பிரதமர் அலுவலகம்

இந்திய உதவியுடன் இலங்கை முழுவதும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 21 JUL 2018 7:14PM by PIB Chennai

இந்திய உதவியுடன் இலங்கை முழுவதும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.07.2018) உரையாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை பிரதமர் திரு ரனில் விக்ரமசிங்கேயும் கலந்து கொண்டார். 

பிரதமரின் உரை வருமாறு:

எனது அருமை நண்பரும், மாண்புமிகு இலங்கை பிரதமருமான திரு ரனில் விக்ரமசிங்கே அவர்களே,

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கே அவர்களே,

மாண்புமிகு இலங்கை அமைச்சர் பெருமக்களே,

இலங்கைக்கான இந்திய தூதர் அவர்களே,

மாண்புமிகு வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்களே,

மாண்புமிகு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களே,

மரியாதைக்குரிய மத தலைவர்களே,

சிறப்பு விருந்தினர்களே,

நண்பர்களே,

நமஸ்கார்

ஆயுபோவன்

வணக்கம்

காணொலிக்காட்சி மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள உங்கள் அனைவருடனும் உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய அவசரகால ஆம்புலன்ஸ் சேவை, இலங்கை முழுவதும் விரிவுப்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 

இந்த நிகழ்ச்சி, இந்திய-இலங்கை நட்புறவின் வளர்ச்சியில் மற்றுமொரு முக்கிய சாதனையாகும்.

நான் 2015   ஆம் ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இதுபோன்ற சேவையை ஏற்படுத்துவது குறித்து, எனது நண்பர் பிரதமர் திரு. விக்கிரமசிங்கே அவர்கள் தெரிவித்தார். 

இந்த திட்டத்தின் முதற்கட்ட சேவை 2016 ஜூலையில் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் தொடங்கப்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 

கடந்த ஆண்டு நான் இலங்கைக்கு வந்தபோது, மருத்துவமனைக்கு வருவதற்கு முந்தைய அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை இலங்கை முழுவதற்கும் விரிவுப்படுத்தவதற்கு இந்தியா பாடுபடும் என்று இலங்கை நண்பர்களுக்கு நான் உறுதியளித்திருந்தேன். 

அதன்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியா தனது வாக்குறுதியை நிறைவேற்றி, இந்த சேவையின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 

இந்த விரிவாக்கத்திட்டம் வடக்கு மாகாணத்தில் இருந்து தொடங்கி இருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.  கடந்த கால துன்பங்களிலிருந்து விடுபட்டு வளமான எதிர்காலத்தில் அடியெடுத்து வைப்பதில், உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. 

இந்த சேவையுடன் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதை நான் அறிவேன்.  தேவையான திறன் பயிற்சி பெற்றிருப்பதும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

நண்பர்களே,

இந்த சேவையை ஏற்படுத்துவதிலும், அதன் விரிவாக்கத்திலும் இந்தியா முதலாவது பங்குதாரராக திகழ்வது மிகவும் பொருத்தமானதாகும். 

மகிழ்ச்சியான நேரங்களிலும், துயரமான தருணங்களிலும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியா எப்போதும் முதல் நாடாக திகழும். 

பன்முகத் தன்மை கொண்ட இரண்டு ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில் பிரதமர் விக்ரமசிங்கேயும் நானும் வளர்ச்சித்திட்டங்களின் பலன் சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இலங்கையில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வரும்  அதிபர் திரு சிறிசேனா மற்றும் பிரதமர் திரு விக்ரமசிங்கே ஆகியோரின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். 

நண்பர்களே,

பிரதமர் என்ற முறையில் இலங்கையில் இரண்டு முறை நான் மேற்கொண்ட பயணம், என் மனதில் ஆழப்பதிந்துள்ளது.  என்மீது காட்டிய அளவுகடந்த அன்பு, பாசம் என்றும் மறக்க முடியாதது. 

யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யும் வாய்ப்பு பெற்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  கடந்த ஆண்டு நடைபெற்ற ஐநா வெசாக் தின கொண்டாட்டத்திலும் நான் கலந்து கொண்டேன்.  இவை அனைத்தும் மனதில் நீங்கா இடம் பெற்ற அனுபவங்களாகும். 

நண்பர்களே,

ஒவ்வொரு நாடும் அதன் அண்டை நாடுகளுடன்  நெருங்கிய ஒத்துழைப்பு வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். 

இலங்கையை பொறுத்தவரை, நான் அண்டை நாடாக மட்டும் பார்க்கவில்லை, தெற்காசியாவிலும், இந்திய பெருங்கடல் குடும்பத்திலும், இந்தியாவின் மிகவும் சிறப்புக்குரிய மற்றும் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக இலங்கையை பார்க்கிறேன். 

வளர்ச்சித் திட்டங்களில் இலங்கையுடன் ஒத்துழைத்து செயல்படுவது, வளர்ச்சியை பகிர்ந்து கொள்வது என்ற தொலைநோக்கு சிந்தனையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முக்கியமான வழி என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். 

மூன்றாண்டுகளுக்கு முன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் கவுரவம் எனக்கு கிடைத்தது.  அப்போது நான் பேசுகையில், இருநாடுகள் இடையேயான நட்புறவை மிகவும் நெருங்கிய நட்புறவாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தியிருந்தேன்.

மகாத்மாகாந்தி 1927 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்  மாணவர் காங்கிரஸ் விடுத்த அழைப்பின் பேரில் இலங்கையில் பயணம் மேற்கொண்டதை நினைவுகூர விரும்புகிறேன்.  அப்போது அவர் இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள மாத்தரையிலிருந்து வடக்கு மாகாணத்தில் உள்ள பருத்தித் துறைக்கு பயணம் மேற்கொண்டார்.  தலைமன்னார் வழியாக தாயகம் திரும்புவதற்கு முன், யாழ்ப்பாணத்தில் உள்ள வரவேற்புக் குழுவிடம் அவர் பேசியது வருமாறு:

“யாழ்ப்பாணத்திற்கும், ஒட்டுமொத்த இலங்கைவாசிகளுக்கும் நான் தெரிவிக்க விரும்பும் செய்தி யாதெனில்: “பார்வைக்கு அப்பால், மனதிற்கு அப்பால் சென்று விடக்கூடாது” என்பதுதான்.

அதே செய்தியைத் தான் தற்போது நானும் கூற விரும்புகிறேன்.

நமது மக்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஒருவர் மற்றவரை முழுமையாக புரிந்து கொண்டு நெருங்கிய நண்பர்களாக திகழ முடியும்.

நீங்கள் இந்தியாவுக்கு வந்து, புதிய இந்தியா உருவாகி வருவது பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஊக்கப்படுத்த விரும்புகிறேன்.

பிரதமர் திரு. ரனில் விக்கிரமசிங்கே ஆகஸ்ட் முற்பகுதியில் இந்தியா வரவிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களது இந்திய பயணம் சிறப்பானதாகவும், அனுபவிக்கத்தக்கதாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

நன்றி, மிகுந்த நன்றி.



(Release ID: 1539747) Visitor Counter : 231