குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத்தலைவர் உரை
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUL 2018 6:48PM by PIB Chennai
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரத்தில் உங்கள் அனைவருடனும் கலந்துரையாடி, எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் அனைவரும் பல்வேறு துறைகளில் ஒன்று சேர்ந்து கடின உழைப்பால் இந்தப் பல்கலைக்கழகத்தைச் சிறப்பு மிக்க மையமாக மாற்றியிருப்பதாக உங்களது துணை வேந்தர் பேராசிரியர் குர்மித் சிங் என்னிடம் தெரிவித்தது எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது.
இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், 2016-ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் நீங்கள் 13-ஆவது இடத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் சமுதாயக் கல்லூரியை நாட்டிலேயே முதல் முறையாக உருவாக்கிய முதல் பல்கலைக்கழகம் இது என்பதில் எனக்கு திருப்தி என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். கல்வி, ஆராய்ச்சி, பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடைமுறையில், தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் அதிகமாக பயன்படுத்தி வருவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உத்வேகத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இத்துடன் நிறைவடைந்து நின்றுவிடாமல் தொடர்ந்து செயல்பட்டு புதிய புதுமைகளைப் புகுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது நாம் ஒரு வசீகரமான காலத்தில் வசித்து வருகிறோம். பொருளாதார ரீதியாக இந்தியா உலகிலேயே முக்கிய நாடாக உருவெடுத்து வருகிறது. மாற்றத்தை விரும்பும் ஆர்வம் உள்ள இந்தியாவில் நாம் இருக்கிறோம். சீர்திருத்து, செயல்படு, மாற்று என்னும் பிரதமரின் கருத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு நிறுவனமும் தனது செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து சீர்திருத்தத்திற்குத் தேவையானவற்றைக் கண்டறிந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். உற்பத்தித் திறன், திறமை, செயல்திறன் ஆகியவற்றை அதிகரித்து நமது முன்னேற்றத்தை மேலும் வெளிப்படையானதாகவும் மக்களுக்கு உகந்ததாகவும், மக்களுக்கு உரிய வகையிலும், தொண்டாற்ற வேண்டும்.
இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதத்திற்கும் மேலாக வளர்ந்து வருகிறது. அடுத்த 10 - 15 ஆண்டுகளில், 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற உள்ளது. பொருளாதாரம் மாறும் போது, கல்வி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மக்களின் வாழ்க்கைத் தரமும் மேலும் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தொகையில் மிக அதிகமான இளைஞர்களின் எண்ணிக்கையின் மூலம், தனித்துவமான பயனை நாடு கொண்டுள்ளது. மனிதர்களின் இந்த ஆற்றலை முழு மூலதனமாகக் கொண்டு, அவர்களது அறிவு மற்றும் திறன்களை 21-ஆம் நூற்றாண்டு உலகுக்கு பொருத்தமானதாக மாற்றுவதை உறுதி செய்வதே இப்போதைய அத்தியாவசிய தேவையாகும். அதே சமயம் புதிய தொழில்களைத் தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் போதிய வாய்ப்புகள் உள்ளன என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
திறன் இந்தியா, தொடங்கிடு இந்தியா ஆகிய திட்டங்களின் மூலம், இந்த இரண்டு நோக்கங்களை நிறைவேற்ற அரசு ஏற்கெனவே கவனம் செலுத்தி வருகிறது. இந்த சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ள தயாராகும் வகையில், புதிய படிப்புகளை உருவாக்கி, கற்பித்தல், கற்றல் நடைமுறைகளை மேம்படுத்துவதில் உங்களைப் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நமது உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து, வெளியேறி வருகின்ற போதிலும், அவர்களில் பெரும்பாலோருக்கு வேலைவாய்ப்பு திறமை இல்லாத நிலையே உள்ளது.
தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பாடங்களையும், தங்களுடைய தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.
மனிதனிடம் சிறந்த பண்புகளைக் கல்வி வெளிக்கொணர்ந்து, அவனுக்கு அறிவொளியை ஊட்டி அதிகாரமளித்தலுக்கு வழி வகுக்க வேண்டும். தனி நபர்களுக்கும், சமுதாயத்திற்கும், சமூகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த இது ஒரு கருவியாகும். கல்வி என்பது ஒரு பட்டம் பெற்றதுடன் நின்றுவிடுவதல்ல. அது தொடர்ச்சியான கற்றுக்கொள்ளும் நடைமுறையைக் கொண்டதாகும். கல்வி என்பது வலுவான, தார்மீக ரீதியிலான, அறநெறிப் பண்புகளைக் கற்பிப்பதாகவும், மனிதரின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் இருக்க வேண்டும்.
அன்பு மாணவர்களே,
நீங்கள் அனவைரும் மிகப்பெரிதாக கனவு காணுங்கள், உயர்ந்த நோக்கங்களை எட்ட முனையுங்கள் என்பதே உங்களுக்கு எனது அறிவுரையாகும். உலகின் மொத்த ஞானமும், உங்களுக்காக திறந்திருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். அடிப்படையை நீங்கள் நன்றாகக் கற்றுக்கொண்டு உயர் போட்டிகளை வெல்லும் திறனுடன் முன்னேற வேண்டும். கல்வி என்பது வேடிக்கையானதாகவும், மகிழ்ச்சியான அனுபவமாகவும் இருக்க வேண்டும். கடும் உழைப்பு தேவை என்பதால், அதை சுமையாகக் கருதி, விட்டு விலகும் உணர்வு இல்லாமல் நிலையான மகிழ்ச்சியூட்டும், ஆதாரமாக கல்வி இருக்க வேண்டும்.
புதுச்சேரியுடன் தொடர்புள்ள புகழ்பெற்ற ஆன்மீக குரு திரு.அரவிந்தர்,
“கல்வி கற்கும் விருப்பத்தை குழந்தைக்கு ஒருவர் வழங்குவதே மிகுந்த விலைமதிக்க முடியாத பரிசாகும். கல்வி கற்க எப்போதும், எங்கும் விரும்பு. அப்போதுதான், எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் கற்றுக்கொள்வதற்கான, நிலையான, புதுப்பித்த வாய்ப்புக்கள் மேன்மேலும், எப்போதும் கிடைக்கும்”
கல்வி கற்பிக்க விரும்புவதும், தீர்வுகளுக்கான தாகமும், ஒவ்வொரு பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்க வேண்டும். முன்பே கூறியபடி இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வியின் தரம் வெகுவாக முன்னேற்றப்பட வேண்டும். ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் புதிய வளங்களை அணுகவும், அறிவு ஞானத்தை மேம்படுத்தவும் உதவ வேண்டும். இந்தச் சூழலில், சிறந்த சிந்தனையாளர், துறவி, தத்துவஞானியான அரவிந்தர், கல்வி கற்பிப்பதையும், கற்றுக்கொள்வதையும் பற்றி குறிப்பிட்டதை நினைவுகூர்வது சிறந்ததாகும்.
”உண்மையான கற்பித்தலின் முதல் கொள்கை எதையும் கற்பிக்க வேண்டியதில்லை என்பதே. ஆசிரியர் என்பவர் பயிற்சியாளரோ, வேலை வாங்குபவரோ அல்லர்; அவர் ஒரு உதவியாளர், ஒரு வழிகாட்டி. அவரது வேலை யோசனை கூறுவதே தவிர, எதையும் திணிப்பதல்ல. மாணவரின் மனதுக்கு அவர் உண்மையில் பயிற்சி அளிக்கவில்லை; அவனது அறிவின் உபகரணங்களை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதை மட்டுமே அவர் காட்டுகிறார். அதை நடைமுறைப்படுத்த அவனுக்கு ஊக்கமளிக்கிறார். அவர் மாணவனுக்கு அறிவைத் திணிப்பதில்லை. ஞானத்தை எப்படி பெறுவது என்பதை அவர் காட்டுகிறார்”
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், கற்பித்தலை திருத்தி அமைக்க வேண்டும். புதுமைகளைப் புகுத்துவதிலும், ஆராய்ச்சியிலும் உலக அளவில் சிறந்த மையங்களாக நமது பல்கலைக்கழகங்களை நாம் மாற்ற வேண்டியது அவசியம். பண்டைக்காலத்தில் கல்வியில் இந்தியா உலகத்துக்கே குருவாக திகழ்ந்ததைப்போல, நமது பல்கலைக்கழகங்கள் உலகம் முழுவதிலும் இருந்து அறிவைத் தேடுபவர்களை ஈர்க்க வேண்டும். இதனை எட்ட ஆசிரியர்களின் தொழில்முறையிலான வல்லமையை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்குவதுடன், சமகால சவால்களை எதிர்த்து சமாளிக்கும் திறமைகளைக் கொண்ட மக்களை உருவாக்குவது மிகவும் முக்கியமாகும்.
நற்பண்பு, போட்டித்திறன், திறமை ஆகியவற்றை உருவாக்குவதாக கல்வி இருப்பதுடன், நல்ல நடத்தையை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
நடப்புச்சூழலில் இன்னும் தேவையான முக்கியமாக உள்ள பாலின பாகுபாடு குறித்து நான் சிலவற்றைக் கூற விரும்புகிறேன். அண்மையில் நடந்த பெண்களுக்கு எதிரான சில குற்றச் செயல்கள் வெட்கப்படவேண்டியதாகவும், கவலை அளிக்கும் விஷயமாகவும் உள்ளன. பெண்குழந்தை பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்ச்சியை நாம் அனைவரும் சேர்ந்து ஏற்படுத்த வேண்டும்.
பாலின சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் நமது கவனத்தைப் புதுப்பிக்க வேண்டும். பாலின பாதுகாப்பை நமது வீட்டிலிருந்து தொடங்கி, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
அன்பு மாணவர்களே,
நாட்டின் முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இங்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல, உலகம் முழுவதும் விரிந்து கிடக்கும் வாய்ப்புக்களையும், நீங்கள் காண வேண்டும்.
கற்கும் உலகமும், பணிபுரியும் உலகமும் மிக துரித கதியில் மாறி வருகிறது.
அதனை ஏற்றுக்கொள்ளவும், அதற்கு பொருந்துபவராகவும், துடிப்பான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவராகவும் நீங்கள் மாற வேண்டியது அவசியம்.
இத்தனை ஆண்டுகளாக நீங்கள் பெற்ற கல்வி, ஞானம், திறன்கள் ஆகியவற்றை இந்த உலகை மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றக் கூடிய வகையில், சரியாக பயன்படுத்த வேண்டும்.
“ஆரோக்கியமான திருப்தியின்மையே முன்னேறத்திற்கு முன்னோடி” என்று காந்தியடிகள் ஒரு முறை சொன்னார்.
அதற்கேற்ப அதிருப்தியை உருவாக்கும் எழுச்சியை நீங்கள் பெறவேண்டும். இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் உதயமாகும்.
நவீனகால போக்குகள் மற்றும் மாற்றங்களுக்கு இணையாக உங்களை மாற்றிக்கொள்வதுடன், உங்களது வேர்களை மறந்து விடக்கூடாது.
மிகச்சிறந்த கலாச்சாரத்தின் சந்ததியினர் நீங்கள் என்பதை தயவுசெய்து நினைவு வைத்திருங்கள்.
இந்த கலாச்சாரம்தான் அறிவை மதிப்பிடுகிறது.
இந்த கலாச்சாரம்தான் மிகச்சிறந்த கல்வியாளர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது.
இந்த கலாச்சாரம்தான் உலகம் முழுவதிலும் உள்ள சிந்தனைகளில் சிறந்தவற்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது.
நமது பண்டைய பொக்கிஷங்களைக் கண்டறிய முயற்சித்து, பரந்து விரிந்து கிடக்கும் விசாலமான அறிவை வழங்க வேண்டும். நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்படும்போது, உங்களுக்கு ஒளி வழங்கும் அறிவு ரத்தினங்களை அவர்கள் கொண்டுள்ளனர். எது உங்களுக்கும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது என்பதை அறிந்து முடிவெடுக்கும் அடிப்படை அறிவை இவை உங்களுக்கு வழங்கி உள்ளன. வலுவான இந்திய வேர்களுடன் உலக அளவில் துடிப்பான மக்களாக திகழவேண்டும். இந்த இடத்தில், மகாத்மா காந்தி கூறியதை நினைவு கூர விரும்புகிறேன்.
“என் வீட்டுக்கு அனைத்துப் பக்கங்களிலும் சுவர்கள் இருக்க வேண்டும் என்றும், என் ஜன்னல்கள் மூடப்படவேண்டும் என்றும் நான் விரும்பவில்லை. அனைத்து நிலங்களின் கலாச்சாரங்களும் என் வீட்டுக்குள் இயன்றவரை சுதந்திரமாக நுழைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அதற்காக என் கால்கள் உடைக்கப்படுவதை நான் மறுக்கிறேன்”
இந்த சொற்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டு உங்களது தனித்துவ அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல சிந்தனைகள் எங்கிருந்து வந்தாலும் அவற்றை நீங்கள் கிரகித்துக் கொள்ள வேண்டும். இந்த உன்னதமான சிந்தனைகளைக் கண்டறிந்து அதன்படி நடக்க வேண்டும்.
இந்த பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து, நீங்கள் ஆற்றிய சிறந்த பணிகளை அறிந்துக் கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்த துணை வேந்தருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய முயற்சிகளால் இந்த பல்கலைக்கழகம் மிக உயர்ந்த இடத்திற்கு செல்லும் என நம்புகிறேன். உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெய் ஹிந்த்,
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1538047)
வருகையாளர் எண்ணிக்கை : 582