வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில்துறைக்கு மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அளித்துள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று – மத்திய அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு

Posted On: 21 JUN 2018 6:25PM by PIB Chennai

தொழில்துறைக்கு சிறப்பு வாய்ந்த மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அளித்துள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற ACMEE 2018 என்னும் 13-ஆவது சர்வதேச இயந்திர உபகரண கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் பேசினார். முன்னாள் முதலமைச்சர் திரு.காமராஜர் தொழில் வளாகங்கள் குறித்து தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தார் என்றும், அதன் பயனாக 1963-ஆம் ஆண்டிலேயே அம்பத்தூர் தொழிற்பேட்டை திட்டமிடப்பட்டது என்றும் அவர் புகழ்ந்துரைத்தார்.

தற்போது நான்காவது தொழிற்புரட்சி நடந்துக் கொண்டிருக்கிறது என்றும், இதில் தொழில் துறையில் தகவல் தொழில்நுட்பம் நுழைந்து, ஸ்மார்ட் தொழில், ஸ்மார்ட் தொழில்நுட்பம் என மாற்றம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்கின்றபோது, அவை  தமிழகம் போன்ற மாநிலங்களில்தான் முதலீடு செய்து வருகின்றன. தொழில்க் கொள்கை என்று வரும் போது, மத்திய-மாநில கூட்டாண்மைக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. ஒரு தொழில் நிறுவனம் அமைக்கப்படும்போது அந்த நிறுவனமோ அதன் துணை நிறுவனமோ மட்டும் வளருவதில்லை. அந்த தொழிற்சாலையை சுற்றி இருக்கக்கூடிய சமுதாயமும் வளரும், அதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

ஒரு மாநிலத்தில் ஒரு தொழில் நிறுவனம் முதலீடு செய்யும் போது அது ஒரு மாவட்டத்தை தேர்வு செய்கிறது. எனவே, மாவட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்படுவதும், தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் நிர்வாக நடைமுறைகள் சுலபமாக இருப்பதும் முக்கியமாகும். இதற்காக மத்திய அரசு இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது. ஒன்று மாவட்ட அளவில் வர்த்தம் புரிவதை சுலபமாக்குவது, மற்றொன்று மாவட்டத்தின்  இயல்பான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 3 சதவீதம் கூடுதலாக்குவதாகும். இதுதொடர்பாக மத்திய அரசு தற்போது மாதிரி திட்டத்தைப் பகிர்ந்து வருகிறது. இது வெற்றியடையுமானால் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

சிறு தொழில்களுக்கு பல்வேறு திட்டங்களை அளித்துள்ள பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார். அரசு மின்னணு தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதன் மூலம் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யலாம். தொழல்துறையை வெற்றிகரமாக மாற்ற வேண்டுமானால், சர்வதேச சந்தை வருவது தவிர்க்க முடியாததாகும். இந்த வகையில் முதன் முறையாக, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்க மத்திய அரசு தொழில்நிறுவனங்களுடன் இணைந்து செயல்முறைகளை வகுத்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டுமே இந்தியாவின் கனவை நனவாக்க முடியும். இதற்கு தனியார் துறையினரின் ஈடுபாடு முக்கியமானதாகும். அரசுடன் சேர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும்என்று அனைத்து தொழில்நிறுவனங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இதற்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையின் உற்பத்தியாளர்கள் சங்கம் வழிகாட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழக துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், ஊரகத்  தொழில்துறை அமைச்சர் திரு.டி.பெஞ்சமின், மாநில தொழில்துறை அமைச்சர் திரு. எம் சி சம்பத் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

                                     ******



(Release ID: 1536210) Visitor Counter : 520


Read this release in: English