பிரதமர் அலுவலகம்
துவாரகாவில் ஓகா மற்றும் பெட் துவாரகா இடையே மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
07 OCT 2017 5:57PM by PIB Chennai
மிகப்பெரும் அளவில் இங்குக் கூடியுள்ள எனது அருமைச் சகோதர, சகோதரிகளே,
இன்று, துவாரகாவில் மாறுபட்ட மனநிலையை நான் ஒன்றாகப் பார்க்கிறேன். எங்குப் பார்த்தாலும் அதிக அளவில் ஆர்வமும், உற்சாகமும் திரண்டுள்ளது. துவாரகாவில் புதிய உற்சாகத்தைப் பெற்றதுபோன்ற அனுபவத்தை இது எனக்கு அளிக்கிறது. துவாரகா மக்களுக்கு எனது மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இன்று, துவாரகா நக்ரி-யில் தொடங்கப்பட்டுள்ள பணி, பெட் துவாரகாவைச் சென்றுசேர்வதற்கான மேம்பாலக் கட்டுமானம் மட்டுமல்ல. இது வெறும் செங்கற்கள், கற்கள் மற்றும் இரும்பினால் அமைக்கப்பட்ட கட்டுமானம் போன்று தெரியவில்லை. இன்று, இந்த மேம்பாலத்தைக் கட்டும் விதம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உறவுடன் பெட் துவாரகாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தை இணைக்கும் பணியாக உள்ளது.
நான் எப்பொழுதெல்லாம், பெட் பகுதிக்குச் செல்கிறோனோ, அப்பொழுதெல்லாம், இந்த பாலத்தைப் பார்க்கிறேன். தெளிவான நீரைப் பார்க்கிறேன். அங்குள்ள அளப்பரிய சுற்றுலா வாய்ப்புகளைப் பார்க்கிறேன். ஆனால், கடந்த காலங்களில் குஜராத் மாநிலத்தை இந்திய அரசு எந்த மாதிரியாகக் கருதியது என்பது உங்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். நாம் எவ்வளவு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுவந்தோம்? பெட் பகுதி மக்களின் நிலை இன்னும் எனது நினைவில் உள்ளது. அனைத்து வேலைகளையும் அவர்கள் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே முடித்துவிடுவார்கள். இரவு நேரங்களில் மக்களின் நடமாட்டம் நின்றுவிடும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல நீர்வழிப் பாதை மட்டுமே இருக்கும். இது கட்டாயமான மற்றும் நெருக்கடியான வாழ்க்கையாக இருந்தது. இரவு நேரத்தில் யாருக்காவது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டால், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது எவ்வளவு சிரமமானது என்பதை பெட் பகுதியைச் சேர்ந்த எனதருமைச் சகோதர, சகோதரிகள் நன்கு அறிந்துள்ளனர். இதன் காரணமாகவே, நாடு முழுவதையும் சேர்ந்த பயணிகளுக்கு இந்த வசதி மிகப்பெரிய பரிசாக இருக்கப் போகிறது.
இந்த வசதியானது, பெட் பகுதி மக்களின் வழக்கமான தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளது. இந்த வசதி, பெட் பகுதியில் உள்ள கடலோரம், கடற்கரைகள் ஆகிய இடங்களில் சுற்றுலா மேம்பாட்டுக்கான திறனை வலுப்படுத்தும். ஒரு சுற்றுலாப் பயணி, இங்கு வந்தால், தாக்கூர் அவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு, உடனடியாகக் கிளம்பிவிடுவார். இது துவாரகாவின் பொருளாதாரத்துக்குப் பெரிய அளவில் பயனளிக்காது. இருந்தாலும், அவர் இரவு நேரத்தில் தங்கினால் மற்றும் இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஆயிரம் ரூபாய் அல்லது இரண்டாயிரம் ரூபாய்களைச் செலவிடும்போது, துவாரகாவில் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். இறைவன் துவாரகாதீஸ்வரரின் அருளால், துவாரகா பகுதிக்கு மக்கள் வருகின்றனர். துவாரகாவில் அவர்கள் தங்கினால் மற்றும் அவர்களுக்கு வசதிகளை நாம் செய்துகொடுத்தால், நிச்சயமாக அவர்கள் துவாரகாவில் தங்குவார்கள். இதன் காரணமாகவே, சுற்றுலாவாசிகளுக்கான வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு நாம் முக்கியத்துவம் அளித்துவருகிறோம். இந்த வசதிகள், அவர்கள் இங்கு வந்தால், ஓரிரு நாட்களுக்கு இங்குத் தங்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். கடற்கரையில் மாலைநேரத்தைச் செலவிட வேண்டும் என்று அவர்கள் உணர வேண்டும். இதன்மூலம், சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து உற்சாகம் கொள்ள வேண்டும். இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
8-10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த துவாரகாவையும், இன்றைய துவாரகாவையும் ஒப்பிட்டுப்பாருங்கள். எந்த அளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? தனித்துவிடப்பட்ட பகுதியை மேம்படுத்துவதன் மூலம், சுற்றுலாவை மேம்படுத்த முடியாது. இதற்கு இணைப்பு தேவை. முதலாவது இடமானது, இரண்டாவது இடத்துடனும், இரண்டாவது இடம், மூன்றாவது இடத்துடனும், இதேபோன்று ஒவ்வொரு பகுதியும் இணைக்கப்பட வேண்டும். கிர் பகுதி சிங்கங்களைப் பார்க்க ஒட்டுமொத்த உலகமும் வருகிறது. இருந்தாலும், கிர் பகுதி சிங்கங்களைப் பார்த்தபிறகு, போர்பந்தர் மற்றும் துவாரகாவுக்குச் செல்வதற்கு அகலமான சாலைகள் அல்லது இரு வழி, நான்கு வழிகள் அல்லது 6 வழிச் சாலைகள் இருந்தால், அவர்களுக்கு வசதியாக இருக்கும். சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். கிர் பகுதி சிங்கங்களைப் பார்ப்பதற்கென வருபவருக்கு, துவாரகாதீஸ்வரரை வழிபட வர வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையிலான சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். மேலும், துவாரகாதீஸ்வரரை வழிபட வருபவருக்கு, கிர் பகுதிக்கு சென்று சிங்கங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் வசதிகள் இருக்க வேண்டும். இதன் காரணமாகவே, தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்புக் கட்டுமானங்களை இந்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதன்படி, சாலைகளை அமைத்து வேகமாகச் செல்வதற்கு வசதி செய்வதுடன், கூடுதலாக, பொருளாதார நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இந்த வசதி, பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தும்.
இன்று, தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கனுதாக் வரை மேற்கொள்ளப்பட உள்ளது. கனு பகுதியை நான் நினைவில் வைத்திருக்கும்போதெல்லாம், அங்கு நமது மிக வயதான தொழிலாளர்களான விவசாயிகள் இருக்கிறார்கள் என்பதைச் சிறுவர்களுக்கு நான் நினைவுபடுத்துவேன். ஆனால், இதனை நாம் செய்தால், சிறப்பாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். இதனை அவர்கள் தொடர்ந்து சிந்தித்துவருகின்றனர். இன்று, கனு பகுதி வரை சாலையை விரிவாக்கம் செய்வதற்காகப் பெருமளவில் பணத்தைச் செலவழிக்கஉள்ளோம். மேலும் இன்று, இந்தத் திட்டத்தின் மூலம், சுமார் ரூ.6,000 கோடி செலவில், ஜாம் நகர், ஜுனாகத் மாவட்டங்களைப் போர்பந்தர் மாவட்டம் வரை இணைக்க உள்ளோம் என்பதை நீங்கள் யூகிக்க முடியும். முதலமைச்சராக மாதவ் சிங் சோலங்கி இருந்த காலத்தை யோசித்துப் பாருங்கள். அந்த நேரத்தில் ஒரு செய்தித்தாளின் முதல் பக்கத்தில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படம் இன்னும் எனது நினைவில் இருக்கிறது. அப்போது, நான் அரசியலில் இல்லை. சமூகப் பணியாளராக இருந்தேன். அந்த நேரத்தில், அப்போதைய முதலமைச்சர் மாதவ் சிங், ஜாம் நகர் அல்லது ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு பகுதிக்கு ஒரு நீர்த் தொட்டியைத் திறந்துவைக்க வருவார். அந்த நேரத்தில் இருந்த அரசுகளின் நிலைப்பாடு அதுவாக இருந்தது. இந்த அரசின் நிலைப்பாட்டைப் பாருங்கள். எந்த மாதிரியான மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் கட்டப்பட்டுள்ளன. நீர்த்தொட்டியை திறந்துவைப்பதற்காக முதல் பக்கத்தில் உங்களது படம் முழுப் பக்க விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தது. அவர்களது வளர்ச்சிக்கான திட்டம், இதோடு நின்றுவிட்டது.
உலகம் மாறியுள்ளது. இந்த மாறியுள்ள உலகத்தில், வளர்ச்சியின் புதிய உச்சத்துக்கு நாம் செல்ல வேண்டும். இதன்மூலமே, ஒவ்வோர் இந்தியனும், இந்த உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். இதுபோன்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது ஒவ்வோர் இந்தியரின் கனவு. இது நரேந்திர மோடியின் கனவு மட்டுமல்ல. உங்களது கனவுக்கு வண்ணத்தை நிரப்ப மட்டுமே நான் முயற்சி மேற்கொள்கிறேன். இதுபோன்ற செயல்களை உண்மையாக்க முயற்சி மேற்கொண்டுவருகிறேன். இதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். நிதின் அவர்கள், சிறிது நேரத்துக்கு முன்பு பேசும்போது, நீலப் பொருளாதாரச் சூழ்நிலையில், குஜராத்தின் கடல் மூலதனத்துக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் வலுவான பலத்தை அளிக்கும் திறன் இந்தப் பிராந்தியத்துக்கு இருப்பதாகத் தெரிவித்தார். குஜராத் மாநிலம், 1,600 கிலோமீட்டர் தொலைவுக்குக் கடலோரப் பகுதியைக் கொண்டுள்ளது. நமது மீனவச் சகோதர, சகோதரிகள் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றனர். நமது கடற்கரைப் பகுதிகளில் நீலப் பொருளாதாரத்தின் முழுத் திறனும் அமைந்துள்ளது. நமது துறைமுகங்களை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அதோடு, துறைமுகங்களை அடிப்படையாகக் கொண்டு, வளர்ச்சி நடவடிக்கைகளைப் பின்பற்றவும் நாங்கள் விரும்புகிறோம். துறைமுகங்களைச் சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் விமான ஓடுதளங்களுடன் இணைக்கும் வகையிலான கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அந்தப் பகுதிகளில்தான், சேமிப்புக்கிடங்குகள், குளிர்பதனக்கிடங்குகள் ஆகியவை கிடைக்கின்றன. இதன்மூலம், இந்திய விவசாயிகள் தயாரிக்கும் பொருட்கள், முடிந்தவரை குறைந்த நேரத்தில் உலகச் சந்தையை அடைய முடியும். இதனால், நமது நாட்டின் விவசாயிகளுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும். இதன் காரணமாகவே, இந்த வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு நடவடிக்கையாக மேற்கொண்டுவருகிறோம். எனது மீனவச் சகோதர, சகோதரிகளுக்காக நீலப் பொருளாதாரத்தின் கீழ், புதிய திட்டத்தை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்று நமது மீனவர்கள், சிறிய படகுகளை வைத்துள்ளனர். இந்தச் சிறிய படகுடன் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்கு செல்லும் அவர்களால், 10-12 கடல் மைல்களைத் தாண்டி செல்ல முடியாது. இந்தப் பகுதியில் போதுமான மீன்களைப் பிடிக்க முடிவதில்லை. பல மணிநேரங்களுக்குக் கடுமையாக உழைத்தபோதும், தேவைப்படும் மீன்களில் பாதி அளவுக்கே மீன்களைப் பிடித்துவருகின்றனர். இதுபோன்ற நெருக்கடியான வாழ்க்கையைத் தொடர நமது மீனவச் சகோதர, சகோதரிகளை நான் அனுமதிக்கலாமா? அவர்களது விதி இதுதான் என்று நான் விட்டுவிடலாமா? நமது மீனவச் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இல்லையா? தங்களது குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியை அளிக்க வேண்டும் என்று எனது மீனவச் சகோதர, சகோதரிகள் விரும்ப மாட்டார்களா? தங்களது சிறிய குடிசையிலிருந்து வெளியேறி சிறந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எனது மீனவச் சகோதர, சகோதரிகள் விரும்ப மாட்டார்களா? இந்த அனைத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டுமானால், அவர்களைப் பொருளாதார அடிப்படையில் மேம்படுத்த வேண்டும். அவர்களை நாம் மேம்படுத்த வேண்டும். இதன் காரணமாகவே, இதுபோன்றதொரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம். நமது மீனவச் சகோதர, சகோதரிகளில் சிலர் ஒன்றாகச் சேர்ந்து வரும்போது, சலுகை அடிப்படையில் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை கடன் வழங்க உள்ளோம். இதன்மூலம், ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரையான செலவில் மிகப்பெரிய படகை அவர்களால் வாங்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும். ரூ.1.5 கோடி, ரூ.2 கோடி மதிப்பிலான மிகப்பெரிய படகுகளை வைத்திருந்தால், அவர்களால் 10-12 கடல் மைல் தொலைவைத் தாண்டி, ஆழ்கடலுக்குச் செல்ல முடியும். ஆழ்கடலில் ஏராளமான மீன்கள் உள்ளன. இவ்வாறு ஆழ்கடலுக்குச் செல்லும்போது, வழக்கமாக 3-4 நாட்களில் பிடிக்கும் மீன்களை, அரை நாளில் பிடிக்க முடியும். 3-4 நாட்களுக்கு இணையான வருமானத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, கரைக்குத் திரும்ப முடியும். மேலும், குளிர்பதனக் கிடங்கு போன்ற அனைத்து ஏற்பாடுகளும் இருக்கும். இதுபோன்ற வசதிகளை, நமது மீனவர்களுக்கு நாங்கள் வழங்க விரும்புகிறோம். இதனை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். இதன்மூலம், ஒவ்வொரு மீனவச் சகோதரரும் பயனடைய முடியும். இது மீனவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
கண்ட்லா துறைமுகத்தை மேம்படுத்திய விதத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். நான் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோதும் கூட, கண்ட்லா துறைமுகம் இருந்தது. அப்போது, அதன் நிலைமை என்ன என்று எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இதனை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டோம். இதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால், அவர்கள் முன்னுரிமை அளிக்கும் திட்டங்களின் பட்டியலில் கண்ட்லா துறைமுகம் இல்லை. இந்திய அரசில் பணியாற்றுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்தது முதல், குஜராத் மாநிலத்தில் துறைமுகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினோம். இதன் காரணமாக, கண்ட்லா துறைமுகம், கடந்த 25 ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டதைவிட, தற்போது மிகவும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. நமது அலாங் பகுதியைப் பார்ப்போம். அலாங் பகுதி குறித்து எவ்வளவு ஆண்டுகளாகப் புகார் தெரிவித்துவருகிறோம்? அலாங் பகுதியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது, அலாங் பகுதியின் தூய்மை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியில், பவ்நகரின் அலாங் பகுதி, உலகில் நமது அடையாளத்துக்குக் காரணமாக இருந்தது. அதேநேரத்தில், சுற்றுச்சூழல் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. தேசிய, சர்வதேசிய அமைப்புகள் கேள்விகளை எழுப்பின. இதுகுறித்துச் சிந்தித்து உதவி செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசிடம் இருந்தது. அலாங் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில் நான் தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட போதிலும், இந்திய அரசை என்னால் விழித்தெழச் செய்ய முடியவில்லை. இப்போது சேவையாற்றுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்ததும், ஜப்பானின் உதவியுடன் மிகப்பெரிய திட்டத்தை தயாரித்துள்ளோம்; புல்லட் ரயிலுக்காக மட்டுமே ஜப்பானை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். ஜப்பானின் ஒத்துழைப்புடன் அலாங் பகுதியின் மேம்பாட்டுக்காக மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கி, அதனை முன்னெடுத்துவருவதை இந்த மக்கள் மறந்திருப்பார்கள். இந்த நடவடிக்கையின் மூலம், அலாங் பகுதியில் உள்ள எனது பாட்டாளி சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது.
மாற்றத்துக்காக நாம் பின்பற்றிவரும் வழிகள், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய, புத்தம் புதிய பகுதிகளில் வளர்ச்சிக்காக நாம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் ஆகியவை இந்தப் பலன்களை அளிக்க உள்ளன. மங்ரோல் மற்றும் வெராவல் ஆகியவை நமது பாரம்பரிய மீன்பிடி முனையங்களாக உள்ளன. அந்த இடத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் அண்மையில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பகுதிகளை வேகமாக முன்னேற்றும் மிகப்பெரும் திட்டத்துக்கு மங்ரோல் பகுதியில் அடிக்கல் நாட்டியதற்காக அவருக்கு நான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் நாட்களில், ஒட்டுமொத்த பெட் பிராந்தியத்தில் உள்ள நமது மீன்பிடித் தொழிலுக்கு மிகப்பெரும் காரணியாக இந்த மீன்பிடி முனையம் மாறும். இந்த நீலப் பொருளாதாரத்தின் மூலமும், சுற்றுலா அடிப்படையிலான பொருளாதாரத்தின் மூலமும், நமது ஒட்டுமொத்தக் கடலோரப் பிராந்தியமும் வளர்ந்துவருகிறது. இதன் மூலம், மனிதவள மேம்பாடும் ஏற்பட்டுவருகிறது.
இன்று, குஜராத் மாநில மக்களுக்கான பரிசை அறிவிக்க நான் விரும்புகிறேன். இது குஜராத்துக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கும் பயனளிக்க உள்ளது. இது நமது கடலோரப் பகுதி மற்றும் தெய்வீக நிலமான துவாரகாவில் செயல்படுத்தப்படஉள்ளது. நமது கடலோர எல்லையைப் பாதுகாப்பதற்காகச் கடல்சார் காவல்படையை அதிநவீனமாக்குவதற்கான பணிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவர்களது பயிற்சிமுறை, வழக்கமான போலீஸார் மேற்கொண்டுவரும் பயிற்சியிலிருந்து வேறுபட்டது. அவர்கள் கடலோரத்திலிருந்து 5 கிலோமீட்டர்கள் வரை கடல் பகுதியின் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பாவார்கள். ஒட்டுமொத்த தேசத்தின் கடல்சார் போலீஸாருக்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை அளிப்பதற்காக மிகப்பெரிய மற்றும் இதுபோன்ற முதலாவது கல்வி நிறுவனத்தை தெய்வீக நகரான துவாரகாவுக்கு அருகே உள்ள மோஜாப்-பில் அமைக்கஉள்ளோம். ஜாம்நகர் விமான நிலையத்துக்குள் பயிற்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதனை நாடு முழுவதையும் சேர்ந்தவர்கள், விமானப்படைக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல, கடல்சார் போலீஸுக்கான பயிற்சி மையம், தெய்வீக நிலமான துவாரகாவில் அமையஉள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானோர் தங்கியிருந்து பயிற்சிபெற முடியும். நாடு முழுவதையும் சேர்ந்த காவல்படையினர் இங்கு வருவது சிறப்பம்சமாக இருக்கும். இதன்மூலம், எந்த அளவுக்கு மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கைகள் நடைபெறும் என்பதை உங்களால் சிறப்பாக யூகிக்க முடியும்.
சகோதர, சகோதரிகளே,
தீபாவளிக்கு மும்முரமாக நீங்கள் தயாராகிவருகின்றீர்கள். தீபாவளிப் பண்டிகை, குஜராத் மாநிலத்துக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. வர்த்தகச் சமூகத்தினருக்கும் கூடச் சிறப்பு வாய்ந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த செய்தித்தாள்களை நான் புரட்டிப்பார்த்தபோது, தீபாவளிப் பண்டிகை 15 நாட்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டதாகத் தலைப்புச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதற்கான முக்கிய முடிவை நேற்று நாம் எடுத்துள்ளதால், எங்கு பார்த்தாலும் தீபாவளிப் பண்டிகை போன்ற சூழலே நிலவுகிறது. ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதிலிருந்து முதல் மூன்று மாதங்களுக்கு ஆய்வுசெய்வோம் என்று முதல் நாளிலிருந்தே நாங்கள் கூறிவருகிறோம். இந்த மூன்று மாதங்களுக்கு என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம், தொழில்நுட்பங்கள், விதிகள் அடிப்படையில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன; விலை விவகாரத்தில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கும் மற்றும் வர்த்தகச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் ஆகியவற்றை ஆய்வுசெய்ய உள்ளோம்; ஏனெனில், அலுவல்ரீதியான நெருக்கடிகள், கோப்புகள் தேங்குவது அதிகாரிகளின் தலையீடு ஆகியவற்றால் நாட்டின் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்புவதில்லை, இந்தியாவில் இதுபோன்ற சூழல் இருப்பதை நாங்கள் எப்போதும் விரும்புவதில்லை. இதன் காரணமாகவே, கடந்த மூன்று மாதங்களாகப் பெற்ற தகவல்கள் அடிப்படையில், ஜிஎஸ்டி கவுன்சிலைத் திருப்திப்படுத்திப் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு நமது நிதியமைச்சர் நேற்று ஒப்புதல் பெற்றுள்ளார். இந்த முடிவுக்கு, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஒரே குரலில் வரவேற்பு கிடைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே நமது தேசத்தின் பலம். அரசு மீது மக்கள் நம்பிக்கை வைக்கும்போதும், முடிவுகளை எடுப்பதில் நேர்மை இருக்கும்போதும், நெருக்கடிகள் இருந்தாலும், அதனை நாடு முழுமையாக ஆதரிக்கிறது. இதனை நான் அனுபவித்துள்ளேன். இதன் காரணமாக எளிமையான வரியான ஜிஎஸ்டி-யை, மேலும் எளிமையாக மாற்றுவதற்கு நாம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை வரவேற்கும் நாட்டுமக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக எனது நாட்டுமக்களுக்கு நன்றிதெரிவிப்பதுடன், அவர்களை வரவேற்கிறேன்.
துவாரகாவின் சகோதர, சகோதரிகளே,
ஸ்ரீகிருஷ்ணரின் துவாரகா நீரில் மூழ்கியது. பெருங்கடலில் ஆழ்ந்து மூழ்கி, உண்மையான துவாரகாவைத் தொட்டுத் தங்களுக்குள் புனிதமடைய வேண்டும் என்பதே இந்தத் தேசம் மற்றும் உலக மக்களின் விருப்பமாக இருந்தது. கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்து ஆட்சிசெய்த பழமையான நகரத்துக்கு மக்கள் சென்று, அதன் கற்களைத் தொட்டுவிட்டுப் பின்னர் திரும்பும்வகையில் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வுசெய்யுமாறு பல்வேறு வல்லுநர்களை நான் கேட்டுக்கொண்டேன். இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த இந்தியாவும் துவாரகாவில் வரிசையில் நிற்பதை உங்களால் பார்க்க முடியும். பேசுவதன் மூலம் மட்டுமே வளர்ச்சி ஏற்படாது. இதற்குக் கனவுத் தொலைநோக்கு பார்வையும் தேவை.
இதற்குப் புனிதமான உறுதி தேவை. அந்த உறுதியை நிறைவேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் தன்னைத்தானே முழுமையாக அர்ப்பணித்து, தனது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும். இன்று, நாட்டின் எந்த மூலையைச் சேர்ந்த சாதாரண மனிதர்களும், நமது அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர் அந்த வளர்ச்சியின் பலன்கள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். வறுமையின் பிடியில் சிக்கி, தங்களது எதிர்காலச் சந்ததிகள் வறுமையில் வாடுவதை அவர்கள் விரும்புவதில்லை. தற்போதைய சந்ததியினர், வறுமையில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தாலும், அவர்களது குழந்தைகள், வறுமையில் வாழ வேண்டிய கட்டாயம் இருக்கக் கூடாது என்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுவருகிறோம். இதுபோன்ற வளர்ச்சிப்பயணம், இன்று மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வளர்ச்சிக்கான புதிய அடையாளக் குறியீடுகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இன்று, ஒட்டுமொத்த உலகத்தையும் இந்தியா தனது பக்கம் ஈர்த்துள்ளது. உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள், தாங்களாகவே முன்வந்து முதலீடுகளைச் செய்கின்றனர். இதன் பலனாக, நாட்டின் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இது இந்த நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. குஜராத்தில் உள்ள கிராமங்களை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளோம். இன்று, இந்த வளர்ச்சிப் பயணத்தில் குஜராத் மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது; இன்று நாட்டின் வளர்ச்சியில் குஜராத் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்காகக் கோடிக்கணக்கான குஜராத் மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த வளர்ச்சிப் பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்லும் குஜராத் அரசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெய் துவாரகாதீஸ்வரர்!
ஜெய் துவாரகாதீஸ்வரர்!
ஜெய் துவாரகாதீஸ்வரர்!
***
(Release ID: 1530074)
Visitor Counter : 284