பிரதமர் அலுவலகம்

ஃபிக்கி அமைப்பின் 90-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தின் தொடக்க அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

Posted On: 13 DEC 2017 7:00PM by PIB Chennai

ஃபிக்கி அமைப்பின் தலைவர் திரு பங்கஜ் ஆர் பட்டேல் அவர்களே, தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர் திரு ரமேஷ் ஷா அவர்களே, பொதுச் செயலாளர் டாக்டர் சஞ்சய் பாரு அவர்களே மற்றும் உள்ள பிரமுகர்களே நீங்கள் அனைவரும் கடந்த ஆண்டு செய்த பணிகளை ஆய்வு செய்வதற்காக இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். இந்த ஆண்டு ஃபிக்கி தனது 90-வது ஆண்டை நிறைவு செய்கிறது.  எந்தவொரு அமைப்பிற்கும் இது மகத்தான பெருமித விஷயமாகும்.  உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

நண்பர்களே,   

 

     1927 ஆம் ஆண்டு வாக்கில் சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது இந்திய தொழில்துறை அந்த கமிஷனுக்கு எதிராக நின்றது. அது மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மிகவும் ஈர்ப்புடைய நிகழ்வாகும். தங்களின் சொந்த நலன்களுக்கும் மேலாக சைமன் கமிஷனை எதிர்த்து தொழில்துறை குரல் எழுப்பியது. தேசத்தின் நலனுக்காக இந்திய சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் முன் வந்ததைப் போலவே இந்திய தொழில் அதிபர்களும் தேச நிர்மாணத்தில் தங்களின் சக்தியை அர்ப்பணித்துக் கொண்டனர்.

 

சகோதர சகோதரிகளே,

 

     90 ஆண்டுகளுக்கு முன்னால், சாமானிய மக்கள் தங்களின் வழக்கமான பொறுப்புகளோடு தேசத்திற்கான பொறுப்பையும் எடுத்துக் கொள்ள முன்வந்தனர்.  அதேபோன்ற சகாப்தம் மீண்டும் தொடங்கியுள்ளது.  இந்த காலத்தில் மக்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளின் நிலைமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டில் ஏற்படும் குற்றங்கள், ஊழல், கருப்புப் பணம் போன்றவை குறித்து விரக்தி அடைந்துள்ள மக்கள் இவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

     எனவே, ஒவ்வொரு அமைப்பும் தற்போது ஒரு அரசியல் கட்சியாக இருக்க வேண்டியுள்ளது அல்லது ஃபிக்கி போன்ற தொழில் அமைப்பு நாட்டு மக்களின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு தங்களின் எதிர்கால உத்திகளை வகுத்து, அவற்றை செயல்படுத்த வேண்டிய நேரமாக உள்ளது.
 

நண்பர்களே,

 

     சுதந்திரத்தைத் தொடர்ந்து நாட்டில் பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், காலந்தோறும் பல சவால்கள் நம்முன் வந்து கொண்டிருப்பதும் உண்மையாகும். சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகும், நமது அமைப்பு முறையின் கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் இதற்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  சிறு, சிறு விஷயங்களுக்கும் அவர்கள் போராட வேண்டியுள்ளது.  ஏழை ஒருவர் வங்கிக் கணக்கு துவக்க வேண்டும் என்றால் முன்பிருந்த முறை தடைகளை உருவாக்கியது. சமையல் எரிவாயு இணைப்பைப் பெறுவதற்கு ஒருவர் விரும்பினால், 10 கதவுகளை தட்ட வேண்டிய தேவை அவருக்கு இருந்தது.  தங்களின் படிப்பு உதவி அல்லது ஓய்வூதியத்தை பெறுவதற்கும் கூட பல இடங்களில் லஞ்சம் தரவேண்டியிருந்தது.

     அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எனது அரசு பல பணிகளை மேற்கொண்டது. அந்த நடைமுறையை வெறுமனே வெளிப்படைத் தன்மை கொண்டதாக மட்டுமின்றி உணர்வுபூர்வமானதாகவும் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இத்தகைய நடைமுறை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது.

     எனவேதான், ஜன்தன் (மக்கள் நிதி) திட்டத்தை நாங்கள் தொடங்கியபோது அபரிமிதமான வரவேற்பை நாங்கள் பெற்றோம். இது தொடர்பாக அரசிடம் புள்ளி விவரமோ, தகவலோ இல்லாத நிலையில் ஏழை எளிய மக்களுக்கு எவ்வளவு வங்கிக் கணக்குகள் தேவை என்பதை அறிய இயலாததால், ஒரு இலக்கு நிர்ணயிக்க எங்களால் முடியவில்லை என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கும்.

     ஏழை எளிய மக்கள் வங்கிகளுக்கு சென்றால், சில நேரங்களில் அவர்கள் வசவு வாங்க வேண்டியிருக்கும் அல்லது அவர்களின் ஆவணங்களில் தவறுகள் கண்டுபிடிக்கப்படும் என்ற தகவல் மட்டும்தான் நாங்கள் பெற்றிருந்தோம். ஆனால், தற்போது ஜன்தன் திட்டத்தின் மூலம் 30 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் வங்கிக் கணக்குகள் தொடங்கியிருப்பதை பார்க்கும் போது, மக்களின் எவ்வளவு பெரிய தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதை நான் உணர்கிறேன். ஊரகப் பகுதிகளில் மிகப்பெரும் எண்ணிக்கையில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதால், அங்கெல்லாம் பணவீக்க விகிதம் குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.  இதன் பொருள் என்னவென்றால், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் இந்தத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பதாகும்.

 

சகோதர சகோதரிகளே,

 

     மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், தேவைகளையும் கணக்கில் கொண்டு எமது அரசு  திட்டங்களை உருவாக்குகிறது.  இந்த தொலைநோக்குப் பார்வை மக்களின் எளிதான வாழ்க்கைக்கும், எளிதாக வாழ்வதை அதிகரிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கிறது.

     உஜவாலா திட்டம் தொடங்கப்பட்டதால், புகை அடுப்பிலிருந்து ஏழை மக்கள் விடுதலை பெற்றுள்ளனர்.  3 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை நாங்கள் வழங்கியிருக்கிறோம்.  இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாட்டு விகிதம் குறைந்திருப்பதாக மற்றுமொரு ஆய்வு தெரிவிக்கிறது. ஏழை மக்கள் எரிபொருளுக்கு குறைந்த தொகையை செலவு செய்தால் போதும் என்பதே இதன் பொருளாகும்.

ஏழை மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும் புரிந்து கொண்டு ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஐந்து கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.  இதன் காரணமாக ஏழை பெண்கள் எதிர்கொண்ட கூச்சம் தவிர்க்கப்பட்டது. இதன்மூலம் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றிய அச்சம் விலகியது.

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் தொடங்கப்பட்டதால், ஏழை மக்கள் தங்களுக்கான சொந்த வீடுகளை பெற முடிந்தது. அவர்கள் வாடகைக்கு செலவிட்ட அதே தொகைக்கு வீட்டினைப் பெறமுடிந்துள்ளது.

 

நண்பர்களே,

 

நாட்டின் கிராமங்களில், தொலைதூரப் பகுதிகளில், முற்றிலும் மாறுபட்ட உலகத்தை நீங்கள் காணலாம். விஞ்ஞான்பவனில் ஒளிரும் விளக்குகளில் இருந்து அது முற்றிலும் மாறுபட்டது. இந்த அலங்காரங்கள் ஆடம்பரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அந்த வறுமையின் உலகத்திலிருந்து வெளியே வர உங்களைப் போன்ற மக்களிடம் நான் வந்திருக்கிறேன். வரம்புக்கு உட்பட்டதாக ஆதார வளங்களும், கல்வியும் ஆனால் வரம்பில்லாத, கட்டுப்படாத கனவுகள். அந்த உலகம்தான் ஏழை மக்களின், நாட்டின் தேவைகளை அறிந்து பணியாற்ற, முடிவுகள் எடுக்க, அவற்றை அமலாக்க எனக்கு கற்றுத்தந்துள்ளது.

இளைஞர்களின் பெருந்தேவையை சந்திப்பதாக முத்ரா திட்டம் உள்ளது. இதற்கு வங்கி உத்தரவாதம் தேவைப்பட்டது. ஒரு இளைஞர் சொந்தமாக எதையாவது செய்ய விரும்பினால், எவ்வளவு நிதி உங்களால் ஏற்பாடு செய்ய முடியும் என்ற முதல் கேள்வியை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. முத்ரா திட்டத்தின் கீழ் இந்த உத்தரவாதத்தை அரசு அளிக்கிறது.  கடந்த 3 ஆண்டுகளில் நாங்கள் சுமார் 9.75 கோடி கடன் வழங்கியிருக்கிறோம்.  வங்கி உத்தரவாதம் இல்லாமல் இளைஞர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கப்பட்டுள்ளது.  இளைஞர்களின் பெருந்தேவையை சந்திக்க அவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு நிற்கிறது. இதன் விளைவாக கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3 கோடி புதிய தொழில் முனைவோர் உருவாகியிருக்கிறார்கள்.

இவர்களெல்லாம் முத்ரா திட்டத்தின்கீழ் முதன் முறையாக வங்கிக் கடன் பெற்றவர்கள். இந்த 3 கோடி பேரும் நாட்டின் சிறுதொழில்கள் துறையை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையை மேலும் விரிவுபடுத்தி, வலுப்படுத்தி இருக்கிறார்கள்.

புதிய தொழில் முயற்சிகளையும் அரசு ஊக்குவித்து வருகிறது.  புதிய முயற்சிகளுக்கு மிகப்பெரிய தேவை என்பது துணிச்சலான மூலதனமாகும்.  இந்தத் தேவையை சந்திப்பதற்காக சிட்பி-யின் கீழ், நிதியங்களின் நிதியத்தை அரசு உருவாக்கியுள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து சிட்பியால் செய்யப்பட்ட முதலீடு மற்ற முதலீட்டாளர்களின் உதவியுடன் 4 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் புதிய சிந்தனைகளுடன் புதுமைத் தொழில் தொடங்குவது எளிதாகியுள்ளது.

 

சகோதர சகோதரிகளே,

 

புதிய தொழில்கள் தொடங்குவதற்கான சூழ்நிலைக்கு முக்கியமாக இருப்பது மாற்று முதலீட்டு நிதியத்தின் முதலீடாகும். அரசின் கொள்கை முடிவு காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் இந்த முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. இளைஞர்களின் தேவைகளை பரிசீலித்து அரசு முடிவுகளை எடுக்கிறது, கொள்கைகளை உருவாக்குகிறது என்பதை நீங்கள் கவனிக்கலாம். முந்தைய அரசின் காலத்திலிருந்து இந்தக் கொள்கை மாறுபட்டது என்பதையும் நீங்கள் கவனிக்கலாம். அந்தக் கால கட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கடன், சில உயர்நிலை தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டது.  வங்கிகளுக்கு நெருக்குதல்களை தந்து, இந்த கடன்கள் பெறப்பட்டது.

 

      நண்பர்களே,

 

     கொள்கை மாற்றத்திற்கான தொழில்துறையின் குரல் என்று ஃபிக்கி தன்னை குறிப்பிட்டுள்ளது. தொழில்துறையின் குரலை நீங்கள் அரசிற்கு தெரிவிக்கிறீர்கள்.  உங்களின் ஆய்வுகள் வெளியிடப்படுவதை, கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்வதை நீங்கள் தொடர வேண்டும். இருப்பினும், முந்தைய அரசின் கொள்கைகள் வங்கித்துறையை என்ன செய்தது என்பது பற்றி ஃபிக்கி ஆய்வு செய்ததா, இல்லையா என்பதை நான் அறியேன். இந்த நாட்களில் செயல்படாத சொத்துக்கள் பற்றி என்பிஏ – என்பிஏ என்று ஏராளமான குரல்கள் எழுகின்றன. முந்தைய அரசில் பணியில் இருந்த சில ‘பொருளாதார நிபுணர்களால்’ இப்போதைய அரசுக்கு கைமாற்றிவிடப்பட்ட மிகப்பெரிய கடன் சுமையாகும் இது.

     அரசில் அமர்ந்திருந்த சிலர், வங்கிகளுக்கு நெருக்குதல் தந்து தெரிவு செய்யப்பட்ட தொழிலதிபர்கள் சிலருக்கு கடன் வசதி செய்து கொடுத்த போது ஃபிக்கி போன்ற அமைப்புகள் என்ன செய்தன என்பதை பற்றி அறிவதற்கும் கூட நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். முந்தைய அரசில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு இது தவறு என்று தெரியும். வங்கிக்கு இது தெரியும், தொழில்துறைக்கு இது தெரியும், சந்தைகளோடு தொடர்புடைய நிறுவனங்களுக்கு இது தவறு என்று தெரியும்.

     யுபிஏ அரசின் மிகப்பெரிய மோசடியாக இது இருந்தது. காமன்வெல்த், 2ஜி, நிலக்கரி ஊழல்களைவிட இது மிகப்பெரியதாகும். அரசில் அமர்ந்திருந்தவர்கள் பொதுமக்களின் கடுமையான உழைப்பிலிருந்து பெறப்பட்ட பணத்தை வங்கிகள் மூலம் கொள்ளையடித்துள்ளனர். ஏதாவது ஒரு ஆய்வில் ஒரேஒரு ஆய்விலாவது இது குறிப்பிடப்பட்டிருந்ததா? அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த இவர்களை எழுப்புவதற்கு எந்த அமைப்பாவது எந்த முயற்சியையாவது மேற்கொண்டதா?.

 

     நண்பர்களே,

 

     நமது மோசமான வங்கி முறையை சரிசெய்வதற்கு, வலுப்படுத்துவதற்கு தமது அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  வங்கிகளின் நலன் பாதுகாக்கப்படும் போது வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் போது மட்டும்தான் நாட்டின் நலன் பாதுகாப்பாக இருக்கும்.

     இத்தகைய சூழலில் மக்களுக்கும், தொழில் துறைக்கும் சரியான தகவல்களைத் தந்து, விழிப்புணர்வை பரவலாக்குவதில் ஃபிக்கி போன்ற அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. உதாரணமாக கடந்த சில நாட்களாக நிதி தீர்வு மற்றும் வைப்பீடு காப்பீட்டு - எஃப்ஆர்டிஐ - மசோதா பற்றிய வதந்தி பரவி வருகிறது.

     வாடிக்கையாளர்கள்  நலனை பாதுகாக்கவும், வங்கிகளில் அவர்கள் செலுத்தியுள்ள பணத்தை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இருப்பினும் முற்றிலும் இதற்கு எதிரான செய்திகள் பரப்பப்படுகின்றன.  சாமானிய மக்களையும், தொழில் துறையையும் தவறாக வழிகாட்டும் இத்தகைய முயற்சியை முறியடிக்க ஃபிக்கி போன்ற அமைப்புகளின் பங்களிப்பு மிகமிக அவசியமாகும்.

     அரசின் குரல், தொழில் துறையின் குரல், பொதுமக்களின் குரல் ஆகியவற்றுக்கு இடையே சம நிலையை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.  இந்த ஒத்துழைப்பு ஏன் தேவை என்பதற்கு உங்களுக்கு ஓர் உதாரணத்தை தருகிறேன்.

 

     நண்பர்களே,

 

     ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டு அமலாக்கப்பட வேண்டும் என்பது தொழில்துறையின் பழைய கோரிக்கையாகும். அது எப்போது அமலாக்கப்பட்டது? இதனை மேலும் பயனுள்ளதாக ஆக்குவதற்கு உங்களின் அமைப்பு என்ன பங்களிப்பை செய்தது? சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் சிலர், விடுதிகளில் வழங்கப்பட்ட பில்களை பல நாட்கள் கவனத்திற்கு கொண்டுவந்து இந்த வரி குறைக்கப்பட வேண்டும் என்றனர்.  சில விடுதிகள் விலைகளை குறைக்காமல் பில் தொகையை மட்டும் உயர்த்தி விட்டன. இதற்கு என்ன பொருள் என்றால், முடிவுகளின் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு சென்றடையவில்லை என்பதாகும்.

     இத்தகைய நிலைமைகளை கையாள்வதற்கு சொந்த முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களிடையே வணிகம் செய்வோரிடையே விழிப்புணர்வை உருவாக்க ஃபிக்கி ஏதாவது முயற்சி செய்திருக்கிறதா?

 

சகோதர சகோதரிகளே,

 

ஜிஎஸ்டி போன்ற வரி விதிப்பு முறையை திடீரென உருவாக்கிவிட முடியாது. கடந்த 70 ஆண்டுகளாக உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் முறையில் மாற்றங்களைச் செய்ய நாம் முயற்சி மேற்கொண்டுள்ளோம். அதிகபட்ச எண்ணிகையில் உள்ள வணிகத்தை அதனுடன் சேர்க்க வேண்டும் என்பது நமது இலக்காகும்.

ஒரு லட்சம் ரூபாய் அல்லது 10 லட்சம் ரூபாய் விற்றுமுதல் உள்ள நிறுவனங்களை மிகச்சிறிய வர்த்தக நிறுவனங்களாக கொண்டுவர நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த செயல்பாடு, வருவாய் ஈட்டுவதற்கு அல்லது பணம் சம்பாதிப்பதற்கு அரசு விரும்புவதால் இல்லை. மிகவும் இயல்பாகவும் கூடுதல் வெளிப்படைத் தன்மையோடும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஏழைகளுக்கு சமமான பலன்களை கிடைக்கச் செய்ய அரசு இவற்றையெல்லாம் செய்து வருகிறது. மேலும் கூடுதலாக இயல்பான இந்த முறை காரணமாக வங்கிகளில் இருந்து எளிதில் கடன் பெறலாம். கச்சாப் பொருளின் தரம் உயரும், பொருட்களின் விலை குறையும். சிறிய வணிக நிறுவனங்களை உலக நிறுவனங்களுடன் மேலும் போட்டியிடச் செய்யும் என்பது இதன் பொருளாகும். சிறு தொழில்களின் வழிகாட்டுதல்காக பெரிய அளவிலான நிகழ்வுகளை ஃபிக்கி நடத்தும் என்று நான் நம்புகிறேன்.

 

சகோதர சகோதரிகளே,

 

ஃபிக்கியின் எம்எஸ்எம்ஈ பிரிவு 2013-ல் அமைக்கப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. 90 ஆண்டு பழமையான இந்த அமைப்பில் வெறும் 4 ஆண்டுகளுக்கு முன்தான், எம்எஸ்எம்ஈ பிரிவு அமைக்கப்பட்டுள்ளதா!  இதுபற்றி வேறு எதுவும் கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை.  ஆனால், உங்களின் இந்த துணை அமைப்பு முத்ரா, தொடங்கிடு இந்தியா, நிமிர்ந்திடு இந்தியா போன்ற திட்டங்களை விரிவாக்க உதவும் என்று நிச்சயமாக நான் கருதுகிறேன். அனுபவமிக்க இத்தகைய அமைப்புகள் கைகொடுத்தால், நமது சிறுதொழில்கள் துறை மிகவும் சக்தியுடன் செயல்பட முடியும்.

ஜிஈஎம் - அரசு ஈ-சந்தை என்ற பெயரின்கீழ் நடைமுறை ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது.  இந்த நடைமுறையுடன் சிறு தொழில்களை இணைக்கும் முயற்சிகளை நீங்கள் அதிகப்படுத்த வேண்டும். தற்போது குறைந்த நேரத்தில் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் கூட ஜிஈஎம் மூலமாக அரசுக்கு அவற்றை விற்பனை செய்ய முடியும்.

உங்களிடமிருந்து நான் கூடுதலாக ஒன்றை எதிர்பார்க்கிறேன். பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களுக்கு பாக்கி வைத்திருக்கும் தொகையை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்ய நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். இதற்கான விதிகள் உள்ளன.  ஆனால், பெரிய நிறுவனங்கள் தர வேண்டிய தொகை காரணமாக சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவது உண்மை. அவர்களுக்கான நிலுவைத் தொகை 3 அல்லது 4 மாதங்களில் தரப்படுகிறது. வர்த்தக உறவுகளுக்கு இடையூறாகிவிடும் என்று நிலுவைத் தொகையை கோருவதற்கு தயங்குகிறார்கள். இதுபோன்ற சிரமங்களை போக்குவதற்கு உங்களைப் போன்றவர்கள் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

நண்பர்களே,

 

சென்ற நூற்றாண்டில் தொழிற்புரட்சியின் முழு பயனை நமது நாடு எடுத்துக் கொள்ளாததற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், இன்று இந்தியாவில் புதிய புரட்சியை தொடங்குவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

நாட்டின் தேவைகளை புரிந்து கொண்டு இந்த அரசு புதிய கொள்கைகளை உருவாக்கி வருகிறது. பழைய சட்டங்களை ரத்து செய்துவிட்டு புதிய சட்டங்களை இயற்றுகிறது.

அண்மையில் மூங்கில் தொடர்பாக ஒரு முக்கியமான முடிவை நாம் எடுத்திருக்கிறோம். மூங்கில் என்பது மரமா இல்லையா என்பதை தீர்மானிக்க நமது நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கின்றன.  வனங்களுக்கு வெளியே வளர்கின்ற மூங்கில், மரம் இல்லை என்று தற்போது இந்தப் பிரச்சினைக்கு அரசு தீர்வு கண்டுள்ளது. மூங்கிலை பயன்படுத்தும் சிறுதொழில் துறைகளில் பணியாற்றும் பல லட்சம் பேருக்கு இந்த முடிவு பலன் தரும்.

 

நண்பர்களே,

 

ஃபிக்கி உறுப்பினர்களில் அதிகபட்சம் பேர் உற்பத்தி துறையோடு தொடர்புடையவர்கள் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.  ஃபிக்கி அமைப்பின் நான்கில் ஒரு பங்கினர் இன்ஜினியரிங் பொருட்கள், அடிப்படை கட்டமைப்பு, மனை வணிகம், கட்டுமானப் பொருட்கள் ஆகிய துறைகளோடு தொடர்புடைய நிறுவனங்களை நடத்துகின்றனர்.

 

சகோதர சகோதரிகளே,

 

பிறகு ஏன், கட்டுமான தொழில்களில் உள்ளவர்கள் தங்களின் பிரச்சினைகளை முந்தைய அரசிடம் கொண்டு செல்லவில்லை? நடுத்தர மக்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை கட்டுமான தொழில் நிறுவனங்களிடம் கொடுத்த பிறகும் கூட வீடுகளை பெற முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதற்கு உறுதியான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை? ஏன்…? ஆர்.ஈ.ஆர்.ஏ. போன்ற சட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் அவை செயல்படுத்தப்படவில்லை.  இந்த அரசு மட்டுமே நடுத்தர வகுப்பினரின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 

சகோதர சகோதரிகளே,

 

மார்ச் மாதத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட பின், அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முழுமையாக ஓராண்டு கிடைக்கவில்லை என்கிற உண்மையை நாங்கள் மட்டுமே கண்டறிந்தோம்.  பருவமழை காரணமாக 3 அல்லது 4 மாதங்கள் வீணாகின்றன. எனவே, பட்ஜெட் சமர்ப்பிக்கும் தேதி இந்த ஆண்டு ஒரு மாதம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக உரிய நேரத்தில் துறைகள் நிதியை பெறுகின்றன. திட்டங்களை செயல்படுத்த ஒரு முழு ஆண்டும் கூட அவர்களுக்கு கிடைக்கிறது.

 

நண்பர்களே,

 

யூரியா, ஜவுளி, விமானப் போக்குவரத்து தொடர்பாக புதிய கொள்கைகளை இந்த அரசு உருவாக்கியுள்ளது. போக்குவரத்து ஒருங்கிணைப்பிற்கும், சுகாதாரத்திற்கும் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. கொள்கையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே கொள்கைகள் உருவாக்கப்படவில்லை.

யூரியா தொடர்பான நமது கொள்கை மாற்றப்பட்ட பிறகு நாட்டில் புதிய யூரியா தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. யூரியா உற்பத்தி 18-லிருந்து 20 லட்சம் டன் வரை அதிகரித்துள்ளது. ஜவுளித் துறையின் புதிய கொள்கை ஒரு கோடி (10 மில்லியன்) புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். விமானப் போக்குவரத்து துறையின் கொள்கை மாற்றம் சாதாரண காலணியுடன் மக்கள் விமானங்களில் பயணம் செய்யும் வாய்ப்பை பெறும் அளவிற்கு மாறியுள்ளது. போக்குவரத்து ஒருங்கிணைப்பால் பல வகையான போக்குவரத்துகளை பயன்படுத்தும் போது ஏற்படும் சுமை குறையும்.

கடந்த 3 ஆண்டுகளில் 21 துறைகளில் 87-க்கும் அதிகமான முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு, கட்டுமானம், நிதிச்சேவை, உணவுபதனம், மற்றும் பல துறைகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றின் தாக்கங்களை பொருளாதாரம் தொடர்பான பல்வேறு நிலைகளில் நீங்கள் காணமுடியும்.

மூன்றே ஆண்டுகளில் இந்தியா 142-வது இடத்திலிருந்து 100-வது இடத்தை அடைந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 30,000 கோடி டாலரிலிருந்து 40,000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. உலக போட்டிக் குறியீட்டு தரவரிசையில் இந்தியாவின் இடம் 32 புள்ளிகள் மேம்பட்டுள்ளது. உலக புதிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 21 புள்ளிகள் உயர்ந்துள்ளன. சரக்குகள் கையாளும் குறியீட்டில் 19 புள்ளிகள் அதிகரித்துள்ளன. எஃப்.டி.ஐ பற்றி நாம் பேசினால், கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு சுமார் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

சகோதர சகோதரிகளே,

 

ஃபிக்கி உறுப்பினர்களில் பெரும் எண்ணிகையினர் கட்டுமான தொழில்துறையை சார்ந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் கட்டுமானத் துறைக்கு 75 சதவீதம் கிடைத்திருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல், விமானப் போக்குவரத்து, சுரங்கங்கள், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் அல்லது மின்சாதனங்கள் ஆகிய அனைத்து துறைகளுக்கும் கடந்த 3 ஆண்டுகளின் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் பாதியளவு கிடைத்துள்ளது.

நமது பொருளாதாரத்தின் பலத்தை காட்டுவதற்கு மேலும் சில புள்ளி விவரங்களை தெரிவிக்க நான் விரும்புகிறேன். கடந்த 2, 3 நாட்களில் வெளியான புள்ளிவிவரங்களை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன்.  இருப்பினும், அவை குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்க நான் விரும்புகிறேன்.

 

நண்பர்களே,

 

உள்நாட்டு சந்தையில் பயணியர் வாகனங்களின் விற்பனை நவம்பர் மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதார செயல்பாட்டை பிரதிபலிக்கும் வர்த்தக வாகனங்களின் விற்பனை 50 சதவீத வளர்ச்சியை தொட்டுள்ளது. வேலைவாய்ப்பின் குறியீடாகக் கருதப்படும் 3 சக்கர வாகனங்களின் விற்பனை நவம்பர் மாதத்தில் 80 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.  நடுத்தர மக்களிடமும், ஊரக பகுதிகளிலும் வருவாய் அதிகரிப்பை பிரதிபலிக்கும் இருசக்கர வாகனங்களின் விற்பனை 23 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

நண்பர்களே,

 

பொருளாதாரத்தில் சாமானிய மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் போதுதான், இத்தகைய பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நிர்வாக, நிதி, சட்ட நடவடிக்கைகளை தள நிலையிலிருந்து அரசு மேற்கொண்டு வருகிறது என்பதற்கான உதாரணமாகக் கூட இந்த சீர்திருத்தங்கள் உள்ளன. அரசால் மேற்கொள்ளப்பட்ட சமூக சீர்திருத்தங்கள் தாமாகவே பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கான சான்றாகவும் இருக்கின்றன. இவை வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

உதாரணமாக பிரதமரின் வீட்டுவசதி திட்டம் பற்றி நான் பேசும்போது, 2022 –க்குள் ஏழை மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு கிடைப்பதை இலக்காகக் கொண்டு இந்த அரசு பணியாற்றி வருகிறது. இதற்காக நகரங்களிலும், கிராமங்களிலும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளின் கட்டுமானத்திற்கு தேவைப்படும் மனித சக்தி உள்ளூர் நிலையில் மட்டுமே ஏற்பாடு செய்யப்படுகிறது.  இவற்றுக்கான கட்டுமான பொருட்கள் உள்ளூர் சந்தைகளில் இருந்தே பெறப்படுகின்றன. அதேபோல், சமையல் எரிவாயு விநியோக குழாய்கள் அமைக்கும் பணி காரணமாக பல நகரங்களில் எரிவாயு விநியோகம் மேம்பட்டுள்ளது. சி.என்.ஜி. விநியோகிக்கப்படும் நகரங்களின் பணிச்சந்தையில் ஒரு புதிய சுற்றுச்சூழல் முறை உருவாக்கப்பட்டுள்ளது.

 

சகோதர சகோதரிகளே,    

 

நாட்டின் தேவைகளை புரிந்து கொண்டு நாம் அனைவரும் பணியாற்றினால் மட்டுமே பொதுமக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடியும். வெளியே இருந்து இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் ஃபிக்கியில் இணைந்துள்ள நிறுவனங்கள் அத்தகையப் பொருட்களை உற்பத்தி செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டும். நம்மிடம் உள்ள கச்சாப் பொருட்களை பயன்படுத்தி, உற்பத்தி செய்த பல பொருட்கள் மெருகேற்றப்பட்டு நமக்கே விற்பனை செய்யப்படுகின்றன.   இந்தச் சூழ்நிலையில் இருந்து நமது நாட்டை விடுவிப்பது அவசியமாகும்.

 

நண்பர்களே,

 

நமது நாடு தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை 2022-ல் கொண்டாடவிருக்கிறது. புதிய இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்றிருக்கிறோம். ஃபிக்கி போன்ற அமைப்புகளின் பணி மிகவும் விரிவானது. அவர்களின் பொறுப்பு மகத்தானது.  புதிய இந்தியாவை உருவாக்க புதிய உறுதிமொழிகளை மேற்கொள்ள அவர்கள் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். நாட்டின் எதிர்கால தேவையைக் கருதி, புதிய உறுதிமொழிகளை மேற்கொள்வது பற்றி ஃபிக்கி பரிசீலிக்க வேண்டும். சிலவற்றை செய்வதற்கு ஏராளமான வளமுள்ள பல துறைகளை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். உணவு பதனம், செயற்கை நுண்ணறிவு, சூரிய மின்சக்தி, சுகாதாரம் போன்ற துறைகளில் ஃபிக்கியின் அனுபவம் பலனளிக்கும்.  நாட்டின் எம்.எஸ்.எம்.ஈ துறைக்கு சிந்தனை சக்தி போன்று உங்கள் அமைப்பு பணியாற்ற முடியாதா?

 

சகோதர சகோதரிகளே,

 

நாம் செய்வதற்கு ஏராளமான பணிகள் உள்ளன. நாம் உறுதியேற்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனை நிறைவேற்றும் அவசியமும் நமக்கு உள்ளது. நமது உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டால், நாடு வெற்றியடையும். இருப்பினும், கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும்  ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்வது அவசியம்.   சதம் அடிக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு பந்தை அடிக்கும் வீரர்கள் சிலர் விளையாட்டை மெதுவாக தொடங்குவார்கள்.  அவர்கள் 90 ரன்தான் எடுப்பார்கள். ஃபிக்கி அவர்களை பின்பற்றக்கூடாது.  நீங்கள் துடித்தெழுந்து 4 அல்லது 6 ரன் என அடித்து சதத்தை கடந்துவிட வேண்டும்.

ஃபிக்கி அமைப்பிற்கும், அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மேலும் ஒருமுறை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு எனது உரையை நான் நிறைவு செய்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.


(Release ID: 1537931) Visitor Counter : 457


Read this release in: English