நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

இந்திய உணவுக் கழக அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஆய்வு

Posted On: 07 MAY 2018 5:35PM by PIB Chennai

சென்னை, 2018 மே 7: மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாஸ்வான், இன்று இந்திய உணவுக் கழகத்தின் அதிகாரிகளைச் சந்தித்து அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அவர் தனது சென்னைப் பயணத்தின் போது மாநில அரசு அதிகாரிகளையும் சந்தித்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மத்திய அரசு இந்தக் கரீப் பருவத்தில் ஏ ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1590 குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பொது நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1550 குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்துள்ளது என்று தெரிவித்தார். இது தவிர ஏ ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 70 மற்றும் பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரு. 50 ஊக்கத்தொகையை இந்த கரீப் பருவத்தில் தமிழக அரசு அளிக்கிறது.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் 2017 அக்டோபர் 1ம் தேதி தொடங்கி, 2018 ஜூன் வரை தொடரும். இதற்காக மொத்தம் 886 கொள்முதல் மையங்கள் மாநிலம் முழுவதும் மாநில கொள்முதல் முகமையால் திறக்கப்பட்டுள்ளன.

 

2017-18 கரீப் பருவத்தில் 288116 விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 10.44 லட்சம் மெட்ரிக் டன் நெல் 03.05.2018 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் இருந்து 7.0 லட்சம் டன் அரசி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய உணவுக் கழகத்தில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் உள்ளது. இது தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு தேவையான 3-4 மாத தேவையை சேமித்து வைக்கப் போதுமானதாகும். மேலும் மாநில அரசு முகமையான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்துள்ள அரிசி உள்ளது.  பற்றாக்குறையாக உள்ள உணவு தானியம் இதர இந்திய உணவுக் கழக கொள்முதல் பிராந்தியங்களான பஞ்சாப், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், அரியானா, ஒடிசா போன்றவற்றில் இருந்து பெறப்படும். இதன் மூலம் பொது விநியோகம் சுமுகமான முறையில் மேற்கொள்ளப்படும்.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கான வருடாந்திர தேவை 2.00 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 36.83 லட்சம் மெட்ரிக் டன் அரிசி.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் மாநில அரசுகளுக்கு குறைந்த விலையில் கோதுமை மற்றும் அரிசி முறையே கிலோ ரூ. 2 மற்றும் ரூ. 3 விலைக்கு அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில அரசு இந்த உணவு தானியங்களை தேவைப்ப்டுவோருக்கு இலவசமாக அளித்து வருகிறது. பி.எச்.எச். பிரிவின் கீழ் ஒரு நபருக்கு மொத்தம் 5 கிலோ உணவு தானியமும், ஏ.ஏ.ஒய். பிரிவின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியமும் அளிக்கப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி பயனடைந்து 37.79 சதவீத நகர்ப்புற மற்றும் 62.55 சதவீத கிராம மக்கள் பயன்பெறுகின்றனர்.

மாநிலத்தில் மொத்தம் 34,773 நியாய விலைக் கடைகள் உள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் டிஜிட்டல் இயந்திரங்களின் மூலம் உணவு தானியங்களை விநியோகம்  செய்கின்றன என்பதால் இந்தத் திட்டத்தின் பயன் நியாயமான பயனாளிகளை சென்றடைகிறது. இதுவரை 6.39 கோடி குடும்ப அட்டைகள் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு தானியங்களை நியாயமான விலையில் வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறிய அவர், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து கூடுதல் உணவு தானியம் கொள்முதல் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

 

***



(Release ID: 1531507) Visitor Counter : 323


Read this release in: English