குடியரசுத் தலைவர் செயலகம்

குருநானக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மேதகு குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை

Posted On: 05 MAY 2018 12:27PM by PIB Chennai

 

  1. குருநானக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், கலந்துகொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல, குரு அமர் தாஸ் வளாகம் மற்றும் தியாகி பாபா  தீப் கலையரங்கு திறப்பு விழாவிலும் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மைல்கல்லை எட்டியதற்காக கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, இன்று பட்டம் பெறும், சுமார் 900 மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது உங்களுக்கு மட்டுமன்றி, உங்களது குடும்பத்தினர் மற்றும் பேராசிரியர்களுக்கும் அளப்பரிய சாதனை ஆகும். உங்களது கல்லூரியின் ஆகப்பெரும் பாரம்பரியத்தை வெளிஉலகுக்குக் கொண்டுசெல்ல உள்ள உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

  1. பட்டம் பெறுவோரில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டோர், மாணவிகள். பல்கலைக் கழக அளவில் ரேங்க் பெற்ற 12 மாணவர்கள், பதக்கம் வழங்கி இன்று கவுரவிக்கப்படுகிறார்கள். பதக்கம் வென்றுள்ள 12 பேரில், 7 பேர் மாணவிகள். இவை அற்புதமான புள்ளி விவரங்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல, மகளுக்குக் கல்வி அளிப்பது என்பது ஒருவருக்கு மட்டுமல்ல, இரண்டு குடும்பங்களுக்குக் கல்வி அளிப்பது போன்றதாகும். கல்வி கற்ற பெண், தனது பெற்றோர் குடும்பத்தினருக்கும், திருமணம் செய்துகொண்டு செல்லும் குடும்பத்துக்கும் தனது கணவருடன் இணைந்து நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவார். அதேபோல, பணிக்குச் செல்லும் இடத்திலும் அதிக அளவில் பங்களிப்பை செய்வார். மேலும், நமது பொருளாதாரத்தை கட்டமைப்பார்.

 

  1. குருநானக் தேவ் அவர்களின் 500-வது பிறந்த தினத்தையொட்டி,  1971-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக மாறியுள்ளது.  இந்தக் கல்லூரியை நடத்தும் லாபநோக்கற்ற அமைப்பான குருநானக் கல்விச் சங்கம், சென்னையில் வாழும் 250 சீக்கிய குடும்பத்தினரின் ஆதரவுடன் செயல்பட்டு வருவதாக என்னிடம் தெரிவித்தனர். சீக்கிய சமூகத்தினர் சிறிய அளவாக இருந்தபோதிலும், நீங்கள் மாநிலத்துக்கும், சமூகத்துக்கும், மற்றும் கல்வித் துறைக்கும் பங்களிப்பை செய்துள்ளீர்கள். இது பாராட்டத்தக்கது.

 

  1. பஞ்சாப் மற்றும் சீக்கிய சமூகத்தினருக்கும், தமிழகத்துக்கும் இடையேயான நீண்டகால மற்றும் சிறப்பான வரலாற்றுத் தொடர்புகளை இந்தக் கல்லூரி முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. நாட்டைக் கட்டமைத்த மிகப்பெரும் மதத் தலைவர்களில் ஒருவரான குருநானக் தேவ் அவர்கள், தென்னிந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் ஓர் அங்கமாக தமிழகத்துக்குப் பயணம் மேற்கொண்ட காலத்தை நோக்கி வரலாறு செல்கிறது. அவர் புனித நகரான இராமேஸ்வரத்தில் சில நாள்கள் தங்கியிருந்தார் என்று நம்பப்படுகிறது.

 

  1. நமது விடுதலைப் போராட்டத்தில் தமிழகமும், பஞ்சாப்-பும் முன்னோடியாக இருந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு, இரண்டு மாநிலங்களின், கடுமையாக உழைக்கும் மக்களும் இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு போதிய பங்களிப்பை செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள சீக்கிய சமூகத்தினர், வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்துவது முதல் விவசாயம் வரை பல்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த ஏ.ஜி.ராம் சிங்கின் குடும்பம் அமிர்தசரஸிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்ததை இங்கு நினைவுகூர்வது மதிப்புமிகுந்ததாக இருக்கும். நமது நாட்டின் முன்னோடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக ராம்சிங் உருவானார். இந்த நகரத்தில் பல்வேறு உள்ளூர் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர், அவரது இரண்டு மகன்களான ஏ.ஜி.மில்கா சிங், ஏ.ஜி.கிரிபால் சிங் ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடினர். ஒரு சமயத்தில், தமிழகத்தில் முன்னணி கிரிக்கெட் குடும்பம் என்பது சீக்கிய குடும்பமாக இருந்தது. அனைவரும் ஒன்றே என்ற உணர்வு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை நமது நாட்டை சிறப்பானதாக மாற்றியுள்ளது.

 

  1. குருநானக் கல்லூரி அதே உணர்வைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கல்லூரியின் நோக்கம், அதன் சகோதரத்துவ கொள்கை ஆகியவை அனைவருக்கும் பலன் என்ற இலக்கை நோக்கியே உள்ளது. இங்கு 57 பாடத் திட்டங்கள் கற்பிக்கப்படுவதாகவும், தேசிய தர மற்றும் அங்கீகார கவுன்சிலின் ஏ கிரேடு தர மதிப்பீட்டை கல்லூரி பெற்றிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தனர்.

 

  1. இந்த வளாகத்திற்குள் இடம்பெற்றுள்ள குருத்வாரா-வில், நாள்தோறும் 700 மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் சமூக சமையல் கூடம் செயல்பட்டு வருவது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொண்டுவரும் யோசனையை வழங்கிய மாநிலம் தமிழ்நாடு. ஆனால், கல்லூரி மட்டத்தில் மதியஉணவு வழங்குவது தனிப்பட்டது. இதற்காக கல்லூரி நிர்வாகத்தினருக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

மகளிரே, ஆடவரே மற்றும் அன்பார்ந்த மாணவர்களே

 

  1. பட்டம் பெறுவது அல்லது வேலைக்காகப் பயிற்சி பெறுவதில் மட்டும் கல்வியின் மதிப்பு அமைந்துவிடவில்லை. சமூகத்துக்கு திரும்ப வழங்குவது, பின்தங்கிய மற்றும் நம்மைவிட வாய்ப்புகளைப் பெறாதவர்களுக்கு உதவுவதில் தான் உண்மையான மதிப்பு அமைந்துள்ளது. இந்த உணர்வுடன், சிறப்புக் கவனம் தேவைப்படும் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியை நடத்தும் அரசுசாரா அமைப்புடன் இணைந்து சிறப்பு வசதிகளை வழங்கி வருகிறது. இதுபோன்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெறுவதற்காக உதவவும், மற்றவர்களுக்கு இணையாக செயல்படுவதை ஊக்குவிக்கவும் சான்றிதழ் வகுப்புகளை நடத்தி வருவதாக என்னிடம் தெரிவித்தனர். இதுபோன்ற முயற்சிகள் முழு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 

  1. சமூகத்துக்கு சேவை செய்யவும், மாணவர்களை சமூக அளவில் பொறுப்புடன் செயல்படச் செய்யவும் உங்களது கல்லூரி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்களை முதலில் சந்தித்து, அவர்களுக்கு குடிநீர், உணவு, மருந்துகள் மற்றும் மற்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியவர்களில் குருநானக் கல்லூரியைச் சேர்ந்த குழுவும் இடம்பெற்றது என்பதை நான் அறிந்துகொண்டேன். சென்னையில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இருந்த வேளச்சேரிக்கு அருகே உள்ள இடங்களில் உங்களது கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும், 250-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றினீர்கள்.

 

  1.  இது குரு நானக் தேவ் அளித்த செய்தியின் உண்மையான பிரதிபலிப்பாக இருந்தது. அவரது ஆசிகள், எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்!

 

நன்றி

ஜெய் ஹிந்த்!

 



(Release ID: 1531473) Visitor Counter : 313


Read this release in: English