வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அரசு மின்னணு சந்தை குறித்த தேசிய இயக்கம் துவக்கம்

Posted On: 30 AUG 2018 4:40PM by PIB Chennai

அரசு மின்னணு சந்தை குறித்த தேசிய இயக்கம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கப்படும். முக்கிய மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், அவற்றின் முகமைகள் அரசு மின்னணு சந்தையை பயன்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக இந்த இயக்கம் துவக்கப்படுகிறது.  அரசுத்துறை கொள்முதலில் அனைத்தையும் உள்ளடக்கிய, வெளிப்படையான, திறம்பட்ட நடைமுறையை கொண்டு வருவதும், ரொக்கமில்லாத, காகிதமில்லாத பரிவர்த்தனை என்ற நிலையை அடைவதும் இதன் இலக்காகும்.  இதனால், அரசு கொள்முதல் செலவினம் சிக்கனமாக்கப்பட்டு, திறன் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     செப்டம்பர் 6-ந் தேதி முதல் அக்டோபர் 15 வரையிலான இந்த இயக்கத்தை மாநில தலைமையிடங்களில் அவற்றின் முதலமைச்சர்கள் தொடங்கிவைப்பார்கள்.  பொருள் கொள்முதல் செய்வோர், விற்பனையாளர்கள் ஆகியோருக்கான அரசு மின்னணு சந்தை பயன்பாட்டு பயிற்சி வழங்கப்படும். கொள்முதல் செய்வோர், விற்பனையாளர் பதிவு நடைமுறையும் மேற்கொள்ளப்படும். இவற்றில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

     கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு மின்னணு சந்தை நடைமுறையின்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.  அரசு மின்னணு சந்தை கொள்முதலை கட்டாயமாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை  25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செய்துகொண்டுள்ளன.  அரசின் மின்னணு சந்தை நடைமுறையால் கொள்முதல் கட்டணம் சுமார் 25% குறைந்துள்ளது.

     அனைத்து மத்திய அரசு துறைகள், மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள அமைப்புகள் ஆகியவை சாதாரண பயன்பாட்டு பொருள்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதற்கான ஆன்லைன் தளமாக அரசு மின்னணு சந்தை விளங்குகிறது.



(Release ID: 1544670) Visitor Counter : 309


Read this release in: English , Bengali