சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
விலங்கு நல வாரியத்தின் கடமை அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதாகும் : திரு.எஸ்.பி.குப்தா தலைவர், இந்திய விலங்கு நல வாரியம்
Posted On:
14 JUN 2018 4:52PM by PIB Chennai
1960-ஆம் ஆண்டின் விலங்குகளைக் கொடுமைப் படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் 4-ஆவது பிரிவின் கீழ் விலங்குகள் நல வாரியம் 1962-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. விலங்குகள் நலச் சட்டங்களை நாட்டில் சரியான முறையில் செயல்படுத்துவதை வாரியம் உறுதி செய்கிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு விலங்குகள் நல விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனைகளையும், விலங்கு நல அமைப்புகளுக்கு மானியங்களையும் வழங்குகிறது. இந்தச் சட்டத்தின்படி, வாரியத்திற்கு 28 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (4 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள்). “மனிதர்களைத் தவிர அனைத்து உயிரினங்களைக் கொடுமைப்படுத்துவதையும் அவற்றின் வலி மற்றும் பாதிப்புகளையும் தடுப்பதே வாரியத்தின் கடமையாகும். அதனால்தான், எறும்புகள் முதல் யானைகள் வரை அனைத்தையும் பாதுகாப்போம் என்பது எங்கள் மந்திரமாகும்” என்று இந்திய விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் திரு. எஸ்.பி.குப்தா தெரிவித்துள்ளார். விலங்குகள் நல வாரியத்தின் முக்கிய முன் முயற்சிகள் குறித்து புதுதில்லியில் அவர் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.
மாநில விலங்குகள் நல வாரியம் / விலங்குகள் மீதான கொடுமை தடுப்புக்கான மாவட்ட சபை :
இந்திய விலங்கு நல வாரியத்துக்கு கீழ்மட்ட அளவில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதைத் தடுக்க கட்டமைப்பு இல்லை. இந்த விஷயம் 2008-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு வந்தபோது விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதைத் தடுக்க தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மூன்றடுக்கு முறையில் வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக விலங்குகள் நல வாரியம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதில் தீவிரம் காட்டவில்லை. எனவே, வாரியம் அண்மையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மூன்றடுக்கு முறையை விரைவாக அமைத்து விலங்குகள் நலச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
*****
(Release ID: 1535582)