பிரதமர் அலுவலகம்

புதுதில்லி விஞ்ஞான் பவனில் 2018 குடிமைப் பணிகள் தினத்தையொட்டி பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 21 APR 2018 11:00PM by PIB Chennai

மேடையில் அமர்ந்திருக்கும் மதிப்புமிக்க பிரமுகர்கள், விஞ்ஞான் பவனில் குழுமியுள்ள அதிகாரிகள், நாட்டில் தொலைதூர மூலைகளிலும் தேசத்திற்காக தங்கள் பணியை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருக்கும் இதர குடிமைப் பணி அதிகாரிகள், பெரியோர்கள், தாய்மார்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குடிமைப் பணிகள் தினத்தையொட்டி எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை மீண்டும் ஒரு முறை நான் பெற்றுள்ளேன். இன்றைய தினம் பல வழிகளிலும் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.  பாராட்டுத் தெரிவிக்கவும், பணிகளை மதிப்பிடவும், மிகவும் முக்கியமாக சுயமதிப்பீடு செய்து கொள்ளவும் இந்த நிகழ்ச்சி உதவியுள்ளது. இன்றைய தினத்தில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம், எத்தகைய வெற்றியைப் பெற்றிருக்கிறோம், சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை நாம் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கவும் நமது தீர்மானங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா என்பதை கணிக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

நண்பர்களே, தனி மனிதராக இருந்தாலும், ஒரு அமைப்பாக இருந்தாலும், எப்படிப்பட்ட  திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் சிறப்பான பலன்களைப் பெறுவதற்கு நிலையான  தூண்டுதல் தேவைப்படுகிறது. விருதுகளை வழங்குவது அவர்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகும். அந்த வகையில் பிரதமரின் விருதுகள் ஒரு வகையான ஊக்குவிப்பே.

இன்று பல்வேறு அதிகாரிகள் தங்களது துறைகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக பிரதமரின் விருதுகள் வழங்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று விருதுகளை  பெற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். வருங்காலத்தில் மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே, இந்த விருதுகள் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம் பணியாற்றுவதில் மேலும் ஊக்கத்தை ஏற்படுத்துவதாகும். அதே சமயம் பணிகளை எப்படி விரிவாக்குவது, எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பதையும் நோக்கங்களாக இது கொண்டுள்ளது. ஒரு வகையில் அரசின் முன்னுரிமைகளை இது பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு முன்னுரிமைத் திட்டங்கள் மற்றும் புதுமையான பணிகளுக்காக விருதுகள் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமைத் திட்டங்களின் கீழ், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், தீன்தயாள் உபாத்தியாயா திறன் மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் ஆகியவற்றை விளம்பரப்படுத்தியதற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

விருதுகள் வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் புதிய இந்தியா குறித்த தமது கனவுகளை நனவாக்க மிகவும் அவசியமாகும். இவை நமது பொருளாதாரத்திற்கும், சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலையை முன்னேற்றவும் மிகவும் முக்கியமானவையாகும். உலக வங்கியாக இருந்தாலும் அல்லது சர்வதேச தர நிர்ணய முகமைகளாக இருந்தாலும் வர்த்தகம் புரிவதற்கு எளிதான வழிகளைப் பற்றியே அவை விவாதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டில் எளிதாக வர்த்தகம் புரியும் நிலையை மட்டும் பார்க்க முடியாது. நம்மைப் பொறுத்தவரை சாதாரண மனிதரின் வாழ்க்கையை சுலபமாக வாழ்வதற்கு தேவையானதை எப்படி செய்வது என்பதுதான் முக்கியமாகும். ஏராளமான பொது சேவகர்கள், நீண்ட அனுபவம், தலைமுறை தலைமுறையாக சிறந்த பணி ஆகியவை இருந்த போதிலும் சாதாரண மனிதர்கள் ஒவ்வொரு தருணத்திலும் அரசுடன் இன்னும் போராட வேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர் என்பதை நாம் மறந்து விடலாகாது. நிர்வாகத்திற்கு உட்பட்டு உரிமைகளைப் பெற சாதாரண மனிதர்கள் இன்னும் போராட வேண்டியிருக்கிறது. சுலபமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கு இது மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கிறது.

தற்போதைய அளவுக்கு நாம் பணியாற்றினால் சாதாரண மனிதர்கள் தங்களது உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டியிருக்காது. இத்தகைய மாற்றம் நாட்டில் 125 கோடி மக்களின் வாழ்க்கையில் வரும் என்று நாம் நம்புகிறேன். இதற்கு அதிக காலம் ஆகாது. மக்களே நாட்டை மாற்றி விடுவார்கள். அப்போது நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு வீட்டில் மகன் வெளியே சென்று விட்டு வளர்ந்த இளைஞனாக திரும்பினாலும் அவனது தாயாருக்கு குழந்தையாகவே தென்படுவார்.

இந்தாண்டு விருதுகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இங்கே அமர்ந்திருப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் என்னால் அப்படி மகிழ்ச்சி அடைய முடியாது. ஏனெனில் நாட்டில் சில மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கவே விரும்பாமல் இருக்கக் கூடும். ஒரு முயற்சி செய்ய வேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். இங்கு வந்திருப்பவர்களை வரவேற்கும் அதே நேரத்தில் வராதவர்களைப் பற்றிக் கவலைப்படுகிறேன்.

அவர்களது வாழ்க்கையில் ஒருவித தேக்க நிலை இருப்பதையே காட்டுகிறது. அவர்களது உள் ஆற்றல் தணிந்து விட்டதே இதற்கு காரணம். இது ஒரு வாழ்க்கையாக இருக்க முடியாது. வாழ்க்கையின் கடைசித் தருணம் வரை எதையாவது புதிதாக சாதிக்க வேண்டுமென்ற ஊக்கமும், திட உணர்வும் இல்லாவிட்டால், எந்த முயற்சியும் மேற்கொள்ளாவிட்டால் வாழ்க்கையில் எந்த பெரிய இடத்தையும் எட்ட முடியாது.

மாவட்ட அளவில் மிகவும் வயதானவர்கள் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அத்தகைய மக்களுக்கு முழுமையான ஆற்றல் இருக்கிறது. பல விஷயங்களை செய்யும் துணிச்சலுடன் அவர்கள் வெளியே வர வேண்டும். எப்போதும் இருப்பது போலவே இருந்து விடுவோம் என்று வாழ்க்கையை கழிப்பவர்கள் எனது சகாவாக இருக்க முடியாது. அத்தகைய மனிதர்களின் இதயத்தில் ஒரு தீப்பொறி ஏற்பட வேண்டும். நம்மில் யாராவது சிலர் அந்த எழுச்சியை உருவாக்க முயன்றால் அவர்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். கடைசி 25-வது வரிசையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமானால் அடுத்த தடவை அவர்கள் முதல் 25 இடத்திற்குள் வரக் கூடும்.

திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு மனிதத் தன்மை அவசியமாகும். இந்த மனிதத் தன்மையால் குழுவில் எழுச்சி ஏற்படும். மனிதத் தன்மையே கனவுகள் நனவாவதற்கும், மன உறுதியை வலிமையாக்குவதற்கும் காரணமாக அமையும். அதனால்தான் நல்ல பணி செய்தவர்களுக்கு விருது வழங்கப்படுகின்றன. அதே சமயம் கடினமாக உழைக்க முன்வராதவர்களை இங்கு அழைத்து வந்தால் ஆக்கப்பூர்வமான சூழல் ஏற்படும். இதற்கு அவர்களுக்கு அன்பையும். ஊக்கத்தையும் அளிக்க வேண்டியது அவசியமாகும். நான் இதை புரிந்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் யாரும் சோம்பேறியாகவோ, உதவாக்கரையாகவோ இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலை வெளிக்கொணர்வதுதான் தற்போதைய தேவையாகும்.

சில சமயம் வீட்டில் மின்சாரம் பல்பு எரியாமல் நின்றுவிடும். உடனடியாக  நாம் நினைப்பது பல்பின் கம்பி இழை உருகி உடைந்து போய்விட்டது என்றுதான். இந்த பல்பு பயனற்றது என நினைக்கிறோம். எனினும், சில புத்திசாலிகள் “சற்று பொறுங்கள், மின் இணைப்பை சரிபார்ப்போம்” என்று கூறுவார்கள். அவர் மின் இணைப்பை சரிபார்க்கிறார் பல்பு எரிய ஆரம்பிக்கிறது. இதே போல அதோ அந்த மூலையில் உட்கார்ந்திருக்கிறாரே அவர் நம்மிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளாரா? மீண்டும் ஒரு முறை சரிபார்ப்போம், இன்னும் சிறப்பாக  இணைப்பை ஏற்படுத்துவோம். இப்போது மீண்டும் அவர் அந்த மின்சார பல்பு போன்று பிரகாசிக்க தொடங்குவார். முழு அளவு வெளிச்சத்தை தரத் தொடங்குவார். இந்த வெளிச்சம் பிறரது வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டது.

இன்று இங்கே இரண்டு புத்தகங்களை அர்ப்பணித்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவற்றில் ஒன்று பிரதமரின் விருதுகளை பெற்றவர்கள் குறித்த  அனைத்து முக்கிய விவரங்களையும் கொண்டுள்ளது. மற்றொன்று முன்னேற விரும்பும் மாவட்டங்கள் பற்றியது. இங்கிருந்து மாவட்டங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான நமது அதிகாரிகள்  செல்ல இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு வகையில் சொல்லப்போனால் அடிப்படைக்கு மீண்டும் செல்லுவோம் என்ற இயக்கம் தொடங்கி உள்ளது.

இந்த அதிகாரிகள் தங்களை மீண்டும் அதே பணிக்கு திரும்பச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளும் பிரதமர் ஒருவர் இருக்கிறார் என்பதை அவர்கள் சிந்தித்தே பார்த்திருக்க மாட்டார்கள். எனினும் சுமார் ஆயிரம் அதிகாரிகள் தங்கள் மாநிலத்தில் சராசரி மாவட்டங்களை விட பின்தங்கியுள்ள தொலைதூர மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதற்கென ஆயிரம் பேர் முன் வந்துள்ளனர். இவர்கள் பிறப்பிக்கப்பட்ட எந்த உத்தரவின் அடிப்படையிலும் முன்வரவில்லை. தாங்களாகவே முன்வந்து இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முன் உதாரணம்தான் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் முன்னிலைப் பங்கு வகிக்க உள்ளன என்பதை எனக்கு உணர்த்துகின்றன. நாம் மூன்று ஆண்டுகள் உழைத்தால் காலக்கெடுவுடன் கூடிய இலக்குகளை நிர்ணயித்து மூன்றாண்டுகள் உழைத்தால், இந்த 150 மாவட்டங்களும் மாநிலங்களின் உந்து விசையாக, ஏன் நாட்டின் உந்து விசையாக மாற இயலும். இத்தகைய வலு அவற்றிடம் உள்ளது.

எந்த ஒரு அம்சத்தையும் மேம்படுத்த தாம் விரும்பினால் நமக்கு உள்ள அனுபவத்தின் அடிப்படையில் நமக்குள்ள மாவட்ட அமைப்பின் அடிப்படையின் குறிப்பிட்ட மாவட்டத்தை மேம்படுத்தும் வகையில் அதனை முடுக்கி விட்டால் நமது சாதனைகள் மேம்படுகின்றன. நாம் எப்போது விரும்பினாலும் இந்த முன்னேறிய மாவட்டத்தைக் காட்சிப்படுத்த இயலும். சகோதரனே, நாம் 100 என்ற இலக்கைக் கொண்டிருந்தோம். அதில் 80-ஐ அடைந்து விட்டோம். ஆனால் இந்த 80-ம் ஒரு மூலையில் மட்டுமே நடைபெற்றுள்ளது.

சைக்கிள் காலம் மாறி விட்டது. ஆனால் முந்தைய காலத்தில் இந்த சைக்கிள் டயர்களில் காற்று நிரப்பும்போது எவ்வளவு காற்று நிரப்பியுள்ளோம் என்பதை அறிய மீட்டர் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும். அதனைப் பார்த்து இந்த சைக்கிள் இப்போது ஓடக்கூடியது என்று நாம் அறிந்து கொண்டோம். சில சமயம் சைக்கிளின் டியூபின் ஒரு பகுதி பலூன் போன்று பெரிதாகி விடும். அப்போதும்கூட அந்த மீட்டர் கருவி காற்று சரியான அளவில் நிரப்பப்பட்டுள்ளது என்றே காட்டும். மீட்டர் சரியாகத்தான் வேலை செய்தது. ஆனால், சைக்கிளும் ஓடுமா அல்லது ஓடாதா? ஏனெனில் ஒரு பக்கம் பலூன் மாதிரி உள்ளது. மற்றொரு பக்கம் காலியாக உள்ளது. மேலும் இந்த பலூன் முன்னோக்கிய நகர்வுக்கு இடையூறாக இருக்கும். சில சமயம் சில மாநிலங்களின் ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்கள் மிக சிறப்பாக செயல்படும். அத்தகைய நிலையில் இந்த குறிப்பிட்ட மாநிலம் புள்ளி விவரப்படி மிக சிறப்பாக செயல்படுவதாக தோன்றும். ஆனால், இந்த நிலைமை மேம்பாட்டின் மொத்த பயணத்துக்கு இடையூறாக இருக்கக்கூடும்.

நமது முயற்சிகள் அனைத்தும் இந்த 150 மாவட்டங்களில் மேம்பாட்டு பயணத்தை ஒரே மாதிரியாக கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டவை. நல்ல முடிவுகள் விரைவில் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஒரு குடும்பத்தில் 3 அல்லது 4 குழந்தைகள் உள்ள நிலையில், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் சிறப்பாக செயல்படும்போது, பெற்றோர் அந்த குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். வீட்டிற்கு விருந்தினர் வரும்போது பெற்றோர் இந்த குழந்தைகளை காட்டி பத்தாம் வகுப்பில் இவர்கள் இத்தனை மதிப்பெண்கள் பெற்றனர் என்று பெருமையாக கூறுவார்கள். அவர்களுக்கு 12-ஆம் வகுப்பில் இடம் கிடைத்துள்ளது என்றும் அவன் நன்றாக படித்து ஒரு மருத்துவராக கட்டாயம் வருவான் என்றும் கூறுவார்கள். மீதியுள்ள 2 குழந்தைகளின் நிலை என்ன! அவர்களைப் பற்றிப் பேச வேண்டாம். ஆனால், அந்த 2 குழந்தைகளுக்கு என்னதான் நடக்கிறது? அவர்கள் விரக்தி அடைந்திருப்பார்கள், நமது செயல்களால். பின்னர் எழுந்து நிற்கும் தைரியம் இன்றி அவர்களது வாழக்கை தோல்வியிலேயே முடிவடையும்.

நமது நாட்டின் மாவட்டங்களும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களை பலமுறை காட்சிப்படுத்தினோம். பிரதமரின் விருதுகளை பெற அவற்றைக் கொண்டு வந்தோம். எனினும் இன்னல்களை சந்திக்கும் மாவட்டங்களுக்கு அதற்கான சில காரணங்கள் இருக்கும். அந்த மாவட்டங்களில் சில உள்ளுர் பிரச்சினைகள் இருக்கும். அவைகள் “எங்களை விட்டு விடுங்கள் நண்பர்களே, நாங்கள் எந்த இடத்திலும் சேர்த்தி இல்லாதவர்கள். எப்படியும் இரண்டு மூன்று ஆண்டுகளை நாங்கள் கடந்து விடுவோம்” என்று எண்ணுகின்றன. அதன் பிறகு இந்த மாவட்டங்களுக்கு பொறுப்பானவர்கள் அங்கிருந்து அரசியல்வாதி உதவியுடன் இடமாற்றம் பெறுவது குறித்து சிந்திக்க தொடங்குகின்றனர். அரசியல்வாதிகளின் மேல்சட்டை நீளம் அதிகமானால் அவர்கள் அதிக ஆற்றல் கொண்டவர்கள் என்ற நிலைமை உள்ளது.

நாம் புள்ளி விவரங்களைக் கொடுக்காமல் இருப்பதுவே மிகவும் அவசியம் என்று நான் நினைப்பதற்கு இதுவே காரணம். நமது வரைபட அமைப்பில் பெரிய இலக்கங்களுக்கு பதிலாக வெற்றிக்கு அடிப்படையான சிந்தனை மிகவும் அவசியம். முக்கியமான சிந்தனை இருக்குமானால் அந்த சிந்தனையில் வயப்பட்டு மக்கள் அதற்கென சரியான திட்டமிடுதல் பணியில் ஈடுபடுகின்றனர். அதனை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்கினை வகிப்பார்கள். விரிவான முறையில் பணி செய்யும் இயல்பு கொண்டவர்களே வெற்றியடைவார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

காய்கறி சமைக்கும்போது உப்பை தங்கம் போல அளந்து போடும் தாய்மார்களை நீங்கள் பார்த்ததுண்டா? இல்லை. அது அப்படி நடப்பதில்லை. அந்த தாய் கண்ணை மூடிக்கொண்டு உப்பை போட்டால்கூட அது சரியான அளவில்தான் இருக்கும். ஏனெனில் அவர் விவரங்களை ஒரு காலகட்டத்தில் விட்டுவிட்டு நடைமுறை செயலை இப்போது பின்பற்றுகிறார். இப்போது அவர் இத்தகைய வேலைகளை லாவகமாக செய்ய இயலும். நமது முறையில் சில பழக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொண்டால் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர இயலும் என்று நான் நம்புகிறேன்.

முன்னேற விரும்பும் மாவட்டங்களை ஒவ்வொரு அம்சத்திலும் மேல் உயர்த்தி கொண்டு வர வேண்டும். ஏதாவது ஒன்று அல்லது இரண்டு அம்சங்களை மேம்படுத்தி அவற்றை காட்சிப்பொருளாக மாற்றும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். இதனை அரசாங்க அமைப்பு மூலம் செய்ய முடியுமானால் அதனை நீண்டகாலத்துக்கு முன்னேயே செய்திருப்போம். இந்த மாவட்டங்களில் நல்ல அதிகாரிகளே பணியாற்றவில்லை என்றும் சொல்வதற்கில்லை. இன்றைய நிலையிலும்கூட தனது வாழக்கையை இத்தகைய முன்னேற விரும்பும் மாவட்டம் ஒன்றில் தொடங்கி உள்ள ஒரு அதிகாரி மாநிலத்தின் அரசு தலைமைச் செயலாளராகவும் வர வாய்ப்பு உள்ளது. அதாவது, அந்த அதிகாரிக்கு திறமைகள் உள்ளன, அதாவது அவர் தலைசிறந்த செயல்பாடு கொண்ட அதிகாரி, அதாவது தில்லியில், மிகச்சிறந்த துறையின் செயலாளராக அவர் இருக்க முடியும். அனைத்து தரப்பினராலும் புகழ்ந்து பேசப்படும் அதிகாரி ஒரு பின்தங்கிய மாவட்டத்திலிருந்து வந்தவராக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. 25, 27, 30 முக்கிய ஆண்டுகள் சேவைக்குப்பிறகு இத்தகைய அதிகாரி அங்கு பணிக்கு வந்திருக்கலாம். எனவே, திறமைக்கு பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம் அல்ல. ஒவ்வொரு பிரச்சினையும் அங்கு இருக்கும்.

இந்தியா போன்ற நாட்டில் ஜனநாயக முறை என்பது,  5 ஆண்டுகளுக்கான ஒரு ஒப்பந்த முறை அல்ல, நமது ஜனநாயக முறையின் பொருள் என்பது நமக்கும், மக்களுக்குமான உறவாகும். இந்த எண்ணம் மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக உள்ளது. எனவேதான், இந்தியா போன்ற நாடுகளில் பங்களிப்பு ஜனநாயகம் என்பதன் வெற்றிக்கு அடிப்படையாக மக்களின் பங்களிப்பு உள்ளது. இயற்கைச் சீற்றங்களின்போது, நீங்களெல்லாம் மாவட்ட நிலை அதிகாரிகளாக பணியாற்றி இருக்கக்கூடும். இத்தகைய பணிகளை நீங்கள் எளிதாக செய்திருக்கமுடியும். இதைத் தான், வேலையின் மதிப்பு என்கிறோம். நடைமுறை அப்படியே உள்ளது. ஆனால், இது நடப்பதற்கு காரணம் இயற்கைச் சீற்றங்களின்போது, ஒட்டுமொத்த சமூகமும் நம்மோடு இணைந்து கொள்கிறது. ஒவ்வொருவரும் கைகொடுப்பதால், இந்த பிரச்னையிலிருந்து நம்மால் எளிதாக வெளியே வரமுடிகிறது. நாட்டை முன்னேற்றிக் கொண்டுசெல்வதற்கு மக்களின் பங்களிப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்று நான் சிந்திக்கிறேன். இதன் முக்கியத்துவத்தை, நாம் எவ்வாறு உணரமுடியும்?

  துரதிர்ஷ்டவசமாக இந்தப்பணி தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் பணியாகவும், அரசியல் தலைவர்களின் பணியாகவும் கருதப்படுகிறது. இது நமது சிந்தனையின் மிகப்பெரிய குறைபாடாகும். அவர்களுக்கு எது தேவையோ, அதனை செய்வார்கள். ஆனால் இந்த நிர்வாக முறையை ஒரு சாமானிய மனிதர், தமக்கு ஏதாவது செய்து கொள்வதாக எப்போதும் நினைப்பதில்லை. நான் ஏதாவது செய்தால், நண்பர்களே எல்லோரும் சொல்வது; ‘ம்ம்ம்  2019 வரவிருக்கிறது. மோடிஜி வந்திருக்கிறார்.’ இதுவே உடனடியாக அவர்களின் மனங்களில் உதயமாகிறது. இதுபோன்ற கருத்துக்களை அவர்களின் மனங்களில் ஏற்றுவதே  24 மணிநேரமும் வேலையாக இருக்கிறது.

  ஆனால் முன்பெல்லாம், இது இப்படி நடந்ததில்லை. அக்காலத்தில் நீங்கள் சென்றால் இப்படி உணர்வார்கள்: ‘தலைவர் வந்திருக்கிறார். அவர் மிகவும் கடுமையாக உழைக்கிறார். அது மிகவும் மதிப்புமிக்கது.’ சாமானிய மனிதர்கள் உடனடியாக உங்களை மக்களோடு இணைத்துவிடுகிறார்கள். இதன் காரணமாக மக்கள் தற்போது வித்தியாசமான நிர்வாக முறையில் இருக்கிறார்கள். அவர்கள் தலைமைத்துவத்திற்கு வரவேண்டும். இதுதான் புதிய போக்காகும். அதனை நாம், பிரதிபலிக்கவேண்டும்.

  சுதந்திரத்திற்கு முன்னால் பிரிட்டிஷ் ராஜ்யத்தை பாதுகாப்பது நிர்வாகத்தின் வேலையாக இருந்தது.  சுதந்திரத்திற்குப்பின், நிர்வாக முறையுடன் மக்களுக்கான தொடர்பு என்பது சாமானிய மக்களை வளமாக்குவதாகவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாகவும் இருக்கிறது. இதுதான் கனவு என்றால், இந்தக் கனவுகளை நனவாக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, நமது பயணம் தொடங்கியிருப்பதாக நான் நம்புகிறேன். எந்த நோக்கங்களோடு நாம் செயல்பட வந்திருக்கிறோமோ, அதுவே புதிய இந்தியாவின் கனவாகவும் இருக்கிறது. மகாத்மா காந்தி சம்பாரன் இயக்கத்தை தொடங்கியபோது, சுதந்திரத்திற்கான குழலோசையை எழுப்பினார் என்பது உண்மைதான். அதனால், சுதந்திரத்தை அடுத்த நாள் காலையிலேயே அடைந்துவிடுவோம் என்பது பொருளல்ல. அடுத்த நாள் காலையிலேயே சுதந்திரத்தை அடைய முடியவில்லை என்பதால், காந்திஜி அமைதியாக இருந்துவிடவில்லை. தற்போது சுதந்திரத்தை அடைய வேண்டியதில்லை என்றாலும், நம்பிக்கை, ஆதங்கம், விருப்பங்கள், கனவுகள், நன்னம்பிக்கை போன்றவை சாமானிய மக்களின் இதயங்களில் இருக்கின்றன. முன்னேறிச் செல்வதற்கு இவையே சாமானிய மக்களை நம்மோடு இணைக்கிறது.

  2022ஆம் ஆண்டு 75வது சுதந்திர தினம் நிறைவடையும்போது, இதைவிட பெரிய ஈர்ப்பு சக்தியாக என்ன இருக்க முடியும்? இந்த அனுபவம் நமது குடும்ப வாழ்க்கையிலேயே இருக்கிறது. நமது குழந்தையின் பிறந்தநாள் மே மாதத்தில் வருகிறது என்றால், பிறந்த நாள் விழாவை நடத்துவதற்கான திட்டம் பிப்ரவரி – மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிடுகிறது. புத்திசாலி பெற்றோர் இப்படி கூறுகிறார்கள்:  ‘ இதோ பார், இந்த முறை உனது பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படவிருக்கிறது. இதனை நீ செய்யவேண்டும். இதனை இந்த மாதத்தில் செய்யவேண்டும்.’ அவனுக்குகூட சில விருப்பங்கள் இருக்கின்றன. ‘இது எனது பிறந்த நாள், நான் இதையெல்லாம் செய்யவேண்டும்.’ ஒரு குடும்பத்தில்  திருமணம் என்று வந்தால், பல ஆண்டுகளாக வெள்ளை அடிக்காத வீட்டுக்கு புதிதாக வண்ணம் தீட்டாத வீட்டிற்கு திருமண காலத்தையொட்டி, வெள்ளை அடிப்பதும், வண்ணம் தீட்டுவதும் அவசியம் என மக்கள் நினைக்கிறார்கள். திருமணம் என்பதால், இதையெல்லாம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.

  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், இதுபோன்ற மைல் கற்கள் இருக்கின்றன. அத்தகைய மைல் கற்கள் காரணமாகவே,  வேகம் தீர்மானிக்கப்படுகிறது. நம்மை பொருத்தவரை, 2022-ஐவிட  மிகப்பெரிய மைல்கல் இருக்க முடியாது. ஏனெனில், சுதந்திரத்திற்காக சுதந்திர போராளிகள் தங்களின் வாழ்வைத் தியாகம் செய்திருக்கிறார்கள். இதைவிட, மிகப்பெரிய ஈர்ப்பு வேறு எதுவும் இருக்க இயலாது.

  நாம் நேசிக்கின்றவர்களை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம். அவர்கள் கொண்டிருந்த கனவுகளை எண்ணிப் பார்ப்போம். முன்னேற்ற பாதையில்  நடைபோடுவோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டுக்காக நிறைய பணிகள் செய்வோம். நாம் ஏற்கனவே நிறைய செய்திருக்கிறோம். சுதந்திரத்திற்காக போராடியவர்கள் நாடு சுதந்திரம் அடையும்போது, நமக்கு ஏதாவது கிடைக்கும் என்று நினைத்ததில்லை. இல்லவே இல்லை. சுதந்திரம்பெறும் சமயத்தில் அவர்கள் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம் என்பதையும் அறிந்தே இருந்தனர். இருப்பினும், தங்களின் கனவுகளுக்காக அவர்கள், தியாகங்களை தொடர்ந்தனர்.  அவர்களின் தியாகத்தால் சுதந்திரம்பெற்று நாம் அதிர்ஷ்டம் செய்தவர்களாகிவிட்டோம். அடுத்த தலைமுறைக்கான நமது பொறுப்பு கொஞ்சம் இருக்கிறது.  இதன் காரணமாகவே நாம் பெற்றுள்ள அமைப்பு முறையைக்கொண்டு முன்னேறி செல்ல வேண்டியுள்ளது. 

  மேலும், நமக்கென்று ஒரு கட்டமைப்பு உள்ளது. முடிவுகள் எடுப்பதற்கான நடைமுறைகள் இருக்கின்றன என்பதை நாம் ஏற்கவேண்டும். ஒரு அனுபவத்தை நான் பெற்றிருக்கிறேன். எப்படி என்றால், எனது மாநிலத்தில் நீண்ட காலம் பணியாற்றும் வாய்ப்பை அதிர்ஷ்டவசமாக நான் பெற்றிருந்தேன். அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளில், உங்களில் ஒருவனாக நான் மேலெழுந்து வந்திருக்கிறேன். மக்களின் அனுபவத்திலிருந்து கற்பதை நான் தொடர்கிறேன். உங்களோடு நேரத்தை நான் செலவிட்டிருக்கிறேன். இருப்பினும், . புதிய கண்டுபிடிப்புகள் இல்லாதபோதும், முடிவெடுக்கும் நடைமுறையை விரைவுப்படுத்த இயலாதபோதும்,   பழைய கட்டமைப்பிலேயே இத்தகைய அனுபவத்தை நான் பெற்றிருக்கிறேன். இன்று நமது குறைபாடுகளை சரிசெய்வதற்கு அதிர்ஷ்டவசமாக தொழில்நுட்பம் இருக்கிறது. இது நமக்கு கூடுதல் பலமாகும்.  நடைமுறைகளை எளிதாக்க, தொழில்நுட்பத்தை நாம் முற்றிலுமாக பயன்படுத்தவேண்டும். இந்த விஷயங்களை நாம் ஏற்கிறோமா?.

    மக்களிடமிருந்து உருவாகியுள்ள நான், இந்த விஷயங்கள் குறித்து மேலும் சிலவற்றை வலியுறுத்தி இருக்கிறேன்: “ நமது நிர்வாகத்தில் விண்வெளித் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த போகிறோம்” என்பதற்கான பணியை செயலாளர் நிலையிலான ஒரு அதிகாரியிடம் நான் அளித்திருந்தேன்.  வார இறுதி நாட்களின்போது, இந்த பணி பற்றி நான் வலியுறுத்தினேன். இதனால் அதிகாரிகள் இதன் மீது கவனம் செலுத்தினார்கள். தொழில்நுட்பத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது இதற்குப் பொருளில்லை. ஆனால் தற்போதுள்ள நடைமுறையிலேயே செல்லவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவற்றை ஏன், மாற்றவேண்டும் எ‘ன்பது அவர்களின் உணர்வாக இருக்கிறது.  அவர்களுக்கு யார் செவி சாய்ப்பார்கள். மாற்றங்கள் கொண்டு வருவது பற்றிய கருத்தில் அவர்கள் தனிமைப்படுவதாக  உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

  தற்போது விண்வெளி தொழில்நுட்பம் என்பது நிர்வாகத்தில் பயனுடையது என்பதை அவர்கள் படிப்படியாக உணர்ந்து வருகிறார்கள். அவர்கள் மனதில் என்ன இருந்தபோதும், அவர்களுடன் இருக்கும் ஒன்று, இரண்டு இளைஞர்களிடம், தங்களின் மனதில் எண்ணியவற்றை அந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறார்கள். விண்வெளி தொழில்நுட்பம் என்பது விரிவான திட்டமிடலில் பெரிய பங்களிப்பை செய்கிறது.

  20-25 ஆண்டுகளுக்கு முன்னாள் இங்கே அதிகாரிகள் இருந்த காலத்தில், இந்த வசதிகள் எல்லாம் இருக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக இப்போது இந்த வசதிகள் நமக்கு கிடைத்துள்ளன. நமக்கு கிடைத்துள்ள அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும், திறன் கட்டமைப்புக்காக, திறன் விரிவாக்கத்திற்காக, நமது இலக்கை எட்டுவதற்காக நாம் பயன்படுத்துகிறோமாநாம் அதனை செய்திருக்கிறோமா? அப்போது நாம் இவற்றை செய்திருந்தால், நாம் விரும்பிய விளைவுகளை அடைந்திருப்போம் என்பது எனது நம்பிக்கை, அதைத் தான் அந்தக் காலகட்டத்திற்குத் தேவைப்பட்டது. 21ஆம் நூற்றாண்டு நம்மை நோக்கி வந்து கொண்டிப்பதாக நமக்குச் சொல்லப்பட்டது. நீங்கள் அந்த காலகட்டத்தில் இளநிலை அதிகாரிகளாக இருந்திருப்பீர்கள்; மாநிலங்களில் பணியாற்றி இருப்பீர்கள்.

  மிகவும் சுவையான கருத்துப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்த்து. அந்த காலகட்டத்தில் அது மிகவும் புகழ் பெற்றிருந்தது. ரயில்வே நடைமேடை ஒன்றில், ஒருவர் நின்றுக் கொண்டிருந்தால். அப்போது, ஒரு ரயில் வண்டி வந்துக் கொண்டிருந்ததுசிலர் அந்த நபரிடம் சொன்னார்கள்: ‘ தம்பி, நீங்கள் ஓடவேண்டாம், அது இங்கே வரவிருக்கிறது.’  இதன் பொருள் என்னவென்றால், 21ஆம் நூற்றாண்டு தொடங்கவிருப்பதால், நீங்கள்  அதை நோக்கி ஓடவேண்டாம் என்பதாகும். 21ஆம் நூற்றாண்டில் 20 ஆண்டுகள் முடிவடையவிருக்கின்றன. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப நமது செயல்பாட்டு முறையை, முடிவெடுக்கும் நடைமுறையை மாற்றுவதற்கு ஏதாவது, முயற்சி செய்திருக்கிறோமா?

  தற்போது, உங்கள் முன்னால், செயற்கை நுண்ணறிவுப் பற்றி மிகவும் விரிவாக விவாதிக்கப்படுகிறது. அந்த நாளில், செயற்கை நுண்ணறிவுப் பற்றி நீங்கள் மக்களிடம் விரிவாக பேசியிருந்தால், அது ஓட்டுநர் இல்லாத கார்கள் போல கருதப்பட்டிருக்கும்உலகம் பெருமளவு மாறியிருக்கிறது. அந்த செயல்களை நாம் செய்வதற்கு சாத்தியமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், நாம் பயன்படுத்தக் கூடிய ஒரு கருவியாக அது இருந்திருக்கும். அதற்காக, நாம் நிபுணர்களை பணியில் அமர்த்தியிருக்கலாம்ஆனால், இது பற்றி நாம் திறந்த அணுகுமுறையுடன் இல்லாமல் போனால், அவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள்.

  தற்போது உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்களை சந்திப்பதற்கும், வளர்ச்சிக் கனவுகளை நனவாக்குவதற்கும்  மாறிவரும் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த முடியாமல் போனால், ஒருவேளை நாம் முற்றிலும் பின்தங்கிப் போய்விடுவோம்

   தகவல் தொழில்நுட்ப புரட்சியில் நாம் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறோம் என்ற கணிப்பு உலகத்திற்கு இந்தியாவைப் பற்றி உள்ளது. ஆனால் நாம் மிகப்பெரிய சாதனையை செய்திவிட்டோம் என்று மகிழ்ச்ச் அடைந்துவிட்டால், அது துரதிர்ஷ்டமாகிவிடும். நாம் மிகவும் அடிப்படை நிலையில்தான் வளர்ச்சியை பெற்றிருக்கிறோம். ஆனால் தகவல் தொழில்நுட்பங்களிலிருந்து தங்களுக்கான புதியவற்றை உலகம் ஒருங்கிணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நம்மிடம் உள்ள நல்லவற்றுக்காக புகழ்ந்து கொண்டு வெறுமனே உட்கார்ந்திருப்பதை நாம் தொடர்வோமானால், அது நமக்கு எந்த பயனையும் தராது. தகவல் தொழில்நுட்பம் சாமானிய மனிதனின் வாழ்க்கையிலும், நிர்வாக முறையிலும், மிக முக்கிய பங்களிப்பை செய்வதாக நான் நம்புகிறேன். இவற்றையெல்லாம், நாம் பயன்படுத்தினால், நமது பணிகள் எளிதாவது மட்டுமின்றி, நீண்டகால ஆக்கப்பூர்வமான தாக்கத்தையும் அது உருவாக்கும்.

  குறைந்த நிர்வாகிகள் கூடுதலான நிர்வாகம் என்று நான் கூறியது, எந்தவொரு அரசின் வெற்றிக்கும் அடிப்படையானதாகும். சில நேரங்களில் விருது வழங்கும் நடைமுறைகளை துறைகள் மேற்கொள்ளும்போது, குறைந்த அதிகாரிகள் கூடுதலான நிர்வாகம் என்பதன் அமலாக்கம் பற்றி பரிசிலித்திருக்கவேண்டும்.

  ஒருவேளை இதனை நான் வேறு இடங்களிலும் சொல்லியிருக்கலாம். எந்த நிகழ்வில் இதனை நான் கூறினேன் என்பது நினைவில் இல்லை. ஒருவேளை அது ஒரு சிறியக் கூட்டமாகவும் இருக்கலாம். இருப்பினும், இங்கே நான் புதியவன் என்பதால் அது பற்றி பேசுகிறேன்.

  புனிதமான நான்கு இடங்களுக்கு நீங்கள்  புனிதப் பயணம் மேற்கொண்டால், உங்களின்  பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பது இந்து மத நம்பிக்கை. இது எங்கே கூறப்பட்டிருக்கிறது என்பது துல்லியமாக எனக்குத் தெரியாது. இருப்பினும், 30-32  மேசைகளைக் கடந்த பிறகும், ஒரு கோப்பின் செயல் நிறைவடையாமல் போனால், மாற்று வழியை தேடவேண்டும் என்று நாம் நினைப்பதில்லையா, குறுக்கு வழி என்ற சொல்லை இங்கு நான் பயன்படுத்தவில்லை. ஒரு வேளை, உங்களுக்கு ரயில்வே பயண வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் நான் எனது வாழ்க்கை முழுவதும், ரயில் பாதையிலேயே செலவிட்டிருக்கிறேன். எனவே, அந்த சொல்லை அங்கே எழுதி வைக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். ‘ குறுக்கு வழி உங்களைத் துண்டாடிவிடலாம் ‘. ரயில் பாதை ஒரு இடத்தில் கடந்து செல்லும் நிலையில் இருந்தால், அங்கே இப்படி எழுதி வைத்திருப்பார்கள். எனவே தான், குறுக்கு வழிகளை பயன்படுத்தாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஒரு கோப்பு முழுமையாக பரிசீலிக்கப்பட்டிருந்தால்தான், மற்றொரு மேசைக்கு வரவேண்டும் என்று பல விஷயங்களில் நாம் நினைக்கிறோம் அல்லவா, இதேபோன்ற நிலையில் எவ்வளவு காலத்திற்கு  நாம் பணியாற்ற போகிறோம்.

  ஒவ்வொரு கோப்பிலும், ஒவ்வொருவரும், முத்திரையிட்டே ஆக வேண்டுமா? இது மிகவும் அவசியமா? இதுபோன்ற நடைமுறைகளை நாம் எளிமைப்படுத்த முடியாதா? இது பற்றி ஆய்வு செய்யும் நபர், முறையாக இதனை அணுகி இருக்கிறாரா? இதன் பிறகும், அவை மிக துல்லியமானதாக இருக்குமா? இந்த நடைமுறைகள் எளிதாக்கப்பட்டால், பின்னர், இவை துல்லியமானதாக இருக்காது என்பதால், அதனை விரும்பவதில்லை. இருப்பினும், இந்த பழக்கத்திலிருந்து நம்மால், விடுபட முடியவில்லை. நமது பழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ளவில்லை.

  வாட்ஸ்ஆப் காலத்தில் நாம் இருந்தபோதும், எஸ்எம்எஸ் காலமாக இருந்தபோதும், வீட்டு ஒரு எஸ்எம்எஸ் அனுப்புகிறோம். ‘இன்று மாலை நமது வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். இரண்டு பேர் இரவு விருந்து உண்பார்கள்.’ இந்த குறுஞ்செய்தியை பிற்பகல் 3 மணிக்கு நாம் அனுப்பி இருப்போம். அதற்குப் பிறகும் 5 மணிக்கு நாம் தொலைபேசியில் எனது எஸ்எம்எஸ்-ஐ நீங்கள் படித்தீர்களாஎன்று கேட்போம். இதற்கு என்ன பொருள் என்றால், தொழில்நுட்ப நடைமுறை மீது நம்பிக்கை வைக்க நாம் தயாராக இல்லை. அதனால் தான், கூடுதல் சக்தியை நாம் செலவிடுகிறோம்.

இது குடிமைப் பணி தினம். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், நாம் அதே பாதையில் செல்கிறோமா அல்லது அந்த வழியிலிருந்து விலகிச் செல்கிறோமா என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டிய தினம். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், பணிகளை விரைவாக மேற்கொள்வதில், நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோமா? அவர்கள் 2030-ல் சாதிக்கக் கூடியவை பற்றி நாம் 2070-ல் சிந்திக்கிறோமா?

நமது காலத்தில், முன்னேற்றத்திற்கான விருப்ப மாவட்டங்கள் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், அத்தகைய நிலைமை உலகின் கண்களுக்கு புலப்படுகிறதா? என்பதை எண்ணிப் பாருங்கள். நமது நாடு வளங்கள் மிகுந்த நாடு, ஆற்றலும், திறமையும் மிகுந்த நாடு, புதுமையை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்துடன், மாறி வரும் சூழ்நிலைகளை துணிச்சலாக எதிர்கொள்ளும் திறனும் நமது நாட்டிற்கு உண்டு. இவற்றை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? கடிகார முள் எனது வாழ்க்கையை வழி நடத்துகிறதா? அல்லது சாமானிய மனிதனின் கனவுகள் என்னை வழி நடத்துகிறதா? கடிகார முள் என்னை வழிநடத்துவதாக இருந்தால், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சம்பளம் வரவாகி விடும், அந்தப் பணம் வங்கிக் கணக்கில் தானாகவே வரவாகி, அதற்கேற்ப மட்டும் நமது வாழ்க்கை அமைந்து விடும். ஆனால், சாமானிய மனிதனின் வாழ்க்கையோடு எனது வாழ்க்கை இணைந்து செல்லுமானால், அவர்களது கனவு நனவாவது மட்டுமின்றி, பல தலைமுறைகளுக்கும் மனநிறைவு அடைந்த திருப்தியை உணர்ந்ததோடு நான் பயணிக்கலாம். இது போன்ற நம்பிக்கை என்னிடம் இருந்தால், நாட்டிற்காக பணியாற்ற வேண்டியது அதிகம் இருக்கிறது என்பதை நான் உணர்வேன்.

உங்களில் சிலர் இரண்டு ஆண்டுகளும், வேறு சிலர் ஓராண்டு அல்லது 6 மாதமோ; சிலருக்கு 5 ஆண்டு அல்லது 10 ஆண்டுகளோ அதிகாரத்தில் இருக்கலாம்; எனவே தான், எனது இளம் சகாக்கள், தொழில்நுட்ப உதவியுடன் என்னை கூர்ந்து கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். முன்பு என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது; ஆனால் அது போன்ற சிந்தனைகள் என் மனதில் ஒருபோதும் குறுக்கிட்டதில்லை. நான் சாமானிய மனிதன் மட்டுமின்றி உங்களது நண்பன். நான் உங்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்ற விரும்புகிறேன்.

நான் முசோரிக்கு பயணம் செய்ய நேரிட்ட போது, நான் ஒரு இடத்தை பார்வையிட்டு, அங்கு சொற்பொழிவாற்றி திரும்புவதுதான் திட்டமாக இருந்தது. ஆனால், நான் அங்கு சென்று அங்கிருப்பவர்களுடன் சற்று நேரம் செலவிட வேண்டுமென நான் தெரிவித்தேன். குறைந்தபட்சம் நான் அவர்களை பார்க்கவாவது வேண்டும்; அவர்களுடைய ஆற்றல் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்; அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் 20 சதவீத மாவட்டங்களுக்கு பொறுப்பேற்க இருக்கும் அவர்களது கனவு என்ன? என்பதை அறிந்துக் கொள்ள வேண்டுமென்று கூறினேன். குறைந்தபட்சம் நான் என்னைப் பற்றியாவது அறிந்துக் கொண்டு, என்னைப் பற்றி புரிந்துக் கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்த இளைஞர்களை சந்தித்து விட்டு, ஆற்றல் நிறைந்தவனாக அங்கிருந்து திரும்ப வேண்டும் என்று நான் விரும்பினேன்.

அதற்கேற்ப நான் என்னை ஆயத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டேன். அத்துடன், ஒரு சகாவாக உங்களுடன் பணியாற்ற விரும்பினேன். நீங்களும், நானும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். நான் தேர்தலுக்காக மட்டும் பாடுபடவில்லை. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாட்டின் எந்தப் பகுதியிலும் உங்களில் யாரும் அதிகாரியாக இல்லை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், நான் எந்தவொரு அதிகாரியையும் தொலைபேசியில் அழைத்து எந்தவொரு பணியையும் செய்யுமாறு அறிவுறுத்தியது இல்லை. இதுதான் எனது வாழ்க்கையின் தனிச்சிறப்புமிக்க முத்திரையாகும்.  இதற்கு காரணம், நாட்டை பற்றிய சிந்தனையைத் தவிர என் வாழ்க்கையில் வேறு எந்த கனவும் எனக்கு இல்லை.

125 கோடி மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை தவிர வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை. நான் எங்கிருந்தாலும், நான் பணியாற்றுவதற்கு எத்தகைய வாய்ப்பு கிடைத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ்வதற்குதான்  முயற்சிப்பேன். நண்பர்களே, எனவே தான் நீங்கள் எனது வாழ்க்கையில் விதிவிலக்கு பெற்றவர்கள் என்று நான் கூறுகிறேன். நீங்கள் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் என்பதோடு, மிகுந்த அனுபவங்களை பெற்றவர்களாக இருக்கிறீர்கள். உங்களுடைய வலிமை, திறமை, எண்ணங்களை, என்னுடையதாக்குவதன் மூலம், 125 கோடி இந்தியர்களின் கனவுகளை நனவாக்க முடியும்.

இத்தகைய உணர்வுடன், நாம் குடிமைப் பணி தினத்தை நாட்டின் சாமானிய மனிதனுக்காகவும், அவர்களது கனவுகளுக்காகவும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். இதனை உறுதிமொழியாக கடைப்பிடித்து நமது பயணத்தை தொடருவோம். 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் ஆண்டாக அமையும். இந்த எதிர்பார்ப்புடன் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.

 



(Release ID: 1536542) Visitor Counter : 512


Read this release in: English