PIB Headquarters
பத்திரிகை குறிப்பு
Posted On:
17 MAY 2018 7:15PM by PIB Chennai
சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் முதலாவது மின்சார திரையரங்கம் இருந்த வரலாற்றுப் பாரம்பரியக் கட்டடத்தில் நிரந்தர தபால்தலை கண்காட்சி 2017 ஆகஸ்ட் 15-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்திய தேசிய இயக்கம் மற்றும் சுதந்திர இந்தியா, அஞ்சல் தகவல் தொடர்பு, குழந்தைகள் சிறப்பு காட்சி, இசை, மகளிர் மற்றும் மகளிர் மேம்பாடு ஆகிய ஐந்து தலைப்புகளில் இதுவரை கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சிகள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றன. பொதுமக்கள் மட்டுமன்றி நகர பள்ளிகளைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கண்காட்சியை பார்த்துச் சென்றனர்.
2018 மே மாத தபால்தலைக் காட்சிக்கு பாரம்பரிய இடங்கள் என்பது தலைப்பாக அமைந்துள்ளது. மே மாதம் 18-ஆம் தேதி அருங்காட்சியக தினமாக கொண்டாடப்படுவதையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா அறிவித்த பாரம்பரிய இடங்கள் குறித்து பிரபல தபால்தலை சேகரிப்பாளர் திரு.ஆர்.சீத்தாராமன் தொகுப்பிலிருந்து பல்வேறு தபால்தலைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி சென்னையில் உள்ள தென்னிந்திய தபால்தலை சேகரிப்பு சங்கத்துடன் இணைந்து கூட்டாக ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியில் பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களும் ஐ.நா.பாகுபாட்டின்படி அமைக்கப்பட்டுள்ளன. செயின்ட் ட்ரோஃபைம் டி ஆர்லஸ் தேவாலயத்தை சித்தரிக்கும் 1935-ஆம் ஆண்டைச் சேர்ந்த அபூர்வமான டை அட்டையும் காட்சியில் இடம்பெற்றுள்ளது. ரம்ஜான் புனித மாதத்தை குறிக்கும் வகையில் திரு.எச்.சாகுல் சேகரித்த மசூதிகள் தபால் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கென குறும் படங்கள் திரையிடப்படுகின்றன. அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் 6 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். தபால்துறை வெளியிட்டுள்ள அனைத்து தபால் தலைகளும் கண்காட்சியிடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
(Release ID: 1532684)
Visitor Counter : 178