பிரதமர் அலுவலகம்
மானெக்ஷா மையத்தில், வங்கதேச விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த இந்தியத் தியாகிகளைக் கவுரவப்படுத்தும் வகையில் நடைபெற்ற சோமானோனா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
08 APR 2017 9:17PM by PIB Chennai
மேதகு வங்காள தேச பிரதமர் திருமதி. சேக் ஹசீனா அவர்களே, தியாகிகளின் குடும்பத்தினர்களே, மாண்புமிகு வங்காளதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களே மற்றும் மாண்புமிகு விடுதலைப் போராட்டத் துறை அமைச்சர் அவர்களே, எனது அமைச்சரவை உறுப்பினர்கள் – மாண்புமிகு வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களே மற்றும், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.அருண் ஜேட்லி அவர்களே, இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரமுகர்களே, சிறப்பு விருந்தினர்களே மற்றும் எனது நண்பர்களே,
இது ஒரு சிறப்பான தினமாகும். இந்நாள் இந்திய மற்றும் வங்காளதேசத் தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்வதாகும். வங்களாதேசத்தின் சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிர் ஈந்த வீரர்களை நினைவுக்கூரும் தினமாகும். வங்காளதேசத்தின் தன்மானத்தைப் பாதுகாப்பதற்காகப் போரிட்ட இந்திய இராணுவ வீரர்களை நினைவுக்கூரும் தினமாகும். வங்கதேசத்தின் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கானோர் வாழ்க்கையைப் பறித்துச் சென்றதை இத்தினம் நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால், அதே நேரத்தில், வங்கதேசத்திற்குத் துயர் ஏற்படுத்திய கொடிய சிந்தனைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கக்கூடிய தினமுமாகும். இந்திய மற்றும் வங்காளதேசத்தின் 140 கோடி குடிமக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையின் வலிமையை அங்கீகரிப்பதற்கு இன்று வாய்ப்பு கீழேயுள்ளது. மேலும் இது, நமது சமூகத்திற்கு வலிமையான மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை எவ்வாறு அளிக்கப்போகிறோம் என்பதை வெளிப்படுத்தக்கூடியதற்கான தகுந்த சந்தர்ப்பமாகவும் உள்ளது.
மேதகு பிரதமர் மற்றும் நண்பர்களே,
பல காரணங்களுக்காக இத்தினம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். வங்காளதேச விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து இந்திய வீரர்களின் குடும்பங்களுக்கும் இது மறக்கமுடியாத நிகழ்வாகும். இன்று வங்காளதேசம், 1971 வங்காளதேச விடுதலை போராட்டத்திற்காக உயிர் நீத்த 1661 இந்திய வீரர்களைக் கவுரவிக்கிறது. இந்தியாவின் 125 கோடி மக்களின் சார்பாக வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசினா அவர்களுக்கும், வங்காளதேச அரசு மற்றும் வங்காளதேச மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வீரமிக்க இந்திய வீரர்கள் அநீதி மற்றும் வங்காளதேசத்தில் ஏற்பட்ட இனப்படுகொலையை எதிர்த்து மட்டும் போரிடவில்லை, அவர்கள் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப்போன மனித மாண்புகளைப் பாதுகாப்பதற்காகவும் போரிட்டனர். இங்கு 7 இந்தியத் தியாகிகளின் குடும்பத்தினர் இருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களது வலி மற்றும் இழப்பைப் பகிர்ந்துகொள்கிறது. உங்களது தியாகம் மற்றும் தவம் ஒப்பிடமுடியாதவை.
நண்பர்களே,
வங்காளதேசத்தின் பிறப்பு நம்பிக்கையின் ஒளிக்கீற்றைக் குறிக்கும்வேளையில், 1971-ன் வரலாறு வலியான தருணங்களையும் நமக்கு நினைவூட்டுகிறது. 1971, ஏப்ரல் மாதம் வங்காளதேசத்தில் படுகொலை உச்சத்தில் இருந்ததை நமக்கு நினைவூட்டுகிறது. வங்காளதேசத்தில், ஒட்டுமொத்தத் தலைமுறையையும் அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வங்காளதேசத்தின் பெருமையுடன் தொடர்புடைய மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கு வங்காளதேசத்தின் வரலாற்றை எடுத்துரைக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் அழிக்கப்பட்டனர். இந்தப் படுகொலையின் நோக்கம் அப்பாவி மக்களைக் கொல்வது மட்டுமல்ல, வங்காளதேசம் என்ற சித்தாந்தத்தை ஒட்டுமொத்தமாக வேரறுக்கச் செய்வதுமாகும். ஆனால், இறுதியாக இந்தக் கொடுமை வெற்றிபெற இயலவில்லை. கோடிக்கணக்கான வங்காளதேச மக்களின் மனித மாண்புகளும் மனதைரியமுமே வெற்றி பெற்றது.
நண்பர்களே,
வங்காளதேசத்தின் பிறப்பு கடுமையான தியாகங்களின் வரலாறாக இருப்பதுடன், பொதுவாக இந்தத் தியாக வரலாறுகளில் ஒரே எண்ணமாக, தேசத்தின் மீதான அளவற்ற அன்பு மற்றும் மனித மாண்புகள் இருந்தன. வீரர்களின் தியாகம், தேசத்தின் மீதான அன்பினால் ஊக்குவிக்கப்பட்டதாகும். சுதந்திரப் போராட்ட வீரர்கள் மனித உடலையும் ஆன்மாவையும் மட்டும் கொண்டவர்களாக இல்லாமல், அசைக்கமுடியாததும் அழிக்க இயலாததுமான மனவுறுதியைக் கொண்டிருந்தனர். இச்சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக இந்தியா சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். முக்தி யோதா உதவித்தொகை திட்டத்தின் கீழ், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 10,000 மாணவர்களுக்குக் கல்விக்கான உதவித்தொகை வழங்கப்பட்டுவருகின்றன. இந்நிகழ்ச்சியின், இக்குடும்பங்களின் நல்வாழ்விற்காக மேலும் 3 அறிவிப்புகளை வெளியிடுகிறேன். முக்தி யோகா உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 10,000 சிறுவர்கள் பயனடைவார்கள். அடுத்த 5 ஆண்டுகளில், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பன்முக-நுழைவு விசா வசதி அளிக்கப்பட உள்ளதுடன், ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு மருத்துவத் திட்டத்தின் கீழ் நூறு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இந்தியாவில் இலவசமாக மருத்துவச் சிகிச்சையளிக்கப்படும். வங்காளதேசச் சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இந்திய இராணுவத்தின் தியாகங்களையும் போராட்டத்தையும் ஒருவராலும் மறக்க இயலாது. அவர்களது ஒரே ஊக்குவிப்பாக, வங்காளதேச மக்களின் மீதான அவர்களது அன்பு மற்றும் வங்காளதேச மக்களின் கனவுகளின் மீதான அவர்களது மரியாதை இருந்தது. போரின்போதுகூட, இந்திய இராணுவம் தனது கடமையிலிருந்து தவறாமல், போர்விதிமுறைகளைப் பின்பற்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் உதாரணமாகத் திகழ்ந்ததை நாம் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும். இந்திய இராணுவம், போர்க் கைதிகளை பாதுகாப்பாக அனுப்பிவைத்தது. 1971 போரின்போது இந்திய இராணுவம் வெளிக்காட்டிய மனிதாபிமானம் கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நண்பர்களே, இந்தியாவும் வங்காளதேசமும், கொடூரத்தன்மையை மட்டும் தோற்கடிக்கவில்லை, அத்தகைய சிந்தனைக்குக் கண்டனத்தையும் தெரிவித்தன.
நண்பர்களே,
வங்காளதேசத்தின் மீதான விவாதம் பங்கபந்து அவர்களைப்பற்றிக் குறிப்பிடாமல் முடிவடையாது. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இரண்டும் ஒன்றை ஒன்று ஒத்ததாகும். வங்காளதேசத்தின் சுதந்திரத்திற்குப் பிரதானமாகப் பங்கபந்து அவர்கள் இருந்தார். அவரது காலத்தை தாண்டி முன்னோக்கி அவர் சிந்தித்தார். அவரது ஒவ்வோர் அழைப்பும் மக்களுக்குச் சவாலாக இருந்தது. நவீன, சுதந்திரமான மற்றும் முன்னேற்றமான வங்காளதேசம் என்ற அவரது பார்வை, தற்போதும் வங்காளதேசத்தின் முன்னேற்றத்திற்கு வழியமைக்கிறது. 1971-க்குப் பின்பாக, பங்கபந்து திரு.ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையானது, வங்காளதேசத்தை, அமைதியின்மை மற்றும், நிலைத்தன்மையற்ற சகாப்தத்திலிருந்து மீட்டது. சமூகத்தில் இருந்த வெறுப்புத்தன்மை மற்றும் அமைதியின்மையை அழித்ததன் மூலம், பங்கபந்து அவர்கள், வங்காளதேசத்திற்கு அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான வழியைக் காட்டினார். ‘தங்கம் வங்கம்’ என்ற கனவை நிறைவேற்றுவதற்கான வழியை அவர் காட்டினார். அக்காலகட்டத்தில், இந்தியாவில் இருந்த இளம்தலைமையினர் அவரால் ஈர்க்கப்பட்டு இருந்தனர். அத்தகைய சிந்தனைகள் மூலம் நான் பயன் பெற முடிந்தது, எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும். இன்று, தெற்காசியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகிலும் அமைதி மற்றும் ஒன்றிணைந்து வாழ்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்ட தலைவராகப் பங்கபந்து அவர்கள் கருதப்படுகிறார். அவரது மகள் மேதகு ஷேக் ஹசினா அவர்கள் இங்கு இன்று வங்காளதேசத்தின் பிரதமராகக் கலந்துக் கொண்டுள்ளார். இந்நிகழ்வில், நான் அவரது தைரியத்தைப் பாராட்ட விரும்புகிறேன். தன்னையும் மற்றும் தனது நாட்டையும் கடினமான சூழலிலிருந்து வெளிக்கொணர்ந்த அவரது தைரியம் அரிதானது. இன்றும் கூட அவர் பாறை போல் உறுதியாக நின்று, அவரது நாட்டை முன்னேற்றத்தின் பாதைக்கு அழைத்துச்செல்வதற்காகப் பணியாற்றி வருகிறார்.
நண்பர்களே,
இன்று உலகின் பழமையான பகுதியான நமது பகுதியை மூன்று சித்தாந்தங்கள் வரையறுக்கின்றன. இச்சித்தாந்தங்கள் நமது சமூகத்தின் முன்னுரிமைகள் மற்றும் நமது அரசாட்சி அமைப்பை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று, பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டதாகும். அது நாட்டை வளமாகவும், வலிமைமிக்கதாகவும் உருவாக்குவதுடன், உள்ளடக்கிய முன்னேற்றம் குறித்துக் கவனம் கொள்கிறது. வங்காளதேசத்தின் முன்னேற்றம் மற்றும் உயர்நிலை இச்சிந்தனையின் ஒரு உதாரணமாக உள்ளது. 1971-ல் வங்காளதேச மனிதர்களின் ஆயுட்காலம் இந்தியாவைவிடக் குறைவாக இருந்தது. இன்று, இந்தியாவைக் காட்டிலும் வங்க மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில், வங்காளதேசத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டுஉற்பத்தி 13 மடங்கு உயர்ந்துள்ளது. குழந்தை இறப்புவிகிதம் 222-லிருந்து 38-ஆக்க் குறைந்துள்ளது. மருத்துவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பின்பாக, வங்காளதேசத்தின் ஏற்றுமதி 125 மடங்கு உயர்ந்துள்ளது. மாற்றத்திற்கான இத்தகைய சில அளவீடுகள், தங்களைக் குறித்து நிறையவே பறைசாற்றுகின்றன. பிரதமர் ஷேக் ஹசினா அவர்களின் பார்வையைத் தொடர்ந்து, வங்காளதேசம் பொருளாதார வளர்ச்சியின் புதிய எல்லைகளைக் கடந்துசெல்கிறது.
நண்பர்களே,
இரண்டாவது சிந்தனையானது: “அனைவரும் கூடி, அனைவருக்கும் வளர்ச்சி” அல்லது அனைவருக்குமான உள்ளடக்கிய வளர்ச்சி. எனது அண்டை நாடுகளும் எனது நாட்டுடன் முன்னேற்றமடைய வேண்டும் என நான் தெளிவாக நம்புகிறேன். தனிப்பட்ட இந்தியாவின் வளர்ச்சி முழுமை பெறாது மற்றும் நாம் தனித்து முழு வளர்ச்சியையும் பெற இயலாது. “அனைவரும் கூடி, அனைவருக்கும் வளர்ச்சி” என்பது அமைதியின் அடிக்கல்லினால் மட்டுமே சாத்தியமாகும் என்ற உண்மையை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம். எனவே, ஒவ்வொரு நாட்டுடனும் நாங்கள் நட்புறவிற்காகக் கை நீட்டுகிறோம். நாங்கள் ஒவ்வொரு நாட்டையும் எங்களது வளர்ச்சியின் செயலாக்கத்தில் பங்கேற்க அழைக்கிறோம். நாங்கள் தன்னலமற்று இப்பகுதி முழுவதற்குமான நல்வாழ்வைக் கோருகிறோம். இந்தச் சிந்தனையின் மிகப் பெரிய உதாரணம், இந்திய-வங்காளதேச உறவுகளின் வலிமையான உயர்வாகும். நிதி, அரசியல், உட்கட்டமைப்பு கட்டுதல், பொருளாதாரத் தொடர்பு, எரிசக்திப் பாதுகாப்பு அல்லது பல்லாண்டுகளாக நிலுவையில் உள்ள நிலஎல்லை மற்றும் கடலோர எல்லைப் பிரச்சினைகள் எதுவாக இருப்பினும், அனைத்துத் துறைகளிலும் கிடைக்கப்பெறும் பொருளாதாரப் பயன்கள்; நமது கூட்டுறவுப் பரஸ்பர நம்பிக்கை மற்றும் அமைதி மற்றும், பகிரப்பட்ட வளர்ச்சியின் அடிப்படையிலானது மற்றும் இக்கூட்டுறவு இச்சிந்தனைக்கு அசைக்கமுடியாத ஆதாரமுமாக உள்ளது.
நண்பர்களே,
ஆனால் துரதிருஷ்டவசமாக, தெற்காசியாவில் எதிர்ப்புத்தன்மை மற்றும் சிந்தனைகளும் உள்ளன. அத்தகைய சிந்தனை, பயங்கரவாதத்திற்கு உணர்வூட்டுவதுடன், மனிதாபிமானத்தின் அடிப்படையில் இல்லாமல், பயங்கரவாதத்தைப் பரப்ப வேண்டும் என்ற அடிப்படை நோக்கில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.
கொள்கை உருவாக்குபவர்களைக் கண்டிப்பாக ஒரு சிந்தனை நம்ப வைக்கிறது எனில், அது:
- பயங்கரவாதம் மனிதாபிமானத்தைவிடப் பெரியது
- வளர்ச்சியை விட அழிவு மிக முக்கியமானது
- உருவாக்குதலை விட அழிவு மிக முக்கியமானது
- நம்பிக்கையை விடத் துரோகம் மிகப் பெரியது
நமது சமூகத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மை மற்றும் அதன் மனவளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இச்சிந்தனை பெரும் சவாலாக உள்ளது. இச்சிந்தனை இப்பகுதி முழுவதும் மற்றும் ஒட்டுமொத்த உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.
இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகியவை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதுடன், எதிர்மறை சித்தாந்தங்களாலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நண்பர்களே,
இப்பகுதி முழுவதிலும் உள்ள குடிமக்கள் அனைவரும் வெற்றி மற்றும் வளத்தை நோக்கி நடைபோட வேண்டும் என்பது எனது பெரும் ஆவலாகும். இதற்காக நமது கூட்டுறவிற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கும். இதற்குப் பயங்கரவாதம் மற்றும் இந்த எதிர்மறை சித்தாந்தத்தை அழிப்பது மிக முக்கியமானதாகும்.
நண்பர்களே,
இந்தியா-வங்காளதேசத்தின் உறவுகளானது அரசுகள் அல்லது அதிகார மையங்கள் இடையேயான தொடர்பினால் ஏற்பட்டதல்ல. இரு நாடுகளையும் சேர்ந்த 140 கோடி மக்களும் ஒன்றாக உள்ளதால், இந்தியா மற்றும் இந்தியா-வங்காளதேசம் ஒன்றாக உள்ளன. துக்கம் மற்றும் களிப்பின் கூட்டாளிகளாக நாம் இருக்கிறோம். நான் இந்தியாவிற்காகக் கொண்டுள்ள கனவு, வங்காளதேசம் மற்றும் பிற அண்டை நாடுகளுக்குமானது என நான் எப்போதும் கூறுவேன். வங்காளதேசத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துகள்., இந்தியா, தன்னால் இயன்ற உதவியை நண்பனாக அளிக்கும். இறுதியாக, மீண்டும் ஒரு முறை சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் இந்தியாவின் தைரியமிக்க வீரர்களை நான் வணங்குகிறேன். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காகவும், பங்கேற்றதற்காகவும் பிரதமர் ஷேக் ஹசினா அவர்களுக்குச் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வங்காளதேசத்திற்கு நெருங்கிய மற்றும் நம்பிக்கையான நண்பராக இந்தியா எப்போதும் இருக்கத் தயாராக உள்ளது.
ஜெய் ஹிந்த் – ஜோய் பங்களா!
******
(Release ID: 1530037)
Visitor Counter : 62