பாடு சுற்றுச்சூழலின் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.

நிலக்கரி, மின்சார உற்பத்திக்காக இயற்கை வாயு மூலம் உற்பத்தி செய்வதுடன் சூரியசக்தி உள்பட இதர ஏராளமான வழிகள் குறித்தும் நாம் வலியுறுத்தி வருகிறோம். சூரிய சக்தியை நாம் இந்தியாவில் மட்டும் உற்பத்தி செய்யவில்லை. சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (International Solar Alliance) உதவியுடன் உலக அளவிலும் இதைச் செயல்படுத்தி வருகிறோம்.

இன்று சூரிய சக்தி பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. விவசாயத்தில் சூரிய சக்தி பம்புகள், சூரியசக்தியில் இயங்கும் தொழில்நிறுவனங்கள், அலுவலகங்கள் என விரிவடைந்து வருகிறது. வீடுகளில் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவது போல அலுவலகங்களிலும் மின்சார சிக்கனம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் எல்இடி விளக்குகள் எரிவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். அதுபோல் ரயில்வே அலுவலகங்கள், ரயில்வே குடியிருப்புகளில்லும் முழுதும் எல்இடி விளக்குகளை அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ளோம். தூய்மை இந்தியா (Swachh Bharat) மற்றும் ஆரோக்கிய இந்தியா இயக்கம் (Swasth Bharat Mission) ஆகியவை சுற்றுச்சூழலுடன் தொடர்புள்ளவை ஆகும்.

இந்த விரிவான தொலைநோக்கில் புகையில்லா சமையலறைகளும் என்பதும் இடம்பெற்றுள்ளது. இன்று புகையில்லாமல் சமையல் செய்யும் நிலையை 5 கோடி ஏழைக் குடும்பத்தினர், தாய்மார்கள், சகோதரிகள் அடைந்துவிட்டனர் என்பது குறித்துப் பெருமை அடைகிறேன்.

இந்தப் பணியெல்லாம் மிகக் குறைந்த கால அவகாசத்திலேயே நிறைவேறியிருப்பது அதிசயமான உண்மை. நம் நாட்டில் 125 கோடி பேர் உள்ளனர். 25 முதல் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. 5 கோடி குடும்பங்கள் குறுகிய காலத்தில்   எரிவாயு இணைப்பு பெற்றுவிட்டன. பணிகள் வேகமாக நடைபெறுவதையும் பலன்கள் கிடைப்பதையும் நீங்களே பார்த்திருப்பீர்கள்.

நண்பர்களே,

விவசாயிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், அரசு அலுவலர்கள் இணைந்து இன்று நாள் முழுவதும் உயிரி எரிபொருள் குறித்தும் அது சார்ந்த சவால்கள் iகுறித்தும் விவரிக்கிறார்கள். விவசாயிகள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து நீங்கள் விவாதிப்பீர்கள். நாடு முழுவதும் 125 கோடி பேருக்கும் தேவையான எரிசக்தி தேவைகள் குறித்தும் விவசாயத்துக்கான ஆதாயம் குறித்தும் பல ஆலோசனைகளை நாம் பெறுவோம் என்பது நிச்சயம்.

உயிரி எரிபொருள் மூலம் ஏற்படப் போகும் புரட்சிகர மாற்றங்களை அரசாங்கத்தால் மட்டுமே கொண்டு வந்துவிட முடியாது, மாணவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் ஆகியோரையும் ஈடுபடுத்தி மகத்தான மக்கள் இயக்கத்தை உருவாக்கவேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் உயிரி எரிபொருளின் பலன்கள் கிடைப்பதற்கு ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் செயல்பட வேண்டும் என்று இதில் பங்கேற்றுள்ள பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இன்று உயிரிஎரிபொருள் தினத்தை உலகம் கடைப் பிடித்துவருகிறது. உயிரி எரிபொருள் துறையில் பல்வேறு முன்முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. புவி வெப்பமயத்தைக் கட்டுப்படுத்தவும் இந்தியாவால் முடியும் என்றும் உறுதி கூறுகிறோம். இந்திய மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகளை உலகமே பாராட்டி வருகிறது.

இந்தியாவின் திட்டங்களையும் கொள்கைகளையும் உலகம் கூர்ந்து கவனித்து வருகிறதுஇன்றைய முயற்சிகள் புதிய உற்சாகம் அளிக்கும். புதிய வழியைக் காட்டும். முன்னேற்றத்தைத் தூண்டிவிடும். இத்தகைய வெற்றிகரமான திட்டத்திற்காக உங்கள் அனைவரையும் என் மனத்தின் அடி ஆழத்திலிருந்து பாரட்டுகிறேன்.

நன்றி!

*****



(Release ID: 1545022) Visitor Counter : 1974


Read this release in: English , Hindi , Marathi , Assamese