உள்துறை அமைச்சகம்
கும்பல் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய உள்துறை செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்தது அரசு
இடுகை இடப்பட்ட நாள்:
23 JUL 2018 6:04PM by PIB Chennai
நாட்டின் சில பகுதிகளில் கும்பலாக சேர்ந்து நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை ஏற்கெனவே கண்டித்துள்ள அரசு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் இத்தகைய சம்பவங்களை ஒடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உறுதிபூண்டுள்ளதாக தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவாக்கியுள்ளது.
அரசியல் சட்டத்தின்படி காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநிலங்கள் சம்பந்தப்பட்டவையாகும். குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மற்றும் குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பராமரிப்பது ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாகும். தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை இயற்றுவது மற்றும் சட்டங்களை அமலாகுவதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பொது ஒழுங்கை பராமரிக்கவும், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும் தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது அளித்து வருகிறது. குழந்தைகள் கடத்தலில் கும்பலாக ஈடுபடும் விவகாரம் தொடர்பான ஆலோசனை 04.07.2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது. பசு பாதுகாப்பு பெயரில் சிலர் செய்யும் இடையூறுகள் குறித்த ஆலோசனை 09.08.2016 அன்று ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
கும்பலாக வன்முறையில் ஈடுபடுவது குறித்த பிரச்சனையில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதலை மதிக்கும் அரசு, மாநில அரசுகள் கும்பலாக சேர்ந்து நடத்தப்படும் வன்முறைகளையும் குழந்தைகள் கடத்தலையும் தடுக்கவும் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 2018 ஜூலை 17ம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பிரச்சனை தொடர்பாக விவாதம் நடத்தி உரிய பரிந்துரைகளை அளிக்க மத்திய உள்துறை செயலர் தலைமையில் உயர்நிலை குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நீதித்துறை செயலர், சட்டவிவகாரங்கள் துறை செயலர், சட்டமன்றத் துறை செயலர் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலர் ஆகியோர் இருப்பார்கள். இந்தக் குழு நான்கு வார காலத்திற்குள் தனது பரிந்துரைகளை அரசிடம் அளிக்கும்.
இந்த உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலிக்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றையும் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. வெளியுறவுத் துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, கப்பல், நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை, சட்டம் மற்றும் நீதித் துறை மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்கள் இந்த அமைச்சர்கள் குழுவில் இருப்பார்கள். இந்த அமைச்சர்கள் குழு தனது பரிந்துரைகளை பிரதமரிடம் அளிக்கும்.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1539882)
வருகையாளர் எண்ணிக்கை : 205