மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சமக்ர சிக்ஷா : அனைவருக்குமான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்

Posted On: 26 JUL 2018 3:34PM by PIB Chennai

மத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2018-19ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் படிப்பு வரையில் செயல்படுத்தப்படும். அனைத்து நிலைகளிலும் சமமான தரமான கல்வி கிடைக்க இத்திட்டம் மூலம் உறுதி செய்யப்படும். முன்பு அமலில் இருந்த அனைவருக்கும் கல்வித் திட்டம் (Sarva Shiksha Abhiyan), ராஷ்ட்ரீய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA), ஆசிரியர் கல்வி (Teacher Education) ஆகியவற்றை உள்ளடக்கி, மழலையர் கல்வி, தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி அனைத்து நிலைகளிலும் தொடர் கல்வி முறைக்கு இத்திட்டம் வழிவகுக்கும்.

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை (Unified District Information System for Education) தகவல் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு இத்திட்டம் மூலம் வலுப்படுத்தப்படும். அத்துடன், ஆண்டுதோறும் பள்ளிக் கட்டடங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மேற்கொள்ளவும் வசதிகளை மேம்படுத்தவும் இத்திட்டம் வகை செய்யும்.

சமக்ர சிக்ஷா திட்டம் கல்வியின் தரத்திலும் கவனம் செலுத்தும். ஆசிரியர்கள், பள்ளிகளின் தலைவர்களுக்கான பயிற்சிகள், மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதனைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், ஒவ்வொரு பள்ளிக்கும் நிதியுதவி அளிக்கவும் இத்திட்டம் வகை செய்யும். மேலும், கற்றலுக்கு ஏற்ற சூழல், நூலகங்கள், விளைாட்டு  உபகரணங்களுக்கான மானியங்கள் ஆகியவற்றுக்கும் துணை புரியும்.

இத்தகவல்களை மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு உபேந்திர குஷ்வாஹா மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

*****


(Release ID: 1540350) Visitor Counter : 5888
Read this release in: English