ரெயில்வே அமைச்சகம்

ரயில்வேயில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு

Posted On: 03 AUG 2018 3:47PM by PIB Chennai

  மத்திய அரசின் கொள்கை முடிவிற்கு ஏற்ப டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க இந்திய ரயில்வே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

  ரயில்வே இணை அமைச்சர் திரு ராஜன் கோகெய்ன், மாநிலங்களவையில் எழுத்து  மூலம் அளித்த பதிலில்  இதனைத் தெரிவித்தார்.

    ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணைய வழி வங்கிச் சேவை  மூலமும், கடன் அட்டைகளை பயன்படுத்தியும் இந்த பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ஆன்-லைன் பயணச் சீட்டு பதிவு செய்வதற்கு சேவைக் கட்டணம் 23.11.2016 முதல்   ரத்து செய்யப்பட்டது.  இந்தச் சலுகை 31.08.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் மூலம் பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்ய இந்தியாவுக்கு வெளியே பெறப்படும் சர்வதேச கடன் அட்டைகள், மூலம் பரிவர்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்.

  முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகளை விற்பனை செய்வதற்கு தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் எந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட் அட்டைகள் மூலம், இந்தப் பயணச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் அட்டைகளை ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் அந்த மதிப்பின் 3 சதவீதம் போனசாக வழங்கப்படும்.

    31.08.2018 வரை ஆன்-லைன் மூலம் பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் ஆர்.ஏ.சி. பதிவு பெற்றவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான விபத்து காப்பீடு இலவசமாக அளிக்கப்படுகிறது.

   டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டுகள் விற்பனை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016-17-ம் ஆண்டில் அறுபது சதவீதமாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 2017-18-ல் 66 சதவீதமாகவும், 2018-19-ல் (ஜூன் வரை) 68 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

------


(Release ID: 1541561) Visitor Counter : 117
Read this release in: English , Marathi , Bengali