விவசாயத்துறை அமைச்சகம்

திருத்தியமைக்கப்பட்ட தேசிய மூங்கில் இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 25 APR 2018 1:08PM by PIB Chennai

மத்திய அரசின் திட்டமான தேசிய நிலைத்த வேளாண்மை இயக்கத்தின் கீழ் வரும் தேசிய மூங்கில் இயக்கத்திற்கு 14-வது நிதிக்குழுவின் எஞ்சிய காலத்திற்கு (2018-19 மற்றும் 2019-20) பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு இன்று ஒப்புதல் அளித்தது. இந்த இயக்கம் மூங்கில் துறையை முழுமையான அளவில் மேம்படுத்துவதை உறுதி செய்யும். முழுமையான மதிப்புச் சங்கிலி மற்றும் மூங்கில் உற்பத்தியாளர்களை மூங்கில் தொழில்துறையினருடன் திறம்பட இணைத்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த இந்த இயக்கம் பாடுபடும்.

செலவினம்:

இந்த இயக்கத்தை 14-வது நிதிக்குழுவின் எஞ்சிய காலத்தில் அதாவது 2018-19 மற்றும் 2019-20-ல் செயல்படுத்த மொத்தம் ரூ.1,290 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.950 கோடி மத்திய அரசின் பங்காகும்.

பயனாளிகள்:

இந்தத் திட்டம் விவசாயிகள், உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் மூங்கில் தொழிலில் ஈடுபட்டுள்ள சார்புத் தொழில்கள் உள்ளிட்ட பணியாளர்கள் ஆகியோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனளிக்கும். 1 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மூங்கில் சாகுபடியின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதால் பயிர் செய்தல் என்ற முறையில் சுமார் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பயன் பெறுவார்கள்.

திட்ட மாநிலங்கள்/ மாவட்டங்கள்:

குறிப்பிட்ட மாநிலங்களில் மூங்கில் வளர்ப்பதில் இந்த இயக்கம் முக்கியக் கவனம் செலுத்தும். வடகிழக்கு மண்டலம் மற்றும் தமிழ்நாடு, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஒரிசா, கர்நாடகா, உத்தரகாண்ட், பீகார், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத் மாநிலங்கள் போன்ற வர்த்தக, பொருளாதார, சமூக ரீதியில் அனுகூலமான பகுதிகளில் கவனம் செலுத்தப்படும்.

இந்த இயக்கத்தின் மூலம் 4000 மூங்கில் தயார்படுத்தும்/ உற்பத்தி மேம்பாட்டுப் பிரிவுகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கும் கூடுதலான பரப்பில் மூங்கில் பயிரிடவும் இயக்கம் உதவும்.

தாக்கம்:

பண்ணை உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், வருமானத்தை உயர்த்தவும் அதன் மூலம் நிலமற்றோர், பெண்கள் உள்ளிட்ட சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தொழில் துறைக்குத் தரமானப் பொருட்களை வழங்கவும் மூங்கில் தோட்டங்கள் பெரிதும் பங்களிக்கும். இவ்வாறாக இந்த இயக்கம் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தும் திறனுள்ள கருவியாகச் செயல்படுவதுடன் பருவநிலை மீட்டெழுச்சிக்கும் சுற்றுச்சூழல் நன்மைகளுக்கும் பங்களிப்பதாகவும் அமையும். இந்த இயக்கம் திறன் பெற்ற, திறன் பெறாத துறைகளில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.



(Release ID: 1530221) Visitor Counter : 229


Read this release in: English