சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு சுமார் இரண்டரை லட்சம் பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளனர் அரசு குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள்

Posted On: 31 JUL 2018 4:37PM by PIB Chennai

தமிழகத்தில் 2017-18 ஆம் ஆண்டில் 2,55,858 பெண்களும், 2,401 ஆண்களும் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் திருமதி. அனுப்ரியா பட்டேல் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறந்த மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் இந்திய அரசு வழிமுறைகளின்படி, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள முடியும் என்று,  இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரத்துறை மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளதால், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய மருத்துவமனைகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையை ஊக்குவிக்க அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இருவார விழிப்புணர்வு நடத்தப்படுவதாகவும், குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்க, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண்களுக்கான உதவித் தொகையை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மற்றொரு கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில், மருத்துவ சிகிச்சைக்காக தமது சொந்த நிதியை பயன்படுத்தியதன் மூலம் ஐந்தரை கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் 3 கோடியே 80 லட்சம் பேர் மருந்துகளை வாங்குவதற்கு செலவு செய்ததன் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 


(Release ID: 1540913) Visitor Counter : 353
Read this release in: English