பிரதமர் அலுவலகம்

புதுடெல்லி IARI-ல் நடைபெற்ற நானாஜி தேஷ்முக் பிறந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 11 OCT 2017 6:08PM by PIB Chennai

இன்று லோக்நாயக் ஜெய்பிரகாஷ்  அவர்களின் பிறந்தநாள். மேலும் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் அவர்களின் நெருங்கிய சகாவான மதிப்புமிகு நானாஜி தேஷ்முக் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவும் இன்றைக்குக் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு பெரிய தலைவர்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு கம்பீரமான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, நாட்டில் உள்ள சக மக்களின் நலனுக்காகவும், தாய்நாட்டின் நலனுக்காகவும் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துள்ளார்கள். சுதந்திரப் போராட்ட காலத்தில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராக லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணன் இருந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942-ல் அதன் உச்சத்தைத் தொட்டது. மகாத்மா காந்தி, சர்தார் படேல் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் அனைவரையும் ஆங்கிலேய ஆட்சி சிறையில் தள்ளியது. அந்த நேரத்தில் ஜெய்பிரகாஷ் ஜி யும், லோஹியா ஜி யும், அவர்களைப் போன்ற இளைஞர்களும் முன்வந்து அந்த இயக்கத்தை முன்னெடுத்துச்சென்றனர். அந்தக் காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சக்தியாக அவர்கள் விளங்கினார்கள்.

     சுதந்திரப் போராட்டத்தின் அந்தக் காலக்கட்டத்தில் மக்கள் தலைவராக இருந்து இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சக்தியாக ஜெய்பிரகாஷ் ஜி இருந்தார். இருந்தபோதிலும், சுதந்திரத்துக்குப் பிறகு பல முன்னோடிகள்  ஆட்சிஅதிகாரத்தில் பங்கு தேட முயற்சித்தபோது, ஜெய்பிரகாஷ் நாராயண் அதிகார அரசியலில் இருந்து விலகியே இருந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு ஜெய்பிரகாஷ் ஜி யும் அவருடைய மனைவி திருமதி பிரபாதேவி ஜியும் கிராமப்புற வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் என்ற பாதையைத் தேர்வு செய்தனர்.

 

     அந்தக் காலக்கட்டத்தில் நானாஜி தேஷ்முக் நாட்டில் பிரபலம் அடைந்திருக்கவில்லை. நாட்டுக்காக அவர் தன் வாழ்வை அர்ப்பணித்தார். ஆனால் ஜெய்பிரகாஷ் ஜி ஊழலுக்கு எதிராக போரிட்டுக்கொண்டிருந்த நேரத்தில், நெருக்கடிநிலை அமல் செய்யப்படுவதற்கு முந்தைய காலத்திலேயே, ஊழல் காரணமாக, நாட்டின் உயர்ந்தநிலை அலுவலகங்களில் நிலவும் ஊழல் காரணமாக ஏற்பட்ட வருத்தத்தால் மீண்டும் ஒருமுறை ஜெய்பிரகாஷ் ஜி மாணவர் இயக்கத்தில் சேர்ந்தார்.  குஜராத்தில் மாணவர் இயக்கத்தால் உந்தப்பட்டு ஜெய்பிரகாஷ் நாராயண் மீண்டும் பொதுவாழ்வுக்கு வந்தார். அதனால் டெல்லியில் அரசாங்கத்தில் பெரிய கிளர்ச்சிகள் ஏற்பட்டன. ஜெய்பிரகாஷ் ஜி யை எப்படித் தடுக்கலாம் என்பதற்காக ஏராளமான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. பாட்னாவில் பொதுநிகழ்ச்சியில் பேரணி சென்றபோது ஜெய்பிரகாஷ் ஜி மீது பெரிய தாக்குதல் நடத்தும் அளவுக்கு அது மோசமாகப் போனது. அந்த நேரத்தில் அவருக்கு அருகில் நின்றிருந்தார் நானாஜி தேஷ்முக். அவர் தனது கையை முன்னால் வைத்து உயிரைப் பறிக்கும் தாக்குதலை தாங்கிக் கொண்டார். அவருடைய எலும்புகள் முறிந்துவிட்டன. ஆனால் அந்தத் தாக்குதலில் இருந்து ஜெய்பிரகாஷ் ஜி யை அவர் காப்பாற்றிவிட்டார். அந்தச் சம்பவம்தான் நாட்டின் கவனத்தை நானாஜி தேஷ்முக் மீது திருப்பியது. தன்னுடைய வாழ்நாள் முழுக்க நானாஜி நாட்டுக்காகவே வாழ்ந்தார். தீன்தயாள் ஆராய்ச்சி நிலையத்தில் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் தம்பதிகளை அவர் அடையாளம் கண்டார். எந்தச் சூழ்நிலையிலும் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தம்பதிகளை இனம் கண்டு ஊக்குவித்தார். இந்த வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என்று  இளம் தம்பதியினருக்கு  அவர் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தம்பதியினர்  இதில் ஈடுபட முன்வந்தனர். கிராமங்களின் வளர்ச்சிப் பணிகளில் அவர்களை அவர் ஈடுபடுத்தினார்.  மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில், ஜனதா கட்சி ஆட்சியின்போது, அவருடைய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்குமாறு நானாஜி தேஷ்முக் அழைக்கப்பட்டார். ஆனால் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் ஜியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பணிவுடன் அதை மறுத்துவிட்டார் நானாஜி. 60 வயதுக்குப் பிறகு அரசியல் வாழ்வில் இருந்து விலகி, வாழ்நாள் முழுக்க அப்படியே இருந்துவிட்டார். தன் வாழ்நாளில் சித்ரகூடம், கோண்டா மையம் ஆகியவற்றை உருவாக்கிக் கிராமப்புற வளர்ச்சிக்காகச் சுமார் 35 ஆண்டுகள் தன் வாழ்வை அவர் அர்ப்பணித்துக்கொண்டிருந்தார்.

     இன்றைக்கு,  நானாஜி தேஷ்முக் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டிய சமயத்தில்  இந்த இரு மாபெரும் தலைவர்களின் கனவுகளை நிறைவேற்றும்வகையில் கிராமங்களின் வளர்ச்சியில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு, இந்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தத் திசையில் நாட்டை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று மகாத்மா காந்தி காட்டிய பாதையில் அரசு முயற்சிகள் எடுத்துவருகிறது. நமது கிராமங்களை எப்படிச் சுயசார்பு உள்ளவையாக ஆக்குவது, வறுமையில் இருந்து கிராமங்களை எப்படி விடுவிப்பது, நோய்களில் இருந்து எப்படி விடுவிப்பது, இன்றைக்கும் கூட கிராமங்களைச் சாதிப் பிரச்சினைகள் அழிவுக்கு கொண்டுசெல்கின்றன, கிராமத்தினரின் கனவுகளை அது சிதைக்கிறது, சாதிகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளால் நமது கிராமங்களில் வளமையை எப்படிப் பெருக்குவது, கிராமத்தின் நலனுக்காக எல்லா மக்களும் கூட்டாக உறுதி எடுக்கும் வகையில் எல்லோரையும் எப்படி ஒன்றுசேர்ப்பது என்பதற்கான பாதையில் அரசு முயற்சிகள் எடுத்துவருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுமக்களின் பங்கேற்பு அடிப்படையில், கிராமப்புற வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசு ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

 

     இன்றைக்குக் கிராம மக்கள் வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும் மக்கள், கிராம மக்கள் வாழ்வுக்குப் பங்களிப்பு செய்துள்ளவர்கள், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் விவசாய வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அதுபோன்ற 300க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஒன்றாக அமர்ந்து, அவர்கள் வெவ்வேறு குழுக்களாக அமர்ந்து, நவீனச் சூழ்நிலையில் கிராமங்களின் வளர்ச்சி பற்றி விவாதித்தனர். அனுபவமிக்க இவர்கள் நேற்று முழுக்க விவாதித்துள்ளனர். இந்த விவாதங்களின் முக்கிய அம்சங்களை ஒரு வீடியோ மூலம் காட்டுவதற்குச் சற்றுமுன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், தங்களுடைய கலந்துரையாடல்களுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்டுள்ள விஷயங்களை அரசு கவனத்தில் கொள்ளும் என்றும், அவற்றை முக்கியமானவையாகக் கருதி, அமல் செய்யக் கூடிய விஷயங்கள், இந்த மேற்கோள் விஷயங்கள் அரசின் திட்டங்களில் சேர்க்கப்படும் என்றும் இவர்களுக்கு நான் உறுதி அளிக்க விரும்புகிறேன்.  பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, இந்தியாவின் கிராமப்புறங்களின் வாழ்க்கை குறித்த இந்தக் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. நாட்டின் வெவ்வேறு மூலைகளில் இருந்து நிபுணர்கள் இதற்கு வந்திருக்கிறார்கள். வெவ்வேறு பகுதிகளின் இயல்புகளும் மாறுபட்டவை. அவர்களுடைய பிரச்சினைகள், அவர்களுடைய ஆதார வளங்கள்,  எல்லாமே வேறுபட்டவை. கிராமங்களின் வளர்ச்சி, அந்தக் கிராமத்தின் ஆதாரத்தை அடிப்படையாகக்கொண்டதாக அவர்கள் விரும்பக் கூடிய வகையில் இருந்தால், அது நீடித்த வளர்ச்சியைத் தருவதாக இருக்கும் என்பது அதன் போக்கு மற்றும் இயல்பாக இருக்கும். சில நேரங்களில் வெளியில்இருந்து திணிக்கப்படும் விஷயங்களை ஏற்கும் தைரியம் கிராமப் பகுதியில் இல்லாமல் போகலாம். அது முரண்பாடாக அமைந்துவிடக் கூடும். அதனால் தான் கிராமத்தின் சொந்தப் பலத்தை முதலில் கருத்தில் எடுத்துக் கொண்டு, எதன் மூலமாகக் கிராமத்தினர் பரிச்சயம் கொண்டு முன்னேற முடியும் என்றும், அவர்களுக்குப் பொருத்தமானது எது என்றும் அறிந்து நாம் முயற்சிகள் எடுக்கிறோம். அதற்குச் சிறிய மாறுதல் தேவைப்படுகிறது. அதற்குப் பொருளாதாரக் கண்ணோட்டத்திலும்,  தொழில்நுட்ப கண்ணோட்டத்திலும் ஆதரவு அமைப்பு முறை தேவைப்படுகிறது. அதைப் பலப்படுத்தி நாம் முன்னெடுத்துச்சென்றால் அதை அந்தக் கிராமம் எளிதாக ஏற்றுக் கொள்ளும். தனது வளர்ச்சிக்கான பயணத்தைக் கிராமமே முழுமையாக ஏற்றுக்கொண்டுவிடும். அது நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதாகவும் இருக்கும். களத்தில் உள்ள எதார்த்தங்களின் அடிப்படையில் உங்கள் கலந்துரையாடல்கள் உள்ளன. களத்தில் உள்ள எதார்த்தங்களின் அடிப்படையிலான அந்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. கிராமப்புற வளர்ச்சியை நாம் வேகமாகச் செய்ய விரும்புகிறோம் என்பதில் நான் நம்பிக்கையாக இருக்கிறேன்; வளர்ச்சி தேவை என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். குறித்த காலக்கெடுவுக்குள் நமது பணியை நாம் நிறைவேற்றினால், நமது திட்டங்களில் பயனடைய வேண்டியவர்களுக்காக நாம் முழுமையாக திட்டங்களைச் செயல்படுத்தினால், நாம் இலக்காகக் கொண்டிருப்பவர்களுக்காகச் செயல்பட்டால், திட்டம் தொடங்கப்பட்ட அந்த நோக்கங்களில் திசை மாற்றம் அல்லது விடுபடுதல் இருக்கக் கூடாது, குறித்த காலகெடுவுக்குள் செயல்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். என்ன உற்பத்தி கிடைக்கிறது என்பதைவிட, என்ன பயன் கிடைக்கிறது என்பதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வளவு தொகை கொடுத்திருக்கிறோம் என்பது போதுமானதல்ல. இவ்வளவு பட்ஜெட்டுக்கு இதுதான் இலக்கு என எடுத்துக்கொண்டு, அதை நாம் எட்ட வேண்டும். நாம் ஒன்றுபட்டுக் கூட்டாக முயற்சி மேற்கொண்டால், குறித்த காலக்கெடுவுக்குள் நாம் நிறைவேற்றினால், சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்யும் 2022 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புற மக்களின் வாழ்வில் மாற்றங்கள் வந்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் இப்போதைய வளர்ச்சிப்பணிகளின் வேகத்தால், கனவாகவே உள்ள மாற்றத்தைக் கிராம மக்கள் நனவாக்கிப் பார்த்திட முடியும். இன்றைக்கு, நகர்ப்புறத்தில் உள்ள குடிமக்களைப் போன்ற அதே வசதிகளுடன் தாமும் வாழ வேண்டும் என்று கிராமப்புறக் குடிமகனும் விரும்புகிறான். நகர்ப்புறங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும். நகரங்கள் மின்சாரத்தால் ஒளிவெள்ளத்தில் மிதக்கின்றன என்றால், கிராமங்களிலும் அந்த நிலை வர வேண்டும். நகரங்களில் உள்ளவர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் டி.வி. பார்க்க முடிகிறது என்றால், கிராமப்புறத்தவரும் அதேபோல பார்க்க முடிய வேண்டும். நகர்ப்புறப் பள்ளிக்கூட மாணவன் பள்ளியில் உள்ள ஆய்வகத்துக்குச் சென்று ஒரு பரிசோதனையைச் செய்துபார்க்க முடிகிறது என்றால், கிராமப்புற மாணவனுக்கும் அது சாத்தியமாக வேண்டும். நவீனக் கணினி மூலமாக நகர்ப்புற மாணவனுக்குத் தொழில்நுட்பக் கல்வி கிடைக்கிறதென்றால், கிராமப்புற மாணவனுக்கும் அது கிடைக்க வேண்டும். தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிக்கு அதே வாய்ப்புகள் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

 

இப்போதெல்லாம், சில நேரங்களில் ஆசிரியர்கள் கிராமங்களில் தங்குவதற்கு விரும்புவதில்லை. டாக்டர் இரவில் திரும்பிச் சென்றுவிட விரும்புகிறார்; ஆனால் நகரங்களில் கிடைக்கும் குழாய் மூலமான குடிநீர், ஆப்டிகல் பைபர் நெட்வொர்க், இணையத் தொடர்பு, நாள் முழுக்க மின்சார வசதி மற்றும் எரிவாயு இணைப்பு போன்றவற்றை நாம் கிடைக்கச் செய்தால், கிராமப்புற மக்களின் வாழ்வில் தரமான மாற்றத்தை நாம் ஏற்படுத்த முடியும். அந்த மக்கள் கிராமத்திலேயே தங்கியிருக்க ஊக்குவிப்பதாக அது இருக்கும். ஓர் ஆசிரியர் கிராமத்தில் தங்கினால், ஒரு டாக்டர், ஒரு அரசுஊழியர் கிராமங்களில் தங்கினால், கிராமப்புற வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த, அவர்களே காரணமாக அமைவார்கள். அதனால்தான் மகாத்மா காந்தியின் கனவுகளைப் பின்பற்றி, தீன்தயாள் உபாத்யாயா முன்வைத்த விஷயங்களைப் பின்பற்றி, நானாஜி மற்றும் ஜெய்பிரகாஷ் ஜி ஆகியோர் வாழ்ந்த சித்தாந்தங்களைப் பின்பற்றி, கிராமப்புற வாழ்வில் மாறுதல்களை ஏற்படுத்துவதற்கான முக்கியமான பாதையில் முன்னெடுத்துச் செல்ல நாம் முயற்சிகள் எடுக்கிறோம். இந்தச் சித்தாத்தங்களை மனதில் கொண்டு கிராமப்புற வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நமது முயற்சிகள் இருக்க வேண்டும்.

 

     நாட்டில் ஆதாரவளங்கள் பற்றாக்குறை காரணமாக, கடைசி நபர் வரையிலானவர்களுக்கு நம்மால் எதையும் அளிக்க முடியவில்லை; இன்றைக்கு, மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு இதுபோன்ற வாதங்களில் நான் திருப்தி அடையவில்லை. நாட்டின் கடைக்கோடி நபருக்கும் உரிமைகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என நாம் விரும்பினால், அதற்கு நாட்டில் ஆதாரவளங்களுக்கு எந்தப் பஞ்சமும் கிடையாது. ஏதாவது பற்றாக்குறை இருக்குமானால், அது நல்ல நிர்வாகத்தில் குறை இருக்கிறது என்று அர்த்தம். நல்ல நிர்வாகம் உள்ள மாநிலங்களில், பணிகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்காக அரசு செயல்பாடுகளை முடுக்கிவிடும் மாநிலங்களில் மாற்றங்கள் இருப்பதை நீங்கள் காண முடியும். MNREGA-வைப் பாருங்கள். MNREGA-ல் ஒரு தனித்துவமான அம்சம் இருக்கிறது. கிராமப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், வறுமை அதிகமாக இருக்கும் மாநிலங்களில் MNREGA-திட்டத்தின் கீழ் குறைவான பணிகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை அனுபவம் காட்டுகிறது. இருந்தபோதிலும், அதிக அளவுக்கு வறுமை இல்லாத மாநிலங்களில், ஆக்கபூர்வமாக உள்ள மாநிலங்களில், அங்கு நல்ல நிர்வாகம் இருந்தால், அதிகமான திட்டங்களை அவர்கள் உருவாக்குகிறார்கள், அதிகம் மக்களைச் சேர்க்கிறார்கள், அதிகம் பணிகளை அவர்களால் செய்ய முடிகிறது. அதனால்தான் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்ச்சியான முயற்சியாக இருக்க வேண்டும் என நமது அரசாங்கம் வலியுறுத்துகிறது.

     இன்றைக்கு டிஜிட்டல் முன்தகவல் பலகை -DISHA- உங்களுக்கு தரப்பட்டுள்ள இந்த வசதி, நல்ல நிர்வாகத்தை நோக்கிய வழியில் முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். அதன் மூலமாக, எல்லாவற்றையும் மத்தியில் இருந்தே கண்காணிக்க முடியும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் விஷயங்களைப் பரிசீலனை செய்ய முடியும். அதில் ஏதும் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொள்கை அளவில் ஏதும் பிரச்சினைகள் இருந்தால் கொள்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஒரு நபர், பிரச்சினைக்குரியவராக இருந்தால் அவர் திருத்தப்பட வேண்டும். ஆனால், இந்த DISHA வசதியின் மூலம், இந்தக் கண்காணிப்பு முறையானது நாட்டின் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் என்பது முதலாவது விஷயம். மத்திய அரசின் தொலைநோக்குச் சிந்தனை, மாநில அரசுகளின் திட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்புகளைப் பொதுவான ஒரு கோட்டில் கொண்டுவந்துவிட்டால், அவற்றுக்கு நாம் முன்னுரிமை அளித்தால், விரும்பத்தக்க முடிவுகளை நிச்சயமாக நம்மால் எட்ட முடியும். அதனால்தான் மக்கள் பிரதிநிதிகளை DISHA வசதி மூலம் தீவிரமாக இணைக்கும் முக்கியமான பணியை மத்தியஅரசு செய்துள்ளது. மாவட்ட அளவில் அமர்ந்துகொண்டே இந்த அனைத்துத் திட்டங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்ய முடியும். தேவையைப் பொறுத்து முன்னுரிமைகள் முடிவு செய்யப்படும். விஷயங்கள் இங்கிருந்து திணிக்கப்படுவதில்லை. பணிகளை விரைவுபடுத்துவதில் பெரிய வெற்றிக்கு இது வழிவகுத்துள்ளது. எவ்வளவு மக்கள் வாக்குப்பெட்டியில் தங்கள் வாக்குகளைச் செலுத்துகிறார்கள், எவ்வளவு பேர் அங்குச் செல்கிறார்கள் என்பதில் மட்டும் ஜனநாயகத்தின் வெற்றி அமைந்திருக்கவில்லை. துரதிருஷ்டவசமாக, பல ஆண்டுகளாக நமது ஜனநாயகம் இவற்றுடன் மட்டுமே வரையறுக்கப்பட்டுக் கிடந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்குச்சாவடிக்குச் செல்வது வாக்குப்பெட்டியில் வாக்குச் சீட்டுகளைப் போடுவது அல்லது இயந்திரத்தில் பொத்தானை அழுத்துவது என்பதுடன் போய்விட்டது. எந்த அரசு, அல்லது அமைப்பு, எந்தப் பஞ்சாயத்து தேர்வு செய்யப்படுகிறதோ, அவர்கள்தான் ஐந்து ஆண்டுகளுக்கான தலைவிதியை முடிவு செய்கிறார்கள். இத்துடன் மட்டும் ஜனநாயகம் முடிந்துவிடுவதில்லை என்று நான் நினைக்கிறேன். உங்களுடைய விருப்பத் தேர்வின் அடிப்படையிலான அரசைத் தேர்வு செய்வது என்பது ஜனநாயகத்தின் முக்கியமான பணி. ஆனால், மக்களின் பங்கேற்புடன் நிர்வாகம் செய்யப்படும்போதுதான் ஜனநாயகத்தின் வெற்றி வருகிறது. கிராமங்களின் வளர்ச்சிப் பயணம் மக்கள் பங்கேற்புடன் அமைய வேண்டும். நகரத்தின் வளர்ச்சி என்பது மக்கள் பங்கேற்புடன் செல்ல வேண்டும். எனவே அரசுக்கும் மக்களுக்கும் இடையே கலந்துரையாடல் இருக்க வேண்டியது முக்கியம். வாழ்க்கை பற்றிய கலந்துரையாடல் இருக்க வேண்டும். மேலிருந்து கீழ்நிலை வரையில் சரியான வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும். சரியான தகவல்கள் கீழிருந்து மேலே செல்ல வேண்டும். இந்த இருவழித் தகவல் சரியாக அமைந்துவிட்டால், திட்டங்கள், கொள்கைகள், நிதிநிலை ஒதுக்கீடு என எல்லா விஷயங்களும் சரியான இடத்தை நோக்கியதாக அமையும். எனவே, இன்றைக்கு, ஒரு கைபேசிச் செயலி மூலமாக, கிராமத்தவர் ஒருவர் தனது கைபேசியில் இருந்து சரியான தகவலை அனுப்பலாம். மேலிருந்து கடைக்கோடி மனிதர் வரையில் சரியான தகவலை அனுப்ப முடியும். ஏனெனில், இதுதான் அங்கே உள்ளாட்சி அமைப்பு. அது அரசாங்கத்தின் அங்கமாக இருக்கிறது. ``சார் இந்தத் திட்டம் இப்படி என்று நீங்கள் சொன்னீர்கள், ஆனால் எனது கைபேசியில் வரும் தகவலின்படி திட்டம் வேறு மாதிரி இருக்கிறது. இது ஏன் இங்கே அமல் செய்யப்படவில்லை என்று எனக்கு இப்போது சொல்லுங்கள்'' என்று கிராமத்தவர் கேட்பதால், நிர்வாகம் அழுத்தத்திற்கு ஆளாகிறது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கைபேசிச் செயலியை  பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மக்களுடன் கருத்துப்பரிமாற்றம் அதிகரிப்பு மூலமாகப் பணிகளுக்கு உத்தரவு தருதல் மற்றும் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல் என்ற பெரிய பணியைச் செய்துமுடிப்பதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்.

     இன்றைக்குக் கூட, நாடு முழுக்கப் பல விஷயங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, வேளாண்மைத் துறையின் மையம் என்ற மிக முக்கியமான  தளம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் கிராமப்புறப் பொருளாதாரத்தில் கால்நடைப் பராமரிப்பும், வேளாண்மைத் துறையும்தான் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களாக உள்ளன. ஆனால் அத்துடன் நமது கிராமப்புறக் கைவினைக் கலைஞர்களும் கிராமப்புறப் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பு செய்கிறார்கள். எனவே, அது வேளாண்மையாக இருந்தாலும், கால்நடைப் பராமரிப்பாக இருந்தாலும், கைத்தறி நெசவாக இருந்தாலும் அல்லது கைவினைப் பொருள்களுடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நமது பொருளாதாரத்தின் தூண்களைப் பலப்படுத்துவதை நோக்கி நாங்கள் பணியாற்றுகிறோம். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்துவது என்று நாம் உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். ஒருபுறம் விவசாயிகளுக்கு இடுபொருள் செலவை நாம் குறைக்க வேண்டும். மற்றொருபுறம், விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இந்த இரு விஷயங்களையும் நாம் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்றால், நவீனத்துவத்தை நோக்கி நாம் சென்று, தொழில்நுட்பத்தின் உதவியை நாட வேண்டும். கால்நடைப் பராமரிப்பைப் பொருத்த வரையில், கால்நடைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பால் உற்பத்தி உயர்ந்த அளவில் இருக்க வேண்டும். தனிநபருக்கான பால் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கி நாம் முன்னேறும்போது, அது கிராமப்புறப் பொருளாதாரத்துக்கு அதிக உதவியாக இருக்கும்.

     உலகெங்கும் ரசாயன மெழுகுக்குப் பதிலாக, தேனீ மெழுகின் தேவை அதிகரித்துவருகிறது. இப்போதெல்லாம் ரசாயன மெழுகுக்குப் பதிலாக மக்கள் தேனீ மெழுகையே விரும்புகின்றனர். நமது கிராமங்களில் தேனீக்கள் வளர்ப்பை நாம் ஊக்குவித்தால், அறிவியல்பூர்வமாக தேனீ வளர்ப்புமுறையை நமது கால்நடை பராமரிப்புத் துறையில் சேர்த்தால், நமது விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகும். இன்றைக்கு மக்கள் ரசாயன மெழுகை விட்டொழிக்க விரும்பினால், தேனீ மெழுகிற்கு மிகப் பெரிய சந்தை இருக்கிறது. தேனீ மெழுகு என்ற மிகப் பெரிய சந்தையைப் பிடிக்கும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கி முன்னேற நாம் விரும்புகிறோம்.

 

     மீன்வளமாக இருந்தாலும், கோழிப் பண்ணைகளாக இருந்தாலும், கால்நடைப் பராமரிப்பு அல்லது வேளாண்மையாக இருந்தாலும், கால்நடைப் பராமரிப்பு அல்லது வேளாண்மையுடன் மூங்கில் சாகுபடியையும் நாம் சேர்த்தால், வரப்புகளில் நாம் மூங்கில் வளர்க்கலாம், மூங்கில் இறக்குமதி செய்யப்படும் இந்தியாவில், அது சேமிக்கப்பட்டு, மூங்கில்கள் மூலமாக நமது நாட்டு விவசாயிகள் நிறைய சம்பாதிக்க முடியும். தங்கள் குடும்பங்களில் அவர்கள் ஒருபோதும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்காது. தானாகவே பயன்கள் கிடைக்கும்படி செய்வதற்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையில் கடினமான உழைப்பு தேவைப்படும். இதுபோன்ற ஒருங்கிணைந்த ஒட்டுமொத்தமான அணுகுமுறையுடன் கிராமப்புற வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்லும்வகையில் நாம் பணியாற்றி வருகிறோம்.

 

     சில பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலவரம்புக்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மேற்கொண்டிருக்கிறோம். கிராமப்புற வாழ்க்கையில் முன்பு குப்பைக் கூளங்கள் அங்கமாக இருந்தன. மக்கள் அவற்றைச் சகித்துக்கொண்டிருந்தார்கள். அதுதான் தங்கள் தலைவிதி என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல விழிப்புணர்வு பெற்ற பிறகு, அவர்கள் மாறத் தொடங்கி இருக்கிறார்கள். திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலை என்ற இயக்கம் கிராமப்புறத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட கால வரம்புக்குள் கழிப்பறைகள் உருவாக்கும் இயக்கம் தொடங்கப்பட்டது. இன்றைக்குப் படிப்படியாக நிலைமை முன்னேறியுள்ளது. நேற்று வரையில் கழிப்பறை என்று நாம் கூறிவந்த நிலை மாறி, கவுரமான வீடுகள் என்று கூறும் நிலை இன்று உருவாகிஇருக்கிறது. கழிவறைகள் மீது கவுரவ இல்லம் என எழுதப்படுகிறது. கழிவறைகளை உருவாக்கித்தந்து தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் அளிப்பதைவிட பெரிய பரிசு எதுவும் நிச்சயமாக இருக்க முடியாது. கழிப்பிட வசதிக்காகத் தாய்மார்களும், சகோதரிகளும் திறந்தவெளி பகுதிகளுக்குச் செல்வதற்கு, சூரிய அஸ்தமனம் வரையில் காத்திருக்க வேண்டியிருந்தது. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பே செல்ல வேண்டியிருந்தது; பகல் நேரத்தில் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் நமது தாய்மார்களும், சகோதரிகளும் எவ்வளவு வலியாக உணர்ந்திருப்பார்கள்? இதுநாள் வரையில் இது உணரப்படவில்லை. திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலை என்ற இயக்கம் வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, கழிவறைகள் உருவாக்குவது என்ற பிரச்சினை எப்போது வந்தாலும், அந்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள், அவர்களுடைய பிரச்சினைகளைப் பாருங்கள். ‘எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு மத்திய அரசின் கழிப்பறைத் திட்டத்தின் கீழ் நான் முதலில் கழிப்பறை கட்டிப் பயன்படுத்தப் போகிறேன்’ என்று நீங்கள் உணர்வீர்கள்.

இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள், திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாதவையாக மாறுவதற்கு முன்வந்துள்ளன. அவர்கள் அதைச் செய்திருக்கிறார்கள். மனப்பூர்வமாக அந்தக் கிராமங்களை நான் பாராட்டுகிறேன். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியத்துக்காக அவர்கள் மிகப் பெரிய நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளைக் கவுரவமாக நடத்தும் ஒரு கிராமம் நல்ல சிந்தனை உள்ள கிராமமாக எனக்குத் தோன்றுகிறது. அவற்றுக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த முக்கியப் பணியைச் செய்தமைக்காக அந்தக் கிராமத்து மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

இன்றைக்குச் சுத்தம் என்பது நமது கிராமங்களில் இயல்பாகிவிட்டது. அவர்களும் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், நமது பல கிராமங்கள், 18 ஆயிரம் கிராமங்கள், இன்னும் 18-ஆவது நூற்றாண்டிலேயே வாழ்கின்றன. மின்சாரக் கம்பங்கள் இல்லை, மின்சார பல்பு கிடையாது, இந்தக் கிராமங்கள் ஒருபோதும் மின்சாரத்தைப் பார்த்தது கிடையாது. 1000 நாட்களில் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டுவருவோம் என செங்கோட்டையில் இருந்து அறிவித்து, நாங்கள் முயற்சிகள் எடுத்தோம். மாநில அரசுகளும் இதில் உதவிகரமாக இருந்தன. மத்திய அரசு இதை விரைவுபடுத்தியது. இன்றைக்கு அந்த 18,000 கிராமங்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டுசெல்வது என்ற இலக்கை நோக்கி நாம் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஏறத்தாழ 15,000 கிராமங்களுக்கு மின்சாரவசதி செய்தாகிவிட்டது. இப்போது, கிராமங்களுக்கு மின்சாரவசதி கிடைத்ததும், அத்துடன் நாங்கள் நின்றுவிடப் போவதில்லை. கிராமத்துவீடாக இருந்தாலும், அல்லது நகரத்து வீடாக இருந்தாலும், அல்லது குடிலாக இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் மின்சார பல்புகள் இருக்க வேண்டும், 24 மணி நேர மின்சார வசதி அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போது எங்களுடைய கனவு. இதை மிகப் பெரிய ஒரு பணியாக நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஏழைக் குடும்பங்கள் மின்சார இணைப்புக்குப் பணம் செலுத்தியாக வேண்டும். எனவே, இலவசமாக இணைப்பும், மின்சாரமும் அளிக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். மின்சாரம் அளிக்கப்பட்டுவிட்டால், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் நிச்சயமாக மாறும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் கல்வி மேம்படும் என்றும் நம்புகிறேன். வீட்டுக்குள் அவர்களுடைய வழக்கமான வாழ்க்கைமுறை மாறும். 24 மணி நேர மின்சார வசதி அளிப்பது என்ற உறுதியான இலக்கை நோக்கி நாங்கள் முன்னேறிச் செல்கிறோம். கிராமத்து மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த, கிராமப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நகரங்களில் நவநாகரிகப் பொருட்களாக்கி  நாம் ஆதரிக்க வேண்டும். சாதாரண மக்கள் செய்யும் பொருட்கள், நகரில் பெரிய வீடுகளில் ஏதாவது பயனாக இருக்கும் என்றால், அது கிராமப்புறப் பொருளாதாரத்துக்குப் பெரிய உதவியாக இருக்கும். கிராமப்புற மண்பாண்டத்  தொழிலாளி தயாரிக்கும் அகல் விளக்குகளை தீபாவளிக்கு நீங்கள் வாங்கினால், அந்த மண்பாண்டத் தொழிலாளியின் வீட்டில் தானாகவே தீபாவளி விளக்கு ஏற்றப்படும். நமக்கு இது சிரமமான பணி அல்ல. நகரங்களில் வாழ்பவர்கள், தங்கள் வாழ்க்கைத் தேவைகள் அனைத்திற்கும் கிராமப்புறப் பொருளாதாரம் என்ற கண்ணோட்டத்தில் செயல்பட்டால், குறிப்பிட்ட புதுமையை நாம் உணரத் தொடங்குவோம். நமக்கு ஒரு மனநிறைவு தோன்றும். எனவே, கிராமங்களின் சந்தைகளாக நகரங்கள் மாற வேண்டும். கிராமங்களில் இருந்து வரும் உணவு தானியங்களுக்கு மட்டும் தான் நகரங்கள் சந்தைகளாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. கிராமத்தில் உற்பத்தியாகும் அனைத்திற்குமே நகரங்களில் சந்தை உருவாக்கப்பட்டால், என் நாட்டில் எந்தக் கிராமமும் ஏழ்மையில் வாடாது, கிராமத்தில் உள்ள எந்தக் குடும்பமும் ஏழ்மையில் உழலாது, அந்த்யோதயா என்று பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கண்ட கனவை நாம் பூர்த்தி செய்திட முடியும். நானாஜி தேஷ்முக் பிறந்த நூற்றாண்டை ஒட்டி, மத்தியஅரசு ஓர் அஞ்சல் தலை வெளியிட்டிருக்கிறது. அஞ்சல் துறை மூலமாக எப்போது இந்த அஞ்சல் தலை மக்களைச் சென்றடைந்தாலும், இயல்பாகவே நானாஜி பற்றி அறிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற ஒரு மகான், நாட்டு மக்களுக்காக வாழ்வது மட்டுமே தன்னுடைய வாழ்வின் அவசியமாகக் கொண்டிருந்தவர், கிராமப்புற வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வருவது மற்றும் மற்றவர்களுக்கான மாற்றங்களைத் தாமாகவே சோதனைகள் செய்துபார்ப்பது என்று இருந்தவர் அவர். கிராமங்களில் பணிகளை நானாஜி தொடங்கிய பிறகு, பொறுப்புக்கு வந்த அனைத்துக் குடியரசுத் தலைவர்களும் இந்தப் பணியுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். நானா ஜி யின் பணிகளை அவர்கள் தொடர்ந்து புகழ்ந்துகொண்டிருந்தனர். திட்டப் பணிகளை அவர்கள் தொடர்ந்து பார்வையிட்டனர். இது நானாஜியின் தனித்துவமான திறன்களின் பிரதிபலிப்பாக இருக்கின்றது. இன்றைக்கு, நானா ஜி யின் பிறந்த நூற்றாண்டில், இந்தியா முழுக்க உள்ள கிராமப்புற மக்கள் வந்திருக்கிறார்கள். மத்திய அரசின், தொடர்புடைய அனைத்துத் துறைகளும் வந்திருக்கின்றன. கிராமப்புற வாழ்வில் மாற்றங்களை உருவாக்குவது என்ற உறுதியில் நாம் முன்னேறிச் செல்கிறோம். நமது சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை 2022-இல் நாம் நிறைவு செய்யும்போது, ஒவ்வொரு கிராமமும் உறுதியேற்க வேண்டும், 2022 ஆம் ஆண்டுக்குள் என் கிராமத்துக்காக நான் இதைச் செய்வேன் என்று ஒவ்வொரு கிராமத்தவரும் உறுதியேற்க வேண்டும். நாட்டுக்காக நானும் எனது கிராமமும் கூட்டாக இதைச் செய்வோம் என உறுதியேற்க வேண்டும். இந்த உறுதியை நிறைவேற்றுவதில் நாம் முன்னேறிச்சென்றால், நாம் தொடங்கிய பயணத்தின்படி, கிராமங்களைக் கைதூக்கிவிடுவது என்ற கனவை நாம் நனவாக்கிடலாம். இங்கே ஏற்பாடுசெய்துள்ள கண்காட்சியைச் சற்று முன்னர் நான் பார்வையிட்டேன். இங்கே வந்திருப்பவர்களுக்குச் சொல்வதற்கு இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன; வெற்றிகரமான பரிசோதனைகளுக்கு உதாரணங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன; அவற்றைப் புரிந்துகொள்வதில் நான் கவனம் செலுத்தினேன்; அடிக்கடி நின்று கேட்டறிந்தேன்; பார்க்க முயற்சித்தேன், புரிந்துகொள்ள முயற்சித்தேன், ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளைக் கண்டு, எந்த வகையில் புதிய முயற்சிகளை எடுக்கிறார்கள் என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன், கிராமங்களில் எந்த அளவுக்குத் தொழில்நுட்பம் சென்று சேர்ந்திருக்கிறது? அவற்றையெல்லாம் பார்த்ததில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் எவ்வளவு அவசர வேலை இருந்தாலும், அல்லது எவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் புறப்பட வேண்டியிருந்தாலும், தயவுசெய்து இந்தக் கண்காட்சியில் உள்ள எல்லா விஷயங்களையும் நன்றாகப் பார்த்து, சம்பந்தப்பட்ட மக்களின் தொடர்பு விவரங்களைப் பெற்றுச்செல்லுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கிராமத்துக்கு இதில் எவையெல்லாம் பொருத்தமாக இருக்கும், உங்கள் கிராமத்தில் இவற்றை எப்படிச் செயல்படுத்தலாம்? சிலவற்றை நாமே நேரில் பார்க்கும்போது, அதன் செயல்திறன் பற்றி நாம் நன்றாக அறிகிறோம். எனவே, இந்தக் கண்காட்சியில் சில மணி நேரங்களைச் செலவிட்டு, விஷயங்களைக் கவனித்து, நல்லவற்றை உங்கள் கிராமங்களில் செயல்படுத்துங்கள் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். மீண்டும் ஒரு முறை நானா ஜி க்கு நான் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாபு ஜெய்பிரகாஷ் ஜி க்குத் தலைவணங்குகிறேன். அனைத்துக் கிராமங்களில் இருந்தும் வந்திருக்கும், விவரம் அறிந்த சகோதர, சகோதரி குடிமக்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு மிக்க நன்றி.

 

*****



(Release ID: 1530411) Visitor Counter : 341


Read this release in: English