பிரதமர் அலுவலகம்

பிரதமரின் உகாண்டா அரசு முறைப் பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-உகாண்டா கூட்டறிக்கை

Posted On: 25 JUL 2018 5:34PM by PIB Chennai

1. உகாண்டா குடியரசின் அதிபர் மாண்புமிகு யோவேரி காகுடா முசவேணி அழைப்பின் பேரில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உகாண்டாவில் 2018 ஜூலை 24,25 தேதிகளில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன் மத்திய அரசின் உயர்நிலை அதிகாரிகள், வர்த்தகர்கள் கொண்ட உயர்நிலைக் குழு சென்றிருந்தது. கடந்த 21 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் உகாண்டாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

2. உகாண்டா சென்றடைந்த பிரதமர் திரு. மோடிக்கு உயர்நிலை பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. தமது பயணத்தின் போது பிரதமர் 2018 ஜூலை 24-ந் தேதி புதன்கிழமை அன்று அரசு இல்லமான என்டெப்பியில் அதிபர் முசவேணியுடன் இருதரப்பு பேச்சுகளை நடத்தினார். அதிபர் முசவேணி பிரதமரை கவுரவித்து அரசு முறை விருந்தளித்தார்.

3. உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. மோடி ஆற்றிய உரை இந்தியாவிலும் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. உகாண்டா நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் ஒருவர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். உகாண்டா தனியார் துறை நிறுவனம் மற்றும் இந்திய தொழில்கள் இணையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டு வர்த்தக நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் உரையாற்றினார்கள். உகாண்டாவில் உள்ள இந்திய சமுதாயத்தினர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. மோடி உரையாற்றினார்.

4. தனது விவாதங்களின் போது பிரதமர் திரு. மோடியும், அதிபர் முசவேணியும் இந்தியாவுக்கும், உகாண்டாவுக்கும் நிலவி வரும் பாரம்பரியமான, நெருங்கிய நல்லுறவுகள் பற்றிக் குறிப்பிட்டனர். இரு தரப்பு உறவுகளுக்கு பிரமாதமான வாய்ப்புகள் உள்ளன என்று இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். அரசியல் பொருளாதார, வர்த்தக, பாதுகாப்பு, தொழில்நுட்ப, கல்வி, அறிவியல், பண்பாட்டுத் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான தங்களது விருப்பங்களை உறுதி செய்தனர். உகாண்டாவின் தேசிய மேம்பாட்டுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் 30 ஆயிரம் பேர் கொண்ட இந்திய வம்சாவளியினர் ஆற்றி வரும் பங்கினை அதிபர் முசவேணி பாராட்டினார். மண்டலத்தில் பொருளாதார ஒருங்கிணைப்புக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பராமரிப்புக்கும் உகாண்டா ஆற்றி வரும் குறிப்பிடத்தக்க பங்கு பணிக்கு இந்தியா பாராட்டுத் தெரிவித்த்து.

5. இந்த பேச்சுகளை அடுத்து இரு தரப்பினரும் கீழ்கண்டவாறு உடன்பட்டனர்:

· இருதரப்பு ஒத்துழைப்பில் தற்போது நிலவும் வெற்றிகளையும், சாதனைகளையும் அடிப்படையாக கொண்டு அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதியை இருதரப்பும் மேற்கொண்டது.

· இது நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பு வர்த்தகத்தின் நடப்பு நிலையை குறிப்பிட்டு இதனை மேம்படுத்தவும், வர்த்தகத்தை பலதரப்புத் தன்மைக் கொண்டதாக மாற்றவும் இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை ஊக்குவித்து வர்த்தக சமச்சீரின்மையை சரிப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

· முக்கிய துறைகளில் தனியார் துறை முதலீட்டை உயர்த்துவதன் அவசியத்தை வலியுறுத்திய இரு தரப்பினரும் பரஸ்பர வர்த்தக உறவுகளை விரிவாக்க பெரிய வாய்ப்புகள் உள்ளதை சுட்டிக்காட்டினர்.

· இந்தியா தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு, இந்தியா ஆப்பிரிக்கா அமைப்பு உச்சி மாநாடு, பண்பாட்டு உறவுகளுக்கான இந்தியச் சபை ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் பயிற்சியையும், கல்வி உதவித் தொகையையும் உகாண்டா மாணவர்கள் அதிகம் பயன்படுத்துவதை இரு தரப்பினரும் கவனத்தில் எடுத்துக் கொண்டனர்.

· இந்தியாவுக்கும், உகாண்டாவுக்கும் இடையே பாதுகாப்பு விஷயங்களில் குறிப்பாக பல்வேறு இந்திய ராணுவ பயிற்சி நிறுவனங்களில் உகாண்டா மக்கள் பாதுகாப்பு பணியினர் பெற்று வரும் பயிற்சி ஒத்துழைப்பு வளர்ந்து வருவது குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இந்தியா தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு திட்டம், கிமாகாவில் உள்ள உகாண்டா முதுநிலை தளபதிகள் மற்றும் அதிகாரிகள் கல்லூரியில் இந்திய ராணுவ பயிற்சிக்குழு நியமனம் ஆகியன குறித்து திருப்தி தெரிவிக்கப்பட்டது.

· தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கும். உகாண்டாவுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி ஒப்புக் கொள்ளப்பட்டது. உகாண்டாவில் பொது அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களை அமல்படுத்தும் போது இந்தியாவின் சில டிஜிட்டல் நடைமுறைகளை ஏற்று பயன்படுத்தும் விருப்பத்தை உகாண்டா வெளியிட்டது.

6. பயங்கரவாதம் உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்ப்பதில் தங்களது வலுவான உறுதியை வெளிப்படுத்தினர். எவ்வித காரணத்திற்காகவும் பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த முடியாது என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

7. பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள், அவர்களது கட்டமைப்புகள், மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு, ஊக்கம், நிதி வழங்குபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் வழங்குபவர்கள் ஆகியோருக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள். பயங்கரவாத அமைப்புகள் பேரழிவு ஆயுதங்கள் அல்லது தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பெறாமல் இருப்பதை உறுதிச் செய்வது அவசியம் என்று வலியுறுத்திய இருதரப்பினரும் சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான உடன்பாட்டை விரைவாக நிறைவேற்றுவதில் ஒத்துழைக்க உறுதி அளித்தனர்.

8. பரஸ்பரம் அக்கறையுள்ள சர்வதேச. மண்டல விஷயங்களில் நெருங்கி ஒத்துழைப்பதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் உடன்பாடு தெரிவித்தனர்.

9. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் விரிவான சீர்த்திருத்தங்களின் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள். அதன் விரிவாக்கம், அதனை மேலும் பிரதிநிதித்துவம் மிக்கதாகவும், பொறுப்பேற்கும் திறன் உள்ளதாகவும், திறன்பட்டதாகவும் 21 ஆம் நூற்றாண்டின் புவி அரசியல் உண்மைகளுக்கு ஏற்பவும் மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினார்கள். ஐ.நா.வுடன் தீவிரமாக ஒத்துழைப்பதில் தங்களது உறுதிப்பாட்டை வலியுறுத்திய இரு தலைவர்களும் பருவநிலை மாற்றம் போன்ற உலகச் சவால்களை எதிர்க் கொள்ளவும், சர்வதேச, மண்டல அமைதி மற்றும் பாதுகாப்பையும் நிலைத்த மேம்பாட்டையும் போற்றிப் பேணவும் உறுதி ஏற்றனர்.

10. இரு தரப்பு உறவுகளின் ஒட்டு மொத்த நிலவரத்தை ஆய்வு செய்யவும், பொருளாதார, மேம்பாட்டு ஒத்துழைப்புத் திட்டங்களை விரைந்து அமல்படுத்தவும் என வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலை உள்ளிட்ட இரு தரப்பு அமைப்புக்களின் கூட்டத்தை முறையாக நடத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள்.

11. இந்தப் பயணத்தின் போது கீழ்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டன:

· பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.

· தூதரக மற்றும் அரசு முறை பாஸ்போர்ட் வைத்திருப்போர்களுக்கு விசா விதிவிலக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

· பண்பாட்டு பரிவர்த்தனை திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

· பொருட்கள் சோதனை கூடத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

12. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவு பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்த இரு தலைவர்களும் தற்போதுள்ள உடன்பாடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒத்துழைப்புக் கட்டமைப்புகள் ஆகியவற்றை விரைந்து அமல்படுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுப் பிறப்பிக்கவும் உடன்பட்டனர்.

13. தமது பயணத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார் :

· அமெரிக்க டாலர் 141 மில்லியன் மதிப்புள்ள மின் பாதைகள், துணை மின் நிலையங்கள் அமைத்தல் மற்றும் அமெரிக்க டாலர் 64 மில்லியன் மதிப்புள்ள விவசாய மற்றும் பால்பண்ணை உற்பத்தி ஆகியவற்றுக்கான இரண்டு கடன் திட்டங்கள்.

· ஜின்ஜா என்ற இடத்தில் மகாத்மா காந்தி மாநாடு / பாரம்பரிய மையம் அமைப்பதில் பங்களிப்பு.

· உகாண்டா தலைமையிலான கிழக்கு ஆப்பிரிக்க சமுதாய அமைப்பின் திறன் மேம்பாடு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான அமெரிக்க டாலர் 9,29,705 டாலர் நிதியுதவி.

· பால்பண்ணைத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சிக்கான 25 இடங்களை ஒதுக்குதல்.

· உகாண்டா மக்கள் பாதுகாப்பு படையினருக்கு 44 வாகனங்கள், உகாண்டா அரசு அதிகாரிகள் பயன்பாட்டுக்கு 44 வாகனங்கள் என 88 வாகனங்களை பரிசளித்தல்.

· புற்றுநோயை அகற்றுவதற்கான உகாண்டாவின் முயற்சிகளில் உதவ பாபாட்ரான் புற்றுநோய் சிகிச்சை எந்திரத்தை வழங்குதல்.

· உகாண்டா பள்ளிக் குழந்தைகளுக்கு என்.சி.இ.ஆர்.டி-யின் 1,00,000 புத்தகங்களை பரிசளித்தல்.

· விவசாய மேம்பாட்டில் உகாண்டாவின் முயற்சிகளுக்கு உதவ சூரிய சக்தியால் இயங்கும் பாசன பம்ப்புகள் 100 பரிசளித்தல்.

14. பிரதமர் திரு. மோடியின் இந்த அறிவிப்புக்களை வரவேற்ற மாண்புமிகு அதிபர் யோவேரி முசவேணி இந்த அறிவிப்புக்கள் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், மேலும் உறுதியாக்கவும் பெரிதும் துணையாக இருக்கும் என்று கூறினார்.

15. தமக்கும், தமது குழுவினருக்கும் உகாண்டாவில் அளிக்கப்பட்ட உற்சாகமான, அன்பான விருந்தோம்பலுக்கு அதிபர் யோவேரி முசவேணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றித் தெரிவித்துக் கொண்டார். உகாண்டா அதிபரை இந்தியா வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். அதிபர் முசவேணி இந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரது இந்தியப் பயணம் குறித்த தேதி தூதரக ரீதியாக முடிவு செய்யப்படும்.



(Release ID: 1540199) Visitor Counter : 221