பிரதமர் அலுவலகம்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய சமுதாயத்தினர் வழங்கிய வரவேற்பில் பிரதமரின் உரை
Posted On:
25 JUN 2017 11:57PM by PIB Chennai
அமெரிக்காவில் உள்ள நமது குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களே,
உங்களை சந்திக்கும் போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் போது ஏற்படும் குதூகலம் மற்றும் இன்பத்தின் அனுபவத்தை நான் உணர்கிறேன். உங்களுடனான சந்திப்பு எனக்கு ஒரு தனிப்பட்ட உற்சாகத்தை தந்து, புதுப்பிக்கப்பட்ட சக்தியோடு நான் மீண்டும் வருகிறேன். இன்று மீண்டும் இந்த வாய்ப்பை நான் பெற்றிருப்பது எனக்கு கிடைத்த பெரும் பேராகும்.
கடந்த 20 ஆண்டுகளில், அமெரிக்காவிற்கு வரும் வாய்ப்பினை நான் பலமுறை பெற்றிருக்கிறேன். நாட்டின் பிரதமராகவோ அல்லது, மாநிலத்தின் முதலமைச்சராகவோ இல்லாத போதும், அமெரிக்காவின் முப்பது மாகாணங்களுக்கு நான் வருகை தந்த போது ஒவ்வொரு முறையும் அங்கு வாழும் இந்திய சமுதாயத்தினரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
நான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவில் நீங்கள் இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கும் செய்தி, உலகெங்கிலும் எதிரொலிக்கிறது. அமெரிக்கத் தலைவர்களும், மற்ற நாட்டின் தலைவர்களும் என்னை எப்போது சந்தித்தாலும் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நிகழ்ச்சிகளோடு என்னை சம்பந்தப்படுத்தி நினைவு கூருகிறார்கள். .
இவையெல்லாவற்றுக்கும் உங்களைப் போன்ற அற்புதமான உள்ளங்களே காரணமாகும். அமெரிக்காவில் வாழ்ந்து கொணடிருக்கும் போது இது போன்ற ஏற்பாடுகளை செய்வது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். அத்தனை பிரச்சினைக்களுக்கு இடையிலும் நீங்கள் இதனை சாத்தியமாக்கி உள்ளீர்கள்.
இம்முறை நான் பலருக்கு ஏமாற்றத்தை தரப்போகிறேன் என்று எண்ணுகிறேன் இம்முறையும். பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு பல ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன. நிச்சயமாக இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக நானும் உறுதி கூறியிருந்தேன். ஆனால் இந்த முறை எனது முந்தைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததற்காக கடினமாக உழைத்தவர்களை நான் சந்திக்க விரும்புகிறேன். இவர்கள் எனது முந்தைய நிகழ்ச்சிகளுக்காக நேரத்தை ஒதுக்கி, செலவு செய்து, தங்களது பணித்திட்டங்களில் சில மாற்றங்கள் செய்தும் கடினமாக உழைத்துள்ளனர். எனவே இவர்களை சந்திக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இன்று இவர்களை நான் சந்திக்க முடிந்தது எனக்கு கிடைத்த பேராகும். இன்று குட்டி இந்தியாவும், குட்டி அமெரிக்காவும் இங்கு இருக்கின்றன.
அனைத்து இந்திய மாநிலங்கள் மற்றும் அமெரிக்காவில் இருந்தும் மக்கள் இங்கு கூடியுள்ளனர். நீங்கள் எங்கிருந்தாலும், எந்த நிலைமையில் இருந்தாலும், எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், எந்த நிலைமையில் நாட்டைவிட்டு நீங்கள் புறப்பட்டீர்கள் என்பது எவருக்கும் தெரியாது என்றாலும், இந்தியாவில் நல்லது நடந்தால் உங்களது மகிழ்ச்சிக்கு எல்லையே இருப்பது இல்லை. அதே நேரத்தில் தீமை ஏதும் நடந்துவிட்டால், நீங்கள் மிகவும் பாதிக்கப்படுவதோடு தூக்கத்தை இழப்பதில் முதலாவதாக இருக்கிறீர்கள். இது ஏன் நடக்கிறது என்றால், இந்தியா முன்னேற வேண்டும், வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் நீங்கள் ஆவலாக இருக்கிறீர்கள்.
உங்களது கனவுகள், உங்களுக்கு கண்களுக்கு முன்பாகவே நனவாகும் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன். அதற்கான காரணம் மிகவும் எளிமையானது. இந்தியாவில் இருந்த நீங்கள் தான், தற்போது அமெரிக்காவில் இருக்கிறீர்கள். இங்கு திறமைகளுக்கு ஏதுவான சூழல், கிடைத்தவுடன் தாங்கள் மட்டும் வளம் பெறவில்லை. அமெரிக்கா வளம் பெறுவதற்கும் உதவி உள்ளீர்கள்.
உகந்த சூழல் அமைத்தவுடன், இந்திய திறன் வளம் அடைந்ததோடு அமெரிக்காவும் வளம் பெற்றது. உங்களைப் போன்று இந்தியாவிலும் 1.25 பில்லியன் திறமை கொண்ட அறிவுத்திறன் உடைய இந்தியர்கள் உள்ளனர். உகந்த சூழலின் காரணமாக உங்களது உலகம் மாறியதைப் போன்று இந்தியாவிலும் ஆதரவான உகந்த சூழல் உருவாகி வருவதால் 1.25 பில்லியன் இந்தியர்கள் விரைவாக வளர்ந்து இந்தியாவின் தோற்றத்தையே மாற்றுவார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
இந்தியா வளர்ச்சி காணவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு ஒவ்வொரு இந்தியனும் தனது ப ங்களிப்பை வழங்க வேண்டும் என்ற மனநிலைதான் நான் தற்போது காணும் மாற்றத்தின் அனுபவமாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், அட்டக் முதல் கட்டக் வரையிலும் 1.25 பில்லியன் இந்தியர்கள் இந்த உறுதிப்பாட்டோடு இருப்பதை உணரும் போது, நண்பர்களே, முன் எப்போதும் இல்லாத கதியில் நமது நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.
மக்களுக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்பது முந்தைய அரசை மாற்றியதற்கான உண்மையான காரணம் அல்ல. அதிருப்தி ஒரு முக்கிய காரணமல்ல. இந்தியர்கள் நிறைவு மனப்பான்மையில் உள்ளார்ந்த நம்பிக்கைக் கொண்டவர்கள். இருக்கும் பொருட்களில் நிறைவு காண்பவர்கள். சிறு வயது மகன் ஒருவன், நோய்வாய் பட்டு
உயிரிழந்தால் அதனை இறைவனின் விருப்பமாக பெற்றோர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இதுவே நமது மனப்பாங்கின் அடிப்படை இயல்பாகும்.
இந்தியாவில் அரசாங்கங்கள் மாறியிருக்கின்றன என்றால் அதற்கு ஊழலும், நேர்மையின்மையுமே காரணமாகும். இது என் நிலை என்று இந்தியாவில் உள்ள சாமானியன் இதனை வெறுக்கிறான். இன்று நான் தன்னடக்கத்தோடு கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சியில் எங்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கூட முன்வைக்கப்படவில்லை என்பதைத்தான். நேர்மையை இயல்பாகக் கொண்ட ஒரு உள்ளார்ந்த முறையை வளர்க்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஊழலை முடிவுக்குக் கொண்டுவர எந்த நேரமும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதல்ல. இதில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகப்பெரியதாகும். தலைமை மற்றும் நிர்வாகத்தின் கொள்கைகளில் இருந்துதான் வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும் வெளிப்படுகிறது. சாமானிய மனிதன் அடிப்படையிலேயே நேர்மையாக இருப்பதால் அவர்கள் அதை நோக்கியே செல்ல விரும்புகின்றனர்.
அரசாங்கத்திலிருந்து சாமானியனுக்கு எந்தப்பலன் கிடைத்தாலும், தொழில்நுட்பத்தின் உதவியோடு அதனை நேரிடைப் பலன் மாற்றுத்திட்டமாக மாற்றியிருக்கிறோம். இந்தியாவில் சாமானிய மக்களின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கும், நிதி சுமையை குறைக்கவும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் அவர்களுக்கு மானியம் கொடுத்து தங்களது உடல்நலன் மற்றும் கல்வியில் அவர்கள் தங்களது நிதி ஆதாரத்தை செலவழிக்க வழி வகுத்திருக்கிறோம். ஆனால் சமையல் எரிவாயு மீதான இந்த மானியம் ஏழைகளில் ஏழைக்கும், செல்வந்தவர்களில் செல்வந்தவருக்கும் என அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் ஒருவருக்கும் கூட மானிய விலையிலான சிலிண்டர் கிடைக்கிறது.
வசதி உள்ளவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என நான் மக்களிடம் கேட்டேன். தங்களது நாள் ஒன்றுக்கான கைச்செலவான ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான மானியத்தின் பலனை ஏன் பெறுகிறீர்கள் என்றேன். இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தளர்வுறாத உணர்வு சாதாரண இந்திய குடிமக்களுக்கு உண்டு என்பதற்கு எது எடுத்துக்காட்டு. மோடி அவர்களே தாங்கள் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக இப்போது முதல் நாங்கள் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை பெறமாட்டோம் என்று கூறி, இந்தியாவில் உள்ள 250 மில்லியன் இல்லங்களில் 12.5 மில்லியன் குடும்பங்கள் தங்களது சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்பதே இதற்கான எடுத்துக்காட்டு.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்று இந்தியாவிற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் சாமானிய இந்தியனுக்கு இருக்கிறது என்பதற்கு இதுவே ஆதாரமாக அமைகிறது. இத்தனை பேரும் தங்களது மானியத்தை விட்டுக்கொடுத்த பிறகு நாங்கள் என்ன செய்தோம். அரசின் கருவூலத்தில் அந்த மானியத்தை சேர்த்துவிட்டோமா? நாங்கள் என்ன செய்தோம் என்றால், இந்த மானியத்தை இன்னும் விறகு அடுப்பில் சமைக்கும் ஏழைகளுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். விறகை சேகரிக்க காலை 3 அல்லது 4 மணிக்கு எழும்பும் இவர்கள், திரும்பி வந்து சமைத்து பின்பு பணிக்கு செல்கின்றனர்.
விறகு அடுப்பில் சமைப்பதினால் ஏற்படும் புகை 400 சிகரெட்டுக்களை புகைப்பதற்கு சமமானது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே இது போன்ற விறகு அடுப்பில் சமைக்கும் அன்னை ஒருவர், நாள் ஒன்றுக்கு 400 சிகரெட்டுகளுக்கு சமமான புகையை சுவாசிக்கிறார். வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைகளும் இந்த புகையை சுவாசிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 400 சிகரெட்டுகளின் புகையை சுவாசிக்கும் தாயார் மற்றும் அந்த குழந்தைகளின் உடல் நலத்தின் நிலைமையைப் பற்றி நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான இந்தியா குறித்து நான் கனவு கண்டால், இந்தியத் தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். எனவே, ஒரு கோடியே 25 லட்சம் பேர் ஒப்படைத்துவிட்ட மானியங்களை ஏழைக் குடும்பங்களுக்கு மாற்ற வேண்டிய சவாலை ஏற்றுக் கொண்டேன். எல்லோருடைய மானியமும் மாற்றப்படவில்லை. சமையல் எரிவாயு மீதான மானியத்தை ஒப்படைத்தவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “குஜராத்தில் நீங்கள் மானியத்தை ஒப்படைத்தீர்கள். அந்த மானியம் அஸ்ஸாமில் உள்ள ஏழைக்குப் போய்ச்சேர்ந்திருக்கிறது” என்று தகவல் கடிதம் அனுப்பப்பட்டது. இவ்வாறு செய்வது மிகவும் கடினமான வேலை. அதே சமயம் இந்த வெளிப்படைத்தன்மை புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் இருக்கும் நீங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு கிடைப்பதற்கு ஒரு காலத்தில் எவ்வளவு சிரமப்பட்டோம் என்பதை அறிந்திருப்பீர்கள். சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்காக உள்ளூர் அரசியல்வாதிகளைச் சுற்றி வந்தோம். வரும் மூன்றாண்டுகளில் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரி வாயு இணைப்பு தருவது என்று தீர்மானித்தோம். 12 மாதங்களுக்குள் 1 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம்.
மானியம் வழங்குவதிலும் ஓர் அடிப்படை மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளோம். முன்பு மானியம் சமையல் எரிவாயு விற்பனையாளருக்குப் போய்ச் சேரும். இப்போதோ வாடிக்கையாளர்களுக்கு மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படுகிறது. ஆறு மாதம் முன்பு இந்தியாவின் சாதாரண, ஏழைக் குடிமக்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கும்படி நான் பிரசாரம் செய்தேன். அப்போது 40 சதவீத இந்தியர்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை. அப்போது வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால், பணம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டோம். ஆனால், நேரடி பலன் மாற்றும் திட்டம் (Direct Benefit Transfer scheme) தொடங்கப்பட்ட பிறகு, மானியங்கள் அவர்களது வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டன. மானியத்தைக் கணக்கில் சேர்க்கும் முறையினால், பயனாளிகளில் மூன்று கோடி பேரைக் கண்டறிய முடியவில்லை. இப்படி பல ஆயிரம் கோடி ரூபாய் யாருக்கோ போயிருக்கிறது. தற்போது மூன்று கோடி போலி பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன. நேரடி மானிய மாற்றத்தால், மானியம் வீணாகாமல் சேமிக்கப்பட்டுள்ளது. அது, கிராமங்களில் பள்ளிகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
தொழில்நுட்பம் வெளிப்படைத் தன்மையில் மிகப் பெரிய பங்களிப்பைச் செலுத்துகிறது. இளைய தலைமுறைக்கு தொழில்நுட்பத்தின் சக்தி தெரியும். தொழில்நுட்பத்துக்கு முக்கியத்தும் அளித்து இந்தியா இன்று வளரும் நாடாகத் திகழ்கிறது.
இந்தியாவில் பயிர்க் காலம் தொடங்கும்போது, அதற்கான உரங்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது என்பதை கவனித்திருப்பார்கள். நான் மாநில முதலமைச்சராக இருந்தபோது, போதிய யூரியா உரம் இல்லை என்றும் விவசாயிகள் கவலைப்படுகிறார்கள் என்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கடிதம் எழுதுவேன். ஆனால், பிரதமராக வந்த பிறகு எனக்கும் அதே போன்ற கடிதங்கள் வர ஆரம்பித்தன. நான் பொறுப்பேற்ற முதல் மாதம் நான் கடிதங்கள் பெற்றேன். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக எந்த மாநில முதலமைச்சரும் யூரியா வேண்டும் என்று கடிதம் எழுதவேயில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். தற்போது யூரியா தட்டுப்பாடே இல்லை. யூரியாவுக்காக யாரும் வரிசையில் நீண்ட நேரம் கால் கடுக்க நிற்பதில்லை. முன்பெல்லாம் காலையில் கடை திறந்தவுடனே உரம் வாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் இரவே வந்து வெட்ட வெளியில் உறங்குவார்கள்.
ஒரே இரவில் ஏராளமாக யூரியா தொழிற்சாலைகளைத் திறந்துவிட்டோமா? இல்லை. யூரியா உற்பத்தியை ஒரே இரவில் அதிகரித்துவிட்டோமோ? அதுவும் இல்லை.
மிக எளிமையான வேலையைச் செய்தோம். யூரியா உரத்தின் மேல் வேப்ப எண்ணெய் பூசினோம். வீணாகிப் போகும் வேப்பங்கொட்டையிலிருந்து எண்ணெய் எடுத்து பயன்படுத்தினோம்.
முன்பு தொழிற்சாலைகளில் விலை மலிவாக யூரியா உரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், அது ரசாயன ஆலைகளுக்குச் சென்ற பிறகு, ரசாயனம் சேர்க்கப்பட்டு அதிகமான விலைக்கு விவசாயிக்கு விற்கப்படும். விவசாயிகள் யூரியாவுக்கு மானியம் பெறுவதால், அதன் விலை குறைவுதான். அது தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்டு, புதிய உற்பத்திப் பொருளாக சந்தைக்கு வரும்போது, விலை ஏகமாக அதிகரித்துவிடுகிறது. தற்போது வேப்ப எண்ணைய் பூசப்படுவதால், ஒரு கிராம் யூரியா கூட ரசாயன ஆலைக்கு அனுப்பப்படுவதில்லை. மேலும், யூரியாவுக்குக் கூடுதலாக சக்தியும் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி, நிலமும் ரசாயனத்தால் பாதிக்கப்படுவது குறைகிறது. உற்பத்தியோ 5 முதல் 7 சதவீதம் அதிகரித்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் விட யூரியா திருட்டும் இல்லை. மானியச் செலவு குறைவதால், யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்ந்துவிடுகின்றன. வேப்ப எண்ணெய் பூசுவதால், உற்பத்தியும் அதிகரிக்கிறது.
இதைப்போல் ஏராளமான உதாரணங்களை என்னால் தர முடியும். இத்தகைய தொழில்நுட்பத்தால், இந்தியா புதிய சாதனைகளை நிகழ்த்துகிறது.
இந்தியா விண்வெளி துறையில் தனக்கென தனியிடத்தைப் புதிய பெயரைப் பெற்றுள்ளது. இரு தினங்களுக்கு முன் இந்தியா 31 நேனோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த மாதம் ஒரே வீச்சில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனையை நிகழ்த்தியிருந்தோம். இத்தனை செயற்கைக்கோளை ஒரே நேரத்தில் ஏவ முடிந்தால், இந்தியாவின் சக்தி எப்படி இருக்குமோ என்று உலக நாடுகள் வியப்போடு பார்த்தன. அண்மையில் இந்தியா செலுத்திய செயற்கைக்கோளின் எடையை கிலோகிராமில் சொல்லிவிட முடியாது. பல யானைகளின் எடைகளைக் கொண்ட அளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தினோம்.
நவீன இந்தியா என்ற கனவை நிறைவேற்ற தொழில்நுட்பம் சார்ந்த ஆளுகையின் மீதும் தொழில்நுட்பம் சார்ந்த சமூகம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறோம். அதன் அற்புதமான பலன்களை வேகமாக இன்று காண்கிறோம்.
இதற்காக முன்பு மேம்பாடே இல்லை என்று கூற வரவில்லை. அப்போதும் பணிகள் நடைபெற்றன. அரசுகள் எல்லாமே ஏதாவது ஒரு பணியில் ஈடுபடும் நிலை உருவானது. எந்த அரசும் தனது காலத்தை வீணாக்கி, தேர்தலில் தோற்க விரும்பவில்லை. பலன் சார்ந்த பணிகள் சரியான திசையில் செயல்படுத்தப்படுகின்றன. இவையெல்லாம் மாற்றம்தான். ஆகையால், முடிவுகள் வேகமான சூழலில், குறிப்பிட்ட காலக்கெடுவுடன், பலன் தரத் தக்கதாகத் தொடங்கப்பட வேண்டும். இந்தக் காரணிகளின் மூலமே நாட்டின் முன்னேற்றத்தை அடையாளம் காண இயலும்.
முன்பெல்லாம் சாலைகள் என்ன வேகத்தில் அமைக்கப்பட்டன. இப்போது நிலைமை என்ன.. முன்பு ரயில் தண்டவாளங்களைப் பதிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகிறது இப்போது என்ன நிலைமை.. முன்பெல்லாம் ரயில் போக்குவரத்தில் மின்மயமாக்கும் பணிகள் சராசரியாக எவ்வளவு காலத்தில் நடைபெறும். ஆனால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் வேகமாக கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதுதான் நீடித்த அபிவிருத்திக்குத் தேவை. கட்டுமானத்தைப் பொறுத்தவரையில் நமது பார்வை நவீன இந்தியா, 21ஆம் நூற்றாண்டு, உலக அளவில் நாம் பதிக்கும் முத்திரை என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.
முன்பு இயற்கை பாதிப்பின்போது, “எங்கள் கிராமத்தின் நிலைமை இதுதான், தயவு செய்து ஏதாவது பணிகள் செய்யுங்கள்” என்று பொதுமக்கள் அரசுக்குக் கடிதம் எழுதுவார்கள். அரசும் அந்த கிராமத்தில் ஏதாவது பள்ளம் தோண்டும், மோசமான சாலையைப் போடும். அதைப் பெரிய சாதனையாக அரசாங்கமும் சொல்லிக் கொள்ளும். அதெல்லாம் அந்தக் காலம்.
ஆனால், இப்போது நிலை மாறிவிட்டது. நல்ல சாலைகள் வேண்டும் என கோரிக்கை வருகிறது. மிகச் சிறந்த சாலைகள் அமைத்தால், இரு வழிப் பாதை சாலை கேட்கப்படுகிறது. இன்றோ, விரைவுச் சாலைகள் அமைக்கவும் அதற்குக் கீழான சாலை எதுவும் தேவையில்லை என்றும் கோரிக்கைகள் வருகின்றன. இது போதும் என்று மக்கள் நின்றுவிடுவதில்லை.
எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதுதான் இந்தியாவின் மேம்பாட்டுக்கு அடிப்படை ஆதாரமாகியுள்ளது. பொது மக்களின் விருப்பங்கள் அதிகரித்தால், திறமையான தலைமயைின் கீழ், முறையான ஆளுகை, சரியான கொள்கைச் செயல்பாட்டின் கீழ் இந்த விருப்பங்களே சாதனைகளுக்கு வழி வகுத்துவிடுகின்றன.
பொதுமக்களின் விருப்பங்கள் சாதனை வடிவத்தைப் பெறுவதற்கு ஏற்ப கொள்கைச் செயல்பாடு, வேகம், முன்னுரிமைகள் குறித்து முடிவு செய்கிறோம். நம்மையே அர்ப்பணிக்கிறோம். பிறகு, நல்ல, சாதகமான பலன் கிடைக்கிறது.
உலகம் இன்று பயங்கரவாதத்தின் காரணமாக துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த பயங்கரவாதம் மனித இனத்தின் எதிரியாகும். 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதம் பற்றிய பிரச்சினையை இந்தியா எழுப்பிய போது, பெரிய நாடுகள் அதை சாதாரணமாக கருதின. இதனால் துன்பத்தை அனுபவிக்காததால் அந்நாடுகள் இதனை நமது நாட்டு சட்ட, ஒழுங்கு பிரச்சினை என்று நினைத்தனர். இன்று பயங்கரவாதம் என்ன என்று எவருக்கும் விளக்கத் தேவையில்லை. பயங்கரவாதிகளே அவர்களுக்கு அதை உணர்த்திவிட்டனர். எனினும், துல்லிய தாக்குதல்களை இந்தியா நடத்தும் போது உலகம் இந்தியாவின் வலிமையை அடையாளம் காண்கிறது. அதுமட்டுமல்லாது கட்டுப்பாட்டோடு இருக்கும் இந்தியா தனது வலிமையையும் வெளிப்படுத்த முடியும் என்று உலகம் தெரிந்துகொள்கிறது.
உலகளாவிய மரபுகளை பின்பற்றுவது நமது இயல்பான அடையாளம். நாம் உலகம் ஒரு குடும்பம் என்று கருதுகிறோம். இவை வெற்று வார்த்தைகள் அல்ல. இதுவே நமது உள்ளார்ந்த அணுகுமுறை. வலிமையை பயன்படுத்தி உலகத்தின் ஒழுங்கை சீர்கெடச்செய்வது நமது நாடல்ல. நமது இறையாண்மையை பாதுகாக்க கடுமையான முடிவுகளை நம்மால் எடுக்க முடியும். நம்மை பாதுகாக்க, நமது அமைதியை பாதுகாக்க, சர்வதேச சட்டத்தையும் உலகளாவிய மரபுகளை பாதுகாத்து நமது மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய, தேவைப்படும் போது நாம் கடினமான முடிவுகளை எடுப்பதை உலகத்தில் உள்ள எவரும் தடுக்க முடியாது.
துல்லிய தாக்குதலை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை எனில் அது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கக் கூடும். நமது நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும். எனினும். இந்தியா எடுத்த உறுதியான முடிவு குறித்து முதல் முறையாக எவரும் கேள்வி எழுப்பவில்லை என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தியாவின் வலிமையை அனுபவரீதியாக உணர்ந்தவர்களுக்கு இது எதிர்பாரா நிகழ்வு ஆகும். எனவே, இந்தியாவில் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதே பயங்கரவாதத்தின் உண்மையான இயல்பு என்பதை உலகுக்கு நம்மால் உணர்த்த முடிந்தது.
21-ம் நூற்றாண்டில் பொருளாதாரத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க நாடாக இந்தியா வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு நிதித்துறையில் முன்னேற்றம் மட்டுமே அளவுகோலாக இருக்க முடியாது. நாட்டின் மிகப்பெரிய வலிமையாக இருப்பது மனித வளம் மற்றும் இயற்கை வளம். 35 வயதுக்கும் கீழ் 800 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடு – இளைஞனின் கனவுகளைக் கொண்டது. இளைஞனைப் போல் செயல்படத் தகுந்தது. அந்நிய நேரடி முதலீடு மற்றும் கொள்கைகளைப் பொருத்தவரையில் பிற நாடுகளைக் காட்டிலும் நாம் ஒரு படி முன்னே நிற்கிறோம். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கிடைத்த அந்நிய நேரடி முதலீட்டைவிட இன்று இந்தியா அதிகமாக பெற்று வருகிறது.
உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட உலகளாவிய கடன் வழங்கும் முகமைகள் யாவும் இந்தியாவின் வலிமையை உணர்ந்துள்ளன. முதலீட்டுக்கான சிறந்த களமாக இந்தியா கருதப்படுகிறது. இருந்த போதிலும் புதுமை, தொழில்நுட்பம் மற்றும் திறன் வெளிப்பாடு இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த வலிமையையும் , சாதனையையும் பெற்றிருக்கின்றனர். உங்களது வலிமையும், உங்களது அறிவுத்திறனும், நமது நாட்டிற்கு பயன்படும் என்று நீங்கள் கருதினால், வெற்றிக்கு காரணமான, உங்களது நாட்டுக்கான உங்களது கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு இதைவிட சிறந்த வாய்ப்பு இருக்க முடியாது.
பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். எனினும், இங்கு வாழும் இந்தியர்களிடமிருந்து நான் பெற்ற அன்பும் மரியாதையும் வேறு எந்த உலகத்தலைவர்களுக்கும் கிடைப்பது அரிது. எனினும், உங்களுக்கு பிறகு என்ன நடக்கும், அடுத்த தலைமுறை இதே போன்ற உணர்வுகளைக் கொண்டிருக்குமா என்பதை நான் சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு. இது போன்ற ஒரு உறவை இந்தியாவோடு பராமரித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.
உங்களது அடுத்தத் தலைமுறையினர் இந்தியாவோடு தொடர்ந்து உறவுகளை பராமரிப்பதற்கு நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்வது அவசியமாகும். கடல் கடந்து வாழும் இந்தியர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு அனைத்து மாநிலங்களிலும் சில அல்லது சிற்சில துறைகள் உள்ளன. இந்திய அரசு தில்லியில் வெளிநாடுவாழ் இந்தியன் பவனை அமைத்துள்ளது. தாங்கள் எப்போது இந்தியாவுக்கு வந்தாலும் இங்கு வருகை தரவேண்டும். தங்களுக்கு வேண்டிய வசதிகள் யாவும் இங்கு செய்து தரப்பட்டுள்ளன.
நான் பொது வாழ்க்கையில் இருந்த போது, ஒரு சாதாரண குடிமகனுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் என்றாலே, முக்கியமான மனிதர்களின் சந்திப்பு, மற்றும் உலகை சுற்றிப் பார்ப்பது என்கின்ற பிம்பமே இருந்தது. எனினும், கடந்த 3 ஆண்டுகளில் மனித நேயம் சார்ந்த புதிய உச்சியை இந்திய வெளியுறவுத்துறை அடைந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். உலகின் எந்தப் பகுதியிலும் இந்தியர்கள் ஸ்தம்பித்து நின்றபோது 80,000-க்கும் மேற்பட்டோர் இந்திய அரசால் மீட்கப்பட்டு தங்களது இல்லங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். 80,000 என்பது சிறு எண்ணிக்கை அல்ல.
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நீங்கள், உலகெங்கிலும் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மாறி வரும் சூழலின் காரணமாக வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் என்ன நடக்குமோ என்ற உணர்வோடுதான் வாழ வேண்டியதுள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் இவர்கள், நமது தூதரகம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை பெற்றுள்ளனர். நீங்கள் அறிந்திருப்பீர்கள், மலேஷியாவுக்கு சென்ற இந்திய பெண் ஒருவர், சில தொடர்புகளை வளர்த்துக் கொண்டதன் காரணமாக பாகிஸ்தானுக்கு சென்றார். நம்பிக்கையோடு பாகிஸ்தானுக்கு சென்ற அவரது வாழ்க்கை சீரழிந்தது. இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த இந்த பெண் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாக வாழ நினைத்தார். அங்கு தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்த போது பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகினால் மீட்கப்படலாம் என்று உணர்ந்தார். எப்படியோ இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு இவரால் இந்தியாவுக்கு வரமுடிந்தது. சுஷ்மா ஜி இவரை இங்கு வரவேற்றார்.
முன்னதாக நான் இங்கு வரும் போதெல்லாம் நமது சகோதரர்களிடமிருந்து பல புகார்களை கேட்டு இருக்கிறேன். வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுங்க அதிகாரிகளின் செயல்கள் பற்றி இவர்கள் புகார்களைக் கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக இவர்கள் இந்தியாவிற்கு வரவிரும்புகிறார்கள் என்பதை நான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இன்று வெளிநாட்டிலிருந்து வரும் கடிதங்கள் இந்திய தூதரகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றிய புகழுரைகளைக் கொண்டிருக்கின்றன. தூதரக சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்தியர்களுக்கு தரப்படும் மரியாதை, மக்கள் சார்ந்த தூதரகத்தின் அணுகுமுறை ஆகியவை பற்றி இந்த கடிதங்களில் கூறப்படுகிறது. நமது கொள்கைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உங்களது பாஸ்போர்ட்டை நீங்கள் பெற்றபோது சந்தித்த பிரச்சினைகள் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் இன்று ஒவ்வொரு தபால் நிலையத்திலும் பாஸ்போர்ட் மையங்கள் திறக்கப்படுகின்றன. பாஸ்போர்ட் கிடைப்பதற்கு ஆறு மாத காலத்திற்கு மேலாக ஆகும் என்ற நிலை மாறி தற்போது 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கிறது.
தற்போது சமூக ஊடகம் வலிமையோடு செயல்பட்டு வருகிறது. நானும் சமூக ஊடகத்தில் உற்சாகத்தோடு பங்கேற்கின்றேன். நரேந்திர மோடி செயலி பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் இல்லை என்றால் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி ஒரு துறை எவ்வாறு வலிமையாக்கப்படலாம் என்பதை நமது வெளியுறவுத்துறை செயல்படுத்திக் காட்டியிருக்கிறது.
மேட்டுக் குடிமக்களோடு மட்டுமே தொடர்பு படுத்திக் காணப்பட்ட வெளியுறவுத்துறை இன்று சாமானிய மக்களோடு தொடர்பு கொண்டிருப்பது இப்போது முதல் முறையாக நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் காலை இரண்டு மணிக்கு ட்வீட் செய்தாலும் 15 நிமிடங்களில் சுஷ்மா ஜி அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகிறார். 24 மணி நேரத்திற்குள் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கிறது. இதுவே சிறந்த நிர்வாகம், மக்கள் சார்ந்த நிர்வாகம் மற்றும் இதுவே உணர்வாகும்.
நண்பர்களே, மக்களாகிய நீங்கள் கொடுத்திருக்கும் பொறுப்பை நிறைவேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இந்த 3 வருடங்களும் அலாதியானவை. நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல ஒவ்வொரு வினாடியையும் நாங்கள் அரப்பணிப்போம். உங்களது ஆதரவு எனக்கு கிடைத்திருப்பது நான் பெற்ற பெரும் பேராகும். நீங்கள் பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கிறீர்கள் . மீண்டும் ஒருமுறை நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புகைப்படங்கள் எடுக்கப்படும் என்று எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நான் அதில் தங்களோடு என்னை இணைத்துக்கொள்வேன். மீண்டும் ஒருமுறை நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
------
(Release ID: 1538703)
Visitor Counter : 538