குடியரசுத் தலைவர் செயலகம்

சென்னைப் பல்கலைக்கழக 160வது பட்டமளிப்பு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை

Posted On: 05 MAY 2018 10:58PM by PIB Chennai
  1. சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்துவதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். பட்டம் பெறும் மாணவர்களுக்கும், பேராசிரியர்கள், குடும்பத்தினருக்கும் இன்றைய தினம் மிக முக்கியமான நிகழ்வாகும்.  நீங்கள் கல்வி பெறுவதற்காகப் பாடுபட்டு உழைத்தபோது, உங்களுக்கு அவர்கள் மிகுந்த ஆதரவுடன் இருந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு விழா பல்கலைக்கழகம் நினைவில் கொள்ளத் தக்க நிகழ்வாக உள்ளது. இது நாட்டின் நவீன உயர்கல்வியின் பரிணாமம் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. அனைவருக்கும், குறிப்பாகப் பட்டம் பெறும் மாணவர்களுக்கும் இந்தப் புகழ் மிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
  2. 19ம் நூற்றாண்டின் இடையிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் நாட்டைக் கட்டியமைக்கும் பணியில் ஒரு மைல்கல்லாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில், குறிப்பாகத் தென் மாநிலத்தில் அறிவை மேம்படுத்துவதிலும், அறிவுக் கருத்துகளை உருவாக்குவதிலும் வலுவான அடித்தளமிட்ட நிறுவனங்களில் ஒன்றாக இந்தப் பல்கலைக்கழகம் விளங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகம் இந்த மண்டலத்தில் “பல்கலைக்கழகங்களின் தாய்” என்று போற்றப்படுவதை அறிகிறேன். இந்த வளாகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க கட்டடங்களை குறிப்பிடவில்லை, உண்மையிலேயே இது ஒரு சின்னமாகத் திகழும் கல்வி நிறுவனம் என்று கூறுகிறேன்.
  3. இந்தப் பல்கலைக்கழகம் மற்றும் இதன் இணைவுக் கல்லூரிகளில் படித்த மகத்தான மாணவர்கள் பட்டியலில் இந்த நாட்டின் மிகச் சிறந்த சிற்பிகள் இடம்பெறுகிறார்கள். நாட்டின் ஆறு குடியரசுத் தலைவர்களை இந்தப் பல்கலைக்கழகத்தைப் போல் இந்தியாவில் வேறு எந்தப் பல்கலைக்கழகமும் அளிக்கவில்லை. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர் வி.வி. கிரி, திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி, திரு. ஆர். வெங்கடராமன், டாக்டர் கே.ஆர். நாராயணன், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிப்பதற்கு முன்பு இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களாக இருந்திருக்கின்றனர். நாட்டின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகத் திகழ்ந்த ராஜாஜி என்று அழைக்கப்பட்ட சி. ராஜகோபாலாசாரியாரும் இதன் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  4. நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன், டாக்டர் சுப்பிரமணியன் சந்திரசேகர் ஆகியோர், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே. சுப்பா ராவ், நீதிபதி எம். பதஞ்சலி சாஸ்திரி ஆகியோர் இப்பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். பெண்குலத் திலகங்களான திருமதி சரோஜினி நாயுடு, திருமதி துர்காபாய் தேஷ்முக் ஆகியோரும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். இந்தப் பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத் தக்க சிறந்த மாணவர்களின் பட்டியலைக் குறிப்பிட்டால் சில மணி நேரம் ஆகிவிடும். எனினும், சிறப்பாகக் குறிப்பிட வேண்டுமானால், மறைந்த  மாமனிதர் சி. சுப்பிரமணியம் அவர்களைக் குறிப்பிட வேண்டும். அரசியலிலும் பொதுவாழ்விலும் அவர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். வேளாண் அமைச்சராக அவர் இருந்த காலத்தில்தான் நாட்டை உணவில் தன்னிறைவை எய்தும் வகையில் பசுமைப் புரட்சி செயல்படுத்தப்பட்டது.
  5. கல்வி கற்பதிலும் சாதனை புரிவதிலும் மேதைமைத் தன்மையைக் கடைப்பிடிக்கும் பாரம்பரியம் இன்னும் நீடிக்கிறது. இன்றைக்கும் உலக அளவில் புகழ் மிக்கவர்கள், செஸ் ஆட்ட வீரர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் முதல் கார்ப்பரேட் நிறுவனத் தலைவர் இந்திரா நூயி வரையிலானோர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற்றவர்கள். இப்போது பட்டம் பெறும் மாணவர்கள் அத்தகைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
  6. “தொடர்ச்சியான மாற்றத்தைக் காண்போம்” (change with continuity) என்ற முழக்கம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.  சில சமயம் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்களில் அது அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது. அடிப்படை விழுமியங்களைக் கட்டிக் காத்தபடியே புதிய மாற்றங்களை உடனுக்குடன் ஏற்றுச் செயல்படுத்துவது இந்தப் பல்கலைக்கழகத்தின் பல தனித்தன்மைகளில் குறிப்பிடத் தக்கது. சமகாலத்துக்கு ஏற்ற நிலையில் நீடிப்பதும், மாணவர்களுக்கும் சமுதாயத்திற்குமான மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மாறுவதற்கும் இந்தப் பண்புநலன் துணை புரிகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பல்வேறு படிப்புகள் அதைத் தெளிவுபடுத்துகின்றன. பாரம்பரியக் கலைகள் முதல் 21ம் நூற்றாண்டுக்குத் தேவையான கல்வி வரையில் பரந்து விரிந்துள்ளன. இங்கு கற்பிக்கப்படும் வரலாறு மற்றும் பொருளாதாரம் மானிடவியல் முதல் சமயங்கள் குறித்த படிப்புகள் வரையில் அதைப் போல் விரிந்துள்ளன. இன்றைக்கு இந்தப் பல்கலைக்கழகம் உயிரித்தகவலியல் (bioinformatics), நேனோ தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவ அறிவியல் ஆகியவை நமது காப்பீட்டுத் தொழிலுக்கு இன்றியமையாதவை.
  7. தமிழகத்தின் அடையாளமான பாரம்பரியப் புலமைக்கு சென்னைப் பல்கலைக்கழகம் பங்களிப்பு செலுத்துகிறது. அதைப் போல், தமிழக பாரம்பரியத்திடமிருந்தும் பெற்றுக் கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள சாதாரண குடிமக்கள் எல்லோருமே கல்வியின் மேன்மையை வலியுறுத்தி வருகிறார்கள். சமூக மேம்பாட்டின் குறியீட்டின் மீதும் அதன் பொருளாதாரத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியலாகட்டும், மருத்துவமாகட்டும், பொறியியலாகட்டும், உற்பத்தியாகட்டும் தமிழ்நாடு ஆய்வுக் கலாசாரத்தையும் புதுமையாக்கும் பண்பாட்டையும் கொண்ட பெருமையுடன் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத்திலும் டிஜிட்டல் பொருளாதாரத்திலும் தமிழகம் போற்றத் தக்கதாக உள்ளது. மனித நேயம் சார்ந்தவற்றில் இவை பாராட்டத் தக்க வகையில் அமைந்துள்ளன. தமிழ்மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதில் வியப்பு ஏதுமில்லை. பல மொழிகளுக்கும்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தத்துவம், இலக்கியம் ஆகியவற்றைப் படைத்துள்ள மொழியாகும்.
  8. சக குடிமக்களின் அன்றாட வாழ்வில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் வகையில் இறுதிவரையில் கல்வி கற்க வேண்டும் என்ற நிலை மிகவும் பாராட்டுக்குரியது. இந்த விஷயத்தில்  தமிழ்நாட்டு மக்களும் சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களும் நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழ்கின்றன. இந்நிலையில் 21ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இத்தகைய நிறுவனங்கள் வழிகாட்டியாகவும், தலைமை தாங்குவதும் தவிர்க்க முடியாதவை ஆகும். இது இந்தியாவின் மிக முக்கியமான அத்தியாயம் ஆகும். நாம் வளரவேண்டிய சமுதாயமாக விஸ்வரூபம் எடுக்க வேண்டியுள்ளது. வறுமையை அவசரமாக ஒழிக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வு, கல்வி, அனைவருக்கும் மின்சக்தி, வீட்டுவசதி ஆகியவை கிடைக்க வேண்டும். ரோபாடிக்ஸ், ஜினோமிக்ஸ், செயற்கை அறிவு (Artificial Intelligence) ஆகியவை கொண்ட நான்காவது தொழில் புரட்சியில் நம் நாடு வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
  9. இதுபோன்ற பல்கலைக்கழகங்கள் நமது பயணத்தின் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியாளர்கள், தகுதிபடைத்த இளைஞர்கள் தொழில்முனைவோர்களாகவும் வேலைவாய்ப்பு அளிப்போராகவும் உருவாவதற்கு உதவும் சூழலை வளர்த்தெடுப்பதில் தமிழகம் சுறுசுறுப்பாகச் செயல்படுவது பாராட்டுக்குரியதாக உள்ளது. இதுதான் நமது எதிர்காலத்தின் வழியாகும். நம் இளைஞர்களுக்கு உரிய சரியான பாதையும் ஆகும்.

பெரியோர்களே, தாய்மார்களே, என் அன்பு மாணவர்களே!

  1. இந்தப் பட்டமளிப்பு விழாவும் ஆண்டு நிகழ்வும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கும் பட்டம் பெறுவோருக்கும் நினைவில் போற்றத் தக்க நிகழ்வுகளாகும். பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் இந்த 160வது ஆண்டு  என்பது நாற்பது ஆண்டுகள் கழித்து 200ஆம் ஆண்டு கொண்டாடும்போது, எங்கே முன்னேறியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பல்கலைக்கழகம் அடுத்து, உலகின் மிகச் சிறந்த இடத்தைப் பிடிக்கும் வகையில் விருப்பம் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தொடர்ந்து சிறந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு சிறப்பிடத்தில் தொடர வேண்டும்.
  2. உயர்கல்வி மேன்மை பெறுவதற்காக இந்திய அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 20 உயர்நிலைக் கல்விநிறுவனங்களின் திறன்மேம்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இது தொடர்பாக இலக்குடன் கூடிய விரிவான திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் தயாரித்துள்ளதாக அறிகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இங்கு பயின்று உலகம் முழுதும் பரவியுள்ள முன்னாள் மாணவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்படியும் அவர்களையும் செயல் திட்டங்களில் ஈடுபடுத்தும்படியும் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
  3. இன்று பட்டம் பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு ஓர் அறிவுரை. வாய்ப்புகளை எதிர்நோக்கி, புதிய உலகில் நுழைகிறீர்கள். மிகச் சிறந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றீர்கள். எல்லோருக்கும் அது வாய்க்காது. இந்த வளாகத்திலிருந்து வெளியே செல்லும்போது, நீங்கள் படித்ததை அடக்கத்துடன் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யுங்கள். உங்களைவிட இயலாதவர்களுக்கு ஏதேனும் செய்யுங்கள்.  அதுவே நீங்கள் பெற்ற கல்வியை உண்மையாகப் பரிசோதிப்பதாக அமையட்டும்.

 

நன்றி,

ஜெய்ஹிந்த்!

 

 

 

************


(Release ID: 1531447) Visitor Counter : 370


Read this release in: English