பிரதமர் அலுவலகம்

நெதர்லாந்து பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது பிரதமர் மோடி அளித்த பத்திரிக்கை அறிக்கையின் தமிழாக்கம்

Posted On: 24 MAY 2018 5:28PM by PIB Chennai

மதிப்பிற்குரிய பிரதமரும் எனது நண்பருமான மார்க் ருட்டே அவர்களே,

பிரமுகர்களே,

பத்திரிகையாளர்களே,

நண்பர்களே,

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மார்க் அவர்களையும்,  அவரது பிரதிநிதிக் குழுவையும் நான் வரவேற்கிறேன். குறிப்பாக பிரதமர் மார்க், அவரது அமைச்சரவையைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் ஹேக் மேயர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தொல்துறை பிரதிநிதிகளும் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு  வருகை தந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.  வர்த்தகம் மற்றும் முதலீடு துறைகளில் நம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவை இது எடுத்துரைக்கிறது.  ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.  பிரதமர் ரூட்டே, முதன் முதலில் இந்தியாவிற்கு 2015 ஆம் ஆண்டு வந்தார். 2017 நான் நெதர்லாந்திற்கு பயணம் மேற்கொண்டேன்.  இன்று இது எங்களது 3-வது சந்திப்பு. இதுபோன்ற உயர்மட்ட சந்திப்புகள் அடிக்கடி நடக்கும் அளவுக்கு  நெருங்கிய உறவு இன்னும் வெகு சில நாடுகளுடனேயே எங்களுக்கு உள்ளது. இந்தியாவுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அடிக்கடி வருகை தருவதற்காக எனது நண்பர் மார்க்கிற்கு என் அடிமனதிலிருந்து நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

 

நண்பர்களே,

            இன்று இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவின் வளர்ச்சி குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம்.  பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறித்த எங்களது மதிப்பீடுகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். மேலும், இருநாடுகளிலும் உள்ள முக்கிய தலைமை செயல் அலுவலர்களை நாங்கள் சந்தித்தோம்.  கடந்த ஆண்டு நான் நெதர்லாந்து சென்றிருந்த போது சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் உறுப்பினராவது குறித்து சிந்திக்குமாறு நான் எனது நண்பர் மார்க்கை கேட்டுக் கொண்டேன். சூரிய எரிசக்தித் துறையில் நெதர்லாந்து நாட்டில் உள்ள நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் ஆகியவற்றால், மொத்த உலகமும் பயன்பெற வேண்டும். இன்று சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் நெதர்லாந்து உறுப்பினராக சேர்ந்துள்ளது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.  இந்த முடிவிற்காக பிரதமர் ரூடேவிற்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஐநா பாதுகாப்பு மன்றம் முதல் பன்முக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடு கூட்டமைப்பு வரை இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையே நல்ல மற்றும் நெருங்கிய உறவும், ஒத்துழைப்பும் உண்டு.  இந்த சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, சர்வதேச மன்றங்களில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவிற்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.

நண்பர்களே,

      டச்சு நிறுவனங்களுக்கு இந்தியா புதிதல்ல.  பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான டச்சு கம்பெனிகள் இந்தியாவில் வர்த்தகம் புரிந்து வருகின்றன.  இந்தியாவில் அதிகப்படியான நேரடி முதலீடு செய்துள்ள வெளிநாடுகளில் நெதர்லாந்து 5-வது இடத்திலிருந்தது.  மேலும் கடந்த சில ஆண்டுகளில் நெதர்லாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  அதேபோல், இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான நல்ல இடமாக நெதர்லாந்தும் அமைந்துள்ளது.  அதனால், இருநாடுகளின் தலைமை செயற்குழு அலுவலர்களை சந்தித்தது உபயோகரமாக அமைந்தது. இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் குறித்து நெதர்லாந்தில் தொழில்துறை சமூகத்தினர் ஆர்வமுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  மேலும், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டுவர நான் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன் என்பதை உறுதிபடுத்துகிறேன். குறிப்பாக வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான துறைகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. இந்தத் துறைகள் நமது உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு தொடர்புடையது. அதேசமயம், இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நமது இலக்கில் இது முக்கியமாகும்.  இந்தத் துறைகளில் நெதர்லாந்திற்கும் அதிக நிபுணத்துவம் உள்ளது.  கடந்த ஆண்டு நடைபெற்ற உலக உணவு இந்தியா உச்சிமாநாட்டில் நெதர்லாந்து கவனம் ஈர்க்கும் நாடாக (Focus Country) பங்கேற்றது. மேலும், 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள இந்த மாநாட்டின் அடுத்த பகுதியில் நெதர்லாந்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பாராமதியில் காய்கறிகளுக்கான முதலாவது இந்தோ-டச்சு சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  இதுபோன்ற மையங்கள் அமைப்பது குறித்து நாங்கள் ஒன்றாக பணிபுரிந்து வருகிறோம்.  அதேபோல், நகர வளர்ச்சியிலும் நமது ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.  வதோதரா மற்றும் தில்லியில் நடைபெற்று வரும் கழிவுநீர் மேலாண்மை திட்டத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது.  அறிவியல் மற்றும் தொழில்துறையில் நமது உறவு 10 ஆண்டுகளைக் கடந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள தொழில்நுட்ப மாநாட்டில் நெதர்லாந்து பங்குதார நாடாக பங்கேற்பதன் மூலம் இந்த வெற்றிகரமான உறவு மேலும் வலுவடையும்.

நண்பர்களே,

   எனது அரசின் வெளிநாட்டு கொள்கைகளில் வெளிநாட்டில் வாழும் இந்திய சமூகத்தின் பிரச்சினைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதே முக்கிய நோக்கமாகும். 2017 செப்டம்பர் மாதம் செயின்ட் மார்டினில் ஏற்பட்ட சூறாவளியின் போது இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவியதற்காக பிரதமர் ரூட்டேவிற்கும், நெதர்லாந்து அரசுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே,

      இந்தியாவிற்கு வருகை தந்துள்ள உங்களையும், உங்கள் பிரதிநிதிக்குழுவையும் வருக வருக என நான் மீண்டும் வரவேற்கிறேன்.

நன்றி,

மிக்க நன்றி. 



(Release ID: 1535896) Visitor Counter : 154


Read this release in: Bengali , English