பிரதமர் அலுவலகம்

நெதர்லாந்தின் ஹேக் நகரில் டச்சு-இந்திய சமூகத்தினர் அளித்த வரவேற்பில் பிரதமர் ஆற்றிய உரை.

Posted On: 27 JUN 2017 12:52PM by PIB Chennai

அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்?

நெதர்லாந்தில் வாழும் என் அருமைச் சகோதர, சகோதரிகளுக்கும், நகர மேயருக்கும், துணைமேயருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  என்னை வரவேற்றதோடு மட்டுமல்லாமல், இங்கே குழுமியிருக்கும் அவர்களுக்கு என் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் உங்களைச் சுற்றிக் கேட்கும் ஆரவாரத்தின் எதிரொலியும், நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியும் இந்தியாவில் இருந்தபடியே இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் காண்பவர்களுக்கு “ஹேக் எனும் சிறிய நகரில் கூட இந்தியர்கள் இத்தனை வலிமையோடு இருக்கிறார்களா?“ என்கிற ஆச்சரியத்தை அளிக்கும்.  சூரிநாம் மக்களை நான் இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன்.  பல ஆண்டுகளுக்கு முன்பு சூரிநாம் வருகைதர எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

சூரிநாம் நகரில் ஜூன் 5ஆம் நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  உலகின் எந்த மூலையிலும் இருக்கும் இந்தியர்கள் ஆனாலும், சூரிநாமில் வாழும் சகோதர, சகோதரிகள் ஆனாலும், மொரிசியஸ், கினியாவில் கூலிஆட்களாகப் போன இந்தியர்கள் ஆனாலும் நூற்றி ஐம்பது ஆண்டுகள் கடந்தும் கூட இந்திய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாத்து பின்பற்றுகிறார்கள்.  அதற்காக அவர்களை நான் பெரிதும் மதித்துப் பாராட்டுகிறேன்.  தாய்நாட்டைத் திரும்பிப்பார்க்கவே முடியாத நிலையில் இருந்தாலும் இந்தியக் கலாச்சாரத்தைத் தங்கள் குடும்பங்களில் ஐந்து ஆறு தலைமுறைகளாகக் கட்டிக்காத்த நம் மூதாதையரை நாம் நிச்சயமாக மரியாதையுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.  அவர்கள் மட்டும் அப்படி உறுதியாக இல்லையென்றால் ஒரே தலைமுறையில் மொழி கூட இல்லாமல் போயிருக்கும்.  பெற்றோர்களுக்குத் தங்கள் மொழியின் மேல் பெருமை இருந்தாலும் மகனுக்கோ மொழியே தெரியாமல் இருக்கும்.  ஆனால் இந்த மாதிரி விஷயங்கள்தான் மக்களை அவர்களின் வேருடன் இணைத்திருக்க உதவுகிறது.  பெரிய இரும்புக் குண்டுகளை இரண்டு சிறுவர்களால் நகர்த்திவிட முடியும்.  ஆனால் நிழல் தரும் பெரிய மரத்தை அதன் வேருடன் நகர்த்துவதென்பது கடினமான காரியம். அதைத்தான் சூரிநாமில் வாழும் நம் சகோதர, சகோதரிகள் செய்திருக்கிறார்கள்.  அதுதான் அவர்களுக்குப் பலத்தை தருகிறது.  

அதேபோல் உங்களில் பலர் இந்தியாவுக்கே வந்திருக்க மாட்டீர்கள்.  உங்கள் தாத்தா, பாட்டிகள் பல்லாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.  அவர்கள் எந்தக் கிராமத்தில் இருந்து வந்தார்கள், அவர்களின் உறவினர்கள் யார் என்பதும் உங்களுக்குத் தெரியாது.  ஆனால் உங்கள் இதயம் இன்னமும் இந்தியாவுக்காகத் துடித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் சுயமாக முன்னேறியவர்கள்.  சுயமாக உங்களை வடிவமைத்துக் கொண்டவர்கள்.  நீங்கள் சாதித்த அத்தனையும் உங்கள் கடும் முயற்சியால் வந்தது.  ஆனாலும் இந்தியாவுக்குக் கடமைப்பட்டதாக உணர்கின்றீர்கள்.  இந்தியாவுக்கு ஏதோ செய்ய வேண்டும் என உங்கள் மனம் துடிக்கிறது.  இதைவிடவும் அன்பும், நன்றியும் இருக்கவே முடியாது.

இங்கு இரண்டு விதமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். சிலர் 100, 150 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்தவர்கள்.  சிலரோ இப்போதுதான் நெதர்லாந்தில் இறங்கிஇருக்கிறார்கள்.  அவர்களிடம் நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்.  இங்கு வந்தும் கூட இந்தியாவில் இருந்து முற்றிலும் பிரிந்ததாக நீங்கள் உணரவில்லை அல்லவா?  இன்னமும் இங்கே இந்தியத்தன்மை நிலவுகிறதல்லவா?  அதுதான் சூரிநாம் மக்கள் செய்திருக்கும் சாதனை.

அதனால்தான் இங்கிருக்கும் மக்களிடம், உங்கள் கடவுச்சீட்டு எந்த நிறமாக இருந்தாலும் ரத்த உறவுகள் மாறுவதில்லை எனச் சொல்கிறேன்.  தயவுசெய்து கடவுச்சீட்டின் நிறத்தை வைத்து உறவுகளை வடிவமைக்காதீர்கள்.  நம் கடவுச்சீட்டின் நிறம் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம்.  ஆனால் நம் மூதாதையர்கள் ஒருவரே.

நம் மூதாதையர்கள் வழிபட்ட அதே நாட்டைத்தான் நானும் வழிபடுகிறேன். அவர்களது துரதிருஷ்டம் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியதாகிவிட்டது.  என் அதிர்ஷ்டம் நான் இன்னமும் என் வேர்களுடன் இணைந்திருக்கிறேன்.  சூரிநாம் மக்களும் நாமும் ஒன்றாக இணைந்து வாழவேண்டியது அவசியம்.  நமக்குள் எந்தப் பிரிவினையும் இருக்கக் கூடாது.  இங்குச் சமீபத்தில் வந்தவர்களே இந்தி பேச சிரமப்படும்போது சூரிநாமில் இருப்போர் எந்தச் சிரமமும் இன்றி இந்தி பேசுவதைக் கவனியுங்கள்.  இந்த பலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.  

ஐரோப்பிய கண்டத்திலேயே மிக அதிகமான இந்தியர்கள் வசிக்கும் இரண்டாவது நாடாகத் திகழ்கிறது, நெதர்லாந்து.  ஐரோப்பாவில் மட்டுமல்ல, கரீபியன் நாடுகளையும் கூட சேர்த்துக்கொள்ளலாம்.  அத்தோடு ஹேக் நகரை இந்தியர்கள் அனைவரும் ஒன்றுசேரும் ஒரு புள்ளியாகவே நாம் கருதலாம்.

கைபேசிகள் பரவலாகப் புழங்கும் இக்காலத்தில் குடும்பத்தினரோடு தொடர்பில் இருப்பது மிகவும் எளிதான ஒன்று.  மேலும் தொடர்பில் இருந்தால்தான் ஒற்றுமை இருக்கும், ஒற்றுமையில்தான் பலம் இருக்கும்.  என் நிகழ்ச்சி இறுதிநேரத்தில் முடிவு செய்யப்பட்டாலும்கூட நீங்கள் அதற்காகச் செய்துள்ள ஏற்பாடுகளில் உங்களின் பலம் தெளிவாகத் தெரிகிறது.  இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புதான் உங்களுக்கு விஷயம் தெரிந்திருக்க என்றாலும் நிறைய பேர் இங்கு வந்திருக்கிறீர்கள்.

இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த நிறைய தூதரகங்கள் உள்ளன.  தூதர்கள் என்று அந்த அதிகாரிகள் அழைக்கப்படுகிறார்கள்.  ஆனால் நீங்கள் தேசத்தூதுவர்கள். அதாவது நம் நாட்டின் பிரதிநிதிகளாக இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்.


உலக நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியர்கள் தத்தமது நாடுகளில் இந்தியாவின் பிரதிநிதிகளாகவே வாழ்ந்து இந்தியாவின் பெருமைகளைப் பரப்புகிறார்கள்.  அனைத்து மதங்களும் வாழுமிடமாக இந்தியா திகழ்வதை நினைத்து வெளிநாட்டினர் ஆச்சரியம் கொள்கின்றனர்.  மிகச்சிறிய மதங்களும், நம்பிக்கைகளும் கூட இந்தியாவில் பெருமையுடன் வாழ்ந்து வருகின்றன.

 

இந்தியாவில் 100க்கும் அதிகமான மொழிகளும், 1,700 -க்கும் அதிகமான வழக்குகளும் இருப்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறார்கள்.  “ஐரோப்பாவில் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே கூட மொழிப்பிரச்சினையைச் சந்திக்கிறோம், நீங்கள் எப்படி இத்தனை மொழிகளுடன் வாழ்கின்றீர்கள்?” எனக் கேட்கிறார்கள்.  எங்களை இணைப்பது அன்னை தேசத்தின்பால், தியாகத்தின்பால், கலாச்சாரத்தின்பால் எங்களுக்கிருக்கும் அன்பு.  எந்த ஒரு இந்தியனும், “என் நாட்டில் ஆயிரம் வேற்றுமைகள் உள்ளது எனினும் ஒற்றுமையும் இங்குதான் உள்ளன,” எனப் பெருமையாகச் சொல்வான்.  உலகில் நீங்கள் அனுபவிக்கும் எல்லாவற்றையுமே இந்தியாவில் உங்களால் அனுபவிக்க முடியும்.

உலகத்தலைவர்களை நான் எப்போது சந்தித்தாலும், 125 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டின் பிரதமர் நான் என்பதை அறிந்து வியக்கின்றார்கள்.  சிறிய நாடுகளை நிர்வகிப்பதிலேயே இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்போது உங்களால் எப்படி இவ்வளவு பெரிய நாட்டை நிர்வகிக்க முடிகிறது என்கிறார்கள்.  நான் சொல்வேன்: உங்கள் நாடுகளில் நீங்கள் மட்டும் நிர்வாகம் செய்கிறீர்கள்.  எங்கள் நாட்டிலோ நாங்கள் 125 கோடி பேரும் சேர்ந்து நிர்வாகம் செய்கிறோம் என்று. இதுதான் ஜனநாயகத்தின் சக்தி.

இந்தியாவிற்குள், குறிப்பாக அரசில் என்னால் பணியாற்ற முடிந்த பின், நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை நான் வெகுவாக ஊக்குவித்திருக்கிறேன்.  அனைத்து துறைகளிலும் மக்கள் தலையீடு இருக்கவேண்டும் என விரும்புகிறேன்.  அரசே எல்லாவற்றையும் செய்யும், அரசினால் மட்டுமே எல்லாச் சிக்கல்களையும் தீர்க்க முடியும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட்டிருக்கிறோம்.  மக்களின் பங்களிப்பினால் வளர்ச்சியை நோக்கி வேகமாக நகர முடியும் என்கிற புரிதல் வந்திருக்கிறது.

மக்கள் வெளியிடங்களில் மலம் கழிப்பதைத் தடுக்க அரசு கழிவறை கட்டுவது என முடிவெடுத்தால் மாணவிகளுக்குப் பள்ளிகளில் கழிவறைகளைக் கட்டிக்கொடுப்போம். இதுபோன்ற திட்டங்கள் முன்னர் அரசினால் மட்டுமே செய்யப்பட்டுவந்தன.  நாங்கள் இப்பணியில் மக்களையும் ஈடுபடச்செய்தோம். ஒரே ஆண்டில் பள்ளிகளில் ஆண், பெண்களுக்குத் தனித்தனியாகக் கழிவறைகள் கட்டும் பணி முடிந்தது.  நான் சொல்லவருவது என்னவென்றால், இந்த அரசு மக்களின் பங்களிப்பிற்கு எல்லாத் துறைகளிலும் முக்கியத்துவம் அளித்துள்ளது.  இதற்கு முன்னர் ஜனநாயகம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பு எந்திரங்களின் பொத்தான்களை அழுத்தி, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, இந்தப் பணிகளை நீங்கள் செய்யவில்லை என்றால் அடுத்தமுறை வேறு யாரையேனும் தேர்ந்தெடுத்துவிடுவோம் என உத்தரவிடுவதோடு நின்றுவிடும். ஆனால் இது முழுமையான ஜனநாயகம் இல்லை.  மக்கள் பங்கெடுக்கும்போதுதான் அரசால் முழுமையாக செயல்படச் முடியும்.   

எப்போதெல்லாம் இயற்கைப் பேரிடர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அரசின் உதவிகள் போக, மக்கள், சமூக அமைப்புகள், மத அமைப்புகளின் உதவியும் தேவைப்படுகிறது.  அவர்கள் உணவு, உறைவிடம் உள்ளிட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.  மக்களின் பங்களிப்பால்தான் எல்லோரது உழைப்பும் அவர்களைச் சென்றுசேர்கிறது.  அதுதான் மக்கள் சக்தி.  இந்த அரசு மக்களின் பங்களிப்பை எல்லா துறைகளிலும் ஊக்குவித்திருக்கிறது.  இந்தியா கூட்டமைப்பு ஆட்சியைக் கொண்டது.  மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுகிறன.  அப்படியான செயல்பாட்டைத்தான் அரசு ஊக்குவிக்கிறது.  

வளர்ச்சி என்பது நல்ல நிர்வாகத்துடன் இணைந்திருக்கும்போது மட்டுமே மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிறது.  இரண்டும் சேரும்போது மக்கள் பிரச்சினைகள் தீர்கிறது.  பேருந்துநிறுத்தம் ஒன்றை ஆரம்பிப்பது வளர்ச்சி.  ஆனால் அந்தப் பேருந்து நேரத்திற்கு வருவதும், ஓட்டுநர், நடத்துநர் நாகரிகமாக நடந்துகொள்வதும் நல்ல நிர்வாகத்தைக் காட்டும்.  இது இரண்டும் சரியாக நடந்தால்தான் சாதாரணக் குடிமக்கள் திருப்தியடைவார்கள்.  திருப்தியடைந்தால்தான் என் நாடு, என் அரசு, என் சொத்து என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும்.  அப்படியான நிலைமையை ஏற்படுத்தவே இந்த அரசு மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துகிறது. 

இரண்டாண்டுகளுக்கு முன்னர், அதாவது எங்கள் அரசு அமையும் முன் இந்தியாவெங்கும் ஒரே ஒரு பேச்சுதான் இருந்தது.  பருப்பு விலை! தொலைக்காட்சிச் செய்திகளில் பருப்புவிலை ஏற்றம் குறித்தே சொல்லிக் கொண்டிருந்தார்கள். எங்கே நான் சென்றாலும், “மோடி, பருப்புவிலை எப்போது குறையும்?” என்றுதான் கேட்பார்கள்.

ஆனால் இப்போது பருப்பு விலை மிகவும் குறைந்துவிட்டது.  ஆனால் யாருமே எப்படி எனக் கேட்பதில்லை.  என்ன நடந்தது என நான் சொல்கிறேன்.  இந்திய விவசாயிகளிடம் பருப்பை அதிகமாகப் பயிரிடுங்கள் என கோரிக்கை வைத்தேன்.  ஏனெனில் பருப்புக்கு என்று தனியாக எதுவுமே செய்யவேண்டியதில்லை.  ஊடுபயிராகவே பயிரிட முடியும். விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் வரும்.  நான் சொன்னதைக் கேட்டு விவசாயிகள் கூடுதல் பருப்பைப் பயிரிட்டார்கள் பருப்பு விலை குறைந்துவிட்டது.  நடுத்தரவர்க்கத்தினர் பருப்பை அதிகமாகச் சாப்பிடும்போது புரதம் அதிகமாகக் கிடைக்கிறது.  அதனால் உடல்வலு கூடுகிறது. நான் சொல்லவருவது என்னவென்றால், அரசின் முயற்சிகளில் மக்களையும் ஈடுபடுத்தும்போது அபாரமான பயன்கள் கிடைக்கிறது என்றுதான்.

இந்தியாவில் பெண்கள் இல்லத்தரசிகளாக மட்டுமே இருப்பதாகவும், அடுக்களைகளைவிட்டு வெளியே வருவதில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.  ஆனால் உண்மை வேறு.  இந்தியாவின் பால்வளத்துறையின் பெரும்பகுதியைப் பெண்களே கவனித்து வருகிறார்கள்.  ஆண்கள் மிகவும் குறைவாகவே ஈடுபடுகிறார்கள்.  அதே நேரம் விவசாயத்திலும் பெண்களின் பங்கு அலாதியானது.  உடல்உழைப்பிலும் அவர்களே முன்னணியில் இருக்கிறார்கள்.  ஆனால் நம் சமூகஅமைப்பு பணத்தை மையப்படுத்தி அமைந்தது இல்லை என்பதால் பெண்களுக்கு இந்தியப்பொருளாதார வளர்ச்சியில் எந்தப் பங்கும் இல்லை என அர்த்தமாகாது.  எனவே இந்தியப் பெண்களையும், அதாவது பாதி ஜனத்தொகையைப் பொருளாதாரத்தில் பங்கேற்கும் வண்ணம் என்ன செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டது. பெண் முன்னேற்றம் மட்டுமல்ல, பெண்களால் முன்னேற்றம் வேண்டும் என்று யோசித்தோம்.  பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் எல்லோருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை ஆரம்பிக்கும்போது கிட்டத்தட்ட 40% பேர் நாட்டின் பொருளாதாரத்தில் பங்கேற்காமல், வங்கி வாசலையே மிதிக்காதவர்களாக இருந்தார்கள்.  அந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தபோது பெரும்பான்மையாகப் பெண்களே கணக்குகளை திறந்தார்கள்.  இந்தியப் பொருளாதாரத்தில் பங்கெடுப்பதில் அவர்கள் பெருமை கொண்டார்கள்.   

சமீபத்தில், தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் முத்ரா யோஜனா என்கிற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்மூலம் இந்திய இளைஞர்கள் வேலை தேடும் இடத்தில் இருந்து வேலை தரும் இடத்திற்கு முன்னேற முடியும்.  சிறிய தொழில்களை நடத்தும்போது கூட ஒன்றிரண்டு பேரை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம்.  அந்த வகையில் சிறிய தொழில்களுக்கு உதவுவதற்காக முத்ரா யோஜனா திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.   

முத்ரா யோஜனா திட்டத்தின்படி ஒரு குடிமகன் வங்கிக்கு வந்து அவரது எல்லாத் தகவல்களையும் கொடுத்தால் கண்டிப்பாக எந்த உத்தரவாதமும் இல்லாமல் அவரால் ரூ.50,000ல் இருந்து 10லட்சம் வரை கடனாகப் பெற முடியும்.  கிட்டத்தட்ட 7 கோடி பேர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்கள்.  ஏறத்தாழ 3 லட்சம் கோடி ரூபாய் இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு 50,000ரூபாய், சிலருக்கு 55,000ரூபாய், சிலருக்கு 80,000ரூபாய், சிலருக்கு 10லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. அதைவிடப் பெருமைகொள்ளப்பட வேண்டிய விஷயம் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்ததில் 70% பேர் பெண்கள்.  இதுதான் பெண்கள் முன்னேற்றத்திற்கும், பெண்களால் ஏற்படும் முன்னேற்றத்திற்கும் சிறந்த சான்று.    

பல வளர்ந்த நாடுகளில்கூட பெண்களுக்கான பிரசவக்கால விடுமுறை சராசரியாக 12 வாரங்கள்தான்.  ஆனால் இந்தியாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டம் பிரசவக்கால விடுமுறையை 26 வாரங்கள் என உயர்த்தியுள்ளது.  இந்தியாவின் வருங்காலத்தைத் தொலைநோக்குப் பார்வையுடன் பார்க்க முடிவதால்தான் இப்படியான சட்டங்களை இயற்ற முடிகிறது.  இதை வெளியில் இருந்து பார்த்தால் ஆறுமாதம் வேலை செய்யாமல் இருக்க ஊதியமா எனத் தோன்றும்.  ஆனால் அந்த ஆறுமாதம் அந்தப் பெண் எங்கள் நாட்டின் வருங்காலமான ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பாள்.  அது முதலீடே தவிர செலவு அல்ல.  ஆரம்பத்தில் ஆறு மாத ஊதியம் அளிப்பது வீண் செலவு எனத் தோன்றினாலும் அந்த ஆறுமாதம் குழந்தையின் அடிப்படையான மாதங்கள். அப்போது நல்ல கவனிப்பில் அந்தக் குழந்தை வளமாக, பலமாக வளரும்போது இந்தியாவின் வருங்காலம் பிரகாசமாக இருக்கும்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஜனவரி 26 ஆம் தேதி குடியரசுதின விழாவிற்கு வருகை தந்தபோது ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படை வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது.  அதில் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து சாகசங்களையும் பெண்களே செய்தார்கள்.  மேடையில் இருந்து என்னை நோக்கி வந்த ஒபாமா, இந்தியப்பெண்கள் இதைச் செய்வது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

 “இது வெறும் தொடக்கம்தான். நாளை நடக்க இருக்கும் சாகசங்களைக் காணத் தயாராக இருங்கள்,” எனக் கூறினேன்.  ஆகமொத்தம், குடியரசு நாளில் பெண்கள் செய்த சாகசங்கள் உலகம் முழுதும் முக்கியச் செய்தியாகப் பேசப்பட்டது.  பாதுகாப்புத் துறையில் இந்தியப் பெண்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள்.

டெல்லி மற்றும் அதுபோன்ற பிற மாநிலங்களில் காவல்துறையில் 33% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்தப் பெண்கள் தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்கிறார்கள்.  அவர்கள் போர் விமானங்களை இயக்குவது வரை எல்லாச் சாதனைகளையும் செய்வது உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியாவிற்குப் பெரிய இடம் இன்று உலக அளவில் உள்ளது. சென்ற வாரம் 30 நானோ செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இந்தியா விண்ணில் செலுத்தியது.  இதற்கு முன்னர் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் அனுப்பி எங்கள் விஞ்ஞானிகள் சாதனை படைத்தார்கள்.  சென்ற மாதம் மிகவும் எடை அதிகமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தினார்கள்.  அது பல யானைகளின் எடைக்கு நிகரானது எனச் செய்தித்தாள்கள் புகழாரம் சூட்டின.  அந்தத் திட்டத்தில் மூன்று முக்கியமான பெண்விஞ்ஞானிகள் பணியாற்றுகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தி.  எங்கள் நாட்டின் சகோதரிகளும், தாய்மார்களும் இவ்வளவு திறமைசாலிகளாக இருப்பதில் யாருக்குத்தான் பெருமையாக இருக்காது. 

அறிவியல் என்றாலும் சரி, கல்வி என்றாலும் சரி, சுகாதாரத்துறை என்றாலும் சரி; இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதுகுறித்த கருத்தரங்கங்கள் நடத்தினாலும், ஆண்ஆசிரியர்கள் இங்கு அமருங்கள் என அறிவிப்புப்பலகை வைக்கவேண்டிய அளவிற்கு பெண்களின் பங்கு இருக்கிறது.  ஒட்டுமொத்தக் கல்வித்துறையும் சகோதரிகளாலும், தாய்மார்களாலும் நிர்வகிக்கப்படுகிறது.  விளையாட்டு, செவிலியர், அவசர உதவி, மருத்துவம் என எந்தத் துறையைப் பார்த்தாலும் பெண்கள் கோலோச்சுகிறார்கள்.  நான் சொல்லவருவது என்னவென்றால் பெண்களுக்கு அத்துறைகளில் எல்லாம் அதிகாரம் இருக்கிறது என்பதையே.  அதுமட்டுமல்லாது ஒலிம்பிக்ஸ் போன்ற விளையாட்டுகளிலும் எங்கள் பெண்கள் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.  மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளிலும் பெண்களே தேசியக்கொடியை ஏந்தி வலம் வந்தார்கள்.

டில்லியில் இருக்கும் இப்படிப்பட்ட அரசு தன் முழு மனதையும் ஆற்றலையும் பெண்கள் முன்னேற்றத்தில் செலவழிக்கிறது.  எப்படி அவர்களை மேம்படுத்தலாம்?  அவர்களை ‘எப்படி நாட்டின் மேம்பாட்டில் பயன்படுத்தலாம்? அவர்களை எப்படிப் பொருளாதாரத்தில் பங்கெடுக்க வைக்கலாம்’ என்பதே பெரிய சிந்தனையாக இருக்கிறது. மேலும் இதுகுறித்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதால், எங்கள் நாட்டின் பெண்கள் இந்தியக் கொடியை ஏற்றுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளைக் கூட இப்போது செய்கிறார்கள்.   

தேசம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.  இதற்கு முன் இருந்ததைவிடப் பலமடங்கு முன்னேற வேண்டும்.  ஆனால் காலம் காத்திருக்காது.  இதுவரை நாம் முன்னேறிய வேகத்தில் இனிமேலும் முன்னேறினால் இந்தியர்கள் மனதில் உள்ள கனவு நிறைவேறாது.  எனவே நம் வேகத்தை நாம் கூட்ட வேண்டியது அவசியம்.  இதற்கு முன்பான அரசுகள் ஒன்றிரண்டு திட்டங்களை மட்டுமே செயல்படுத்தின.

இன்று இலட்சியம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது என்றால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வேலையை முடித்தால் கூட அது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதில்லை.  அது தேசத்தை முன்னேற்ற போதுமானதாகவும் இல்லை, தேசத்தை நவீனமயப் படுத்துவதாகவும் இல்லை.  21ஆம் நூற்றாண்டின் இந்தியா சர்வதேச தரத்தில் இருந்து பின்தங்கி இருக்கக் கூடாது.  அறிவியல், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு போன்ற விஷயங்களில் பின்னடைவைப் பார்க்கக் கூடாது.  உலகத்துடன் போட்டிபோடும் வகையில் இந்தியாவின் வளர்ச்சி இத்துறைகளில் இருத்தல் அவசியம்.  இந்த நோக்கத்தைப் பொறுத்தவரையில் இந்தியா வளர்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

இன்று உலகெங்கும் ஆரோக்கியத்தைக் குறித்த விழிப்புணர்வும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும் நிலவுகிறது.  எல்லோருமே நாம் சுவாசித்தால் நல்ல காற்றைச் சுவாசிக்க வேண்டும், சாப்பிட்டால் நல்ல உணவைச் சாப்பிட வேண்டும், எனச் சிந்திக்கத் துவங்கி உள்ளார்கள்.  ஆற்றல் துறையில் இந்தியா முன்னோக்கி நடைபோடுகிறது.  புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இந்தியா 175 கிகாவாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்கிறது.  உங்களில் பலருக்கு கிகாவாட்ஸ் என்பது புதிதாக இருக்கலாம்.  ஏனெனில் பல நூற்றாண்டுகளுக்கு நாம் மெகாவாட் தாண்டி சிந்திக்கவே இல்லை.  மெகாவாட்தான் உச்சகட்ட அளவுகோலாக இருந்தது. ஆனால் இந்தியா 175 கிகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்வதைக் குறிக்கோளாக வைத்துள்ளது.  

சூரியச்சக்தி, காற்றுச் சக்தி, அணுச் சக்தி, உயிர்ப்பொருள் ஆற்றல் ஆகியவை நம் ஆற்றல் தேவைகளில் என்ன மாதிரியாகப் பங்காற்றவேண்டும்? கூடியவரையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நோக்கி இந்தியா நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.  இன்று இந்தத் துறையில் போட்டியும் மிகக் கடுமையாகவே இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் சூரியசக்தி நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் மின்சாரத்தைவிட விலை குறைவாக இருக்கிறது.  வருங்காலத்தில் ஒட்டுமொத்த ஆற்றல் தேவையும் சூரியசக்தியில் இருந்து பெறப்பட்டால், அது பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக்கொண்டுவரும் என்பதை நினைத்துப்பாருங்கள்.  

அரபு நாடுகளில் இருந்துதான் இந்தியா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.  சூரியசக்தியை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது எண்ணெயை உற்பத்திசெய்வது பெருமளவில் குறையும்.  அதனால்தான் சூரியச்சக்தி உற்பத்தியில் இந்தியா அதிக கவனம் எடுத்துக்கொள்கிறது.  நான் பிரதமர் ஆவதற்கு முன்பேயே சூரியன் இருக்கத்தானே செய்தது.  ஆனால் அதை ஆக்கப்பூர்வமாகப் பார்த்தவன் நான்தான்.  என்னால் பார்க்கமுடிந்ததை அவர்களால் பார்க்க முடியவில்லை.  எனவே வாழ்க்கையை நவீனமாக மாற்றும் பொருட்டு நாங்கள் எடுத்த முன்னெடுப்பு இது எனக் கொள்ளலாம்.

நான் பிரதமரான புதிதில் பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் விரும்பினேன்.  அதனால் அடிக்கடி அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தினேன்.  அப்படியான ஒரு சந்திப்பின்போது மின்சாரத்துறை அதிகாரிகளிடம், மின்சாரம் இன்னமும் சென்றுசேராத பகுதிகள் இந்தியாவில் உள்ளதா என்பதைக் கேட்டறிந்தேன்.  இந்தியா சுதந்திரம் அடைந்து 70ஆண்டுகள் ஆகின்றன.  நியாயமாக இந்தக் கேள்வியே எழக் கூடாது.  ஆனால் எனக்குக் கிடைத்த பதில் அதிர்ச்சியளித்தது.  இன்னமும் 18,000 கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகச் சொன்னார்கள்.  அந்தக் கிராமங்களைப் பொறுத்தவரை அவர்கள் 21ஆம் நூற்றாண்டில் இருந்தாலும் இன்னமும் 18ஆம் நூற்றாண்டில் வாழ்வதைப் போல சூரிய ஒளியையும், நிலவு ஒளியையும் நம்பியே வாழ்கிறார்கள். அதாவது சுதந்திரம் அடைந்து 70ஆண்டுகளுக்குப் பின்பும்.

நவீன இந்தியாவை வடிவமைப்பேன் என்ற என்னுடைய வாக்கை நிறைவேற்றும்பொருட்டு, அந்தக் கிராமங்களுக்கு மின்சாரமளிக்க இன்னும் எத்தனை காலம் ஆகும் எனக் கேட்டேன்.  அவர்களோ ஏழு ஆண்டுகள் ஆகும் என நிதானமாகப் பதில் அளித்தார்கள்.  அவர்களின் நிதானம் எனக்கு அதிர்ச்சியளித்தது.  “நாம் இப்படி மெத்தனமாக இருக்கலாமா? இது அத்தியாவசிய அவசரம் இல்லையா?” என நான் அவர்களைக் கேட்டேன்.  இறுதியாக ஆகஸ்ட் 15ஆம் நாள் எனது சுதந்திரஉரையில் 18,000 கிராமங்களுக்கும் ஆயிரம் நாட்களில் மின்சாரம் அளிப்போம் என வாக்குறுதி அளித்தேன்.  இதோ இன்னமும் ஆயிரம் நாட்கள் கூட ஆகவில்லை, ஆனால் 13-14 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வந்துவிட்டது.  சகோதர சகோதரிகளே, எனது நவீன இந்தியா கனவு மெய்ப்பிக்கப்பட்டுவருகிறது.  மீதி கிராமங்களிலும் மின்சாரம் கொடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்தியாவில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பஞ்சாயத்துகள் உள்ளன.  அந்தப் பஞ்சாயத்துகளில் ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன.  உங்களால் ஒருமணி நேரம் கைபேசி இல்லாமல் வாழ முடியுமா சொல்லுங்கள்? மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கிறது இல்லையா?  கைபேசி வைத்திருப்பது உங்கள் உரிமை என்றால் ஏழை மக்களுக்கும் அந்த உரிமை கிடைக்கவேண்டும் அல்லவா? எல்லாக் கிராமங்களுக்கும் அந்த வசதி இருக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை என் அரசு முன்னெடுத்துள்ளது.  அந்த இரண்டரை லட்சம் கிராமங்களிலும் அதிவேகமான ஆப்டிகல் ஃபைபர் பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது.  வரும் நாட்களில் இந்தக் கிராமங்கள் அனைத்திலும் நவீனத் தொலைதொடர்புத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு, தொலைநிலைக் கல்வி, தொலைமருத்துவம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதிகளும் கிராமங்களிலும் இனி கிடைக்கும்.  இந்த வகையில் இந்தியா வளர்ச்சி பெறுவதோடு, நவீனமயமாகவும் செய்கிறது.  எங்கள் திட்டங்களும், நடவடிக்கைகளும் இதை நோக்கியே உள்ளன.

சகோதர, சகோதரிகளே, இதுபோல் நிறைய விஷயங்கள் உள்ளன.  இந்தியா மீது நிச்சயமாக உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.  நெதர்லாந்தில் நிறைய எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழ்ந்தாலும், சூரிநாமில் இருந்தும் நிறைய பேர் இங்கே வந்துள்ளீர்கள்.  உங்களுக்கு OCI அட்டை பெறுவதில் என்ன சிக்கல் இருக்கிறது? இவ்வளவு வெளிநாடுவாழ் இந்திய மக்கள் இருந்தும் பத்து சதவிகிதம் பேர் மட்டுமே OCI அட்டை வைத்திருக்கிறீர்கள் என்பதையறிந்து வியந்தேன்.  அடுத்த ஜனவரி 26க்குள் நீங்கள் அனைவரும் OCI அட்டை வாங்குவதைத் துரிதப்படுத்துங்கள்.  நானும் இங்கிருக்கும் தூதரகத்திடம் அறிவுறுத்துகிறேன்.

இந்த OCI அட்டை இந்தியாவுடனான உங்கள் நூற்றாண்டுகாலப் பழமையான தொடர்புக்கு ஒரு சான்று.  உங்கள் தொப்புள்கொடி அது. அதை நீங்கள் என்றும் மறக்கக் கூடாது.  இதை நீங்கள் வெறும் பொருளாதார நோக்கத்தோடு மட்டும் பார்க்கக் கூடாது.  எனவே எவ்வளவு செலவாகிறதோ அதைச் செலுத்தி OCI அட்டையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் போர்ச்சுகலில் இருந்தேன்.  பிரதமர் தனது OCI அட்டையை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டிருந்தார்.  தான் OCI அட்டை வைத்திருப்பதைப் பெருமையாக உணர்வதாகவும், இந்திய பூர்வக்குடியாக இருந்தும் தான் இப்போது போர்ச்சுகல் பிரதமர் எனவும் கூறினார்.  எனவே நான் அனைத்து வெளிநாடுவாழ் இந்தியர்களிடமும் அந்த அட்டை இருக்கிறதா எனக் கேட்பேன்.  இருக்கிறது என்றால் பாராட்டுவேன். இல்லை என்றால் உடனே பெறச் சொல்வேன்.

இந்த உணர்வு உங்களுக்கு எப்போதும் இருக்கவேண்டும்.  அதுமட்டுமல்லாது நமது புதிய தூதுவரிடம் ஒருநாளைக்கு எத்தனை OCI அட்டைகள் வழங்கப்படுகின்றன என்பதை நம் பணி சீக்கிரம் முடியும் பொருட்டு விசாரித்துக்கொண்டே இருப்பேன்.

2015 இல் இருந்து டச்சு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மின்-விசா வழங்கப்படுகிறது.  இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.  அத்தோடு இந்திய அரசு டச்சு குடிமக்களுக்கு ஐந்தாண்டுகால வணிக விசா வருங்காலங்களில் வழங்க இருக்கிறது.

ஐந்தாண்டுகள் செல்லத்தக்க வணிக மற்றும் சுற்றுலா விசா டச்சு மக்களை இந்தியாவுடன் அதிகமாகத் தொடர்பில் வைத்திருக்க உதவும்.

இந்தியாவுடன் கூடிய மட்டும் தொடர்பில் இருக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் தேசத்துடன் மனரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள்.  இந்தியாவைப் பற்றிய நல்ல விஷயங்களைக் கேட்பதில் உங்களுக்குக் கூடுதல் ஆர்வம் இருக்கிறது.  இவ்வளவு இந்தியத்தன்மையோடு இருக்கும் நீங்கள், இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதிலும் ஈடுபாடு காட்டுங்கள்.

என்னுடன் தொடர்பில் இருக்க வேண்டுமா? நிச்சயம் பிரதமரை உங்கள் பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டுமா?  ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?  பதில் சொல்லுங்கள்.  ஒரு பிரதமர் உங்கள் பாக்கெட்டுகளில் இருப்பது நல்லதுதானே! “எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தியப் பிரதமர் என் பாக்கெட்டில் இருக்கிறார்,” என நீங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ள வேண்டாமா?  அது எப்படி சாத்தியம் எனச் சொல்கிறேன். நரேந்திர மோடி என்கிற செயலியை உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்துவைத்துக்கொள்ளுங்கள்.  நான் 24மணி நேரமும் உங்களுடன் தொடர்பில் இருப்பேன்.  உங்கள் செயல்கள் அனைத்தையும் அறிந்துகொள்வேன்.  நம் உறவு மிகவும் நெருக்கமானது.  என் மீது உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.  நம் உறவு நம் கடவுச்சீட்டின் நிறத்தைப் பொறுத்து அமைவதல்ல.  உங்கள் மனங்களில் இந்தியாவை வைத்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேன்.

நான் வரும் செய்தி கடைசி நேரத்தில்தான் உங்களுக்குத் தெரியும் என்றாலும், இந்தக் குறைவான நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் இங்கே குழுமியுள்ளீர்கள்.  உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  

மிக்க நன்றி.

****

 

 



(Release ID: 1530076) Visitor Counter : 59


Read this release in: English