பிரதமர் அலுவலகம்

வாரணசி, ஷாஹன்ஷாபூரில் ‘பசுதான் ஆரோக்கிய மேளா’வில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 23 SEP 2017 2:01PM by PIB Chennai

பெரும் எண்ணிக்கையில் இங்குக் கூடியுள்ள எனது அன்பு சகோதர, சகோதரிகளே,

அதிகாலை வேளையில் இங்கு இத்தகைய ஒரு பெருங்கூட்டம் கூடியுள்ளது! எங்கு பார்த்தாலும் மக்களைக் காணும் இத்தகைய ஒரு கூட்டத்தை நான் கற்பனை கூடச் செய்து பார்க்கவில்லை! நாங்கள் செய்த ஏற்பாடுகள் போதவில்லை என்பதால், மக்கள் வெயிலில் நின்றுகொண்டு பல துயரங்களை அனுபவித்து கொண்டிருப்பதற்காக முதலில் நான் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல் எங்களுக்கு ஆசி கூறி அனைவரும் இங்கு கூடியுள்ளனர் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களிடம் மன்னிப்பும் கோருகிறேன். அதே நேரத்தில் வெயிலில் நின்று கொண்டிருக்கும் மக்கள் சந்தித்துவரும் துயரங்கள் வீணாகாது என்ற உறுதியையும் அளிக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே, கால்நடைகளுக்கான இந்தச் சுகாதார முகாமை ஏற்பாடுசெய்துள்ள உத்தரப் பிரதேச அரசுக்கு, குறிப்பாக உத்தரப் பிரதேச முதல்வருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கால்நடைகளுக்கான இந்தச் சுகாதார முகாமை நான் பார்வையிட்டபோது பல்வேறு இடங்களில் இருந்து 1700 கால்நடைகள் இதில் பங்கேற்றுஇருப்பதையும், பல்வேறு கால்நடை மருத்துவநிபுணர்கள் வந்து இந்த முகாமில் கால்நடைகளின் சுகாதாரத்தில் கவனம் செலுத்தினார்கள் என்பதையும் கண்டேன்.  இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள உத்தரப்பிரதேச அரசு மாநிலம் முழுவதும் இத்தகைய கால்நடைச் சுகாதாரமுகாம்களை ஏற்பாடுசெய்து, ஏழ்மைக் காரணமாக கால்நடைகளின் சுகாதாரம் குறித்து உறுதி செய்யத் தயங்கும் நமது ஏழை விவசாயிகளுக்கு இத்தகைய கால்நடைச் சுகாதார முகாம்கள் பெரும் நிவாரணம் அளிக்கும் என நான் நம்புகிறேன்.

வேளாண் துறையில் நமது விவசாயிகளுக்கு வேளாண் நிலத்தில் அதிகம் உதவி செய்வது இந்தக் கால்நடைகள் மற்றும் அவற்றின் பால் உற்பத்தி என நம் அனைவருக்கும் தெரியும். எனவேதான் பால் உற்பத்தி, கால்நடைகள் மற்றும் நமது கால்நடைச் சுகாதார முகாம்கள் பெரும் வசதி, பெரும் சேவை ஆகியவற்றை நமது கிராமங்களுக்கும், நமது ஏழை விவசாயிகளுக்கும், நமது கால்நடை வளர்ப்போருக்கும் வரும் நாட்களில் அளிக்கும்.

சகோதர, சகோதரிகளே, எங்கு ஓட்டு கிடைக்குமோ அதற்குத் தான் நமது அரசியல்வாதிகள் முன்னுரிமை அளிப்பார்கள் என்பது இயல்பானது. தங்களது வாக்குவங்கியைப் பலப்படுத்திக் கொள்ளவே அவர்கள் பணியாற்றுவார்கள். ஆனால் சகோதர, சகோதரிகளே, நாங்கள் மாறுபட்ட மதிப்பு முறையில் வளர்ந்தவர்கள் என்பதால் எங்களது சிந்தனையும் மாறுபட்டது. எங்களுக்குக் கட்சியை விட தேசம் முக்கியம் என்பதால், எங்களது கொள்கைகள் ஓட்டுக்களைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை.

இன்றைய தினம், இந்தக் கால்நடை சுகாதார முகாம் என்பது வாக்குரிமை இல்லாத விலங்குகளுக்கான சேவையாகும். இவை யாருக்கும் வாக்கு அளிக்கப்போவதில்லை. கடந்த எழுபது ஆண்டுகளில் கால்நடைகளுக்கான இத்தகைய இயக்கம் நடத்தப்பட்டதேயில்லை. இந்தச் சுகாதாரச் சேவைகள் கால்நடைப் பராமரிப்பில் புதிய வசதியை அளிக்கும்; இது புதிய முறை ஒன்றை அளிக்கும்.

இன்றைய தினம், நமது நாடு பால் உற்பத்தித் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது. எனினும், நமது பால்உற்பத்தி என்பது உலகச் சராசரியுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. இதனால் நமது நாட்டில் கால்நடைவளர்ப்பு என்பது கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கால்நடையின் பால்உற்பத்தி அளவை அதிகரிப்பதில் நாம் வெற்றி பெற்றால், நமது விவசாயிகள் கால்நடைப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் நமது பால் உற்பத்தி புதிய பொருளாதாரப் புரட்சிக்கு வழிவகுக்கும்.

 

சகோதர, சகோதரிகளே, நான் குஜராத்தில் பிறந்தவன் என்பதுடன் குஜராத் எனது செயல்தளமாக இருந்தது என்பதுடன் கூட்டுறவுப் பால் உற்பத்தி குஜராத் விவசாயிகளுக்குப் புதிய  வலிமையை அளித்துள்ளது. லக்னோ-கான்பூர் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து குஜராத்தைச் சேர்ந்த பாமாஸ் டெய்ரி என்ற பால் பொருட்கள் நிறுவனம் பால் கொள்முதல் செய்யத் தொடங்கியிருப்பதாக நான் அறிந்தேன். மேலும் இன்றைய தினம் விவசாயிகள் தங்கள் பாலுக்கு, முன்பு பெற்றதை விடத் தற்போது பல மடங்கு கூடுதல் விலை பெறுகிறார்கள். பாமாஸ் டெய்ரி நிறுவனம் வரும் நாட்களில் காசி பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்தும் பால் கொள்முதல் செய்யவிருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

பால் நிறுவனம் ஒன்றின் மூலம் பால் கொள்முதல் அதன் கொழுப்புச் சத்து இருப்பு அடிப்படையில் தொடங்கும்போது காசி பகுதியில் உள்ள விவசாயிகளின் பால்விலை, பல மடங்கு அதிகரித்து அதன் காரணமாக அவர்களின் வருவாயும் அதிகரிக்கும். உத்தரப் பிரதேச அரசுக்கும், உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கும் குஜராத் அரசின் உதவி, பாமாஸ் டெய்ரியின் உதவியுடன் பால் உற்பத்தி மற்றும் கால்நடைப் பராமரிப்புக்காக விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்காகத் தொடங்கியுள்ள இந்த இயக்கத்தை இதனால்தான் நான் பாராட்டுகிறேன்.  

2022ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2022ம் ஆண்டு இந்தியா தனது 75 ஆண்டு சுதந்திரத்தை நிறைவு செய்யும்போது இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க நாம் இணைந்து உறுதியேற்க வேண்டும். இந்தக் கனவுகளை நனவாக்க நாம் பாடுபட வேண்டும், இந்தக் கனவுகளை நனவாக்க நாம் நமது நேரம் மற்றும் முயற்சிகளை அளித்து எப்படியேனும் அந்தக் கனவுகளை நனவாக்க வேண்டும். இந்தியாவின் 125 கோடி மக்களும் குறைந்தபட்சம் ஒரு விஷயத்த்தில் உறுதி எடுத்துக்கொண்டால் நமது நாடு ஐந்து ஆண்டுகளில் 125 கோடி அடிகள் முன்செல்லும். எனவே நமது சகோதர, சகோதரிகளே, இதுவே 2022 – நமது சுதந்திரப் போராட்டத்திற்கான உறுதிமொழி ஆகும்.

2022ம் ஆண்டுக்குள் நமது விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது நமது உறுதிமொழி. அந்தத் திசையில் கால்நடைப் பராமரிப்பு ஒரு வழிமுறை, நமது வேளாண்மையை நவீனமயமாக்குவதும் ஒரு வழிமுறையாகும். மண் சுகாதார அட்டைகள் மூலம் மண் பரிசோதனை செய்யப்பட வேண்டும், இதில் விவசாயிகளுக்கு முழு ஆதரவு கிடைக்க வேண்டும். இவற்றைப் பலப்படுத்தும் திசையில் நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

உத்தரப் பிரதேசத்தில் புதிய அரசு அமைந்த பிறகு விவசாயிகளுக்கு மண் சுகாதார அட்டை வழங்கும் பணி வேகமெடுத்துள்ளது. இது வரும் நாட்களில் நமது விவசாயிகளின் நல்வாழ்வுக்கு உதவும்.

இதேபோல், நம்மில் யாரும் அசுத்தத்தில் வாழ விரும்புவதில்லை. அசுத்தமாக இருப்பதை வெறுக்காத யாரும் நம்மிடையே இருக்க மாட்டார்கள். குப்பைகளை அனைவரும் வெறுக்கின்றனர். அதனால் தூய்மை என்பது நமது பொறுப்பு, நமது நாட்டில் இந்தக் கலாச்சாரம் உருவாகாமல் உள்ளது.

நாம் மாசுபடுத்துவோம், வேறு யாராவது வந்து அதைச் சுத்தப்படுத்துவார்கள் - இதுதான் நமக்குத் தேவையான, நகரங்கள், கிராமங்களைத் தூய்மையாக வைத்துக்கொண்டு, இந்தியாவைத் தூய்மைப்படுத்த முடியாமல் போனதற்கான முக்கியக் காரணம். தூய்மையாக வைத்துக்கொள்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்பதை நீங்கள் யாரும் மறுக்க முடியாது. தூய்மை என்பது ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பு. நமது கிராமம் மட்டும் தூய்மையாக இருந்தால் நமது பகுதி மட்டும் தூய்மையாக இருந்தால் போதாது. தூய்மை என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்குத் தூய்மையின்மையே முக்கியக் காரணமாக அமைகிறது.

இந்தியாவில் 10,000 குடும்பங்களில் ஆய்வு ஒன்றை யுனிசெஃப் சமீபத்தில் நடத்தி முடித்துள்ளது. இந்த ஆய்வானது கழிவறைகள் கட்டுவது பற்றியதாகும். ஒரு வீட்டில் கழிவறை இருந்தால் அந்த வீடு நோய் பாதிப்புகளுக்காக ஓராண்டில் செலவிடும்  50,000 ரூபாயைச் சேமிக்கலாம் என்று யுனிசெஃப் கூறியுள்ளதைச் செய்தித்தாள்களில் நான் படித்தேன். இன்று அருகில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபடுவதற்கான நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் அந்தக் கிராமத்தைத் திறந்தவெளிக் கழிப்பிடம் அற்றதாக ஆக்க கிராம மக்கள் உறுதிபூண்டுள்ளனர். அக்டோபர் 2-ஆம் தேதியிலிருந்து எந்தவொரு நபரும் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிக்கமாட்டோம் எனக் கிராம மக்கள் உறுதியெடுத்துள்ளனர். இந்த நவராத்திரி பண்டிகையின் போது அந்தக் கழிவறை கட்டுவதற்கான அடிக்கல்லை நான் நடுவதற்கான நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொருத்தவரையில் இது ஒருவிதமான வழிபாடு. எனக்குத் தூய்மை என்பது வழிபாட்டுக்குச் சமம். தூய்மை எனது நாட்டு ஏழைமக்களை நோய்கள் அண்டாமல் தடுக்கும். தூய்மையின்மை காரணமாக எனது நாட்டு ஏழைமக்களுக்கு ஏற்படும் சுமைகளைத் தூய்மை போக்கும். அதனால்தான் ஏழை மக்களின் நல்வாழ்வுக்கான எனது இயக்கமாகத் திகழ்கிறது. இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளிப்போருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது நாட்டில் பொதுவாகப் பயன்பாட்டில் இருந்த கழிவறை என்ற சொல் இன்று கழிவறை கட்ட நான் அடிக்கல் நாட்டிய கிராமத்திலும் பயன்படுத்தப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தக் கிராமத்தில் அனைத்து கழிவறைகளிலும் இசாத்நகர் (கவுரவமான இடம்) என எழுதப்பட்டுள்ளது. இசாத்நகர் என்ற அந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனெனில் இது நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு உண்மையிலேயே கவுரவமான இடமாகும். இந்த இசாத்நகரைக் கொண்டுள்ள வீடு உண்மையிலேயே ஒரு கவுரவமான இடம்தான். கழிவறை உள்ள கிராமங்களுக்கும் மதிப்பு கிட்டும். கழிவறைகளை அடையாளம் காண வசதியாக அவற்றுக்கு இசாத்கர் (கவுரவமான இடம்) என்ற சொல்லைப் பயன்படுத்த முடிவு செய்த உத்தரப் பிரதேச அரசை நான் பாராட்டுகிறேன். அவர்கள் கழிவறைகளுக்குப் புதிய மரியாதையைக் கொடுத்துள்ளனர். கவுரவத்தை மதிக்கும், கவுரவத்தை எதிர்பார்க்கும் யாரும் கழிவறை ஒன்றைக் கட்டி அதைப் பயன்படுத்துவார் என்பதும், அதன் மூலம் அவர் கவுரவிக்கப்படுவார் என்பதும் எனது நம்பிக்கை.

சகோதர, சகோதரிகளே, நமது நாட்டில் இன்றும் கூட சொந்த வீடு இல்லாத, தங்குவதற்கு ஒரு கூரை கூட இல்லாத லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அவர்கள் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஏழ்மையிலும் ஏழ்மையாக உள்ளவர்கள் தங்குவதற்கு ஒரு கூரையாவது அளிப்பது நமது கடமை என்பதுடன், அத்தகைய ஏழையிலும் ஏழைக்கு நாங்கள் வீடுகள் அளிக்கிறோம்.

சகோதர, சகோதரிகளே, இதற்காகவே நாங்கள் உறுதிமொழி ஒன்றை எடுத்துள்ளோம். இது மிகவும் கடினமான பணி என எனக்குத் தெரியும். கடினமான பணிகளை மோடி செய்யாவிட்டால் யார்தான் செய்வார்கள்? சகோதரர்களே, அதனால்தான், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் ஒரு வீடு அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஏழைகள் நகரங்கள் அல்லது கிராமங்களில் வாழ்ந்தாலும் வீடு இல்லாத ஒவ்வோர் ஏழைக்கும் வீடு ஒன்றை அளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தியாவில் லட்சக்கணக்கான வீடுகள் இந்தியாவில் கட்டப்படும்போது, நாம் நிறைய வீடுகள் கட்டவேண்டும் என்பதுடன் இந்தியாவில் நாம் ஐரோப்பாவின் சிறிய நாடு ஒன்றைக் கட்ட வேண்டும். அவ்வளவு வீடுகளை நாம் உருவாக்க வேண்டும். மேலும் புதிய வீடுகள் கட்டப்படும்போது, அவற்றுக்குச் செங்கல் தேவைப்படும், சிமெண்ட், இரும்பு, மரங்கள் தேவைப்படும் என்பதால் அது புதியவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும், அது கொத்தனார்களுக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் வேலை அளிக்கும். லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்படும்போது அது லட்சக்கணக்கான மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் முந்தைய அரசுக்கு மாநிலத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்களின் பட்டியலைத் தயாரிக்குமாறும் அந்தப் பட்டியலை மத்தியஅரசுக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டும் அத்தகைய ஒரு பட்டியலை அளிப்பதில் முன்பிருந்த அரசு அக்கறை காட்டவில்லை என்பதை நான் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஏழைகளுக்கு வீடுகளை கட்டிக் கொடுப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கவில்லை. இதற்கு நாங்கள் அழுத்தம் கொடுத்தபோது அவர்கள் வெறும் 10,000 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை மட்டும் தயக்கத்துடன் அளித்தனர். ஆனால் யோகி ஜி யின் அரசு பதவிக்கு வந்த பின்னர் இது தொடர்பாக உடனடியாகப் பணியாற்றத் தொடங்கி இன்று அவர்கள் இந்தப் பட்டியலில் லட்சக்கணக்கான பெயர்களை இணைத்துள்ளனர். அதுமட்டுமல்ல, வீடுகள் கட்டப்பட உள்ள மக்களுக்கு அதற்கான நிதியை அளிப்பதை நான் அதிருஷ்டமாகக் கருதுகிறேன்.

சகோதர, சகோதரிகளே, தூய்மையாக இருக்கட்டும் அல்லது, கிராமங்களுக்கு மின்சாரம் அளிப்பதாக இருக்கட்டும் அல்லது, பள்ளிகளில் கழிவறைகள் கட்டுவதாக இருக்கட்டும் அல்லது, கிராமங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடம் அற்றவையாக ஆக்குவதாக இருக்கட்டும் அல்லது, ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம் விநியோகிப்பதாக இருக்கட்டும் அல்லது, மக்களுக்குக் குடிநீர் அளிப்பதாக இருக்கட்டும், இவை அனைத்திலும் வேறுபாடு பார்க்காத நாடாக நமது நாடு உள்ளது.

நமது கிராமங்கள், நமது ஏழை விவசாயிகளின் வாழ்க்கை மாறினால், நமது நடுத்தரப் பிரிவு குடும்பங்களின் வாழ்க்கை மாறினால், நாம் விரும்பும் நாட்டை உருவாக்க முடியும் என்பதுடன் நமது நடுத்தர வகுப்பு குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பது, ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பது அவர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவது முதல் நிலையாக இருக்கும். அதற்காகவே நாம் அனைத்து திட்டங்களையும் மாற்றியிருக்கிறோம், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்துத் திட்டங்களையும் நாம் பலப்படுத்திஇருக்கிறோம்.

சகோதர, சகோதரிகளே, பனாரஸ்சில் பல்வேறு தூய்மை தொடர்பான திட்டங்களை அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு நேற்று கிடைத்தது. 600 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டிருப்பதுடன், அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பனாரஸ்சின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப அதன் திறன் உள்ளது. இத்தகைய பிரம்மாண்ட பணிகளை மேற்கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

கழிவுகளில் இருந்து சொத்து என்ற வகையில் கழிவுகளின் மறுசுழற்சிக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். கழிவுகளைச் சொத்தாக மாற்றம் செய்ய முக்கியத்துவம் அளிப்பதுடன் இந்தக் கழிவுப் பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்க நாங்கள் முடிவு செய்து, அவ்வாறு கழிவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் 40,000 வீடுகளுக்கு அளிக்கப்படும். எல்.இ.டி. பல்புகளை அளிக்கும் ஓர் இயக்கத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த வகையான மின்சார விளக்குகள் காசியில் மட்டும் நிறுவப்பட்டுள்ளன, இந்த எல்.இ.டி. விளக்குகளைப் பயன்படுத்துவதால் மின்சாரக் கட்டணம் குறைவதால் ஒவ்வொரு குடும்பமும் ரொக்கத்தைச் சேமிக்கலாம். இது எவ்வளவு இருக்கும் என நான் கணக்கிட்டபோது, அதிகாரிகள் என்னிடம் காசியில் நிறுவப்பட்டுள்ள இந்த எல்.இ.டி. விளக்குகள் மூலமாக மட்டும் மின்சாரக் கட்டணம் 125 கோடி ரூபாய் அளவுக்கு மிச்சமாகும் எனத் தெரிவித்தனர். சிலர் 500 ரூபாய், சிலர் 1,000 ரூபாய், சிலர் 250 ரூபாய் சேமிக்கலாம், ஒட்டுமொத்த நகரமும் ரூ. 125 கோடி சேமிக்கலாம். இதுவே ஏழைகள் மற்றும் நடுத்தரப் பிரிவினரின் சுமைகளைக் குறைக்க நாம் எடுத்த நல்ல முயற்சியாகும்.

அது மாத்திரம் அல்ல, காசியில் உள்ள தெருவிளக்குகளுக்கும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு, காசியில் உள்ள தெருவிளக்குகள் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப்படுவதால் மட்டும் மின்சாரக் கட்டணம் 13 கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது. காசி நகராட்சி ரூ. 13 கோடி சேமித்துள்ளது. இந்த 13 கோடி ரூபாய் காசியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும். இது மிகவும் சுலபம். தற்போது பயன்படுத்தப்படும் விளக்குகளுக்குப் பதிலாக எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்தி மக்களின் 125 கோடி ரூபாய் மற்றும் ஒரு நகராட்சியின் ரூ. 13 கோடி ரூபாயை சேமிக்கலாம். எப்படி வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருகிறோம் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

சகோதர, சகோதரிகளே, கறுப்புப்பணம் அல்லது ஊழல் அல்லது நேர்மையின்மையாக இருக்கலாம். இவை அனைத்துக்கும் எதிராக மாபெரும் போர் ஒன்றை நான் தொடுத்துள்ளேன். நேர்மையான நபரிடம் இருந்து நேர்மையற்ற நபர்கள் திருடுவதால் இந்த நாட்டின் சாமானிய மனிதன், நேர்மையான மனிதன் பாதிக்கப்படுகிறான், சகோதர, சகோதரிகளே, அதனால்தான் இந்த இயக்கம் ஒரு கொண்டாட்டமாக உருவெடுத்திருக்கிறது. சிறு வணிகர்கள், குறு வணிகர்கள் ஜி.எஸ்.டி.யில் இணைவது, ஆதார் உடன் மக்கள் தங்களை இணைத்துக்கொள்வதன் காரணமாக இத்தனை நாட்களாக கொள்ளை அடிக்கப்பட்டுவந்த பொதுமக்களின் பணம் தற்போது பொதுமக்கள் நலனுக்காகச் செலவிடப்படுவதுடன் இதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். நாம் வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். அன்பான சகோதரர்களே, அதனால்தான் இங்குள்ள கிராமங்களின் வளர்ச்சி, ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சி, நகரங்களின் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. வளர்ச்சி என்ற இந்த மேற்கூறிய வழியில் தான் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். உங்கள் ஆசிகளைத் தெரிவிக்க இத்தனை பேர் இங்கு வந்திருப்பதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நமது மகேந்திர பாண்டே ஜியின் நாடாளுமன்றத் தொகுதி. நீங்கள் காட்டும் சக்தி, உற்சாகம் மற்றும் உறுதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்,. யோகி அரசு மேற்கொண்டு வரும் வெற்றிகரமான முயற்சிகளுக்கு நான் மீண்டும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், உத்தரப் பிரதேசத்தை ஆறு மாதக் காலத்திற்குள் மாற்றுவதற்காக அவர் எடுத்துவரும் வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.,

என்னுடன் சேர்ந்து கோஷமிடுங்கள்

பாரத் மாதா கீ ஜெய் (வெல்க பாரத அன்னை)

உங்களின் முழு வலிமையுடன் கூறுங்கள் – பாரத் மாதா கி ஜெய் (வெல்க பாரத அன்னை)

பாரத் மாதா கி ஜெய் (வெல்க பாரத அன்னை)

பாரத் மாதா கி ஜெய் (வெல்க பாரத அன்னை)

பாரத் மாதா கி ஜெய் (வெல்க பாரத அன்னை)

உங்கள் அனைவருக்கு மிக்க நன்றி

 

***



(Release ID: 1530407) Visitor Counter : 275


Read this release in: English