பிரதமர் அலுவலகம்

நிதி ஆயோக் நிர்வாக குழுவின் நான்காவது கூட்டத்தில் பிரதமரின் தொடக்க உரை

Posted On: 17 JUN 2018 11:07AM by PIB Chennai

புதுதில்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் நான்காவது நிர்வாகக் குழு கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடக்கவுரை ஆற்றினார்.

முதலமைச்சர்கள் மற்றும் இதர பிரதிநிதிகளை வரவேற்ற பிரதமர், இந்த நிர்வாகக் குழு, வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்திற்கான மேடையாக திகழ்கிறது என உறுதிபடத் தெரிவித்தார். நாட்டின் சில பகுதிகளில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெள்ள சூழலை எதிர்கொள்வதற்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு அளிக்கும் என வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அவர் உறுதி அளித்தார்.

அரசு நிர்வாகத்தில் உள்ள குழப்பமான பிரச்சனைகளை நிர்வாகக் குழு ஒத்துழைப்பு, போட்டிதன்மை கொண்ட கூட்டாட்சி உணர்வுடன் “டீம் இந்தியா” என்ற முறையில் அணுகுவதாக அவர் குறிப்பிட்டார். சரக்கு மற்றும் சேவை வரி முறை சுமூகமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது இதற்கான முதன்மையான உதாரணமாக அமைந்துள்ளது என அவர் விவரித்தார்.

தூய்மை இந்தியா இயக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற விவகாரங்களில் துணைக் குழுக்கள் மற்றும் கமிட்டிகள் மூலம் கொள்கை உருவாக்கத்தில் மாநில முதலமைச்சர்கள் முக்கிய பங்காற்றி இருப்பதாக பிரதமர் கூறினார். இந்த துணைக் குழுக்களின் பரிந்துரைகள் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இணைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2017-18ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.7 சதவீதம் என்ற ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ந்திருப்பதாக பிரதமர் கூறினார். இந்த வளர்ச்சியை இரட்டை இலக்கத்திற்கு கொண்டு செல்வதே இப்போது உள்ள சவால் எனக் குறிப்பிட்ட அவர், இதற்காக பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது என்றார். 2022ம் ஆண்டில் புதிய இந்தியா என்ற தொலைநோக்கு பார்வை மக்களின் உறுதிமொழியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த வகையில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, விருப்பமுள்ள மாவட்டங்களின் வளர்ச்சி, ஆயுஷ்மான் பாரத், இந்திரதனுஷ் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் ஆரோக்கிய மற்றும் நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படுவதாக பிரதமர் கூறினார். 10 கோடி குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான சுகாதார காப்பீடு ஆண்டுதோறும் அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார். சமாக்ரா சிக்‌ஷா அபியான திட்டத்தின் கீழ் கல்விக்காக ஒரு முழுமையான அணுகுமுறை பின்பற்றப்படுவதாக அவர் கூறினார்.

முத்ரா திட்டம், ஜன் தன் திட்டம் மற்றும் ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் நிதி உள்ளடக்கத்திற்கு அதிக அளவில் உதவுவதாக பிரதமர் தெரிவித்தார். பொருளாதார சமநிலையற்ற தன்மையை எதிர்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

115 விருப்பம் தெரிவிக்கும் மாவட்டங்களிலும் மனித வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்கள் மற்றும் அளவுருக்கள் கவனிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய மாதிரியாக கிராம சுவராஜ் அபியான் உருவெடுத்துள்ளது என திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். விருப்பம் தெரிவித்த மாவட்டங்களில் இதுவரை 45,000 கிராமங்களில் இது விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். உஜ்வலா, சவுபாக்கியா, உஜாலா, ஜன் தன், ஜீவன் ஜோதி யோஜனா, சுரக்‌ஷா பீமா யோஜனா மற்றும் இந்திரதனுஷ் இயக்கம் ஆகிய ஏழு முக்கியமான நல்வாழ்வு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த இலக்கு சமீபத்தில் 17,000 கிராமங்களில் நிறைவேறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் திறன்கள், தகுதிகள் மற்றும் ஆதாரங்களுக்கு பற்றாக்குறை இல்லை என்றார் பிரதமர். நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து 11 லட்சம் கோடி ரூபாய் பெறுவதாகவும், முந்தைய அரசின் இறுதியாண்டில் பெறப்பட்டதை விட இது ஆறு லட்சம் கோடி ரூபாய் கூடுதல் என்றும் அவர் கூறினார்.

இன்றைய கூட்டம் இந்திய மக்களின் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று பிரதமர் தெரிவித்தார். அந்த விருப்பங்களை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது இந்த கூட்டத்தின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக கூட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர்கள் மற்றும் இதர பிரமுகர்களை நிதி ஆயோக் துணைத் தலைவர் திரு. ராஜீவ் குமார் வரவேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் விவாதங்கள் நடைபெற்றன.

*****



(Release ID: 1535768) Visitor Counter : 218