பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுடெல்லி இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் 2017 ஜூலை 1 ஆம் தேதி பட்டயக் கணக்காளர் தின விழாவில் ஆற்றிய உரை

Posted On: 01 JUL 2017 10:05PM by PIB Chennai

வணக்கம் !

வாழ்த்துக்கள் !


இந்திய பட்டயக் கணக்காளர்கள்  அமைப்பின் தலைவர் மதிப்புக்குரிய நிலேஷ் விகாம்சே அவர்களே, நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, நாடெங்கிலும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து நேரடி ஒளிபரப்பில் என்னுடன் இணைந்திருக்கும் பட்டயக் கணக்காளர் துறையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களே, அந்தந்த மாநிலங்களில் இருந்து இணைந்திருக்கும் முதலமைச்சர்களே, டெல்லியின் மழையையும் பொருட்படுத்தாமல் இங்கே ஆர்வத்துடன் கூடியிருக்கும் சகோதர, சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் கனிவான வரவேற்பைத் தெரிவித்துக்கொள்கிறேன் !

நல்லதொரு தருணத்தில் இன்றிரவு பாராட்டு பெறும் சாதனையாளர்களே, பல்வேறு இடங்களில் இருந்து இங்கே கூடியிருப்பவர்களே, தொழில் மற்றும் வணிகத்துறை முன்னோடிகளே, சக குடிமக்களே, தொலைக்காட்சி, வானொலி மூலமாக இணைப்பில் இருக்கும் இளைஞர்களே, மதிப்புக்குரிய சீமான்களே, சீமாட்டிகளே,

இன்றைக்கு இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் (ICAI) நிறுவன நாளை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். பெரும் சிறப்புக்குரிய இந்த நிகழ்வை ஒட்டி எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். சொல்லப்போனால் எதிர்பாராத நல்வாய்ப்பு ! உங்களுடைய நிறுவன நாளும், - ``சரக்குகள் மற்றும் சேவை வரிகள்'' என்ற இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான மாற்றம் அமலுக்கு வருவதும் இன்று ஒரே நாளில் அமைந்துள்ளன.

இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளில் உங்கள் மத்தியில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சியும், பெருமையும் மிக்க தருணமாகும். கடந்த தசாப்தங்களில் பட்டயக் கணக்காளர்களாக நீங்கள் முக்கியமான பங்காற்றியுள்ளீர்கள் என்பதையும், அரசு உங்களுக்குக் கம்பீரமிக்க உரிமையை வழங்கி இருக்கிறது என்பதையும் நான் சொல்லிக்கொள்கிறேன். கணக்குப் புத்தகங்களில் உள்ள தகவல்களுக்குச் சான்றளித்து தணிக்கை செய்யும் அத்தாட்சி அதிகாரம் உங்கள் துறையினருக்குத்தான் உள்ளது. அவையெல்லாம் சரியானவையா அல்லது மாற்றி எழுதப்பட்டவையா என்பதை அத்தாட்சி செய்யும் அதிகாரம் உங்களுக்குதான் இருக்கிறது. பலமான பொருளாதாரத்தையும், ஆரோக்கியமான நிதிநிலைமையையும் பராமரிக்கும் முக்கியமான பொறுப்பு உங்களுக்கு உள்ளது. சமூகம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் மருத்துவர்கள் அக்கறை காட்டுவதைப் போல உங்களுக்குப் பொருளாதாரம் மற்றும் நிதிநிலைமைப் பராமரிப்பில் முக்கியப் பொறுப்பு இருக்கிறது. அதே சமயத்தில், தன்னுடைய வருமானம் பெருக வேண்டும் என்பதற்காக அதிகமான மக்கள் நோயுற வேண்டும் என்ற ஆரோக்கியமற்ற செயல்பாடுகளில் எந்தவொரு மருத்துவரும் ஈடுபட மாட்டார் என்று நான் நம்புகிறேன். ஒருவர் நோயுற்றால் தனக்கு அதிகப் பணம் கிடைக்கும் என்பது மருத்துவருக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால், அப்போதும் கூட அவர் மக்களிடம் ஆரோக்கியமான செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களையே வலியுறுத்துகிறார்.

அன்பு நண்பர்களே, பொருளாதாரம் மற்றும் நிதிமுறைமைகள் ஆரோக்கியமாக இருப்பதையும், எந்தவொரு மோசடியாலும் பாதிக்கப்பட்டுவிடாமல் இருப்பதையும் உறுதி செய்யும் பொறுப்பை நீங்கள் ஏற்றிருக்கிறீர்கள். நாட்டின் பலமான பொருளாதாரம் மற்றும் நிதிச் சூழலின் தூண்களாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது உண்மையிலேயே பெரியதொரு கவுரவமான விஷயம். ஒருவகையில், உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவும், உங்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது. நிதி சார்ந்த நுணுக்கங்களை எளிதில் கையாள்வதில் இந்திய பட்டயக் கணக்காளர்களுக்கு உலகெங்கும் பாராட்டுகள் கிடைக்கின்றன.

இன்றைக்குப் புதியதொரு பட்டயக் கணக்காளர்ப் பாடத்திட்டத்தை தொடங்கிவைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. காலத்துக்கேற்ற பாடத்திட்டம் மற்றும் தேர்வுகளின் நம்பகத்தன்மையின் அடையாளமாக இது இருக்கிறது. இந்தத் தொழிலில் புதிதாகச் சேருபவர்களுக்கு நிதி சார்ந்த நுணுக்கங்களை மேலும் கற்பிக்கும் வகையில் இந்தப் புதிய பாடத் திட்டம் அமையும் என்று நான் நம்புகிறேன். உலகமயமாக்கல் சூழ்நிலையில், காலத்துக்கேற்ற மனிதவளங்களை உருவாக்கும் வகையில் நம்முடைய கல்விநிலையங்கள் அமையும் வகையில், காலத்துக்கேற்ற முறைமைகளை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டியுள்ளது. தொழில் துறையின் தேவைக்கு ஏற்றவாறு நீடித்திருப்பதற்கு, உலகளாவிய தேவைகள் மற்றும் தகுதிநிலைகளுக்கு ஏற்பட நமது பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டியுள்ளது. “அக்கவுன்டன்சி“ துறையில் தொழில்நுட்பத் தேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் நமது பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும். கணக்காளர்கள் துறையில் புதுமைச் சிந்தனைகளை நாம் ஊக்குவித்திட வேண்டும். பட்டய நடுநிலைமை அமைப்புகள் தொழில்நுட்பத்தைப் புதுமைச் சிந்தனை மிக்கதாக மாற்றும் வழிகளை நாம் கண்டறிய வேண்டும். “அக்கவுன்டன்சி” துறையில் தேவைப்படும் புதிய மென்பொருளுக்குச் சந்தையில் பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளன.

 

நண்பர்களே, நமது புனிதநூல்கள் நான்கு மானிட தர்மங்களை வலியுறுத்துகின்றன - மானிடர்கள் பின்பற்ற வேண்டியவை என அவற்றை வலியுறுத்துகின்றன. அவற்றில் - தர்மம் (நன்னெறி மதிப்புகள் ), அர்த்தா (பொருளாதார மதிப்புகள்), காாமா (மனோதத்துவ மதிப்புகள்), மோக்சா (ஆன்மிக மதிப்புகள்) ஆகியவை அடங்கும். தர்மம் மற்றும் மோட்சம் பற்றி எப்போது நாம் விவாதித்தாலும், துறவிகளும் மதகுருமார்களும் நம் மனதில் தோன்றுவது உண்டா! அதேபோல ஒருவர் கணக்குகள் மற்றும் நிதி பற்றி நினைக்கும்போது, உங்களைத் தவிர வேறு யாரும் முதலில் நினைவுக்கு வருவதில்லை. பொருளாதார உலகின் துறவிகள் என உங்களைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். உண்மையான மோட்சத்தை எட்டுவதற்குத் துறவிகளும், மதகுருமார்களும் நம்மை வழிநடத்துவதைப் போல, பொருளாதார முறைமைகளை வழிநடத்தும் அதே முக்கியமான பங்கு உங்களுக்கு இருக்கிறது.

நேர்மையான செயல்பாடுகளை நோக்கி ஒருவருக்கு வழிகாட்டும் தார்மிகப் பொறுப்பு, பட்டயக் கணக்கியல் தொழிலில் ஈடுபட்டுள்ள  உங்களுக்கு இருக்கிறது.

என் அன்புக்குரிய நண்பர்களே,

இன்றைக்கு என்மீது நீங்கள் காட்டும் அன்பு மற்றும் ஊக்கத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்களுடன் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள அனுமதித்திருப்பதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நாம் இரு தரப்பிலும் ஒரே மாதிரியான தேசபக்தி மாண்புகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். தேசம் மற்றும் அதன் குடிமக்களுக்கு மிகப் பெரிய நன்மைகளை உருவாக்கித்தருவதில் அக்கறை கொண்டிருக்கிறோம். ஆனால், சில கடினமான எதார்த்தங்களை நாம் எதிர்கொள்வோம் ! அவ்வப்போது உங்களை இது சிந்திக்கவைக்கும். ஒரு வீடு தீப்பிடித்து, அனைத்து சொத்துகளும் இழந்துவிட்டால், அந்தக் குடும்பம் மனஉறுதி மற்றும் விடாமுயற்சியால் திரும்ப அவற்றை ஈட்டிவிடும் என்று, சமூகத்தில் அனுபவமிக்கவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்தக் கடும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு, அதே உற்சாகத்துடன் புதிதாகத் தொடங்குவார்கள். சிறிது காலத்திலேயே அவர்கள் திரும்ப எழுந்துவிடுவார்கள். தீயில் சிக்கிய ஒரு வீட்டை மீண்டும் உருவாக்குவது சாத்தியம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால், அந்தக் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்குத் திருடும் பழக்கம் இருந்தாலும், அந்தக் குடும்பத்தால் நன்னெறியான நிலைக்கு ஒருபோதும் திரும்பி வர முடியாது என்றும் கூறுவார்கள். குடும்பத்தில் ஒருவர் தவறான பாதையில் சென்றாலும், என்றென்றைக்கும் அந்தக் குடும்பம் அழிவுப் பாதையிலேயே செல்லும்.

அன்பு நண்பர்களே, கணக்குகளைச் சரிப்படுத்தும் பணியில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள். நாம் நேர்மையாளர்களாக இருந்தால், மிகப்பெரும் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்க முடியும். வெள்ளம் மற்றும் பூகம்பங்கள் போன்ற மோசமான இயற்கைப் பேரிடர்களின்போது, அரசு நிர்வாகத்துக்கு ஆதரவாக இருந்து, தேசத்தின்  நலனில் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். இருந்தபோதிலும், குடிமக்களில் சிலருக்கு திருட்டுப் பழக்கம் இருந்தால், குடும்பத்துக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை அது ஏற்படுத்திவிடும். கனவுகள் சிதைக்கப்படும். நாட்டின் வளர்ச்சியில் அது தடைகளை ஏற்படுத்திவிடும். அதுபோன்ற திருட்டு வேலைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், பழைய சட்டங்கள் இப்போது மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பல நாடுகளுடன் நமக்கு உள்ள புரிந்துணர்வுஒப்பந்தங்களும், அதற்கேற்ப திருத்தப்பட்டுள்ளன. ஸ்விஸ் வங்கிக் கணக்குகளின் அண்மைக் காலப் புள்ளிவிவரங்கள்,  கருப்புப் பணம் விவகாரத்தில் அரசின் கடும் நடவடிக்கைகளுக்குச் சான்றுரைப்பதாக உள்ளன. ஸ்விஸ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்திய தேசத்தவர்களின் கருப்புப் பண டெபாசிட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக உள்ளது. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு 1987-ல் ஒரு நாட்டவர்கள் எவ்வளவு டெபாசிட்கள் செய்திருக்கிறார்கள் என்பதை வெளியிட ஸ்விஸ் வங்கி அதிகாரிகள் தொடங்கினர். கடந்த நிதியாண்டுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள டெபாசிட் அளவு 45%  குறைந்துள்ளது.

தேசத்தின் ஆட்சிப்பொறுப்பை எங்களிடம் நீங்கள் ஒப்படைத்த 2014-ல் இருந்து, இந்தப் போக்கிற்கு நாங்கள் தடைகள் போட்டு வருகிறோம். 2013-ல் ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப்பண டெபாசிட்கள் 42% வளர்ச்சி இருந்தது என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியும் கவலையும் கொள்வீர்கள். பெரியோர்களே, தாய்மார்களே, இரண்டு ஆண்டுகள் கழித்து சுவிட்சர்லாந்தில் இருந்து உடனுக்குடன் தகவல்களை நாம் பெறத் தொடங்கும்போது, கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் நிலைமை எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்துபாருங்கள். இருந்தபோதிலும், தேசத்தின் மீது நீங்கள் வைத்துள்ள பற்று, கருப்புப்பணம்  குவித்து வைத்துள்ளவர்களை எச்சரிக்கச் செய்யும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

நண்பர்களே, தூய்மையான பாரதம் திட்டத்தை நான் வலியுறுத்துகிற சமயத்தில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிமுறைமைகளைச்  சுத்தம் செய்யும் செயல்பாடுகளையும் தொடங்கிஇருக்கிறேன். நவம்பர் 8 ஆம் தேதி உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். நமது முறைமைகளில் இருந்து கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான உறுதியான மற்றும் தடம் பதிக்கும் முயற்சியாக பணமதிப்புநீக்க நடவடிக்கை அமைந்துள்ளது. நவம்பர் 8 ஆம் தேதிக்குப் பிறகு, முன்எப்போதும் இல்லாததைவிட அதிகமான வேலைகளில் நீங்கள் மூழ்கிஇருப்பதாக நான் கேள்விப்பட்டேன். பட்டயக்கணக்காளரில் பலரும் தீபாவளி விடுமுறையில் இருந்தனர், விடுதிகளுக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால் சிலர் தங்கள் பயணங்களை ரத்து செய்துவிட்டு, வாரத்தில் எல்லா நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும் தங்கள் அலுவலகத்தில் பணிகளைக் கவனித்தனர். இப்போது, நீங்கள் எல்லோரும் நேர்மையாளர்களாகப் பணியாற்றினீர்களா அல்லது முறைகேடுகளில் பங்கேற்றீர்களா என்று எனக்குத் தெரியாது ! நல்லது, தேசத்தின் மீதான அக்கறையில் செயல்பட்டீர்களா அல்லது உங்கள் வாடிக்கையாளரின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டீர்களா ? ஆனால் அந்த நாட்களில் நள்ளிரவிலும் பணியாற்றினீர்கள் !

நண்பர்களே, இந்த நோக்கத்தின் பலத்தை நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கும் காரணத்தால், கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சி குறித்து எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன். வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள பணம் குறித்த தகவல்களை ஆய்வுசெய்வதற்கு பெரியதொரு நடைமுறையை அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் நவம்பர் 8 ஆம் தேதிக்கு முன்பும், அதற்குப் பிறகும் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படும். யாரிடமும் நாங்கள் விசாரணை நடத்தவில்லை, ஆனால் தகவல்களை மட்டும் ஆய்வு செய்கிறோம். எனதருமை நண்பர்களே, நாட்டின் மீது உங்களுக்கு உள்ள பற்று, எனக்குள்ள பற்றைவிடக் குறைவானது அல்ல என ஏற்கெனவே நான் கூறியுள்ளேன். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு விஷயத்தை, முதன்முறையாக உங்களுக்குத் தெரிவிக்கப் போகிறேன். இதுவரை நடைபெற்ற தகவல்கள் ஆய்வில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகள் - பதிவு பெற்ற கம்பெனிகள் சந்தேக வளையத்துக்குள் வந்திருக்கின்றன.

இன்னும் நிறைய தகவல் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது ; சரியான எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என்று உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை ! இந்த செயல்பாடு தொடங்கியதற்குப் பிறகு, சில தீவிரமான விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த அரசின் சிந்தனைகள் மற்றும் அரசியல்வாதிகளின் பலம் ஆகியவற்றுடன் நீங்கள் இணைந்து செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில், இந்த விஷயங்களை உங்களிடம் நான் சொல்கிறேன். ஒருபுறம், அடுத்து என்ன நடக்கும் என்று ஜூன் 30  மற்றும் ஜூலை 1க்கு இடைப்பட்ட இரவை அரசும், ஊடகங்களும், ஒட்டுமொத்த வணிகஉலகமும் தீவிரமாக கவனித்துவருகின்றன. மறுபுறம், 48 மணி நேரத்துக்கு முன்பு, ஒற்றை உத்தரவின் மூலம் ஒரு லட்சம் நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் பெயர்கள் நிறுவனங்களின் பதிவாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது சாதாரணமான ஒரு முடிவு அல்ல, நண்பர்களே. அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டும் கணக்கு போட்டு செயல்படுவர்களால், இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியாது. நாட்டு நலனில் அக்கறை கொண்டு வாழ்பவர்களால் மட்டுமே இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியும். ஒரே உத்தரவில் ஒரு லட்சம் நிறுவனங்களின் நீக்கம் செய்யும் சக்தி, தேசபக்தியில் உள்ள உந்துதலில் இருந்து மட்டுமே கிடைக்கும். ஏழைகளிடம் இருந்து கொள்ளையடித்தவர்கள், அவற்றை ஏழைகளுக்கே திருப்பித் தர வேண்டும்.

இதுமட்டுமின்றி, கருப்புப்பணம் பதுக்குவது மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட 37 முகமூடி நிறுவனங்களை அரசு ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளது. அவற்றுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது எதிர்காலத்தில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். போலி நிறுவனங்களை ஒழிப்பது மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஆகியவை அரசியல் ரீதியாகச் சரியற்றது என்றும், எந்த அரசியல் கட்சிக்கும் அது சிக்கலை உருவாக்கும் என்றும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நாட்டுக்காக இதுபோன்ற கடுமயான முடிவுகளை யாராவது எடுத்தாக வேண்டும்.

என் பட்டய கணக்காள நண்பர்களே, உங்கள் அமைப்பின் நிறுவன நாள் விழாவுக்கு இங்கு நான் வந்திருக்கிறேன். மேலோட்டமான ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க நான் விரும்புகிறேன். கணக்குகளைப் பராமரிக்கும் சக்தி உங்களிடம் இருக்கிறது. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, அந்த நிறுவனங்களுக்கு சிலர் நிச்சயமாக உதவி செய்திருப்பீர்கள். இந்தத் திருடர்களும், கொள்ளையர்களும் சில பொருளாதாரநிபுணர்களிடம் சென்றிருப்பார்கள். இந்தத் தேவைக்காக அந்த நிறுவனங்கள் உங்கள் யாரிடமும் வந்திருக்காது என்று நான் மிக நன்றாக அறிவேன். ஆனால் அவர்கள் யாரிடமாவது உதவியை நாடி இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டாக வேண்டும். இந்தக் கூட்டத்தில் உங்கள் மத்தியில் அமர்ந்திருக்கக் கூடிய, அந்த நிறுவனங்களுக்கு உதவிய சிலரை அடையாளம் காண வேண்டியது அவசியம் என நீங்கள் நினைக்கவில்லையா ? நண்பர்களே, நாட்டில்  2 லட்சத்து 72 ஆயிரம் பட்டயக் கணக்காளர்கள் இருப்பதாக எனக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. உங்களிடம் பயிற்சி உதவியாளர்கள் இருப்பார்கள். அவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு லட்சம் இருக்கும். பட்டயக் கணக்காளர்கள், பயிற்சி உதவியாளர்கள் மற்றும் உங்கள் அலுவலர்கள் அனைவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தம் 8 லட்சத்துக்கும் மேல் வரும். இந்தத் துறையில், அதாவது உங்கள் தொழிலில், ஈடுபட்டுள்ள உங்கள் குடும்பங்களின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் மேல் இருக்கிறது. எண்ணிக்கைகளில் இருந்து விஷயங்களை எளிதில் புரிந்துகொள்வீர்கள் என்பதால், மேலும் சில உண்மைகளை உங்கள் முன் நான் வைக்கிறேன்.

நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான பொறியாளர்கள் மற்றும் மேலாண்மைப் பட்டதாரிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்தத் தொழில்கள் எல்லாம் மேல்தட்டுத் தொழில்கள் அல்லது அதிக மரியாதைக்குரிய வேலைகளாக மதிக்கப்படுகின்றன. நமது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் இதுபோன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சொல்லப்போனால் நமது நாட்டில் நகரங்களில் கோடிக்கணக்கான ஆடம்பர வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இரண்டு கோடியே 18 லட்சம் பேர் கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கைகள் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம் ; இருந்தபோதிலும் நமது நாட்டில் 32 லட்சம் பேர் மட்டுமே தங்களுடைய வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருப்பதாக வருமானவரி கணக்கு தாக்கலில் தெரிவித்துள்ளனர். உங்களில் யாராவது இதை நம்ப முடிகிறதா ? கணக்குப் புத்தகங்களைச் சரி பார்க்கும் உங்களிடம் இதை நான் கேட்கிறேன்.  நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் 32 லட்சம் பேர் மட்டும் தானா?

என் அன்புக்குரிய நண்பர்களே, இதுதான் நமது நாட்டில் கசப்பான உண்மையாக உள்ளது. நாட்டில் 32 லட்சம் பேர் மட்டுமே தங்களின் வருமானம் பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் என்று இந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பெரும்பகுதி மக்கள் சம்பளம் வாங்கும் பிரிவில் இருப்பவர்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு நிரந்தரச் சம்பளம் உண்டு. பெரும்பகுதி சம்பளம் அரசிடம் இருந்து பெறப்படுகிறது என நம்புகிறேன். இதுமட்டுமின்றி, நாட்டில் உள்ள உண்மையான நிலவரம் என்ன? எனவே, சகோதரர்களே, தகவல்களை இன்னும் முன்வைக்க நான் விரும்பவில்லை. ஆனால், நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான வாகனங்கள் வாங்கப்படுகின்றன என்பதை இதன் மூலம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இருந்தும், நாட்டின் மீதான பொறுப்புகள் முழுமை பெறவில்லை; அது மிகவும் கவலைக்குரியது.

அதிகத் தகவல்களை மேற்கோள் காட்டுவதற்குப் பதிலாக, என் எண்ணங்களை உங்கள் முன் வைக்க நான் விரும்புகிறேன். பட்டயக் கணக்காள சகோதரர்களே, தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலை பொருத்தமாக இருந்து, நேர்மையாக வரிகள் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இருந்தால் மட்டும் ஒரு நபர் அல்லது ஒரு வாடிக்கையாளர் வரிகளைச் செலுத்துகிறார்.  ஆலோசனை சொல்பவரே உண்மைகளை மறைக்கும்படி கூறினால், அவர் தைரியமாகத் தவறான பாதையில் தான் செல்வார். எனவே, அந்தத் தவறான ஆலோசகர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதும் முக்கியமானதாகும். அதற்கு நீங்களும் கடுமையான முயற்சிகள் எடுக்க வேண்டும். பட்டயக் கணக்கியல் என்பது, மனிதவள மேம்பாட்டை உங்களால் மட்டுமே செய்யக் கூடிய ஒர் ஏற்பாடாக உள்ளது. பாடத்திட்டத்தை நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள்; நீங்கள் தான் தேர்வு நடத்துகிறீர்கள்; விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் நீங்களே உருவாக்குகிறீர்கள்; குற்றவாளிகளை உங்களுடைய அமைப்புதான் தண்டிக்கிறது. நாட்டின் 125 கோடி மக்களின் குரலாக உள்ள, ஜனநாயகத்தின் கோவிலாகக் கருதப்படும் இந்திய நாடாளுமன்றம் உங்களுக்கு அவ்வளவு அதிகாரங்களை வழங்கிஇருக்கிறது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் வெறும் 25 பட்டயக் கணக்காளர்கள் மீது மட்டுமே புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது ஏன்? வெறும் 25 பேர்தான் தவறு செய்தார்களா? பல ஆண்டுகளாக 1,400 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஒரு வழக்கு இறுதி ஆவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. இதுபோன்ற உயர்வான தகுதிமிக்க தொழில் செய்பவர்களுக்கு, இது கவலை தரும் விஷயமா இல்லையா என்று சொல்லுங்கள். நண்பர்களே. சகோதர சகோதரிகளே, சுதந்திரப் போராட்டக் காலத்தில், பல இளைஞர்கள் தூக்கு மேடைக்குப் போனார்கள். நாட்டின் சுதந்திரத்துக்காகப் பல பெரிய மனிதர்கள் சிறைகளில் வாடினார்கள். அந்தக் காலக்கட்டத்தில் நாட்டில் முக்கியத் தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் முன்வந்து கைகோர்த்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்கறிஞர்கள். அந்தப் பெரிய வழக்கறிஞர்கள், பெருமளவில், சுதந்திரப் போராட்டம் என்ற பெரிய போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுக்குச் சட்டம் தெரியும். சட்டத்துக்கு எதிராகப் போராடினால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று அறிந்திருந்தனர். இருந்தபோதிலும், அந்தக் காலக்கட்டத்தில், நல்லபடியாக வளம் சேர்க்கும் சட்டத் தொழிலை, நாட்டுக்காக விட்டுக்கொடுத்தனர். மகாத்மா காந்தி, சர்தார் படேல், டாக்டர் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு மட்டுமன்றி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், பண்டிட் மதன்மோகன் மாளவியா, பால கங்காதரத் திலகர், மோதிலால் நேரு, சி. ராஜகோபாலாச்சாரி, தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், சைபுதின் கிச்லூ, பூலாபாய் தேசாய், லாலா லஜபதி ராய், தேஜ் பகதூர் சப்ரூ, அசப் அலி, கோவிந்த வல்லப பந்த், கைலாஷ்நாத் கட்ஜு என எண்ணிக்கையில் அடங்காதவர்கள்  சட்டத்தொழிலை விட்டுவிட்டு நாட்டுக்காக வந்துள்ளனர். தேசபக்தியால் உந்துதலுக்கு ஆளாகி, நாட்டின் சுதந்திரத்துக்காகத் தங்கள் வாழ்வை அவர்கள் அர்ப்பணித்துக்கொண்டார்கள். நமது அரசியல்சாசனத்தை உருவாக்கியதில் அவர்களில் பலர் முக்கிய பங்காற்றினர். சகோதர சகோதரிகளே, நமது நாட்டின் வரலாற்றில் இவர்களின் மறக்க முடியாத பங்கை நம்மால் மறந்துவிட முடியாது.

நண்பர்களே, இன்றைக்கு நமது நாடு வரலாற்றில் மற்றொரு நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. 1947ல் நாட்டின் அரசியல் ரீதியான ஒருங்கிணைப்புக்குப் பிறகு, இன்றைக்கு, நமது நாடு பொருளாதார ரீதியில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 2017-ல், ``ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை'' என்ற கனவை நனவாக்கும் வகையிலான புதிய பயணத்தை நமது நாடு தொடங்குகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில் பட்டயக் கணக்காளர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. என் ஆழ்ந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள் நண்பர்களே. சுதந்திரப் போராட்ட இயக்கத்தின்போது, இந்தியாவின் சுதந்திரத்துக்காக வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள். இன்றைக்கு, உங்கள் வாழ்வை அர்ப்பணியுங்கள் என்று உங்களிடம் நான் கேட்கப்போவதில்லை. நீங்கள் சிறை செல்ல வேண்டியதில்லை. இந்த நாடு உங்களுடையது; இந்த நாட்டின் எதிர்காலம் உங்கள் பிள்ளைகளுக்கானது. எனவே, சுதந்திரப் போராட்டத்தை வழக்கறிஞர்கள் முன்னெடுத்துச் சென்றதைப் போல, இந்தப் புதிய காலக்கட்டத்தின் தலைமைப்பண்பு அதிகாரம் உங்கள் கைகளில் இருக்க வேண்டும். இன்றைக்குப் பொருளாதார மேம்பாட்டை என் பட்டயக் கணக்காளர்களின் படைதான் வழிநடத்திச் செல்லும். அபாரமான பொருளாதார வளர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாரும் வலுவானதாக ஆக்கிட முடியாது. ஊழலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், உங்கள் வாடிக்கையாளர்களை நேர்மையான பாதையில் வழிநடத்திச் செல்லுங்கள் என்று உங்களை மீண்டும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஊழலை ஒழிப்பதற்கு, நீங்கள்  உறுதியேற்க வேண்டும்.

நண்பர்களே, எந்தவொரு நாட்டின் பொருளாதார முறைக்கும் தூதர்களைப் போன்றவர்கள் பட்டயக் கணக்காளர்கள். அரசுக்கும், வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கும் இடையிலான தொடர்பாளர்களைப் போல நீங்கள் பணியாற்றுகிறீர்கள். உங்கள் கையெழுத்து பிரதமரின் கையெழுத்தைவிட அதிக வல்லமை மிக்கது.

உண்மை மீதான நம்பிக்கைக்கு அத்தாட்சியாக உங்கள் கையெழுத்து உள்ளது. நிறுவனங்கள் சிறிதாகவோ பெரியதாகவோ இருக்கலாம். இருந்தபோதிலும், அவர்களின் கணக்குப் புத்தகங்களுக்கு நீங்கள் சான்றளித்துவிட்டால், அதை அரசு நம்புகிறது, மக்களும் அதை நம்புகிறார்கள்.

இருப்புநிலை அறிக்கையில் நீங்கள் கையெழுத்திட்டுவிட்டால் அதை யாரும் கேள்வி கேட்பதில்லை, அதன் பிறகு கோப்புகள் பிடித்து வைக்கப்படுவதில்லை என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? நண்பர்களே, அதற்குப் பிறகு புதியதொரு அத்தியாயம் தொடங்குகிறது.

உங்களுக்குப் புதியதொரு வாழ்க்கை இருப்பதை எடுத்துக் காட்டுவதற்கு இன்றைக்கு நான் வந்திருக்கிறேன். ஒரு நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களுக்கு நீங்கள் சான்றளித்துவிட்டால், உங்களுடைய வரிக் கணிப்பை அரசு அதிகாரிகள் நம்பிக்கை கொள்கின்றனர். நிறுவனம் வளர்கிறது, செழிப்படைகிறது, நீங்களும் அதனுடன் சேர்ந்து வளர்கிறீர்கள், செழிப்படைகிறீர்கள். இருந்தபோதிலும், நண்பர்களே, விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை.

ஒரு நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கைக்கு நீங்கள் சான்றளித்துவிட்டால், பொதுமக்கள் முன்னிலையில் அது பார்வைக்குக் கொண்டுவரப்பட்டுவிடுகிறது; முதியவர் ஒருவர் பரஸ்பர நிதியில் முதலீடு செய்கிறபோது; ஏழை விதவை ஒருவர் தனது ஒட்டுமொத்த மாதாந்திரச் சேமிப்பு முழுவதையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறபோது, ஒரு நிறுவனத்தின் சரியான சூழ்நிலை வெளிப்படுத்தப்படாமல் போனால், உண்மைகள் மறைக்கப்பட்டால்; உண்மையான நிலவரம் தெரிவிக்கப்படாவிட்டால், என்னருமை நண்பர்களே நிறுவனம் திவால் ஆவதுடன் மட்டுமின்றி அந்த ஏழை விதவையின் வாழ்வும் மூழ்கிவிடுகிறது, முதியவரின் வாழ்வும் சிதைந்துவிடும். தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை, உங்களின் ஒற்றைக் கையெழுத்தை நம்பித்தான் அவர்கள் முதலீடு செய்கிறார்கள். எனவே, இந்தியாவின் 125 கோடி மக்கள் உங்கள் கையெழுத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதால், உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஒருபோதும் அவர்கள் நம்பிக்கையைத் தகர்த்துவிடாதீர்கள், யாருக்கும் அதில் சந்தேகம்கூட வந்துவிட அனுமதித்துவிடாதீர்கள்.

நம்பிக்கைக்கு மாறாக நடந்துவிட்டதாக மனதளவில் நீங்கள் உணர்ந்தால், தயவுசெய்து நம்பிக்கையை ஏற்படுத்த முன்வாருங்கள். உங்கள் அமைப்பின் நிறுவனத் தேதியான ஜூலை 1, அந்த நம்பிக்கையைப் புதுப்பிக்க உங்களுக்கு இன்னொரு வாய்ப்பை அளிக்கிறது. ஒருமைப்பாட்டைக் கொண்டாடும் இந்த விழாவில் இணைந்திடுமாறு உங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். தயவுசெய்து உங்கள் பணியின் முக்கியத்துவத்தைக் கவனித்து, உங்கள் பாதையைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் மீது இந்தச் சமூகம் வைத்திருக்கும் கவுரவத்தை நீங்களே உணர்வீர்கள்.

நண்பர்களே, `வரிக் கணக்கு' என்பதற்கு வெவ்வேறு வரையறைகள் இருக்கின்றன. இருந்தபோதிலும், அரசு எத்தனை வரிகள் வசூலித்தாலும், அவை நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப் படுகின்றவா இல்லையா என்று நான் யோசிக்கிறேன். இதுதான் `வரிக் கணக்கு'.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அது முக்கியப் பங்காற்றுகிறது. தன் வாழ்நாள் முழுக்கச் சமையலுக்கு விறகுகளை பயன்படுத்தி வந்த ஏழைப் பெண்மணிக்கு, இது சமையல் எரிவாயு இணைப்பை அளிக்கிறது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோருக்கு ஓய்வூதியம் கொடுப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

தன் கல்வியை முடிப்பதற்கு மாலைநேர வகுப்புகளுக்கு செல்ல உதவும் வகையில், நாள் முழுக்கக் கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்குச் சுயவேலை வாய்ப்பு அளிக்க இந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது.

சிகிச்சைக்குச் செலவழிக்க பணம் இல்லாத ஏழைகளுக்கு, நோயுற்றிருந்தாலும் வேலைக்குச் செல்லாவிட்டால் பிள்ளைகளுக்கு சாப்பாடு கிடைக்காதே என்பதால் வேலைக்குச் செல்லும் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வதற்கு இந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது.

வரிகள் மூலம் வசூல் செய்யப்படும் பணம், நம்மைப் பாதுகாக்க எல்லையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்காகச் செலவிடப்படுகிறது.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும் மின்சாரவசதி கிடைக்காத வீடுகளுக்கு மின்சார வசதி அளிப்பதற்காக இந்தப் பணம் செலவு செய்யப்படுகிறது. அவர்களின் வீடுகளில் ஒரு பல்புகூட எரியவில்லை; அவர்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

நாட்டின் ஏழை மக்களுக்கு, அவர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து கொடுப்பது எப்படிப்பட்ட பெரிய சேவையாக இருக்கும்! உங்களுடைய ஒரு கையெழுத்து, இந்த நாட்டு ஏழை மக்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்று ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டீர்கள்.

இந்த நாட்டின் சாமானிய மக்களின் கனவுகளைப் பூர்த்தி செய்யும் பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது; இதில் நீங்கள் முக்கியப் பங்காற்ற முடியும். ஒருமுறை நீங்கள் முடிவு செய்துவிட்டால், ICAI-யின் வரலாற்றில் 2017 ஜூலை 1 ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

மேலும், நண்பர்களே, நீங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டால், யாராலும் வரிஏய்ப்பு செய்ய முடியாது என்று நம்பிக்கையுடன் என்னால் கூற முடியும். தங்களைப் பாதுகாக்க யாராவது இருக்கிறார்கள் என்று தெரிந்தால்தான் மக்கள் சட்டத்தை மீறுகிறார்கள்.

நண்பர்களே, தேசத்தை நிர்மாணிப்பதில் நீங்கள் பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்பாக GST அமையப்போகிறது; மக்களுக்குச் சேவையாற்றுங்கள் என உங்களை நான் வலியுறுத்துகிறேன். ஜி.எஸ்.டி.யை வர்த்தகர்கள் புரிந்துகொள்ள நீங்கள் உதவி செய்யப் போவதாக, இங்கு வரும் வழியில், நீலேஷ் என்னிடம் தெரிவித்தார். அவருக்குப் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தயவுசெய்து மக்களிடம் செல்லுங்கள், அவர்களுக்குப் புரிய வைத்திடுங்கள். ஒருங்கிணைப்பின் பிரதானப் பாதையில் இணைவதற்கு அவர்களை ஊக்குவித்திடுங்கள். ஒருவகையில், பட்டயக் கணக்கியல் துறையில் உள்ள மக்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை அரசு அளித்திருக்கிறது. தயவுசெய்து இதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்; இந்தத் துறையில் உள்ள இளைஞர்களைக் குறிப்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


தயவுசெய்து முன்னே வாருங்கள்,  சமீபத்தில் அரசு நிறைவேற்றிய சட்டங்களை, குறிப்பாக நொடிப்புநிலை மற்றும் திவால் அறிவிப்பு தருவதற்கான விதிகள் குறித்த சட்டங்களை முறையாக அமல்படுத்துவது மற்றும் அவை வெற்றி பெறச் செய்வதில் பட்டயக் கணக்காளர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

இந்த விதியின் கீழ், ஒரு நிறுவனம் திவால் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டால், அதன் கட்டுப்பாடு நொடிப்புநிலை கையாள்பவரிடம் அளிக்கப்படும். பட்டயக் கணக்காளர்கள் நொடிப்புநிலையைக் கையாள்பவர்களாக செயல்படத் தொடங்கி, புதிய தொழிலைத் தொடங்கலாம். உங்களுக்காக அரசு உருவாக்கியுள்ள புதிய தொழில்வாய்ப்பு இது. இருந்தபோதிலும், நீங்கள் இன்றைக்கு எந்தப் பாதையைத் தேர்வு செய்தாலும், அந்தப் பாதையில்,  CA என்பது பட்டயம் மற்றும் துல்லியம் (Charter and Accuracy) , ஒத்திசைவு மற்றும் நம்பகத்தன்மை (Compliance and Authenticity) என்ற அர்த்தம் கொண்டதாக இருக்க வேண்டும்.

நண்பர்களே, நமது நாடு 2022-ல் சுதந்திரத்தின் 75வது ஆண்டை நிறைவு செய்யப்போகிறது. 2022 ஆம் ஆண்டுக்கு நாடு சில இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டுள்ளது. நம் எல்லோரிடம் இருந்தும் தொழில்துறையில் இருந்தும் கடின உழைப்பைப் புதிய இந்தியா எதிர்பார்க்கிறது.

நாடு சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை நிறைவு செய்யும்போது, எந்த மாதிரியான இந்தியாவைக் காண வேண்டும் என நாம் விரும்புகிறோம். ஒரு பட்டயக் கணக்காளராக, தனியொரு நபராக, ஒரு குடிமகனாக அந்த இந்தியாவை உருவாக்க நம் பங்காற்றி, பங்களிப்பு செய்திட வேண்டும்.2022ல் இந்தியச் சுதந்திரத்தின்       75 ஆவது ஆண்டு நிறைவு பெற்ற பிறகு, அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பு 75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யப் போகிறது.

உங்களுடைய 75 ஆவது ஆண்டுக்கான திட்டங்களை இப்போதே நீங்கள் தயார் செய்திட வேண்டும். இந்த அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை புதிய உச்சத்துக்குக் கொண்டுசெல்வதற்காக, வரலாற்று முக்கியத்துவமான அந்த தருணத்துக்கான பாதையை இப்போதைக்கு நீங்கள் உருவாக்கிட வேண்டும். நாட்டுக்காக என்ன செய்யப் போகிறீர்கள், உத்வேகம் கொண்ட பல லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள்.

நாட்டில் வெளிப்படையான மற்றும் ஊழல் இல்லாத அமைப்பை உருவாக்குவதில் உங்களால் உதவ முடியாதா ? என்ன சொல்லப் போகிறீர்கள் ? வரிகளை மிச்சப்படுத்த எத்தனை பேருக்கு உதவி செய்தீர்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்ப்பீர்களா? அல்லது வரி செலுத்துவதன் மூலம் நேர்மையாக இருப்பதற்கு எவ்வளவு பேருக்கு ஊக்கம் தந்தீர்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்கப் போகிறீர்களா? இதை நீங்கள் முடிவு செய்திட வேண்டும்.

நேர்மையாக வரிகளைச் செலுத்தி பிரதானப் பாதைக்கு வருவதற்கு எவ்வளவு பேரை ஊக்கப்படுத்தப்போகிறீர்கள் என்று உங்களுக்கு நீங்களே இலக்கு நிர்ணயித்துக்கொள்ளுங்கள். இந்தப் பணிக்காக இலக்கு நிர்ணயித்துக்கொள்வதில், உங்களைவிட சிறந்த நீதிபதி வேறு யார் இருக்க முடியும்?

உங்கள் தொழிலில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை எந்த அளவுக்கு விரிவுபடுத்த முடியும் என்பதையும் தயவுசெய்து சிந்தியுங்கள். பட்டயக் கணக்கியல் துறையில் தடயவியல் அறிவியலின் பங்கு என்னவாக இருக்க முடியும், அதை எப்படிப் பயன்படுத்துவது, அதற்கு எப்படித் தகவல்கள் தருவது, முடியுமானால் இவற்றைச் செய்வதற்கும் நீங்கள் இலக்குகள் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

நண்பர்களே, உங்களால் முடியும் என்பதால், உங்களிடம் இருந்து இன்னொரு விஷயத்தையும் நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் ஏன் பின்தங்கிஇருக்கிறீர்கள் என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நண்பர்களே, உலகில் நான்கு மிக உயர்ந்த மரியாதைக்குரிய தணிக்கை நிறுவனங்கள் உள்ளன. உயர்நிலையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் மையங்கள் தங்களின் தணிக்கைப் பணியை இந்த நான்கு நிறுவனங்களை நம்பி ஒப்படைக்கின்றன. இவை தான் 'நான்கு பெரியவை' (big four) என அழைக்கப்படுகின்றன. நாம் இந்த நிறுவனங்களுக்கு அருகில்கூட இல்லை. உங்களால் அது முடியும். அதற்கான ஆழ்ந்த திறமை உங்களுக்கு இருக்கிறது. உலக அளவில் இந்தியா பெருமை பெற வேண்டுமானால், 2022 இல் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டைக் கொண்டாடும்போது, அந்தப் 'பெரிய நான்கு' என்பதை 'பெரிய எட்டு' என மாற்றிக் காட்ட வேண்டும்.

அந்தப் 'பெரிய எட்டில்', பெரிய நான்கு நிறுவனங்கள் இங்கே என் எதிரே அமர்ந்திருப்பவர்களுக்கு உரியதாக இருக்க வேண்டும். நண்பர்களே இது நமது கனவு. நமது நிறுவனங்களின் தொழில் திறமை மற்றும் நற்பெயரைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இது சிரமமானது இல்லை.

என் நண்பர்களே, பட்டயக் கணக்கியல் துறையில் நீங்கள் உலகெங்கும் மதிக்கப்பட வேண்டும். நிறைவாக, பெரிதும் மதிக்கப்படும் பொருளாதார நிபுணர் சாணக்யரின் யோசனையை உங்களுக்கு நினைவுபடுத்த நான் விரும்புகிறேன். அவர் கூறினார் : “காலாதி கிரமத் கல் ஆவாம் பலம் பிவாதி” – "சரியான தருணத்தில் ஒரு விஷயத்தைச் செய்யாமல் போனால், வெற்றியின் பலனைக் காலம்தான் முடிவு செய்யும்" என்பது அர்த்தம். எனவே, உங்களுடைய காலம் வீணாகப் போக அனுமதிக்காதீர்கள்.

சிறிது நேரத்துக்கு முன்பு அருண் அவர்கள் உங்கள் மத்தியில் பேசினார்; முன்எப்போதும் இந்தியாவில் இதுபோன்ற வாய்ப்பு இருந்தது இல்லை என்று அவர் கூறினார். இளைஞர்களான உங்களுக்கு இது அபூர்வமான வாய்ப்பு. இது உங்களைக் கடந்து போய்விட அனுமதிக்காதீர்கள்.

இந்தியாவின் வளர்ச்சிக்கான பிரதான பாதையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் என உங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை பாதுகாக்கும், நீடித்துச் செயல்படும் வகையில் ஆக்கிடும் வல்லமை இந்தத் தொழிலுக்கு இருக்கிறது என்ற உண்மையைக் காண தயவுசெய்து தவறிவிடாதீர்கள்.  இந்த அமைப்பின் ஆசிரியர்கள் அனைவருக்கும், ICAI நிறுவன நாள் நிகழ்ச்சியை ஒட்டி இங்குள்ள அனைத்துப் பட்டயக் கணக்காளர்களுக்கும் மீண்டும் நான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வீடியோ தொடர்பு மூலம் இந்த நிகழ்ச்சியைக் காண்பவர்களுக்கும், வேறு நாடுகளில் இருந்து இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமது நாட்டு பட்டயக் கணக்காளர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்; நேர்மையைப் பாராட்ட வேண்டும் என்று இந்த நாட்டின் சாமானிய மக்களையும் ஈடுபடுத்தும் வகையில் புதிய மன உறுதி, புதிய வேகத்துடன் புதிய திசையில் நாம் பயணிக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்து உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி, நண்பர்களே, மிக்க நன்றி.

 

*****



(Release ID: 1530004) Visitor Counter : 86


Read this release in: English