சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

2019 மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கு, செயல்பாட்டில் உள்ள 300 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது

Posted On: 14 JUN 2018 4:08PM by PIB Chennai

நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைந்து முடிக்க தமிழ்நாடு, உ.பி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் பெரிதும் உதவுவதாக மத்திய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி கூறியுள்ளார். அண்மையில் தமிழ்நாடு, உ.பி.
கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக்கூட்டங்களை தாம் நடத்தியதாக அவர் தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் 20 மாநிலங்களில், தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் 700 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்து, கடந்த இரண்டு நாட்களாக விரிவான ஆய்வை மத்திய அமைச்சர் மேற்கொண்டார். 2019 மார்ச் மாதத்திற்குள் முடிக்கும் வகையில், இவற்றில் 300 திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 100 திட்டங்கள் 2018 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிகிறது.ஆய்வுக்குப் பின்னர், புதுதில்லியில் செய்தியாளர்களிடம் இந்தத் தகவல்களை தெரிவித்தார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 427 திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் 311 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார். 2019 ஜூன் மாதம் முடிக்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 127 திட்டங்கள், அமைச்சகத்தின் 153 திட்டங்களை மார்ச் மாதத்திற்குள் முடிக்குமாறு  துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதே போல இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலை அமைப்பு இலக்கு 5,058 கிலோ மீட்டரிலிருந்து 6,000 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இலக்கை நெடுஞ்சாலைத்துறை முன்கூட்டியே எட்டிவிடும் என அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

                               *****



(Release ID: 1535577) Visitor Counter : 107