குடியரசுத் தலைவர் செயலகம்

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் கல்வித் திட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரை

Posted On: 04 MAY 2018 5:27PM by PIB Chennai
  1. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் கல்வியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி இந்தியாவிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள இந்த நிறுவனத்தை நான் பாராட்டுகிறேன். இதற்காக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள், இன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள். ஆராய்ச்சியாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்த நிறுவனம் மற்றும் அதன் சாதனைகள் நாட்டுக்கே பெருமை அளிக்கக் கூடியவையாகும்.
  2. 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்தத் தருணத்தில் பழையவற்றைத் திரும்பிப் பார்ப்பதுடன் புதியவற்றை எண்ணிப் பார்க்கவும் வேண்டும். இந்த நிறுவனம் அதன் நிறுவனரின் கொள்கைகள் மற்றும் மாண்புகளை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சிறிது நாளில் இடா சோபியா ஸ்கட்டர் இந்தியாவுக்குத் திரும்பினார். இந்த நாட்டில்தான் அவரது குடும்பத்தின் பல தலைமுறையினர் வாழ்ந்து சேவை புரிந்தனர். இந்த நாட்டில்தான் மருத்துவம் அவரது வாழ்நாள் குறிக்கோளாக மாறியது.
  3. அப்போது இந்தியா காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. மக்கள் மிக மோசமான சூழலில் வாழ்ந்தனர். சுகாதாரக் குறியீடுகள் மிக மோசமாக இருந்தன. சராசரி மனித வாழ்க்கை 24 வயதாக இருந்த நேரம் அது. காசநோயால் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் இறந்தார். 4 குழந்தைகளில் ஒன்று முதல் ஆண்டிலேயே மரணித்தது. காலரா, பெரியம்மை, போலியோ போன்ற பல்வேறு கொடிய நோய்கள், தொற்று நோய்கள் பரவி வந்தன. சுதந்திரம் என்பது அப்போது வெறும் கனவாகவே இருந்தது. இத்தகைய இந்தியாவில் இடா சோபியா  ஸ்கட்டர் தனது வாழ்க்கையை மருத்துவப் பணிக்காக அர்ப்பணித்தார். 1918-ல் அவர் ஒரு மருத்துவப் பள்ளியை நிறுவினார். அது தொடக்கத்தில் பெண்களுக்காக மட்டுமே இயங்கியது. 1947 ஆம் ஆண்டு முதல் மாணவ-மாணவியர் இருசாராரும் கல்வி பயிலத் தொடங்கினர்.  
  4. அன்றிருந்த நிலையிலிருந்து இந்தியா தற்போது நீண்ட தூரம் வந்து விட்டது. நமது பொருளாதாரம், வேளாண்மை தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சிகள், நமது சிந்தனை, செயல்பாடு மற்றும் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கேற்றாற் போல் நமது சுகாதாரப் பயன்களும் முன்னேறி உள்ளன. தற்போது சராசரி ஆயுட்காலம் 68 வயதுக்கும் மேலாக உயர்ந்திருக்கிறது. ஒரு காலத்தில் ஏராளமானோரின் உயிர்களைப் பலி வாங்கிய போலியோ, பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன. நமது நோய்த் தடுப்புத் திட்டம் வலுவடைந்து வருகிறது. அனைத்து குழந்தைகளும் நோய் தடுப்புப் பயன்களை பெறும் வகையில் மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  5. முதல் நிலை மற்றும் இடை நிலை மருத்துவ வசதிகள் சிறந்த முறையில் மாற்றம் பெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் தமிழ்நாடு சுகாதாரக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது என்பதை இங்கு கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்தப் பெருமைக்கு வேலூர் சி.எம்.சி. போன்ற நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை வழங்கி உள்ளன.
  6. பொது சுகாதாரம் என்பது உலகளவில் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை மனிதஉரிமையாகும்.  ஒரு நாடாக நாம் தடைகளை கடந்து வந்துள்ள போதிலும், இன்னும் பிராந்தியம், ஊரகம்- நகர்ப்புறம், பாலினம் ஆகியவற்றில் பாகுபாடுகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை இருந்துகொண்டே இருக்கிறது. இவற்றைப் போதிய வகையில் சமாளிக்காவிட்டால் நாம் ஓய்வடைய முடியாது, சி.எம்.சி.யின் நோக்கமும் முழுமையடையாது.
  7. சமுதாயத்தில் மாற்றம், பொருளாதார மேம்பாடு, மக்கள்தொகை மாற்றம் ஆகியவை நிகழ்ந்துவரும் நிலையில், நாடுகள் தொற்று நோய்கள் மூலம் மாற்றங்களைப் பெற்று வருகின்றன. இந்தியாவும் இந்த மாற்றத்தை அனுபவித்துவருகிறது. நோய்க் கட்டுப்பாட்டில் மூன்று சவால்களைக் குறிப்பிட வேண்டும். அந்த மூன்றையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டி இருந்தது.
  8. முதலாவதாக காசநோய் போன்ற தொற்று நோய்கள், கொசுக்களால் பரவும் மலேரியா, தண்ணீர் மூலம் பரவும் காலரா, வாந்தி பேதி நோய்கள், தடுப்பூசிகள் மூலம் தடுக்கக் கூடிய தட்டம்மை, வலிப்பு நோய்களுடன் பிரசவ கால மற்றும் சிசு மரணத்தை இந்தியாவில் குறைக்க வேண்டி இருந்தது. இரண்டாவதாக தொற்று நோய் இல்லாத வாழ்க்கை முறையால் ஏற்படும் நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் புற்று நோய்களுக்கு சிகிச்சைமுறையைக் கண்டறிய வேண்டி இருந்தது.  மூன்றாவதாக நோய் தொற்றுகளால் பரவும் எச்ஐவி, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் வழிமுறைகளை உருவாக்கவேண்டியதன் அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது. உலகமே தற்போது சுருங்கி விட்ட நிலையில் ஏராளமான மக்கள் நமது நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில் மிகச் சிறிய அளவிலான நோய்த் தொற்றுகள் கூட பெருமளவில் வெகு சீக்கிரமாகப் பரவி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
  9. இந்த மூன்று முக்கிய சவால்களுக்கு உலகளவில் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம். நோய்த் தடுப்பு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகள், சிகிச்சை முறைகள் இதற்கு அவசியமாகும். சுகாதாரப் பிரச்சனைகளின் தாக்கம் பல்வேறு துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தச் சவாலை சமாளிக்க பல நோக்கு அணுகுமுறை அவசியமாகும். அரசு, சமுதாயம், தனியார் மற்றும் பொதுச் சுகாதார வசதிகள் வழங்குவோர், தொண்டுநிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது.
  10. தேசிய சுகாதார இயக்கம், தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை விரிவான அணுகுமுறைக்கு ஏற்றவையாக உள்ளன. பணத்தட்டுப்பாடு அல்லது இதர காரணங்களால், எந்த நபரும் மருத்துவ வசதி இல்லாமல் இருக்கக் கூடாது என்பதே இந்தத் திட்டங்களின் நோக்கமாகும். சமத்துவம், திறமை, தரம், அளவு, எளிதில் அணுகக் கூடிய கட்டுப்படியான வகையில் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டுமென்பதே பொதுச் சுகாதாரத்தில் நமது சித்தாந்தத்தை வழி நடத்தும் கொள்கைகளாக உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவ வசதி என்பது ஒரு தொண்டாகும். இது ஒரு வணிகமாக உள்ள போதிலும், ஒரு உயிரைக் காப்பதைக் காட்டிலும் வணிகம் பெரிதல்ல என்பதை உணர வேண்டும். நான் கூறுவதை சிஎம்சி நிச்சயம் ஒப்புக்கொள்ளும் எனக் கருதுகிறேன்.
  11. நான் முன்பு குறிப்பிட்ட குறிக்கோள்களில் ஒன்றான அளவு என்பது, நாட்டின் சுகாதார வல்லுனர்களின் காலியிடங்களை நிரப்புவதாகும். மேலும் அதிக கல்லூரிகளைத் திறந்து கூடுதல் மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதன் மூலம் மருத்துவக் கல்வியில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசர அவசியமாகும். நமது பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நாம் பயன் பெறக் கூடிய அளவில் அதிகமாகக் கையாளப்படுகின்றன. இந்தியாவில் 1.47 மில்லியன் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. ஆனால் 67,352 இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்களே இருக்கின்றன. அதிலும் 20 சதவீத இடங்கள் கடந்த 4 ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டவையாகும். இந்த இடைவெளியை மிக விரைவில் நிரப்ப வேண்டியது அவசியமாகும்.

பெரியோர்களே, தாய்மார்களே,

  1. வேலூர் சிஎம்சி நிறுவனம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பெருமையைப் பெற்றுள்ளது. இந்தியாவில் தொழுநோயாளிகளுக்கு முதல் அறுவைச் சிகிச்சை இங்குதான் செய்யப்பட்டது. அதே போல இருதய அறுவைச் சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை ஆகியவையும் வெற்றிகரமாக இங்கு நடந்துள்ளன. இந்த நிறுவனம்  படைத்துள்ள பல சாதனைகளில் இவை சில சாதனைகளாகும். சிஎம்சியில் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. தொற்றுக் கிருமி தடுப்பூசி, மஞ்சள் காமாலை, ஊட்டச்சத்துக் குறைப்பாடு, உயிரிப் பொறியியல், ஸ்டெம் செல் ஆகியவற்றில் அண்மையில் நடந்துவரும் ஆராய்ச்சிகள் சிஎம்சியின் ஈடுபாட்டை உணர்த்துவதாகும். இந்த ஆராய்ச்சிகள் இந்தியாவின் சுகாதார தேவைகளுக்கு மிகவும் அவசியமாகும்.
  2. இங்கு மேற்கொள்ளப்படும் மருத்துவக் கல்வித் திட்டம், தொழில்முறை நிபுணத்துவத்துடன் சமுதாயத்திற்குப் பொருத்தமான, தொழில்முறை ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகளை உள்ளடக்கியது என்று அறிந்தேன். உங்கள் மருத்துவமனையில் அளிக்கப்படும் சோதனைக்கூட பயிற்சிகள் கிராமங்களிலும், ஒடுக்கப்பட்டப் பகுதிகளிலும் சேவை புரிய தூண்டுபவை என்று நான் புரிந்து கொண்டேன். இது மிகவும் பாராட்டக் கூடிய சேவையாகும். இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். மருத்துவர்களுக்குக் கூர்மையான உள்ளம் அவசியமாகும். அதை விட அவர்களுக்குக் கனிவான இதயம் வேண்டும். இந்த கனிவான இதயங்கள் கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வேலூர் சிஎம்சி நிறுவனம் தொடர்ந்து பயிற்சி அளித்து வர வேண்டும்.

அடுத்த நூறு ஆண்டுகளுக்கு உங்களது சேவை மென்மேலும் தொடர வேண்டும்.

நன்றி

ஜெய்ஹிந்த்.

 



(Release ID: 1531349) Visitor Counter : 405


Read this release in: English