குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மாற்றத்தை ஏற்படுத்தும் புதுமைக் கண்டுபிடிப்புகளுடன் விஞ்ஞானிகள் முன்வரவேண்டும் : குடியரசுத் துணைத் தலைவர்
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் படிப்படியான முதலீடுகள் செய்வது இக்காலகட்டத்தின் அவசியம்;
அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் குழு – இந்திய ரசாயனத் தொழில்நுட்ப நிறுவன (சி.எஸ்.ஐ.ஆர். – ஐ.ஐ.சி.டி.) பவளவிழாக் கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
Posted On:
05 AUG 2018 8:15PM by PIB Chennai
நாட்டின் சமூகப்-பொருளாதாரத் தோற்றத்தில் மாற்றத்தை நிகழ்த்த அறிவியல் நிறுவனங்கள் திறமைகளை வளர்த்தெடுத்து மாற்றத்தை ஏற்படுத்தும் புதுமைக் கண்டுபிடிப்புகளைப் பேணிக் காக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஐதராபாத்தில் இன்று (05.08.2018) அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் குழு – இந்திய இரசாயனத் தொழில்நுட்ப நிறுவன (சி.எஸ்.ஐ.ஆர். – ஐ.ஐ.சி.டி.) பவளவிழாக் கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்து அவர் அங்குத் திரண்டிருந்தோரிடையே உரையாற்றினார்.
புதுமை நாட்டம் மற்றும் கண்டுபிடிப்புகள் கலாச்சாரத்தை முன்னேற்றுவதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பெருமளவில் படிப்படியான முதலீடுகளைச் செய்வது இக்காலகட்டத்தின் அவசியமாகும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். நடைமுறைப்படுத்துவதில் நிலவும் முட்டுக்கட்டைகளைக் குறைத்தல், படிநிலைத் தடைகளை நீக்குதல், முன்னுரிமைகளை மாற்றியமைத்தல் ஆகியவையும் முக்கியமாகும் என்றும் கூறிய அவர், அறிவியல் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் திறமை வாய்ந்த இளைய விஞ்ஞானிகள் புதுமையான, மரபுவழிப்படாத கருத்துகளுடனும் திட்டங்களுடனும் முன்வருவதை ஊக்குவிக்க வேண்டும் என்றார். ”ஒன்றுக்கும் மேற்பட்ட தற்போதைய சமூகச் சவால்களுக்கு விடைகாணும் புரட்சிகரமான ஆராய்ச்சிக்குரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
பல்வேறு தளங்களில் நாம் முன்னேறிவந்தாலும், ஊக்குவிப்பு நல்கும் விதத்திலான முன்னேற்றம் போதுமானதாக இல்லை என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். அறிவியல் அமைப்புகள் ஆர்வம் மிகுந்த இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்றும் உலகில் தலைசிறந்த நிறுவனமாகத் திகழ உத்திபூர்வமான நிலையை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நிதி, சுதந்திரம், நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை அளிப்பதன் மூலம் நிபுணத்துவத்திற்கான இந்த வேட்கையை அரசு தணிக்க வேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களும் ஆராய்ச்சிக்குத் தாராளமான அளவில் ஆதரவளிக்க முன்வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமில்லை என்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் வளர்ந்தோங்கும் ஒரு சூழல்மண்டலத்தை உருவாக்கும் அவசியம் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். 35 வயதிற்குட்பட்ட 65 சதவிகித மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியா, இளைஞர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவும் தேர்ச்சியும் கொண்டவர்களாக ஆக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நிலைத்திருக்கக் கூடிய மேம்பாட்டுக்கு அறிவியல் முக்கியச் சாதனம் ஆகும் என்றும் ஒரு நாட்டின் செழுமையும் பாதுகாப்பும் அதன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் நேரடித் தொடர்பு கொண்டவை என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். நமது பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியின் தரம் கணிசமாக உயர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மக்களின் வாழ்க்கையிலும் நிறுவனங்களிலும் அறிவியல் மாபெரும் தாக்கத்தை ஊண்டாக்கியுள்ளது என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், ரசாயனத் தொழில்நுட்பத்திற்கான இந்திய நிறுவனம் (ஐ.ஐ.சி.டி.) போன்ற நிறுவனங்கள் வேளாண்மை மற்றும் சூழலியல் போன்ற முக்கியத் துறைகளில் கவனத்தைக் குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தியாவைப் போன்ற வேளாண்மையைச் சார்ந்திருக்கும் ஒரு நாடு, விவசாயிகளின் வாழ்க்கைநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலொழிய மேம்பாடு அடைய முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் & தொழில்நுட்பம், புவிஅறிவியல் மற்றும் சூழலியல், வனம் & பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், தெலங்கானா மாநில ஆளுநர் திரு. இ.எஸ்.எல். நரசிம்மன், தெலங்கானா மாநிலத் துணைமுதல்வர்கள் திரு. கடியம் ஸ்ரீஹரி மற்றும் திரு. முகமது மஹ்மூத் அலி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
(Release ID: 1541742)
Visitor Counter : 137