எரிசக்தி அமைச்சகம்
குளிரூட்டும் சாதனத்தின் வெப்ப நிலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிந்துரைகள் குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள்
Posted On:
29 JUN 2018 12:16PM by PIB Chennai
1. குளிரூட்டும் சாதனங்களுக்கு ஏற்ற வகையிலான வெப்ப நிலையை நிர்ணயிப்பதற்கு எரிசக்தித் திறன் பிரிவு பரிந்துரைத்திருப்பதன் நோக்கம் என்ன?
எரிசக்தி அமைச்சகத்தின் எரிசக்தித் திறன் பிரிவு, குளிரூட்டும் சாதனங்களுக்கு உகந்த வெப்பநிலையைப் பிராந்தியங்களைப் பொறுத்து நிறுவுவதன் மூலம் எரிசக்தியை சேமிக்க முடியும் என்ற நோக்கத்தில் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 20 – 21 டிகிரி செல்சியஸ் என்ற பாரம்பரிய அளவை மாற்றுவதன் மூலம் செலவிடப்படும் எரிசக்தியில் தோராயமாக 24 சதவீதத்தை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2. இந்த முன்முயற்சியின் மூலம் எவ்வளவு எரிசக்தி ஆற்றல் சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது?
இந்த நடவடிக்கை மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த அளவு ஆண்டுக்கு 2000 கோடி யூனிட்டுகள் (ரூ.10,000 கோடி மதிப்பு) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையில் 50 சதவீத அளவுக்கு நுகர்வோர் கடைப்பிடித்தாலே, ஆயிரம் கோடி யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும். இது ஆண்டுக்கு 82 லட்சம் டன் கரியமிலவாயுவை குறைப்பதற்கு சமமாகும்.
3. 24 டிகிரி செல்சியஸ் என்ற இயல்பு நிலை நிறுவப்படுவதன் பொருள் என்ன? நுகர்வோர் தங்கள் குளிரூட்டும் சாதனங்களின் வெப்பநிலையை இதற்கேற்ற வகையில் சரிக்கட்ட இயலுமா?
இயல்பு நிலை நிறுவுதல் என்பது தொழிற்சாலைகளில் இருந்து குளிரூட்டும் சாதனம் வெளியே வரும்போது அமைக்கப்படுவதாகும். எனவே, அந்த எந்திரம் இயங்கத் தொடங்கும்போது 24 டிகிரி செல்சியஸ் என்ற வெப்ப நிலைக்கு வந்துவிடும். இருப்பினும், நுகர்வோர் தங்களது தேவைக்கேற்ற வகையில், சாசனத்தின் வெப்பநிலையை கூட்டியோ குறைத்தோ வைத்துக்கொள்ளலாம்.
4. குளிரூட்டும் சாதனத்தின் வெப்பநிலையை 24 டிகிரி செல்சியஸாக நிறுவுவதன் மூலம் என்ன பலன் கிட்டும்?
மனித உடலின் இயல்பான வெப்பநிலை 36 – 37 டிகிரி செல்சியஸாகும். பெரிய தங்கும் விடுதிகள் (ஹோட்டல்கள்), விமான நிலையங்கள், அலுவலகங்கள் போன்ற மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் பொதுவாக குளிரூட்டும் சாதனத்தை இயக்குபவர்கள் 18 - 21 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்ப நிலையை குறைப்பது வழக்கம். குளிரூட்டும் சாதனம் நன்கு இயங்குகிறது என்பதற்கு அறிகுறியாக இது கருதப்படுகிறது. இருப்பினும், தொழில்நுட்ப ரீதியில் இது உண்மையல்ல. எந்த வெப்ப நிலையில் வைத்தாலும் சாதனத்தின் அழுத்தியின் (கம்ப்ரஸர்) குளிரூட்டும் செயல்பாடு ஒரே மாதிரியாகவே இருக்கும். மாறாக, 18 – 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை குளிரூட்டும் சாதனத்தில் மாற்றியமைப்பதன் மூலம் கட்டிடங்களுக்குள் மிகுந்த குளிரான சூழல் நிலவும். அதற்கேற்றாற்போல் மக்கள் கதகதப்பான உடைகளை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது எரிசக்தி வீணாக வழிவகுக்கும். பொதுவாக, 25 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை, தேவையான ஈரப்பதம், காற்றின் நகர்வுடன் கூடிய மனித உடலுக்கு ஏற்ற வசதியான குளிர் சூழலை ஏற்படுத்தும்.
5. அறையில் அதிக நபர்கள் இருந்தால், வசதியான குளிர் சூழலை பராமரிக்க முடியுமா?
அதிக நபர்கள் இருந்தாலும், அதே வெப்பநிலை நிர்ணயத்தின் மூலம் குளிர்சாதனம் போதிய குளிரூட்டும் சூழலை ஏற்படுத்த முடியும். குளிரான சூழலை அடையும் வரை, கம்ப்ரஸர் சற்று அதிகமாக இயங்க வேண்டி இருக்கும்.
6. குளிரூட்டும் சாதனங்களில் 24 டிகிரி செல்சியஸ் என்ற இயல்பான வெப்ப நிலையை அமைப்பதன் பயன்கள் என்ன?
ஒரு அறையில் உள்ள குளிரூட்டும் சாதனத்தின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், 6 சதவீத அளவுக்கு மின்சாரத்தை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அறையின் வெப்ப நிலையை 20 – 21 டிகிரி செல்சியஸாக நிர்ணயிப்பது வழக்கமாக இருக்கிறது. மாறாக, 24 – 25 டிகிரி செல்சியஸ் என்ற வெப்ப நிலையே அடிப்படையில் வசதியான குளிர் சூழலை ஏற்படுத்தும். 20 டிகிரி செல்சியஸிலிருந்து 24 டிகிரி செல்சியஸாக உயர்த்தப்படும்போது, அந்த குறைந்தபட்ச 4 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பால் 24 சதவீத மின்சாரம் சேமிக்கப்பட வாய்ப்பு ஏற்படும்.
ஆகையால், நுகர்வோர் தங்கள் குளிரூட்டும் சாதனத்தின் வெப்ப நிலையை 24 டிகிரி செல்சியஸாக பராமரித்தால் கணிசமான அளவுக்கு மின்சாரத்தை (பணத்தையும்) சேமிக்க முடியும்.
7. எரிசக்தித் திறன் பிரிவு தனது விதிமுறைகளைச் செயல்படுத்த ஏற்ற வகையிலான கட்டிடங்கள் / பகுதிகள் எவை?
விமான நிலையங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், அரசு கட்டிடங்கள் (அமைச்சகங்கள் & அதனுடன் இணைந்த அலுவலகங்கள், மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்) போன்ற முக்கியமான இடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
8. சவுகரிய அட்டவணை / மண்டலம் என்பதன் பொருள் என்ன?
மனித சவுகரியத்திற்கு ஏற்ற வகையிலான வெப்பச்சூழல் நிலவரத்தின்படி, வாழ்வதற்கு ஏற்ற வகையிலான திருப்தியான வெப்பச்சூழல் நிலவ வேண்டும். வெப்ப நிலை, ஈரப்பத அளவு, மனித உடலை தழுவிச் செல்லும் காற்றின் போக்கு ஆகியவற்றைப் பொறுத்து ஒரு இடத்தின் சவுகரியநிலை வரைமுறைப்படுத்தப்படும். இது தனி நபர்கள் அணியும் ஆடைகள், அவர்களது வளர்சிதை வினை மாற்றம் ஆகியவற்றைப் பொறுத்தும் அமையும். இந்த அளவுகளுக்குள் நமது உடல் பொதுவான சவுகரியத்தை உணரமுடியும். 24 – 25 டிகிரி செல்சியஸ் என்ற வெப்ப நிலையை பராமரிப்பதன் மூலம் நமக்கு தேவையான சவுகரியத்தைப் பெற முடியும் என்று தொழில்நுட்ப ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற சவுகரிய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

9. இந்த ஆலோசனை தற்போது கட்டாயமா?
வணிக நிறுவனங்கள் தானாக முன்வந்து இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றுமாறு நுகர்வோரை ஊக்குவிப்பதும், அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும். மின்சார அமைச்சகம் / எரிசக்தித் திறன் பிரிவு 4 முதல் 6 மாத கால விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பின்னர், பொது ஆய்வு ஒன்று நடத்தப்படும்.
10. 18 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலையை காப்பதன் மூலம் 24 டிகிரி செல்சியஸ் பராமரிப்பை விட விரைவாக அறை குளிரூட்டப்படுமா?
இல்லை, அறையின் உள்ளே நிலவும் வெப்பநிலையைச் சோதித்து, தேவைப்படும் அளவை வெப்பநிலை எட்டிய பின்னர் கம்ப்ரஸரை வெப்பநிலைக் காப்பகம் (தெர்மோஸ்டாட்) நிறுத்திவிடும். குறைந்த அளவு வெப்பநிலையை எட்டுவதற்கு கம்ப்ரஸர் அதிக நேரம் இயங்கும் என்பது இதன் பொருளாகும். அதாவது, 24 டிகிரி செல்சியஸூக்கு பதிலாக 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிறுவப்பட்டால் கம்ப்ரஸர் அதிகமாக இயங்கி அதன் மூலம் அதிக மின்சாரம் செலவாகும். 18 டிகிரியை விட 24 டிகிரி வெப்ப நிலையை எட்டுவதற்கு குறைந்த நேரத்திற்கு கம்ப்ரஸர் இயங்கினால் போதும்.
11. இந்தியாவுக்கு ஏன் இந்த நடவடிக்கை முக்கியமானது?
தற்போதைய சந்தைப் போக்கைக் கருத்தில் கொண்டு, 2030-ஆம் ஆண்டு வாக்கில் குளிரூட்டும் சாதனங்களுக்கான இந்தியாவின் மொத்த மின்னழுத்த அளவு 200 ஜிகாவாட் என எரிசக்தித் திறன் பிரிவு மதிப்பிட்டுள்ளது. தற்போது 6 சதவீத வீடுகளில் மட்டுமே ஒன்று அல்லது அதற்கு மேல் குளிரூட்டும் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது, மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த நடவடிக்கைகளை அனைத்து நுகர்வோரும் தவறாமல் பின்பற்றினால் இந்தியா 2,300 கோடி மின்சாரத்தை சேமிக்க முடியும். தற்போது, 8 கோடி டன்னாக உள்ள குளிரூட்டும் சாதனங்களின் நிறுவுதிறன் 2030-ஆம் ஆண்டில் சுமார் 25 கோடி டன்னாக அதிகரிக்கும்.
12. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியாவா?
இல்லை. ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கெனவே குளிரூட்டும் சாதனங்களுக்கான விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஜப்பானில் குளிரூட்டும் சாதனங்களில் 28 டிகிரி செல்சியஸ் இயல்பு நிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா போன்ற மாகாணங்களில் 26 டிகிரிக்கும் அதிகமாக அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1537488)