எரிசக்தி அமைச்சகம்

புதுதில்லியில் இந்தியா ஜப்பான் இடையிலான 9 –வது எரிசக்திப் பேச்சுவார்த்தை; எரிசக்திப் பாதுகாப்பு, எரிசக்தி அணுகும் வழி மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் ஒப்புதல்

Posted On: 01 MAY 2018 3:42PM by PIB Chennai

பொருளாதார வளர்ச்சிக்கு, நம்பகமான, தூய்மையான, குறைந்த செலவில் உற்பத்திச் செய்யப்படும் எரிசக்தி மிகவும் அத்தியாவசியமானது என்று இந்தியாவும் ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்தியா ஜப்பான் இடையிலான 9 –வது எரிசக்திப் பேச்சுவார்த்தைத் தொடர்பான கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பாதுகாப்பான, எளிதில் அணுகக் கூடிய எரிசக்தி வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் எரிசக்தி மற்றும் புதிய, புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஆர்.கே. சிங், ஜப்பான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. ஹிரோசிகே செக்கோ ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகத் திகழும் ஜப்பானும், ஏழாவது பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவும் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புதல் தெரிவித்தனர். இதற்கு நம்பகத் தன்மை வாய்ந்த தூய்மையான குறைந்தச் செலவில் உற்பத்திச் செய்யப்படும் மின்சாரப் பயன்பாடு அவசியமென்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி பாதுகாப்பு அவசியம் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு நீடித்த மின் தொகுப்புகள் அவசியமென்பதை இருநாடுகளும் உணர்ந்துள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, கார்பனை வெளிப்படுத்தாத மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதுத் தொடர்பானப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைக் காணவும்.

******



(Release ID: 1530849) Visitor Counter : 152


Read this release in: English , Hindi