அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவின் முதலாவது லித்தியம் அயன் பேட்டரி திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வகம் வழங்கவுள்ளது
Posted On:
10 JUN 2018 1:58PM by PIB Chennai
மத்திய அறிவியல் & தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கட்டுப்பாட்டில், தமிழகத்தின் காரைக்குடியில் இயங்கிவரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ராசி சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனமும், இந்தியாவின் முதலாவது லித்தியம் அயன் பேட்டரி திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், பெங்களூருவில் சனிக்கிழமையன்று (ஜுன் 9, 2018) மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் முன்னிலையில், மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் விஜயமோகன் கே. பிள்ளை மற்றும் ராசி குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி. நரசிம்மன் ஆகியோர் இடையே கையெழுத்தானது.
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் கோபு குமார் தலைமையிலான குழுவினர், புதுதில்லி தேசிய இயற்பியல் ஆய்வகம், கொல்கத்தாவில் உள்ள மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஹைதராபாத் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே, லித்தியத்தால் இயங்கும் பேட்டரியை உருவாக்கி உள்ளனர். முன்மாதிரி லித்தியம் பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் குறித்த நேரடி செயல்விளக்கத்திற்கும், மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வகை பேட்டரிக்கு, உலகளாவிய அறிவுசார் காப்புரிமை பெறப்பட்டிருப்பதன் மூலம், உற்பத்திக்கான செலவினம் குறைவதற்கும், உரிய விநியோக முறை மற்றும் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது, லித்தியம் வகை பேட்டரிக்கான மூலப் பொருட்களை இந்திய உற்பத்தியாளர்கள், சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற சில நாடுகளிலிருந்து பெற்றுவருகின்றனர். லித்தியம் பேட்டரிகளை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாகத் திகழும் இந்தியா, 2017-ல் மட்டும் சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான லித்தியம் பேட்டரிகளை இறக்குமதி செய்துள்ளது.
மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆய்வகங்கள், முக்கிய துறைகளில், இந்திய தொழில்துறைக்கு உறுதுணையாக இருப்பதை பறைசாற்றும் விதமாக, “தற்போதைய” வளர்ச்சி அமைந்துள்ளதாக, இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்குப் பின்னர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுக்குள் 175 கிகாவாட் அளவிற்கு தூய்மையான எரிசக்தி உற்பத்தி செய்வது என்ற இலக்கின்படி, 100 கிகாவாட் அளவிற்கு சூரியசக்தி மின்உற்பத்தி செய்வது மற்றும் தேசிய மின்சார போக்குவரத்து இயக்கத்தின் கீழ், 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக இயங்கச் செய்வது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முன்னோடி திட்டங்களுக்கு பெரும் ஊக்கமளிப்பதாக இந்த நடவடிக்கை அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவை, உற்பத்திக்கான கேந்திரமாக மாற்றவும், அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும் நோக்கிலும், “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்ற பிரதமரின் தொலைநோக்கு திட்டத்திற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதாகவும் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
ராசி குழுமம், பெங்களூரு அருகே தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது உற்பத்திப் பிரிவை அமைக்கவுள்ளது. “காரீய அமில பேட்டரிக்கு மாற்றாக, ஒரு கிலோவாட் திறனுள்ள பேட்டரிகளை, 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான செலவில் உற்பத்தி செய்ய நாங்கள் விரும்புகிறோம்“ என இந்த குழுமத்தின் தலைவர் திரு நரசிம்மன் தெரிவித்துள்ளார். “25 ஆண்டுகள் வரை செயல்படக்கூடிய சூரியசக்தி மேற்கூரைகளுக்கான லித்தியம் பேட்டரிகள் உற்பத்தி செய்வதன் மூலம், சூரியஒளி மின் உற்பத்திக்கான செலவை குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம்“ என்றும் அவர் கூறினார்.
காதொலி கருவிகள் முதல், கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான கன்டெய்னர் அளவிலான பேட்டரிகள், மின்சார வாகனங்கள் (2-சக்கரம், 3-சக்கரம், 4-சக்கரம் மற்றும் பேருந்துகள்), கையில் எடுத்துச் செல்லவல்ல மின்னணு பொருட்கள், மின் சேமிப்பு தொகுப்பு, தொலைத் தொடர்பு மற்றும் தொலைத் தொடர்பு கோபுரங்கள், மருத்துவ சாதனங்கள், வீடு மற்றும் அலுவலக உபயோகங்களுக்கான யூ.பி.எஸ். கருவிகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மின்சார ரோபோக்கள் தயாரிப்பில் லித்தியம் பேட்டரிகள் பெருமளவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம் பேட்டரிகள், மின்சார கம்பிகள் இன்றி மின்சாரத்தை பயன்படுத்த உதவிகரமாக இருக்கும்.
பெங்களூரு தேசிய விமானவியல் ஆய்வக இயக்குனர் டாக்டர் ஜிதேந்திர யாதவ், மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் டாக்டர் வித்யாதர் மட்கவி, பெங்களூரு, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குனர் டாக்டர் எம். அண்ணாதுரை உள்ளிட்டோர் நிகழ்ச்சியின் போது உடனிருந்தனர். இஸ்ரோ தயாரித்த விண்வெளி பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டவை என்றும், இவற்றை பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் எனவும் டாக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.
******
(Release ID: 1535055)