பிரதமர் அலுவலகம்

தூய்மை இந்தியா இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு- பிரதமர் உரை

Posted On: 02 OCT 2017 4:57PM by PIB Chennai

இங்கு கூடியிருக்கும் தூய்மை இயக்க சகோதர-சகோதரிகளே,

இன்று அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி; இன்று மரியாதைக்குரிய பாப்புவின் பிறந்த நாள், லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளும் கூட.  கடந்த மூன்று வருடங்களில் நாம் கடந்து வந்த தூரம்தான் எவ்வளவு.  எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.  ஐநா சபையின் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவில் இருந்த நான், அக்டோபர் 1 ஆம் தேதியன்று நள்ளிரவு திரும்பி வந்தேன்.  அக்டோபர் 2 ஆம் தேதி அன்று அதிகாலை தூய்மை இயக்கத்தில் பங்கேற்றுக் கொண்டேன்.  அப்போது கூட்டணிக் கட்சிகளும், அனைத்துச் செய்தித் தாள்களும், ஊடகங்களும் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களும் என்னை விமர்சனம் செய்தனர்.  அக்டோபர் 2 ஆம் தேதியன்று விடுமுறை நாள் என்றும், குழந்தைகளின் விடுமுறையை நாம் கெடுத்து விட்டதாகவும் கூறினர்.  குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா. குழந்தைகளை இந்தப் பணியில் ஏன் ஈடுபடுத்த வேண்டும் என இதுபோன்ற நிறைய விஷயங்கள் நடந்தன.

மவுனமாகப் பலவற்றை பொறுத்துக் கொள்வது எனது இயல்பு.  ஏனென்றால், பொறுத்துக் கொள்வதே எனது பொறுப்பு,   அது, கட்டுப்படுத்திக் கொள்வதற்கான எனது திறமையை அதிகரிக்கிறது.  எனினும் மூன்று வருடங்களுக்குப் பிறகு இன்று தடுமாற்றமும் தயக்கமும் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். பாப்புவின் போதனைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருப்பதாலும், அவர் காட்டிய பாதை தவறாக இருக்கவே முடியாது என்பதாலும் நாம் இதில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எனக்கு இன்னும் அதே நம்பிக்கை உள்ளது, எனினும், சவால்கள் ஏதுமில்லை என்று அதற்கு அர்த்தமில்லை.  சவால்கள் இருக்கின்றன.  சவால்கள் இருக்கின்றன என்பதற்காக நாட்டை நாம் அதேநிலையில் விட்டு விட முடியாது.  சவால்கள் இருக்கின்றன என்பதற்காக, நமக்கு  வழக்கமான பாராட்டு கிடைப்பதை உறுதி செய்யும் அம்சங்களை மட்டும் எடுத்துக் கொள்ள முடியுமா?  இதுபோன்ற பணிகளை விட்டுவிட்டு விலகிச் செல்ல முடியுமா?  இன்று குடிமக்கள் அனைவரும் இதனை ஒருமித்த குரலில் கூறுவதாக நான் உணர்கிறேன்.  நம் கண் முன்பாக அசுத்தம் ஏதும் இல்லை என்று கூறிவிட முடியாது.  ஏதாவது ஒரு வகையில், அசுத்தத்தை பரப்புவதில் நமக்கு பொறுப்பில்லை என்றும் கூறிவிடமுடியாது.  அதற்காக நாம் தூய்மையை விரும்பவில்லை என்றும் கருதமுடியாது. தூய்மையை விரும்பாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது.

நீங்கள் ஒரு ரயில் நிலையத்திற்கு சென்றால், அங்கு நான்கு இருக்கைகள் இருக்கும்; அதில் இரண்டு அசுத்தமாக இருக்கும் என்பதால், நாம் அந்த இருக்கையில் அமராமல், நல்ல இடமாக பார்த்து அமருவோம்.  ஏன்? நமது அடிப்படை நோக்கம் தூய்மையை விரும்புவதுதான் அதற்கு காரணம்.  எனினும், நாம் இதனை செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதில்தான் நம்நாட்டில் பெரும் இடைவெளி நிலவுகிறது.  தூய்மையாக இருக்க வேண்டும் என்பதில், நம்நாட்டில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.  ஆனால், அதனை யார் செய்வது என்பதுதான் பிரச்சினையாக உள்ளது. உங்களிடம் நான், மேலும் ஒரு அம்சத்தை கூற விரும்புகிறேன்.  இதனை கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் கிடையாது. இதனை கூறுவதால் நாளையே நான் விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டிய வாய்ப்பும் உள்ளது.  அதற்காக நாட்டு மக்களிடம் இருந்து எதற்காக எதையும் மறைக்க வேண்டும்.  ஆயிரம் மகாத்மா காந்திகள் வந்தாலும் கூட, லட்சக்கணக்கான நரேந்திர மோடிகள் வந்தாலும் கூட, அனைத்து மாநில முதலமைச்சர்களும் முன்வந்தாலும், அனைத்து மாநிலங்களும் கைகோர்த்தாலும் கூட தூய்மை என்ற கனவை நனவாக்கிவிட முடியாது.  அதனை ஒருபோதும் நனவாக்க முடியாது.  ஆனால், இந்தியாவில் உள்ள 125 கோடி மக்கள் முன்வந்தால், ஒரு வினாடி கூட தாமதம் இன்றி இந்த கனவை நனவாக்க முடியும்.

துரதிருஷ்டவசமாக, பல்வேறு அம்சங்களை நாம் அரசாங்கத்தின் பொறுப்பாக கருதி, அவற்றை அரசாங்கத்தின் கடமையாக மேற்கொண்டு வருகிறோம்.  இவையெல்லாம் சாமானிய குடிமகனின் பொறுப்பு என்று எப்போது கருதுகிறோமோ, அப்போது முதல் இதுவொரு பிரச்சினையே அல்ல.  கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.  ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு ஒன்றின் மக்கள் தொகை அளவுக்கு, தினந்தோறும் கங்கை ஆற்றங்கரைகளில் கூடுகிறார்கள்.  ஆனால், இதுபோன்ற அனைத்து அம்சங்களையும் அவர்கள் தாங்களாகவே சமாளித்துக் கொள்வதுடன், அவர்களது சொந்த வேலைகளையும் பார்த்துக் கொள்வது பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

சமுதாயத்தின் வலிமை, மக்கள் பங்களிப்பு போன்றவற்றை ஏற்றுக் கொண்டு, அரசின் பங்களிப்பை குறைத்து சமுதாயத்தின் பங்களிப்பை அதிகரித்து முன்னோக்கிச் செல்வோமானால், அதன் பிறகு, எத்தனை கேள்விகள் எழுந்தாலும் இந்த இயக்கம் தொடர்ந்து வெற்றி பெறும்.  இது நிறைவேறும் என நாம் நம்புகிறேன்.  இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த இயக்கத்தை இன்னும் கேலிக்கூத்தாக்கி வருபவர்களும், விமர்சிப்போரும், இந்த தூய்மை இயக்கத்தில் பங்கேற்க ஒருபோதும் முன்வர மாட்டார்கள்.  அது அவர்களது விருப்பம்; அவர்களுக்கு சில தயக்கங்கள் இருக்கலாம். ஐந்தாண்டுகள் நிறைவடையும் போது, யார் பணியாற்றினார்கள், தூய்மைத் திட்டத்தில் யார் யார் பங்கேற்றார்கள் என்பதை ஊடகங்கள் வெளியிடாது என்பது எனது உறுதியான எண்ணம்.  இந்த இயக்கத்தை விட்டு யார் விலகிச் சென்றார்களோ, யார் யாரெல்லாம் இதற்கு எதிராக இருந்தார்களோ, அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்படவுள்ளது.  இந்த நாடு தேச நலனை முன்னிட்டு, ஒரு முடிவை எடுத்திருக்கும் போது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ நீங்கள் அந்த முடிவோடு ஒத்துச்செல்ல வேண்டியது கட்டாயமாகிவிடுகிறது.  இதனால்தான் அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்படவுள்ளது.

இன்று, இந்த தூய்மை இயக்கம், போற்றுதலுக்குரிய காந்தியடிகளுக்கு மட்டும் சொந்தமானதாகவோ அல்லது மத்திய அரசுக்கு மட்டுமோ அல்லது மாநில அரசுகள் அல்லது நகராட்சிகளுக்கு சொந்தமானதாகவோ மட்டும் இருக்க முடியாது.  இன்று தூய்மை இயக்கம் என்பது நாட்டின் சாமானிய மனிதனின் சொந்த கனவாக மாறிவிட்டது.  இதுவரை கிடைத்த வெற்றிகள் எல்லாம், அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி என்று நான் எளிதாக கூறிவிட முடியாது.  இந்த வெற்றி மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுகளுக்கோ சொந்தமானதல்ல. மாறாக, தூய்மையை விரும்பும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். 

நாம் சுயாட்சியை பெற்றிருக்கிறோம். அதற்கு நாம் தேர்ந்தெடுத்த வழி அஹிம்சை.  அதேபோல இந்தியா மிகச்சிறந்த நாடாக உருவெடுக்க நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய வழி தூய்மை.  சுதந்திரத்திற்கு வித்திட்டது சத்தியாகிரகி என்றால், மிகச்சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற தேவைப்படுவது சுத்தகிரகி (தூய்மைப் பணியாளர்-தூய்மையை வலியுறுத்துபவர்) உலகில் சில நாடுகளுக்கு சென்று அங்கு அந்த நாட்டின் நகரங்கள் தூய்மையாக இருப்பதை பார்த்து விட்டு திரும்பி வந்த பிறகு, அதை பற்றி விவாதித்துக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறோம்.  அந்த நாடு எவ்வளவு சுத்தமாக இருந்தது என்று பலவாறாக புகழ்கிறோம். இவ்வாறு பேசும் மக்களிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், அந்த நாடு தூய்மையாக இருப்பதை பார்த்து நீங்கள் மகிழ்ந்திருக்கலாம் உண்மைதான். ஆனால் அங்கு யாராவது குப்பையை தெருவில் வீசுவதை நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்டால், அவர்களது பதில் அப்படி ஒரு காட்சியை நாங்கள் பார்க்கவில்லை என்பதாகத்தான் இருக்கும்.  இதுதான் நமது பிரச்சினையே.

இதன் காரணமாகவே, இந்த பிரச்சினை குறித்து நம்மால் வெளிப்படையாக விவாதிக்க முடிவதில்லை.  இதுபோன்ற பிரச்சினைகள் பற்றி விவாதிக்க நமக்கு என்ன தயக்கம், என்பதும் எனக்கு தெரியவில்லை.  இந்த பிரச்சினை பற்றி விவாதித்தால் அது தங்களது பொறுப்பாகி விடுமோ என்ற தயக்கத்தின் காரணமாக, அரசியல்வாதிகளும், அரசாங்கங்களும் இதுபற்றி விவாதிப்பதில்லை.  சகோதரர்களே, இது உங்களது பொறுப்பாகி விட்டால், நீங்கள் அதனை நிறைவேற்ற வேண்டும். அதில் என்ன சிக்கல்?  நாம் அனைவரும் பொறுப்புணர்வை ஏற்க வேண்டிய நபர்கள்தானே? நமக்கென்று பொறுப்புணர்வு இருக்கிறதே?.  

ஆனால், தூய்மைப் பணியின் காரணமாக இன்று என்ன நிலை ஏற்பட்டுள்ளது? எந்த நகரம் மற்ற நகரங்களை விட தூய்மையானது.  எந்த நகரம் 2 ஆவது, 3 ஆவது இடங்களில் உள்ளது? என தூய்மைப்பணிக்கான தரவரிசைப்பட்டியல் தயாராகி வருகிறது: இந்த பட்டியல் வெளியாகி விட்டால், அதுபற்றியே அனைத்து நகரங்களிலும் விவாதிக்கப்படும்.  அந்த நகரத்தை பாருங்கள் தூய்மைப் பணியில் எவ்வளவு முன்னேறியுள்ளது என,  அரசியல்வாதிகள் மற்றும்  அரசாங்கத்திற்கு, அடிமட்டத்திலிருந்து  நிர்பந்தம் ஏற்படுத்தப்படும். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள்.  மக்கள் அமைப்புகளும் இதில் தலையிட்டு, இது நமக்கு பின்னால் உள்ளது, இது நம்மை முந்திவிட்டது, எனவே நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று கேட்பார்கள்.  ஒருவிதமான, சாதகமான போட்டி மனப்பான்மை உருவாகும்.  ஒட்டுமொத்த அமைப்பிலும் ஒரு நல்ல விளைவு பிரதிபலிக்கும்.

கழிப்பறைகள் கட்டப்படுகின்றன.  ஆனால் அவை பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை.  இதுபோன்ற செய்திகள் வருவதே, நிலைமை மோசமாக இல்லை என்பதை காட்டுவதாக உள்ளது. அவர்கள் நம்மை உறக்கத்தில் இருந்து விழித்தெழ செய்கிறார்கள். அதற்காக நாம் அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கழிவறைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்துவது சமுதாயத்தின் பொறுப்பு, குடும்பத்தின் பொறுப்பு, தனிநபரின் பொறுப்பு என்று அவர்கள் கூறினால் அதுவே சிறந்ததாகும்.

 

    நான் எப்போதும், அதில் இருக்கிறேன், முன்னதாக, சமூக அமைப்பு ஒன்றில் நான் பணியாற்றினேன், அரசியலில் பின்புதான், நுழைந்தேன். குஜராத்தில் நான் பணியாற்றி வந்தேன், மோர்வியில் மார்ச்சு அணைக்கட்டுத் தொடர்பான விபத்து ஒன்று ஏற்பட்டது, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், மொத்த நகரமும் நீரில் மூழ்கியது, எனவே நான் பணியில் ஈடுபடுத்தப்பட்டேன், நகரை தூய்மையாக்கும் பணி.  நகரை தூய்மையாக்குவது தொடர்பான அனைத்து பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன, இப்பணிகள் சுமார் ஒரு மாதகாலம் நடைபெற்றது. பின்னர், சிவில் சமுதாயத்தின் சில உறுப்பினர்களான நாங்கள் மற்றும் தொண்டு நிறுவனம் மூலம் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித் தருவது என்று முடிவு செய்தோம். இதற்கென ஒரு கிராமத்தை தத்தெடுத்துக் கொண்டோம். மக்களிடமிருந்து இதற்காக பணம் வசூலித்தோம், இந்த கிராமத்தை மீண்டும் நிர்மாணிக்க விரும்பினோம்: அது ஒரு சிறிய கிராம், அதில் 350 – 400 வீடுகள் இருந்திருக்கக்கூடும். கிராமத்தின் அமைப்பை வடிவமைக்கும்போது, கழிவறை கட்டாயம் இருக்கவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அப்போது கிராம மக்கள் எங்களுக்கு கழிவறை தேவையில்லை என்று சொன்னார்கள், எங்களுக்கு பெரிய திறந்தவெளி உள்ளது, தயவுசெய்து கழிவறை அமைக்கவேண்டாம், அதற்கு பதிலாக முகப்பு அறையின் அளவை சற்றுப் பெரிதாக்குங்கள் என்று கூறினார்கள். ஆனால் இந்த விஷயத்தில் சமரசத்திற்கே இடமில்லை என்று நான் கூறினேன். முகப்பு அறையை எங்களிடம் உள்ள நிதியை பொறுத்து அமைத்துவிடுவோம். ஆனால், கட்டாயம் கழிவறை அமைக்கப்படும் என்று கூறினேன். எப்படியும், இதனை இலவசமாக பெறப்போகிறோம் என்ற சிந்தனையில் கிராம மக்கள் அதிகமாக  வாக்குவாதம் செய்யவில்லை, கழிவறை கட்டப்பட்டது.

  பத்து, பனிரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர், நான் மீண்டும் இந்த பகுதிக்கு வந்தபோது, எனது பழைய தோழர்களை சந்திப்பதன் அவசியத்தை உணர்ந்தேன். பல மாதங்கள் நான் இப்பகுதியில் உழைத்திருந்ததால், அவர்களை பார்க்கக் கிளம்பினேன். அங்கு சென்ற பிறகுதான், நாங்கள் கட்டித் தந்த அனைத்து கழிவறைகளிலும், ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்தேன். அது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. ஆகையால், இதுதான், நமது சமுதாயத்தின் போக்கு என்று தெரிந்து கொண்டோம். இது கழிவறையை அமைத்தவரின் குற்றமல்ல, இதனை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி வரும்  அரசின் குற்றமும் அல்ல. சமுதாயத்திற்கு என தனியான இயல்பு உண்டு. இத்தகைய குறைபாடுகளை நாம் புரிந்துகொண்டு சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியம்.

  நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் தேவை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளனவா, இல்லையா? என்று எவரேனும் எனக்கு சொல்ல முடியுமா, ஆசிரியர்கள் தேவைக்கேற்றாற்போல, நியமனம் செய்யப்பட்டுள்ளனரா, இல்லையா? தேவைக்கேற்றாற்போல, புத்தகம் போன்ற அனைத்து வசதிகளும் பள்ளிகளுக்கு செய்து தரப்பட்டுள்ளனவா? அவை  பெரிய அளவில் உள்ளன. எனினும், வசதிகளின் நிலவரத்தை ஒப்பிடுகையில், கல்வியின் நிலவரம் குறைவாகவே உள்ளது. எனவே, அரசு இந்த முயற்சிகளை எல்லாம் எடுத்த பிறகு, பணத்தையெல்லாம் செலவழித்துக் கட்டடங்களை கட்டிய பிறகு, ஆசிரியர்களை நியமனம் செய்த பிறகு, சமுதாயத்தின் ஒத்துழைப்பை பெற்றால், 100 சதவீத எழுத்தறிவை அடையவதற்கு அதிக காலம் பிடிக்காது. அதே கட்டமைப்பு வசதி, அதே எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் 100 சதவீத எழுத்தறிவை அடையவதில் உதவ முடியும். ஆனால், சமுதாயத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை.

  போதுமான கட்டிடங்களை அமைத்தால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கினால், இத்தகைய பணி நிறைவடைந்துவிடும் என்று அரசு கருதினால், முன்னதாக, இது இவ்வளவு இருந்தது, இப்போது நாங்கள் இவ்வளவு செய்துள்ளோம் என்பதில் திருப்தி அடையமுடியும். ஆனால், மக்களின் பங்கேற்பு இருந்தால், குழந்தை ஒன்று பள்ளியில் சேர்ந்துவிட்டு, பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டால், என்னவாகும். இப்போது, பெற்றோரும், பிள்ளைகளைப் பள்ளிக்குச் செல்லுமாறு கூறுவதில்லை. கழிவறைப் பிரச்சினையும்கூட, இதுபோன்றதே.  தூய்மை  என்பது ஒரு பொறுப்பாகும், இதுபோன்ற சூழ்நிலையை மென்மேலும் உருவாக்கினால், பின்னர், ஒவ்வொருவரும் தவறான விஷயத்தை செய்யும்முன், 50 முறை சிந்திப்பார்கள்.

  நமது குழந்தைகள் , சின்னஞ்சிறு குழந்தைகளை, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் உள்ள வீடுகள் ஆகியவற்றைப் பார்க்கிறோம். ஒரு வகையில் பார்த்தால், எனது தூய்மை இயக்கத்தின் மிகப்பெரிய தூதர்கள் அவர்கள், வீடுகளில் தாத்தா, ஏதாவது தேவை இல்லாததை தூக்கியெறிந்தால், இந்த குழந்தைகள் அதனை அகற்றிவிடுமாறு அவர்களுக்கு சொல்கிறார்கள், இவ்வாறு கண்ட இடங்களில் போடவேண்டாம் என்று இந்த குழந்தைகள் கூறுகிறார்கள். இத்தகைய சூழ்நிலை ஒவ்வொரு வீட்டிலும் உருவாக்கப்படவேண்டும். குழந்தைகள் சிலவற்றை ஏற்றுக்கொள்ளும்போது, நாமும் அதை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது?

  தங்கள் கைகளை கழுவாத காரணத்தால், எத்தனைக் குழந்தைகள் உயிரிழக்கிறார்கள், சாப்பிடுவதற்குமுன், சோப்புக்கொண்டு கை கழுவ இயலாத காரணத்தால், இந்த உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், இந்த விஷயத்தை குறிப்பிட்டவுடன், நாங்கள் எவ்வாறு சோப்பு வாங்கமுடியும், நாங்கள் எவ்வாறு தண்ணீரை பெறமுடியும், மோடி வெறும் சொற்பொழிவுதான் ஆற்றுவார், மக்கள் எவ்வாறு தங்கள் கைகளை கழுவிக்கொள்ள முடியும் என்கிறார்கள் சிலர். தம்பி, நீ கையை கழுவிக்கொள்ள முடியாவிட்டால், விட்டுவிடு, ஆனால், கைகளை கழுவிக்கொள்ளபவர்களை, அதைச் செய்யவிடு.

  மோடியை குறை கூறுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொரு நாளும், நான் ஏதாவது சில காரணங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறேன், அவற்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால், அது குறித்து நீங்கள் கேலி செய்யக்கூடாது, அல்லது சமுதாயத்தின் மாற்றம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து அரசியல் செய்யக்கூடாது. நாம் கூட்டாக பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும், அப்போது மாற்றங்கள் ஏற்படுவதை காண்பீர்கள்.

  குழந்தைகள் பெரிய செயல்களை செய்திருப்பதை நீங்கள் காண முடிகிறது. நான் இத்தகைய குழந்தைகளின் படங்களை தினசரி சமூக ஊடகங்களில் அனுப்பி வருகிறேன், இந்த செயலை மிகுந்த பெருமையுடன் நான் செய்து வருகிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த குழந்தைகளை தெரியாது. ஆனால் தூய்மைப் பணியில் ஆர்வம் காட்டும் இந்த குழந்தைகளின் படங்களை பார்க்கும் போது அவற்றை நான் எனது வலைதளங்களில் பதிவேற்றுகிறேன். அது பல லட்சக்கணக்கான  சென்றடைகிறது. அது சரி, இந்த செயலை அந்த சிறுவன்  ஏன் செய்ய வேண்டும்? கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் கட்டுரைப் போட்டிகள் மூலம் தூய்மையை உறுதி செய்துவிட முடியுமா? இதற்கு நேரடியாக பதில் அளித்தால் இல்லை என்று தான் கூற வேண்டும். தூய்மையை ஓவியப் போட்டிகள் மூலம் உறுதி செய்ய முடியுமா என்றாலும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

  தூய்மையை கொண்டுவர, கொள்கைப் பற்றுடன்கூடிய, இயக்கமும் அவசியம். மேம்பாடு என்பது அமைப்பு முறையின் மேம்பாட்டினால் மட்டும் ஏற்பட்டுவிடமுடியாது. கூடவே, கொள்கைப் பற்றுடன்கூடிய இயக்கமும் தொடங்கப்படவேண்டும். எனவேதான், திரைப்படங்கள் தயாரித்தல், படைப்புத் திறனை பயன்படுத்தும் முயற்சி, கட்டுரைப் போட்டி போன்ற அனைத்தும் தூய்மை நிலைக்கு கொள்கைப் பற்றுடன் கூடிய அடித்தளத்தை அமைப்பதற்கான முயற்சிகளாகும். ஏதாவது ஒன்று, நமது மனதில் ஒரு கருத்து வடிவத்தில் இடம்பெற்றுவிட்டால், இன்றியமையாதது என்ற வகையில் இடம்பெற்றுவிட்டால், பின்னர், அதனைக் கடைபிடிப்பது மிகவும் எளிதாகிவிடுகிறது. ஆகையால்தான், இந்த இயக்கத்தின் பின்புலனாக இத்தகைய செயல்பாடுகளை இணைக்கிறோம்.  ஒரு காலத்தில் நான் நிறைய மனவேதனையை உணர்ந்தேன், இத்தகைய செயல்களை செய்வோர், இதற்கு காரணமானவர்கள் அல்ல, ஆகையால், அவர்களை நான் குற்றம் சொல்லவில்லை. எனினும், இந்த உலகம் வர்த்தக உலகம் என்பதால், எங்கெல்லாம் பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதோ, அவற்றையெல்லாம், கடைபிடிக்கும் போக்கு ஒவ்வொருவரிடமும் காணப்படுகிறது, ஒவ்வொருவரும் சிறிது பணம் ஈட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

  சில ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீங்கள் கவனித்திருந்தால், அவற்றில் பள்ளிக் குழந்தைகள் தூய்மைப் பணியை செய்துக் கொண்டிருப்பது சித்தரிக்கப்பட்டிருந்தால், உடனே அது செய்தியாகிவிடும், ஆசிரியர்கள் குழந்தைகளைப் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தியதற்காக குறைகூறப்படுவார்கள். இதனை பெற்றோர் ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள், அவர்கள் பள்ளிகளுக்கு விரைந்து சென்று, “ எங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருவீர்களா அல்லது சுத்தப்படுத்தும் பணியை செய்யச் சொல்வீர்களா?” என கேட்பார்கள். இன்று இது மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. குழந்தைகள் பள்ளியை சுத்தப்படுத்தினால், அது தொலைக்காட்சியில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்படுகிறது. இது சிறிய மாற்றம் அல்ல.

  ஊடகங்கள் இந்த இயக்கம் முழுவதையும் தனது சொந்த அலுவல் பட்டியலாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். தூய்மை திட்டங்களுடன் நாட்டின் ஒட்டுமொத்த அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்தியுள்ளன: சில சமயம் அவை இரண்டு படிகள் நமக்கு முன்னதாக செல்கின்றன.

இந்த சிறார்களை நான் பார்க்கிறேன், இவர்களை பற்றிய திரைப்படங்களுக்கு சில தொலைக்காட்சி அலைவரிசைகளில் வழக்கமாக நேரம் ஒதுக்கப்படுகிறது. பிரச்சினையே அதுதான்: இவர்கள் அனைவரையும் எவ்வாறு ஈடுபடுத்துவது?  அவர்களாக ஈடுபடுவது நல்லது. நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். 2022 ஆம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடையும் திசைநோக்கி நாட்டை அழைத்துச் செல்வோம்.  இதுபோன்று நாம் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியாது.  நாம் எதையாவது செய்ய விரும்பினால், அதுவே பெரிதாகி விடுகிறது. 

யாராக இருந்தாலும் சரி, நம் வீடு சுத்தமாக இல்லாத நிலையில், சில விருந்தினர்கள் நம்வீட்டிற்கு வந்தால், அவர்களில் சிலர் திருமண வரன் பார்ப்பதற்காகக் கூட வரலாம்.  ஆனால், வீட்டில் பொருட்கள் அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தால், வருபவர் என்ன நினைப்பார்.  எல்லாம் நன்றாக இருக்கிறது, பையனும் நன்றாக படித்திருக்கிறார், ஆனால் வீடு இதுபோன்ற மோசமான நிலையில் இருந்தால், இந்த வீட்டில் நமது பெண்ணை எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று யோசிக்க மாட்டாரா? அவர் திரும்பிச் சென்றே விடுவார்.  வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள், ஆக்ரா சென்று தாஜ்மஹாலை காண்கிறார்கள்.  எவ்வளவு அழகான இடம் என்று வியப்படைகின்றனர்.  ஆனால் அவரே, அந்த நினைவிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்த்தால் அதிர்ச்சி அடைவார்.  அதுபோன்ற நிலையை நாம் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? 

யார் மீது தவறு? என்பது எனது கருத்தல்ல.  நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இது சாத்தியமாகும். கடந்த மூன்றாண்டுகளில் எனது அருமை நாட்டு மக்கள் இதனை தெளிவுப்படுத்தியுள்ளனர்.  மக்கள் அமைப்புகளும், ஊடகங்களும் இதனை விளக்கியுள்ளனர்.  அபரிமிதமான ஆதரவு இருந்து, அதன் பிறகும் நம்மால் உத்வேகத்தை ஏற்படுத்த முடியாவிட்டால், ஒருநாள் நாம் அனைவரும், பொறுப்பாக வேண்டிய சூழல் ஏற்படும். 

எனவே, இதுபற்றி நாம் அனைவரும் வலியுறுத்த வேண்டும்.
அவர்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  புள்ளி விவரங்கள் துணையுடன் நமது வளர்ச்சிப் பற்றி மக்களாகிய உங்களிடம் விளக்கிக் கூறுகிறோம்.  ஆனால் தற்போது கூட, உத்வேகத்தை ஏற்படுத்திய பிறகும் கூட சிலவற்றை நாம் முறையாக மேற்கொண்டால்தான் வெற்றியடைய முடியும். 

கிராமங்களில் கோயில்கள் உள்ளபோதிலும், அனைவரும் அந்த கோயிலுக்குச் செல்வதில்லை.   அது மனித இயல்பு, சிலர் கோயிலுக்கு செல்ல மாட்டார்கள்.  உள்ளூரில் கோயில் இருந்தாலும், சிலர் அங்கு செல்ல மாட்டார்கள்.  மசூதிகள் மற்றும் குருத்வாராக்களிலும் இதே நிலைதான்.  அங்கு நடைபெறும் ஒரு சில நிகழ்ச்சிகளில்தான் மக்கள் கலந்து கொள்கிறார்கள்.  இதுவே சமுதாயத்தின் மனோபாவம் என்ற நிலையில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.  மக்களும் அவரவருக்கென்று ஒரு உலகில் சென்று கொண்டிருக்கிறார்கள்.  அவர்களையும் பணியில் ஈடுபடுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.   அத்தகைய முயற்சிகளை நாம் மேற்கொண்டால், நினைத்ததை சாதிக்கலாம். 

புள்ளி விவரங்களின்படி, வேகமும், நோக்கமும் சிறப்பாகவே உள்ளன.  பள்ளிக்கூடங்களில் கழிவறைகள் கட்டுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  நமது பெண் குழந்தைகளை பள்ளிக் கூடங்களில் அனுமதிக்கும் போது இன்றைய சூழலில் அந்தப் பள்ளிகளில் உள்ள வசதிகள் உள்ளிட்டவை பற்றி கேள்விகள் எழுப்பிய பிறகு நமக்கு திருப்தியாக இருக்கும்பட்சத்தில் அங்கே குழந்தைகளை அனுமதிக்கிறோம். ஆனால், முன்பு இதுபோன்ற நிலை இருந்ததில்லை என்பதை நாம் நினைவுகூர வேண்டும். வசதிகள் இல்லாத போது சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலையே நிலவியது. நாம் அப்படி ஏன் வசதியற்ற சூழ்நிலைகளை அனுசரித்து போக வேண்டும்? நமது பெண் குழந்தைகள் இத்தகைய வசதியற்ற சூழலை ஏன் பொறுத்துக் கொண்டு இப்படிப்பட்ட பள்ளிகளில் சேர வேண்டும்? 

  ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து பார்க்கும் வரை, தூய்மையின் சக்தியை நீங்கள் ஒருபோதும் உணர முடியாது.  குப்பைகளையும், இதர பொருட்களையும் வீட்டில் அங்குமிங்கும் வீசி எறிபவர்கள் இருந்தால், அந்த வீட்டில் உள்ள தாயின் நிலையை எண்ணிப் பாருங்கள்.  அந்த வீட்டில் உள்ள மற்றவர்கள், வேலைக்கோ அல்லது பள்ளிக் கூடத்திற்கோ வெளியே சென்ற பிறகு, அந்த தாய் தனியாக சுத்தம் செய்வது என்றால், இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும். அதுவும் முதுகெலும்பு உடையும் அளவுக்கு மணிக்கணக்கில் அவர் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். நாங்கள் வெளியே செல்வதற்கு முன்பாக அனைத்துப் பொருட்களையும் முறையான இடத்தில் வைத்து சென்றால், உங்களுக்கு எப்படி இருக்கும் என்று அந்த தாயிடம் கேட்டுப் பாருங்கள். நீங்கள் முறையாக வைத்து விட்டுச் சென்றால், நான் முதுகெலும்பு உடையும் அளவுக்கு வேலை செய்ய தேவையில்லை.  10 நிமிடங்களில் என்னால் பணியை முடித்துவிட முடியும் என்று கூறுவார்.  நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தாயாக இருந்தாலும் சரி, உயர் நடுத்தரக் குடும்பம் அல்லது குறைந்த நடுத்தர குடும்பத்தில் தாயாகவோ அல்லது ஏழைத் தாயாகவோ இருந்தாலும் சரி, தினந்தோறும் அவர்களுக்கு வீட்டை சுத்தம் செய்வதிலேயே அரைநாள் கழிந்து விடும். வீட்டில் இருப்பவர்கள் பொருட்களை உரிய இடத்தில் வைத்துச் சென்றால், அந்த தாய்க்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கும்.  இதுபோன்று முன்பே நாம் செயல்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்.

எனவேதான், தூய்மைப் பணி தொடர்பாக என் மனதில் ஒரேஒரு அளவுகோலை மட்டும் வைத்திருக்கிறேன்.  இதனை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.  ஆண்களைப் பார்த்து நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்.  நீங்கள் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிக்க முடிகிறது.  ஆனால், ஒரு பொருளை வாங்குவதற்காக கடைக்குச் செல்லும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.  நான் இந்த கேள்வியை கேட்பதற்காக என்னை மன்னிக்க வேண்டும். பெண்களுக்கு இயற்கை உபாதை ஏற்பட்டால் அவர்கள் எப்படி திறந்தவெளியில் கழிக்க முடியும்.  அவர்கள் வீடு திரும்பும் வரை அடக்கிக் கொள்ள வேண்டிய அவலம் உள்ளது.  இது என்ன கொடுமை?  இதுபோன்ற நிலை, உங்களது மகளுக்கோ, சகோதரிக்கோ ஏற்படாதா?  எனவே, ஆண்கள் என்ற முறையில் நமக்கு பல்வேறு சுதந்திரங்கள் உள்ளன.  இதுபோன்ற நிலைமை மாறும் வரை, தூய்மையின் உண்மையான அர்த்தத்தை நம்மால் உணர முடியாது.

கிராமங்களில் வசிக்கும் தாய்மார்களும், சகோதரிகளும், நகரங்களின் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் தாய்மார்களும், சகோதரிகளும்கூட அதிகாலையில் எழுந்து, காலைக் கடன்களுக்காக காட்டுப்பகுதிகளுக்கு செல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் ஆபத்து அதிகம் இருப்பதால், அவர்கள் 5 முதல் 7 பேர் வரை கொண்ட குழுக்களாக செல்வார்கள். பகல் நேரத்தில்  மலம் கழிக்க அவசியம் ஏற்பட்டால், அவர்கள் மாலைவரை காத்திருக்கவேண்டும். உடலை எவ்வளவு நிர்பந்தப்படுத்த வேண்டியுள்ளது என்பதை கற்பனை செய்துப் பாருங்கள். காலை ஒன்பது அல்லது பத்து மணிக்கு மலம் கழிக்க வேண்டிய அவசியம் உள்ள தாய்மார்கள், பகல் நேரத்தில் அதற்கு வெளியே செல்ல முடியாமல் மாலை 7 மணிவரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில், அவரது உடல் ஆரோக்கியத்திற்கு என்னவாகும்? அந்த அன்னையின் நிலை குறித்து, நீங்கள் சொல்லுங்கள். இத்தகைய உணர்வுகளை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் தொலைக்காட்சி காணவேண்டியதில்லை, தொலைக்காட்சி அறிவிப்பாளர் பேசுவதை கேட்க வேண்டியதில்லை,  தூய்மையின் அவசியத்தை புரிந்துக் கொள்வதற்கு ஒரு பிரதமரோ, மாநில அரசோ அவசியமில்லை, இதுவே, உங்களது பொறுப்புகளில் ஒன்றாகிவிடும்.

   ஆகையால்தான், நான் நாட்டு மக்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். யுனிசெப் அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, வீடுகளில் கழிவறை அமைத்துக் கொண்ட சுமார் பத்தாயிரம் பேரிடம் அது கணக்கெடுப்பு செய்தது, தற்போதைய நிலவரத்தை அவர்கள் முந்தைய நிலவரத்துடன் ஒப்பிட்டனர். கழிவறை இல்லாத அல்லது தூய்மை பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், அவர்களது குடும்பத்தில் ஆண்டொன்றுக்கு நோய் சிகிச்சைக்காக சராசரியாக ரூ.50,000 செலவிடப்படுவதாக அது மதிப்பீடு செய்துள்ளது. அந்த குடும்பத்தின் தலைவர் நோய்வாய்ப்பட்டால் குடும்பத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நின்றுபோய்விடுகின்றன. இந்த நோய் கடுமையானதாக இருந்தால், அவரை கவனித்துக்கொள்ள குடும்பத்தில் 2 உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். மருத்துவச் சேவைக்காக தனிநபரிடமிருந்து மிக அதிக வட்டிவீதத்தில் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, ஒரு வகையில் ஏழைக் குடும்பத்தின் மீது சுமார் ரூ.50,000 சுமை ஏற்படுகிறது.

   ஆனால், தூய்மையை ஒரு மதமாக நாம் கடைபிடித்தால், தூய்மையை நாம், நமது பொறுப்பாக ஏற்றுக்கொண்டால், அப்போது ஒரு குடும்பத்தின் சுமையான ரூ.50,000-த்தை மிச்சப்படுத்தலாம். மேலும் அந்த குடும்பத்தின்மீது நோய் காரணமாக ஏற்பட்ட கஷ்டங்களின் சுமையை குறைத்திருக்கலாம். நாம் அவர்களது சட்டை பையில் பணத்தை போட்டிருக்கலாம் அல்லது போடாமலிருக்கலாம், ஆனால், இந்த ஐம்பதாயிரம் ரூபாய் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய உதவியாக அமையும். ஆகையால், இந்த கணக்கெடுப்புகள், இந்த தகவல்கள் அனைத்தும் நாம், நமது சமுதாய கடமைகளை ஆற்றவேண்டும் என்று கூறுகின்றன.

 நான் பிரதமரான பிறகு, என்னைப் பார்க்க பலர் வந்தனர். அரசியல் தொண்டர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், சமூக நலப் பணியாளர்கள் போன்றோர் என்னைச் சந்தித்தனர். அவர்கள் அனைவரும் மிகவும் மரியாதையுடனும், அன்புடனும் நடந்துக் கொண்டனர்.   பின்னர் என்னிடம் விடைப்பெற்றுச் செல்லும்போது, அவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய ஆவணத்தைக் கொடுத்து அவர்களது உதவி எனக்கு தேவைப்பட்டால், தங்களை அணுகுமாறும் சொல்லி சென்றனர். நான் எந்த பணிக்காகவும் உதவ தயாராக இருக்கிறேன் என்பதே அவர்கள் சொன்னது. அவர்கள் மிகவும் மரியாதை மிக்கவர்கள், எனவே நானும் மிகவும் மரியதையுடன் அவர்களிடம் தூய்மைக்காக சிறிது காலத்தை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு பிறகு அவர்கள் என்னிடம் வருவதே இல்லை.

  அவர்கள் வேலைத் தேடி என்னிடம் வந்தனர், ஒரு அழகான முழு விவர ஆவணத்துடன் வந்தனர், இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, நான் அவர்களிடம் இதனை கேட்டபோது அவர்கள் என்னிடம் மீண்டும் வரவேயில்லை. எந்த வேலையும், சிறியது அல்லது பெரியது அல்ல, எந்த வேலையும் கீழ்தரமானது அல்ல. நாம் நமது ஆதரவை வழங்கினால், அந்த வேலை பெரியதாக அமைந்துவிடும், அதனையடுத்து நாம் அந்த வேலைக்கு மரியாதை அளிப்போம்.

   இந்த 15 நாட்களில் இந்த விஷயத்திற்கு உத்வேகம் அளிக்க மீண்டும் கடுமையாக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். எனினும் இந்த விஷயங்கள் எல்லாவற்றுக்கும் பிறகு, நான் இன்னும் கூறிக்கொள்ள விரும்புவது, இது ஒரு ஆரம்பம் என்பதும், இன்னும் அநேகம் செய்ய வேண்டியுள்ளது என்பதும் ஆகும். இந்த விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ற அந்த குழந்தைகள், அவர்களை ஊக்குவித்த அந்த பள்ளி ஆசிரியர்கள், திரைப்படம் தயாரித்தவர்கள், கட்டுரை எழுதியவர்கள், தூய்மையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், காலை நேரத்தில் பல்வேறு கிராமங்களில் அரை மணிநேரம் செலவழித்து தகுந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொண்டவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

  ஒரு சிலர், அனைத்து அரசியல்வாதிகள், அனைத்து அரசியல் கட்சிகள் ஆகியோர் பெரியவர்களின் சிலைகள் நிறுவுவது  பற்றி, சண்டையிட்டுக்கொள்வது குறித்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பின்னர் இந்த சிலைகள் நிறுவப்பட்ட பிறகு, அவற்றை தூய்மைப்படுத்தும் பொறுப்பை எவரும் ஏற்க விரும்புவதில்லை. இத்தகைய தலைவர்களை தாங்கள் பின்பற்றுபவர்கள் என்று ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்கின்றனர். அவர்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால், இந்த தலைவர்களின் தொண்டர்கள், அவர்களது சிலைகளை தூய்மைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. பின்னர் இந்த சிலைகளின் உச்சியில் பறவைகள் எச்சமிட்டு, என்னவெல்லாம் செய்ய விரும்புகின்றனவோ, அவற்றையெல்லாம் செய்கின்றன.

   இவையே நமது சமுதாய வாழ்க்கையின் கேடுகளாகும். எனவேதான் அவை நம் அனைவரின் பொறுப்பாகின்றன. ஒரு சிலர் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று சொல்வது எனது நோக்கமல்ல. நாம் அனைவரும் இது பற்றி சிந்திக்கவேண்டும். நாம் அனைவரும் இதுபற்றி சிந்தித்தால், கட்டாயம் முடிவுகள் கிடைக்கும். எனவேதான், நான் அனைத்து சத்தியாகிரகிகள் மற்றும் ஸ்வச்சதா கிரகிகள் போன்ற அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை நம்மை நாட்டுக்கு அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்: தூய்மைக்கு நாம்  முன்னுரிமை  கொடுக்கவேண்டும்: தூய்மை யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய செயல்தான், நாட்டுக்கு இதர வகையில் சேவை செய்ய முடியாதவர்கள், இயலாதவர்கள்கூட தூய்மைப் பணி செய்யமுடியும். இது அத்தகைய எளிதான வேலை. காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின்போது சொன்னதுபோல: “ வேறு எதுவும் உங்களுக்கு செய்ய இயலவில்லை என்றாலும், நீங்கள் ராட்டையில் நூல் நூற்க முடியும், இதுதான், சுதந்திரத்திற்கான உங்களின் பங்களிப்பு ”.

  ஒவ்வொரு இந்தியனும், இந்தியாவை சிறந்த நாடாக்கும் இத்தகைய சிறிய செயலை செய்யமுடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். இதற்கென, நான் 5, 10, 15, 30 நிமிட நேரத்தை ஒதுக்கமுடியும், நான் ஏதாவது செய்தாகவேண்டும். நாட்டில் இயற்கையான மாற்றம் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள், மேலும் ஒரு விஷயம் தெளிவாகிறது, அதாவது இந்தியாவை நாம் உலகத்தின் கண்கள்கொண்டு பார்க்கவேண்டும் என்பதுதான் அது. நாம் அதனை செய்வோம், எப்பாடுபட்டாவது அதனை செய்து நிறைவேற்றுவோம்.

  உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

******************



(Release ID: 1538704) Visitor Counter : 1571


Read this release in: English