சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

“பிளாஸ்டிக் மாசினை ஒழிக்க வேண்டும்” என்பது வெறும் மந்திரம் அல்ல; இந்தியாவில் அது செயல்பாடு : டாக்டர் ஹர்ஷ் வர்தன்

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUN 2018 5:14PM by PIB Chennai

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சிறப்பான சுற்றுச்சூழலைப் பராமரிக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று  மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும்  பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தியுள்ளார். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அவர், பிளாஸ்டிக் மாசைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பது வெறும் மந்திரம் அல்ல என்றும், இந்தியாவில் அது செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். அதே போல சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதும் வெறும் தொழில்நுட்பம் அல்ல என்றும் அது தார்மீக விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார். தினசரி 25,000 டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் வளர்ந்த நாடுகள் தொழில்நுட்பம், நிதி ஆதாரம், ஆராய்ச்சி ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கழிவுகளை செல்வமாக மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் டாக்டர்.மகேஷ் சர்மா இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் மாசு குறித்து கவலை வெளியிட்டார். பிளாஸ்டிக் மாசு நமது எதிர்கால சந்ததியினருக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியது என்று அவர் குறிப்பிட்டார். தூய்மை கடவுளுக்கு சமமானது என்ற மகாத்மா காந்தியின் சிந்தனையை நினைவு கூர்ந்த டாக்டர். சர்மா, பிளாஸ்டிக் மாசு கட்டுப்பாடு என்ற கொள்கைக்கு இது உந்துதலாக உள்ளது என்று தெரிவித்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து மறுசுழற்சி செய்து, திரும்பப் பயன்படுத்தி அதை மீட்டு மறுவடிவமைத்தல் எனப்படும் பிரதமரின் மந்திரத்தை செயல்படுத்தினால் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசைக் குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ஐ.நா. சுற்றுச்சூழல் செயல் இயக்குநர் திரு. எரிக் சோல்ஹைம், பீகார் துணை முதலமைச்சர் திரு. சுசில் குமார் மோடி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக செயலர் திரு. சி. கே. மிஸ்ரா, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் சிறப்புச் செயலரும், வனத்துறை தலைமை இயக்குநருமான திரு.சித்தாந்த தாஸ், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக கூடுதல் செயலர் திரு.ஏ.கே.ஜெயின், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், இதர அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அதிகாரிகள், ஐ.நா.சுற்றுச்சூழல் அமைப்பின் பிரதிநிதிகள், மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலை தளத்தைப் பார்க்கவும்.

                           -----


(வெளியீட்டு அடையாள எண்: 1534311) வருகையாளர் எண்ணிக்கை : 258
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi